கிருஷ்ணஜாலம் - 4 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணஜாலம் - 4 - இந்திரா சௌந்தர்ராஜன்

பரீட்சித்து மன்னன் அங்கே தன் தாகத்தின் தவிப்பை பெரிதாக எடுத்துக் கொண்டான். அவனொரு அரசன்... இதற்கு முன் இது போல் அவன் நீரின்றித் தவித்ததே கிடையாது. அதனால் தாகமும், அதனால் ஏற்பட்ட தவிப்பும் அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது .
தண்ணீர் என்பது வீசும் காற்று போன்றது. அவன் தண்ணீர் தட்டுப்பாட்டைக் கண்டதே இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் ஏரிகளும், குளங்களுமாக திகழும் பூமி அஸ்தினாபுரம். எங்கே மண்ணைத் தோண்டினாலும் இரண்டு அடியில் ஊற்று வந்து விடும். 
அப்படி ஒரு வளமான நாட்டு மன்னனுக்கு, 'விதி' என்னும் பெயரில் கானகம் ஒரு பாடம் நடத்த தொடங்கியது. அதுவும் தண்ணீரைக் கொண்டு....
அடுத்து தன் குரலுக்கு கட்டுப்படாதவர்களை அவன் பார்த்ததே இல்லை. அவன் வருகிறான் என்றாலே சபையே எழுந்து நிற்கும். நகர் விஜயத்தின் போது மனிதர்கள் ஒதுங்கி நின்று வழி விட்டு வணங்கி நிற்பார்கள். இங்கோ சமீக ரிஷி சமாதி நிலையில் கிடக்கிறார். மிக அலட்சியமாக 'உன்னை விட எனக்கு என் தவம் பெரிது' என்று கிடக்கிறார். ஆக ஒவ்வொரு சிக்கலும், அவனை கோபத்தின் உச்சிக்கு இட்டுச் செல்லத் தொடங்கியது.
அங்கே இரண்டே இரண்டு பேர்.
ஒருவர் சமீக ரிஷி! இன்னொருவன் பரீட்சித்து... இந்த இருவரில் ஒருவர் உணர்வுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். பரீட்சித்துவோ கொந்தளிப்பில் இருக்கிறான். ஒரே இடம்... ஒரே நேரம்... ஆனால், இருவருக்கும் இருவேறு நிலை. இதைத் தான் மாயை என்று சொல்வார்கள்.
பரீட்சித்து கோபத்தில் அந்த ரிஷியை கொன்று விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் தன் உணர்வை சற்று அடக்கிக் கொண்டான். மாறாக கோபத்தை ரிஷி உணரும் விதத்தில் செயல்பட்டான். அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பின் காய்ந்த உடலை, உடை வாளின் நுனியால் எடுத்தான். சிலை போல தரை மீது கிடந்த சமீகரை அமரச் செய்தான். அந்த காய்ந்த பாம்பின் உடம்பை அவருக்கு மாலை போல கழுத்தில் இட்டான். அதன் பின்னர் சற்றே கோபம் தணிந்தவனாகி அங்கிருந்து கிளம்பினான்.
அதன் பின் எப்படியோ நெடுந்தூரம் நடந்தான். நீர்நிலை ஒன்று தென்பட, அங்கு நீர் குடித்து தாகத்தை தணித்தான். அதன் பின் அவனது வீரர்களும் தேடி வர, தற்காலிக தவிப்பு நிலை மாறி மீண்டும் அரச போகங்களுக்கு உரியவனாகி விட்டான். இருந்தாலும் அந்தக் காடு சில மணி நேரம் தன் வசம் எடுத்துக் கொண்டு அவனை உலுக்கி எடுத்து விட்டது. 
நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், மாயை சூழ்ந்த உலகில் பாடுகள் பட வேண்டும் என்று வந்து விட்டால், பட்டுத் தான் ஆக வேண்டும். ஒட்டுமொத்தமாக இதை விதி என்கிறோம். இந்த விதியின் போது மதி சிந்தித்து செயலாற்ற வேண்டும். ஆனால், நிந்தித்து தான் செயலாற்றுகிறது. அதன் விளைவை இனி பார்ப்போம்.
சிறிது நேரத்தில் சமீகரின் புதல்வனான முனிகுமாரன் அங்கு வந்தான். தந்தையின் கழுத்தில் கிடந்த பாம்பு மாலையைக் கண்டதும் கோபம் கொண்டான். தந்தையாரின் தவம் நெருப்புக் காற்றாகிச் சுற்றுச்சூழலையே தகித்துக் காய வைத்து விட்டது. அதனால் ஊர்வன, பறப்பன எல்லாம் செத்துப் போயிருந்தன. அடுத்து அவன் ஒரு காயத்ரி உபாசகன். காலை, உச்சிப்பொழுது, மாலை என மூன்று நேரமும் காயத்ரிக்கு நீரால் அர்க்கியம் கொடுத்து விட்டு, நித்ய கடமை புரிபவன் என்பதால் அவனுக்குள் திரிகால ஞானபிம்ப சக்தி (முக்காலம் அறியும் அறிவு) நிரம்பியிருந்தது. அங்கு பரீட்சித்து வந்தது முதல் நடந்த அனைத்தும் மனதிற்குள் காட்சியாக விரிந்தது.
பரீட்சித்துவை எப்படி கோபம் ஆட்கொண்டதோ, அப்படி முனி குமாரனையும் கோபம் ஆட்கொண்டது. அடுத்த நொடி, எந்த பாம்பின் காய்ந்த உடலைக் கொண்டு தந்தையை அந்த அரசன் அவமதித்தானோ, அந்த பாம்பு இனத்தின் அரசனான தட்சகன் என்பவனாலேயே அவன் தீண்டப்பட்டு இறக்க வேண்டும். அதுவும் ஏழே நாட்களில்... அதாவது பூமியை தன்வயப்படுத்தும் சக்தி மிக்க கோள்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஒன்பதின் முதல் ஆதிபத்யம் முடிவதற்குள்ளாக.... 
முனிகுமாரனின் சாபம் வெளிப்படவும் அவனுக்குள் கோபம் சற்று குறைந்தது. 
சமாதானம் அடைந்தான். இங்கே ஒரு உண்மையை நாம் உணர வேண்டும். 
பரீட்சித்துவும கோபத்தால் தவறு இழைத்தான். முனிகுமாரனும் கோபத்தாலேயே சபித்தான். ஆச்சரியம் என்னவென்றால், இருவரின் கோபமும் அமைதியில் ஆழ்ந்திருக்கும் சமீகரைக் கொண்டே நடந்தது என்பது தான். 
மன்னன் பரீட்சித்து தனக்கான சாபத்தை அறிந்தான். ஏழுநாளில் அவன் மரணம் அடைவது உறுதியாகி விட்டது. எப்போது ஏழுநாளில் மரணம் என்று சபிக்கப்பட்டதோ, அப்போதே ஏழுநாள் வரை அவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருப்பதை நாம் யூகிக்கலாம்.
அந்த நொடியே பரீட்சித்துவின் தலை வெடித்து மரணிக்கட்டும் என்று முனிகுமாரன் சபித்திருக்கலாம். ஆனால் அவன் அப்படி சபிக்கவில்லை. ஏழுநாட்கள் என்று வாய்ப்பு அளித்ததோடு, சர்ப்பராஜன் தட்சகனால் மரணிக்கட்டும் என்று கூறியதன் பின்னணியில் உணர வேண்டிய நுட்பங்கள் பல உள்ளன.
“விதி வசத்தால் கோபப்பட்டு சாபத்திற்கு ஆளானாய். ஆனாலும் பாதகமில்லை. 
இனியாவது மதி வசப்பட்டு செயல்பட்டால் சாபம் வரமாகும்,” என்று சுகர் அவனை நெறிப்படுத்த தயாரானார்.
குருவாலேயே கடைத்தேற முடியும் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம்.
பரீட்சித்து முழு பாவி அல்ல. தவறுக்கு விதி இடமளித்தது போல, குருவருளுக்கும் இடம் அளித்தது.
நம் பிரதிநிதி தான் பரீட்சித்து. பூமியில் நம் பிறப்பும் கர்ம பயனால் உண்டானதே. இந்த வாழ்வுக்குள் குழந்தை, இளைஞன், குடும்பஸ்தன், முதியவர் என்று பலவிதமான சூழ்நிலைகள். அதில் ஒவ்வொன்றிலும் இரவும் பகலும் போல இன்ப துன்பம், நன்மை தீமை என பலவித அனுபவங்கள் உண்டாகின்றன. 
இதில் நாம் சமீக ரிஷி போல சில நேரமும், பரீட்சித்து போல சில நேரமும் வாழ்கிறோம். 
அடித்து துவைத்து பிழிந்தால் தானே அழுக்கு போகிறது. பரீட்சித்துவிடம் சுக மகரிஷி, “மன்னா... நீ இதுவரை எப்படி வாழ்ந்தாலும் சரி. இனி வரும் ஏழுநாளும் உன் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும். பாகவதம் என்னும் கிருஷ்ணரின் ஆதியந்தத்தை உன்னுள் நான் நிரப்பப் போகிறேன். கடல் நீர் மேகமாகி, மழையாகி, நதியாக ஓடி, மீண்டும் கடலுடன் கலப்பது போல, அவனில் இருந்து வந்த நான், நீ, நாம்... அவனோடு கலந்து மீண்டும் அவனாக மாறவே இந்த ஏழுநாட்கள்!
இதை ஏழு ஜென்மம் என்றும் கருதலாம். எனவே நீ காதை மட்டும் கொடு. நான் உன்னுள் ஸ்ரீ கிருஷ்ணனை நிரப்புகிறேன். அவனது நிகரில்லாத செயல்கள் எல்லாம் நம்மை உயர்வுபடுத்தும் ஜாலங்கள் என்பேன். எது விதி? எது மதி என்பதற்கு இந்த ஜாலம் விடை சொல்லும் என்றார். 
சுகரிடம் இருந்தே தொடங்கியது கிருஷ்ண ஜாலம்...!
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை