கிருஷ்ணஜாலம் - 5 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணஜாலம் - 5 - இந்திரா சௌந்தர்ராஜன்

சுகமகரிஷி பரீட்சித்து மன்னரிடம், பாகவதம் என்னும் கிருஷ்ண ஜாலத்தை கூறத் தொடங்கினார். இந்த பாகவத புராணம் கிருஷ்ணரின் வரலாற்றை மட்டுமே சொல்வதாக இல்லாமல் தஷன், துருவன், ஜடபரதர், யயாதி, புரஞ்சனன், அம்பரீஷன், அஜாமிளன் என்று பலரைப் பற்றியும் கூறுகிறது. இறுதியாக கிருஷ்ணனின் பிறப்பில் தொடங்கி முக்தி வரை சகலத்தையும் சொல்கிறது.
சுகமகரிஷி நிதானமாக பரீட்சித்துவிடம் பாகவதத்தை அரங்கேற்றுகிறார். அப்போது அங்கே சூதர் உள்ளிட்ட மகரிஷிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்குள்ளும் பாகவதம் புகுந்தது. குறிப்பாக கிருஷ்ணன் பரிபூரணமானவனாய், பல வண்ணங்கள் கொண்டவனாய், எல்லோராலும் வியக்கப்பட்டவனாய், கீதா நாயகனாய் விஸ்வரூபம் எடுத்து நின்றான்.
அவனில் இருந்தே எல்லாம் பிறந்தன!
அவனே ஆதியந்தம்! அவனே சர்வமும்.... அப்படிப்பட்டவன் தான் உருவாக்கிய உயிர்களுக்கும், உலகத்துக்கும் தானே முன்னுதாரணமாக இருந்து காட்டவே தேவகியின் கருவுக்குள் திருக்கொண்டு பிறப்பெடுத்தான். பின் மனித வரம்புக்கு உட்பட்டும், படாமலும் பல ஜாலங்களைச் செய்து காண்பித்தான். அந்த ஒவ்வொரு ஜாலமும் ஒரு பாடம்! அவன் செயல்பாட்டுக்குள் நம் அறிவால் உணர முடிந்தவை, பக்தியால் உணர முடிந்தவை, ஞானத்தால் உணர முடிந்தவை, இவை எதனாலும் உணர முடியாத நிலையில் அவனைச் சரணடைந்தால் மட்டுமே உணர முடிந்தவை என்று எவ்வளவோ உள்ளன.
அவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
கிருஷ்ண லீலையில் முதல் நுட்ப லீலையே அவன் மண் தின்ற படலம் தான்!
பிள்ளைகள் புழுதியில் புரள்வதும், மண்ணைத் தின்பதும் ஒன்றும் புதிதல்ல. 
சொல்லப்போனால் நம் பிள்ளைகளின் இந்த குறும்புத்தனம் கண்ணனிடம் இருந்தே தொடங்கியது எனலாம். அதிலும் கண்ணன் மண்ணைத் தின்ற விதம் இருக்கிறதே.... அது அலாதியானது.
யாதவச் சிறுவர்களோடு குதித்து விளையாடிய அவன், கோகுலத்து புழுதி மண்ணை எடுத்து தன் வாயில் சர்க்கரையாகச் சொரியச் செய்து, சுவைத்து மகிழ்ந்து, எச்சில் பிலிற்ற தின்றதைக் கண்ட பிள்ளைகள் பிரமித்து போயினர். அவர்களும் அது போல தின்ன முற்பட்டபோது, அது வெல்லச் சர்க்கரையாகி அவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
மண் புழுதி வெல்லச் சர்க்கரையானது மாயத்தால் தான் என்ற போதிலும், அந்த மாயத்தின் பின்புலம் நுட்பமானது. எனக்கு நண்பனாகி விட்டவன் அல்லது நான் எவனை எல்லாம் நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறேனோ, அவர்களுக்கு மண்ணும் தின்னும் உணவாகும். இந்த மண்ணில் இருந்தே உணவுகள் அனைத்தும் வயல்களில் விளைகின்றன. அதன் பின்னே ஒரு காலக்கணக்கு உண்டு. என் முன்னால் அந்தக் கணக்கு அடிபட்டு விடும். நான் அருகில் இருத்தல் என்பது அழகிய வினை. அதனாலேயே அவர்களுக்கு காலக்கணக்கு சுருங்கி புழுதியும் சர்க்கரையாகிறது.
இதை சற்று மாற்றியும் சொல்லலாம். நான் அருகில் இருந்தால் மனதுக்குள் தெருப்புழுதி போல் குப்பைகள் கிடந்தால், அவை எல்லாம் கூட தித்திப்பாகி விடும்.
இன்னமும் கூட மாற்றி கவிதையாகச் சொல்லலாம்.
“என்னை உங்களுக்குள் நிரப்புங்கள். அதன் பின் எல்லாமே தித்திப்பு தான்... கசப்பென்பதே கிடையாது..” என்பதே இந்த லீலை உணர்த்தும் நுட்பம்.
இந்த லீலையை யசோதை ஒரு பாசமிகு தாயாகக் கண்டு மனம் பதறுகிறாள்.
“ஐயோ..... மண்ணைத் தின்றால் வயிறு செரிக்குமா? பிஞ்சுக் குழந்தையாயிற்றே.... பாலன்னமே சற்று மிகுந்து விட்டால் உமட்டி விடுமே. அப்படியிருக்க கல்லும், மண்ணும் இரைப்பைக்குச் சென்றால் என்னாவது? பிள்ளை தாங்குவானா? வயிறு நோகுமே... வயிற்றால் போகுமே.... நீலவண்ண சியாமள மேனி வாடி வதங்கினால் பிள்ளை சவலை ஆவானே.....? ” என்று எல்லா தாய்மார்களையும் போலத்தான் அந்த தெய்வத்தாயும் எண்ணினாள்.
கண்ணன் எட்டாவதாய் பிறந்தவன் என்பதில் இருந்து, எட்ட முடியாதவன் என்பது வரை எதுவும் தெரியாதவளாகவே கிருஷ்ண மாயை அவளை வைத்திருந்தது தான் விந்தை! 
தனக்குப் பிறந்த பெண் குழந்தையை வசுதேவரிடம் தந்து விட்டு, கிருஷ்ணனை தன் வசம் வாங்கிக் கொண்ட நந்தகோபரைக் கூட கிருஷ்ண மாயை விடவில்லை. அந்த பிள்ளைமாற்றுப் படலத்தையே மறக்கச் செய்து, தன் வயிற்றில் பிறந்த பிள்ளையாகவே கருதச் செய்து விட்டது. ஆகையால் கிருஷ்ணனை அவள் ஒரு பரமாத்மாவின் பிஞ்சு ரூபமாக பார்க்கவில்லை. பார்க்கவும் அவளால் முடியவில்லை.
அப்படி ஒரு வேளை அவள் பரமாத்மாவாகவே பார்த்தால் தொட்டுத் தூக்கியோ, இடுப்பில் தாங்கியோ, மார்பில் அணைத்தோ மகிழாமல் தன் தாய்ப்பாசத்தை பக்தியாக்கிக் கொண்டு எப்படி அணுகுவது என்பதே தெரியாதவளாக தவித்த படியே தானிருப்பாள்.
தவிக்க விடுபவனா அவன்?
'உன் தாயன்பில் திளைப்பதே எனக்கு இஷ்டமான விஷயம்' என்று கண்ணன் விரும்பினான். முற்பிறவியில் பிருசினி என்னும் பெயரில் யசோதையும், சுதபஸ் என்னும் பெயருடன் வசுதேவரும் இருந்திட, அவர்கள் விஷ்ணுவே தங்களுக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்தனர். 
அந்த தவத்துக்கு அப்போது வரம் தர இயலவில்லை. இதோ.. இப்போது பிள்ளையாக வந்து சேர்ந்தாயிற்று. பரமாத்மா என்னும் உண்மையை மாயையால் 
மறைத்தாகி விட்டது. அதனால் தான் யசோதை கூட, “அய்யோ.... இந்த பிள்ளை இப்படி குறும்புக்காரனாக இருந்து இந்த பாடுபடுத்துகிறானே,” என்று கலங்கிப் போய் இழுத்துப் பிடித்தாள். 
“வாயைத் திறடா... வாயைத் திற... என் செல்லமே! செல்வமே.. வாயைத் திறந்து விடடா..! ” என்று கெஞ்சினாள். உதட்டைப் பிரித்து ஆள்காட்டி விரலை வாயினுள் விட்டு மண்ணை எல்லாம் வழித்து எடுக்கவும் முற்பட்டாள். ஆனால் கண்ணனோ அவள் கை நுழையவும், தன் சின்னஞ்சிறிய அரிசிப்பல்லால் லேசாக ஒரு கடி கடிக்க கையை விசுக்கென்று இழுத்துக் கொண்டாள்.
பின் பொறுக்க மாட்டாமல், அருகே கிடந்த மத்தால் அடிப்பது போல பாவனை செய்து, “வாயைத் திற... உன் செங்கனி வாய்க்கு மண் ஆகாது...” என்று கத்தினாள்.
தலையைச் சாய்த்து கன்னம் உப்பியிருக்க, விழிகளை மட்டும் மேலே கொண்டு போய் ஒரு குத்துப்பார்வை பார்த்தான் கண்ணன்.
அந்த பார்வை யசோதையை சகலத்தையும் மறக்கச் செய்தது. அவள் கையிலிருந்த மத்து கீழே விழுந்தது. கண்ணன் மெல்ல வாயைத் திறந்தான். அவன் தின்ற மண், மண்ணுலகாய், விண்ணில் பந்தாய் கிடந்து சுழன்றபடி இருப்பது போலவே, அவன் வாயில் சுழன்ற படி தெரிந்தது. யசோதையின் விழிகள் விரிந்தன. சூரிய, சந்திரர் முதல் நட்சத்திரக்கூட்டம் வரை சகலமும் தெரிந்திட யசோதை வெலவெலத்துப் போனாள். கைகளைக் குவித்து நின்றாள்.
இந்த அரிய காட்சியை வானுலக தேவர்களும் கண்டு வியந்தனர். 
யசோதையின் பிரமிப்பு நொடியில் கலைந்தது! கிருஷ்ணனும் நல்ல பிள்ளையாக 'தூ..தூ..' என்று மண்ணைத் துப்பிய படி ஓடினான். மீண்டும் மாயை யசோதையை பாசமிகு தாயாக்கிட அவள், “கண்ணா நில்...நவநீதா நில்... கிருஷ்ணா நில்... கோபி நில்... முரளி நில்... முராரி நில்... கோவிந்தா நில்..கோபாலா நில்..” இப்படி நில் என்று அவள் குரல் கொடுத்தது கூட நமக்காகத் தான். நம் மனதில் அவன் நிற்க வேண்டும் என்பதற்காகத் தான்....
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை