முதல் ஸ்கந்தம் – ஆறாம் அத்தியாயம்
பரீக்ஷித்தைக் காத்த பகவான்
அச்வத்தாமா விடுத்த அஸ்திரம், பாண்டவர்களின் வம்சத்தின் ஒரே வாரிசையும்
அழிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன், உத்திரையினுடைய கர்ப்பத்தில் வாழ்ந்திருந்த
சிசுவை அழிக்கத் தொடங்கிற்று. அவ்வமயம், உத்திராதேவி ஓடி வந்தாள். கண்ணனிடத்தில் சரணாகதி
செய்தாள். அப்போதுதான் கங்கைக் கரையில் தர்ப்பணத்தை முடித்த பாண்டவர்கள் அனைவருக்கும்
சமாதானம் சொல்லிவிட்டு, கண்ணன் தன் தேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்,
உத்திரையினுடைய கூக்குரலைக் கேட்டு, கண்ணன் நின்றார்.
உத்திரை வினவலுற்றாள்: ‘கண்ணா! நீதான் உலகத்தையே தாங்கக் கூடியவன்;
காக்கும் கடவுள். என்னை இந்த அஸ்திரத்திலிருந்து காப்பாற்று. நான் மடிந்து போனாலும்
சரி, என் வயிற்றில் வளரும் குழந்தையைக் காப்பாற்று’ என்று கதறினாள். கர்ப்பத்தை ரட்சித்துக் கொடுக்கக் கூடியவன்
மட்டுமா பகவான். போகிற உயிரைக் கூட மீட்டுக் கொடுக்கக் கூடியவன் அன்றோ எம்பெருமான்!
உடனே, இந்த அஸ்திரத்திற்குப் பிரதியாக வேறு அஸ்திரம் இல்லை என்று புரிந்து
கொண்டு, தன்னுடைய சுதர்ஸன சக்கரத்தை எய்து, பாண்டவர்களுடைய குலக் கொழுந்தாக, உத்திரையின்
கர்ப்பத்தில் இருக்கும் பரீக்ஷித்தையும் காத்தார். கண்ணனுடைய செய்கை அத்தகையது! அதைக்
கண்ட குந்தி, ‘இதற்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்? இவனுக்குச் செய்வதற்கு நம்மாலாவது
ஒன்றும் இல்லை’ என்று
உணர்ந்து, அழகாக தோத்திரம் செய்யத் தொடங்கினாள்.
“ஹே!
மஹா புருஷனே! பிரக்ருதியைக் காட்டிலும் உயர்ந்தவனே! எங்கும் நிறைந்திருப்பவனே! ஆனாலும்,
எங்கள் கண்களால் பார்க்க முடியாதவனே! நாடகத்தில் வேஷமிட்டிருப்பவனைப் போல, இதோ எங்கள்
கண்கள் முன்னால் நின்று கொண்டிருப்பவனே! உன்னை வணங்குகின்றேன்!” என்று பக்திப் பெருக்குடன் துதித்தாள்.
குந்தி இப்படிச் சொன்னதில் ஒரு கருத்து உண்டு. ஆழ்வார் ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில்
–
‘கட்கிலீ!
உன்னைக் காணுமாறு அருளாய்!’
– என்று வேண்டுகிறார்! பகவான் எங்கும் நிறைந்திருப்பவன் என்றும், ஆனால்,
மறைந்து நம் கண்களுக்குப் புலப்படாதவன் என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். அவன் புலப்படுபவனா?
புலப்படாதவனா? ‘கட்கிலீ’
என்பதால் கண்ணுக்குப் புலப்படாதவன் என்று தெரிகிறது. ‘உன்னைக் காணுமாறு அருளாய்’ என்கிற வேண்டுதலால், திருமாலைக்
காணலாம் என்றும் புரிகிறது. இரண்டும் முரண்பட்டிருக்கிறதே! காண முடியுமா? காண முடியாதா?
கண்டிப்பாகக் காண முடியாது. அதாவது, நம் முயற்சியால் மட்டும் காண முடியாது. ஆனாலும்,
நிச்சயமாகக் காணலாம். அதாவது அவன் அருள் இருந்தால் மட்டுமே காணலாம். அதைத்தான் குந்தி
தேவி இப்போது பிரார்த்திக்கிறாள். “நீ எங்கும் நிறைந்திருக்கிறாய்! ஆனால், துரியோதனன்,
கம்சன், ராவணன் இவர்களுக்கு நீ காட்சி கொடுப்பது இல்லை. நீ காட்சி கொடுக்க வேண்டும்
என்ற அருளினால் உறுதிபூண்டு, எங்களுக்குக் காட்சி கொடுக்கிறாய்!
கிருஷ்ணாய வாஸுதேவாய
தேவகி நந்தனாய ச
நந்த கோப குமாராய
கோவிந்தாய நமோ நம:
“கண்ணனுக்கு
வணக்கம். வாஸுதேவனாய், தேவகிக்கு ஆனந்தத்தைக் கொடுப்பவனாய், நந்தகோபனை மகிழ்ச்சியில்
திளைக்க வைப்பவனாய், பசு மாடுகளைக் காத்துக் கொடுத்த கண்ணா! உனக்கு வணக்கம்.
நம: பங்கஜநாபாய
நம: பங்கஜமாலினே
நம: பங்கஜநேத்ராய
நமஸ்தே பங்கஜாங்க்ரயே
“ஹே!
பகவானே! உன் நாபியும் கமலம், நீ அணிந்திருக்கும் மாலையும் தாமரை, உன் திருக் கண்களும்
கமலக் கண்கள். உன்னுடைய திருவடிகளும் தாமரையைப் போன்றவை. உலகத்தையே காத்தாய். அதிலும்,
விசேஷமாக எங்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் நீ காப்பாற்றிக் கொடுத்திருக்கிறாய்.
நீ பாண்டவர்களுக்கு நல்லவனாகவும், கௌரவர்களுக்குத் தீயவனாகவும் இருக்கிறாய் – என்று
சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படி அல்ல. நீ அனைவருக்கும் சமமாகவே இருக்கிறாய்” என்கிறாள். பெருமான் ஒரு சிலரைக்
காக்கிறான். மற்ற சிலரை அழிக்கிறான் என்று நினைக்கக் கூடாது. அவன் அனைவருக்கும் சமமாகத்தான்
இருக்கிறான், பின் ஏன் ஒரு சிலர் துன்பப்படுகிறார்கள்? பெருமானுடைய கோபத்துக்கு ஆளாகிறார்கள்?
வேத வியாஸர், பிரஹ்ம ஸூத்திரத்தில்
வைஷம்ய நைர்க்ருண்யே
ந ஸாபேக்ஷத்வாத்
– என்கிறார். அதாவது, ‘பெருமானுக்குப் பாரபட்ச நிலை கிடையாது. பெருமான்
கருணை இல்லாதவன் அல்லன். ஆனால், அப்படிக் கருதுவதற்கு இடம் அளிப்பதுபோல் இருக்கிறதே
என்றால், அவனவனுடைய கர்மத்துக்குத் தகுந்துதான், அவர்களுக்குப் பரிசையோ, தண்டனையோ பகவான்
கொடுக்கிறான். மற்றபடி அனைவரிடத்திலும் சமமாகத்தான் எம்பெருமான் நடப்பான்’. இதைத்தான் குந்திதேவி நமக்குப்
புரிய வைத்தாள்.
‘கண்ணனே!
உன்னுடைய பிறவிப் பயன் என்னவென்று ஒவ்வொருத்தர், ஒவ்வொரு விதமாகக் கூறுகிறார்கள். நீ
உன்னுடைய யது குலத்தை, பட்டாபிஷேகம் இழந்த யது குலத்தை உயர்த்துவதற்காகப் பிறந்தாயாம்!
அல்லது, வஸுதேவர், தேவகி ஏற்கெனவே பிருஷ்ணியாக, சுதபாவாக தவம் இயற்றி, மூன்று முறை
உன்னை தங்கள் கர்ப்பத்தில் வகித்துப் பெற வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்காகப்
பிறந்தாயாம். அல்லது, துஷ்டர்கள் அனைவரையும் அழித்து, சாதுக்களை ரக்ஷிப்பதற்காக, பூபாரத்தைத்
தவிர்ப்பதற்காகப் பிறந்தாயாம். ஆனால், என்னைக் கேட்டால், என்ன கூறுவேன் தெரியுமா? நீ
இப்பூவுலகத்தில் பிறந்து, எத்தனையோ தெய்வீகமான லீலைகளைப் புரிந்தாய். அந்த லீலைகளை
நினைந்து நினைந்து உருகுபவர்கள், இனி பிறக்கத் தேவையில்லை’ என்று உணர்த்துகிறாள். இதைத்தான் கண்ணன் கீதையில்
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத
த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம
நைதி மாமேதி ஸோ(அ)ர்ஜுந
– என்று கூறுகிறார் அல்லவா? இப்போது குந்திதேவியின் உருக்கமான உணர்வினைப்
பார்ப்போம்!
‘என்னுடைய
பிறவியையும், என்னுடைய திருவிளையாடல்களையும் யார் உண்மையாகப் புரிந்து கொண்டு நினைக்கிறானோ,
அவன் மறுபிறவி அடைவது இல்லை என்று முழங்கும் கண்ணனே! இப்போது புரிந்து போயிற்று. எங்களுக்கு
மறுபிறவி கூடாது என்பதற்காகத்தான், நீ கண்ணனாகப் பிறந்தாய் போலும்!’ இப்படி பலவாறாகத் துதித்த குந்தி,
கடைசியாக வேண்டுகிறாள்: “பாண்டவர்களிடத்தோ, மற்ற உறவினரிடத்தோ பாசத்தால் கலங்கிப் போயிருக்கிறேன்.
அவர்களிடத்தில் இருந்த பாசத்தை நீக்கி, உன் திருவடிகளிலேயே பாசம் வைக்கும்படி அருள்புரிவாய்!” என்று வேண்டுகிறாள்.
கண்ணனும் சிரித்த முகத்தோடு, அவர்களுக்கு அருளி, ‘எப்போதும் உங்களுக்கு
என்னிடத்தில் நீங்காத பக்தி ஏற்படட்டும்’ என்று சொல்லி புறப்படயத்தனித்தார். ஆனால் யுதிஷ்டிரர், ‘எங்களோடு
சில காலம் கழிக்க வேண்டும்’
என்று வேண்ட, அங்கிருந்தார். தர்மபுத்திரன் தன் உறவுக்காரர்களை யுத்தத்தில் கொல்ல நேரிட்டதால்
மனம் கலங்கி, துக்கம் மேலிட – ‘தவறு இழைத்து விட்டோமோ?’ என்று கலங்கினான். கண்ணன் பார்த்தார். இவன் கலக்கத்தைத்
தீர்க்க, தெளிந்தவரிடத்தில்தானே போக வேண்டும்? கலங்கிய நீரால், கலங்கியதை சுத்தம் செய்ய
முடியுமா? இயலாதே! ‘அனைவரும் புறப்படுவோம். குருக்ஷேத்திரத்துக்குப் போவோம். பீஷ்மர்
அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு, உடலை விடுவதற்காக உத்தராயணத்தை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறார். அவரிடம் சென்று அவருடைய உபதேசத்தைப் பெறுவோம்’ என்று அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.
நாமும் குருக்ஷேத்திரம் செல்லலாமே!
நன்றி - துக்ளக்