திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 17


முதல் ஸ்கந்தம் – ஏழாம் அத்தியாயம்

பீஷ்ம ஸ்துதி

தர்ம க்ஷேத்ரமாகிய குருக்ஷேத்திரத்தில் பீஷ்மாசாரியர் அம்புப் படுக்கையில் கிடந்தார். உறவினர்களைக் கொன்றபடியால் மனம் கலங்கிய தர்மபுத்திரர் தன் தம்பிகளோடும், ஸ்ரீ கிருஷ்ணனோடும் குருக்ஷேத்திரத்தை அடைந்தார். அவர், பீஷ்மரிடத்தில் பல தர்மங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளப் போகிறார் என்று அறிந்த வியாஸர், தௌம்யர், நாரதர், பரத்வாஜர், வஸிஷ்டர், கௌதமர் – போன்ற மஹா ஞானிகளான ரிஷிகள் எல்லாம் குருக்ஷேத்திரத்தை அடைந்தார்கள். இவர்கள் அனைவரும் வருவதைப் பார்த்த பீஷ்மாசாரியர் வியப்புற்றார். அதைவிட, ஸ்ரீ கிருஷ்ணரே அங்கு எழுந்தருளியதைக் கண்டு ஆனந்தப்பட்டார். தான் படுத்த நிலையில் இருந்தே கண்ணனை வணங்கி வரவேற்றார்.

அங்கு வந்து சேர்ந்த பாண்டவர்களைப் பார்த்து, பீஷ்மர் கூறினார் : “இதோ உங்களுக்காகவும், எனக்காகவும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இங்கு வந்துள்ளார். அவரை நீங்கள், உங்கள் அத்தை பிள்ளையாகவே மட்டும் நினைத்து இருக்கிறீர்கள். ஆனால், அவனே உலகுகளைப் படைத்து, காப்பவன். எப்படி நெருப்பு விறகு கட்டையில் மறைந்து இருக்குமோ, எண்ணெய் எப்படி எள்ளுக்குள் மறைந்து இருக்குமோ, அதைப் போல் இந்தத் திருமேனியில் பகவான் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அதை அறியாத பிள்ளைகளாக கண்ணனோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

தர்மபுத்திரா! நீ கலங்கிப் போயிருக்கிறாய். நீ செய்த செயல்கள் எல்லாம் காலத்தாலும், கர்மத்தாலும் தூண்டப்பட்டு நடந்தன. சூறாவளியில் அகப்பட்டுக் கொண்ட மேகம் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அதைப் போல்தான் நீயும்! மேலும், எங்கு பார்த்தன் உள்ளானோ, எங்கு கண்ணன் உள்ளானோ அங்கு வெற்றி நிச்சயம். கண்ணனின் பாதுகாப்பிலிருக்கிற உங்களுக்கு ஏன் கவலை? கவலையை விட்டு விடு என்றார்.

பீஷ்மாசாரியர், எப்போது உத்தராயணம் வரும், தன் உயிரைத் துறந்து சொர்க்கத்தை அடையலாம் என்று எதிர்பார்த்திருந்தார். கண்ணனின் பரம பக்தரான பீஷ்மர், மண்ணுலகை விட்டுப் புறப்படுவதை அனுக்ரஹிப்பதற்காகத்தான் கண்ணனே அவ்விடத்திற்கு வருகை புரிந்தார். கண்ணனே தன்னை விண்ணவர் நாட்டுக்கு வழி அனுப்பி வைக்க வந்தது, பீஷ்மரை மெய்சிலிர்க்க வைத்தது. உண்மையான பக்தர்களிடத்தில்தான், கண்ணனுக்கு எத்துணைக் காதல்? அவர்கள் எத்துணைக் குற்றம் புரிந்திருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், நினைத்த மாத்திரத்தில் ஓடி வருகிறான்.

ததாப்யேகாந்த பக்தேஷு
பச்ப பூபாநுகம்பிதம்
யன்மே(அ) ஸூம்ஸ்த்யஜத:
ஸாக்ஷாத் க்ருஷ்ணோ தர்சனமாகத:

பக்தர்களுக்குக் கண்ணனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. அதைவிட, கண்ணனாலும் தன் பக்தர்களை விட்டுப் பிரியவே முடியாது.

மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய
க்ஷணே(அ)பி தே யத்விரஹோ(அ)திதுஸ்ஸஹ:

– என்று ஒரு பிரமாணம். அதாவது, மஹாத்மாக்களை விட்டுப் பிரிந்து, ஒரு நிமிஷம் கூட கண்ணனால் இருக்க இயலாது. விரக தாபத்தாலே துடித்து விடுவான். ஆகையால்தான், பீஷ்மரை, தானே வழியனுப்பி வைப்பதற்காக ஓடோடி வந்தான்.

தர்மபுத்திரர் தன் கலக்கத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, பீஷ்மருக்கு அருகே சென்று வணங்கி, ‘தர்மங்களை எல்லாம் உரைக்க வேண்டும் என்று வேண்டினார். அம்புப் படுக்கையில் இருந்து கொண்டே, தான தர்மம், ராஜ தர்மம், மோட்ச தர்மம், ஸ்திரீ தர்மம், பகவத் தர்மம் – ஆகிய பலவற்றையும் பீஷ்மர் உபதேசித்தார். மேலும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அனைத்தைப் பற்றியும் உபதேசித்தார். இவையெல்லாம் முடியும்போது, உத்தராயணமும் பிறந்தது. தான் புறப்படும் காலம் வந்து விட்டது என்று உணர்ந்த பீஷ்மர், இறுதியாக கண்ணனை வணங்கி, அவனைத் துதித்தார். பீஷ்மர் இவ்விடத்தில் கண்ணனைத் துதித்த பத்து ச்லோகங்களே ‘பீஷ்ம ஸ்துதி என்று கொண்டாடப்படுகிறது. பாகவத புராணத்தில் பகவானைத் துதிக்கும் இடங்கள் பற்பல உண்டு. அவற்றில் இது சிறப்பு வாய்ந்தது.

பீஷ்மர் துதிக்கலுற்றார். “கண்ணனே! உன்னுடைய அழகான திருமேனியில் என் மனம் லயித்திருக்கிறது. எத்துணை முறை பார்த்தாலும், போதும் என்கிற திருப்தி ஏற்படாதது உந்தன் திருமேனி. நீ எப்போதும் சுகமாக இருக்கிறாய்; ஆனந்த மயமாக இருக்கிறாய். உன்னுடைய சொரூபத்துக்கு எத்தனை பெருமையோ, அதைப் போல், உன் பெருமைக்குத் தகுந்த அழகான திருமேனியை எடுத்துக் கொண்டு இந்த ஸம்ஸாரத்தில் இருந்து எங்களைக் காப்பாற்றுவதற்காகவே பிறந்திருக்கிறாய். உன் திருமேனி பொய்யானதல்ல. அதே சமயம், எங்களது உடலைப் போன்று வெறும் பஞ்சபூதங்களாலே ஆக்கப்பட்டதும் அல்ல என்று போற்றினார்.

இவ்விடத்தில் நாம் ஒரு கருத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பகவான் இயல்பாகவே எங்கும் வியாபிப்பவர். நீக்கமற நிறைந்து இருப்பவர். அதேபோல், அவருடைய பெருமைக்குத்தக்க ஒரு திருமேனியை அவதாரங்களின்போது எடுத்துக் கொள்கிறார். திருமேனியோடும் பெருமான் திகழ்கிறார்; திருமேனி இல்லாமல் அசரீரியாகவும் பகவான் இருக்கிறார். இரண்டுமே உண்மையான நிலைகள். பகவானுடைய திருமேனியும் ஸர்வ வியாபகம். அதாவது, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும். அவனுடைய திருமேனியைப் பற்றிக் கொண்டாட வந்த வேதாந்தம் –

ய ஏஷோ (அ)ந்தராதித்யே ஹிரண்மய:
புருஷோ த்ருச்யதே, ஹிரண்யஸ்மச்ருர்
ஹிரண்யகேச ஆப்ரணகாத் ஸர்வ ஏவ ஸுவர்ண:
தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகமேவ அக்ஷிணீ:

– என்று பேசுகிறது. அதாவது, திருமுடி தொடக்கமாக, திருவடி ஈறாக பொன்மயமான திருமேனி; நினைத்தாலே தாபங்களைப் போக்கவல்ல திருமேனி. மலர்ந்த இரண்டு தாமரைகளையொத்த திருக்கண்கள். கருகரு என்று இருக்கும் திருக் குழற் கற்றை –

நீலதோயத மத்யஸ்தா
வித்யுல்லேகேவ பாஸ்வரா

– என்று சாத்திரம் கூறியபடி, நீருண்ட கார்மேகம் போன்ற திருமேனி. அதில் மின்னல் வெட்டினாற் போன்ற ஒளி. இப்படிப்பட்ட திருமேனியில்தான் நம் மனதையும், புலன்களையும் லயிக்கச் செய்ய வேண்டும். பீஷ்மாசாரியர் தன்னுடைய துதியில் முதல் மூன்று ச்லோகங்களாலே அஷ்டாங்க யோகத்தின் மூன்று நிலைகளை வர்ணிக்கிறார். முதல் ச்லோகம் :

இதிமதிருபகல்பிதா வித்ருஷ்ணா
பகவதி ஸாத்வத புங்கவே விபூம்னி
ஸ்வஸுகமுபகதே க்வசித் விஹர்தும்
ப்ரக்ருதிமுபேயுஷி யத்பவப்ரவாஹ:

பகவானே! உனக்கேற்ற திருமேனியோடே இந்த பூமியில் பிறந்திருக்கிறாய். என்னுடைய மனது உன் திருமேனியில் ஈடுபடட்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

இவ்விடத்தில் அஷ்டாங்க யோகத்தைப் பற்றி சற்று விளக்குகிறேன். யமம், நியமம், ஆஸனம், ப்ராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணா, த்யானம், ஸமாதி என்பவைதான் எட்டு அங்கங்கள் கொண்ட யோகம். அவையாவன:

1. யமம் : பிரஹ்மசர்யத்தையும், அஹிம்ஸையையும் கடைப்பிடித்தல், உண்மையே பேசுதல், திருடாமல் இருத்தல், கைவிடத் தக்கவற்றை விட்டு விடுதல் – விலக்க வேண்டியவற்றை விலக்குதல்.

2. நியமம் : வேத வேதாங்கங்களைக் கற்றல், தூய்மையோடு இருத்தல், கிடைத்ததைக் கொண்டு சந்தோஷப்படுதல், தவம் புரிதல், மனத்தை அடக்குதல்.

3. ஆஸனம் : யோகம் செய்வதற்கு உண்டான உடற் பழக்கம், யோகம் செய்வதற்காக உட்காரும் நேர்த்தி.

4. ப்ராணாயாமம் : யோகம் செய்வதன் பொருட்டு, நம் ப்ராண வாயுவின் ஸஞ்சாரத்தை அடக்குதல்.

5. பிரத்யாஹாரம் : நம்முடைய வெளிப் புலன்களை எல்லாம் கண்டபடி மேய விடாமல், பகவானுடைய திவ்யமான திருமேனியில் நிலை நிறுத்துதல்.

6. தாரணா : நம்முடைய மனத்தை பெருமானுடைய திருமேனியில் ஒன்றச் செய்தல்.

7. த்யானம் : பெருமானை நினைந்து, நினைந்து, அந்நினைவினைத் தடங்கல் இல்லாமல் தொடரச் செய்தல்.

8. ஸமாதி : பரமாத்மாவை வசீகரணம் செய்து, அவனைக் கண்ணுக்கு நேரே காண்பது போலே பார்த்தல்.

இந்த எட்டு அங்கங்களில், கடைசி மூன்று அங்கங்களான தாரணா – அதாவது, மனத்தை பகவான் திருமேனியில் அசையாது நிறுத்துதல்; தியானம் – அவனை இடைவிடாமல் தியானித்தல்; ஸமாதி – பரமாத்மாவை வசீகரித்தல், ஆகிய இவற்றைக் கூறித்தான் கண்ணனிடத்தில் ஈடுபட்டார் பீஷ்மாசாரியர். ‘மூவுலகங்களிலும் அழகானதும், தமால வர்ணத்தில் உள்ளதும், சூரியனுடைய ஒளிக் கற்றைகளைப் போன்றதுமான பட்டுப் பீதாம்பரங்களை அணிந்திருப்பவரும், அழகிய திருக்குழல் கற்றை அசையும்படி வருபவரும், தாமரை போன்ற திருமுகமும், திருவாயும் கொண்டவரான பகவானிடத்தில் எப்போதும் எனக்கு அன்பு ஏற்படட்டும். என் விருப்பத்துக்கு என்று அல்லாமல், அவன் விருப்பத்துக்காகவே தொண்டு புரியக் கூடிய பெரும் பாக்கியம் நமக்குக் கிட்டட்டும் என்று பீஷ்மர் வேண்டினார். அவனை இடைவிடாமல் தியானித்தல் பக்தியாகவும் கூறப்படுகிறது. பக்தி என்றால் என்ன? தியானத்தில் நீடித்த நிலை, அதிலும் குறிப்பாக, அன்போடு கூடியதான தியானமே பக்தி.

ஸ்நேஹ பூர்வம் அநுத்யானம்
பக்திரிதி அபிதீயதே

– என்று கூறுவார்கள். அன்போடு கூடிய இடைவிடாத நினைவுத் தொடர் பக்தி என்று சொல்லப்படுகிறது. இரண்டு பாத்திரங்களில் ஒன்றில் தண்ணீரையும், மற்றொன்றில் எண்ணெயையும் நிரப்புவோம். தண்ணீர் பாத்திரத்தின் குழாயைத் திறந்தால் பிசிறோடு தண்ணீர் ஓடி வரும். ஆனால், எண்ணெய்ப் பாத்திரத்தின் குழாயைத் திறந்தால், பிசிறில்லாமல் எண்ணெய் ஒழுக்காக கீழே விழும். எண்ணெய் ஒழுக்கைப் போலத்தான், சங்கிலித் தொடர் போல, பிசிறில்லாமல் பகவானைப் பற்றிய நினைவு நமக்கு ஏற்பட வேண்டும். அதுவே பக்தியாகிறது. அந்த பக்தி நீடிக்க வேண்டும். மற்ற எதைப் பற்றியும் சிந்திக்காமல், அவனையே சிந்திக்க வேண்டும். இது வளர்ந்து, வளர்ந்து ஸமாதி நிலையை அடைகிறோம்.

பீஷ்மர் வேண்டுகிறார் : “குருக்ஷேத்ர யுத்த பூமியின் தூசிகளால் பொன்னிறமாக்கப்பட்ட திருமுடியை உடையவனும், நெற்றியில் வந்து விழும் முடிக் கற்றைகளோடே, வியர்வைத் துளிகளோடே காட்சி தரும் பெருமானிடத்தில் என்னுடைய ஆத்மா லயிக்கட்டும். நான் விடுத்த அம்புகளினால் உடலிலே ரணம் ஏற்பட்டு, உடைந்து போன கவசத்தோடு என்னை நோக்கி வந்தவனான பெருமானிடத்தில் என் மனம் லயிக்கட்டும். பார்த்தசாரதி எம்பெருமான்தான் எத்தனை பேரழகு வாய்ந்தவர்!

மேலும் பீஷ்மர் கூறலானார்: “எது தர்மம்? எது அதர்மம்? என்று மயங்கிக் கிடந்த அர்ஜுனனுக்கு ‘யுத்தம் புரிவதே உன் தர்மம்! நாட்டையும் காப்பாய்; உன்னையும் கர்ம யோகத்தில் ஈடுபடுத்திக் கொள்வாய் என்று மயக்கம் தீர்த்தான் கண்ணன். அதோடு மட்டுமல்லாமல், ‘ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று கண்ணன் சத்திய பிரதிக்ஞை செய்திருந்தான். ஆனால், நானோ கண்ணனை ஆயுதம் எடுக்க வைப்பேன் என்று சூளுரைத்தேன். கண்ணன் எப்போதும் உண்மையே பேசுபவன். பகவானா பொய் கூறுவார்? ஆனால், பக்தனான என்னுடைய வார்த்தையை மெய்யாக்குவதற்காக, திருமால் தன் வார்த்தையைப் பொய்யாக்கிக் கொண்டு, என்னிடத்தில் பொய்க் கோபத்தோடு, கையில் தேர்ச் சக்கரத்தை ஏந்திக் கொண்டு, யுத்த களத்தில் அடியேனை முடிக்க ஓடி வந்தாரே! அந்தத் திருக்கோலத்தில் இருந்த கண்ணனிடத்தில் என்னை இழக்க எத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தேன்! தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பக்தனின் ஹ்ருதயத்திலும் பெருமான் ஒளி விடுகிறார். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. அவனை அடைவதற்காகவே காத்திருந்தேன். அவரே என் அருகில் வந்திருக்கும்போது, இனி என்ன தாமதம்? என்று கூறிக் கொண்டே பெருமானை வணங்கினார்.

அத்தோடு அவருடைய ஆத்ம ஜோதி புறப்பட்டு ஆகாயத்தில் சொர்க்கத்தைச் சென்று அடைந்தது. தேவ லோகத்திலிருந்து துந்துபிகள் எல்லாம் முழங்க, அடியார்கள் அனைவரும் வாழ்த்துக் கூற பீஷ்மாசாரியர் புறப்பட்டுப் போனார். கண்ணனே இருந்து வழி அனுப்பி வைத்தான். பிற்பாடு, அனைவரும் ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பினார்கள். அது பற்றி சௌனகர், ஸூதரிடத்தில் வினவினார் : “கண்ணனையே பற்றியிருந்த தர்மபுத்திரன் நாட்டை எப்படி ஆண்டான்?

ஸூதர் கூறலுற்றார் : “கண்ணனுடைய அருளாலே ஆட்சி பெற்ற தர்மபுத்திரன், ‘நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைத் துறந்து, தாழ்ந்த பயன்களில் விருப்பமற்று, உயர்ந்த தர்மத்துக்காக நாட்டை ஆண்டான். அப்போது தீங்கின்றி திங்கள் மும்மாரி பெய்தது. வள்ளல் பெரும் பசுக்கள் பால் சுரந்தன. எங்கும் குறையின்றி மக்கள் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். சில காலம் அங்கு வாழ்ந்து, அவர்களிடத்தில் கண்ணன் விடைபெற்றுக் கொண்டு துவாரகா நகரத்தை நோக்கிப் புறப்பட்டான். அப்போது நாடே விழாக் கோலம் பூண்டு வழி அனுப்பி வைத்தது. அங்கு திரண்டிருந்த பெண்கள் எல்லாம் துதித்தார்கள். ‘ஜகத்துக்கே காரணமாய், வேதத்தாலும், புராணங்களாலும் போற்றப்படும் பகவான் நமக்கு அருள் புரிவதற்காகவே இத்திருமேனியுடன் வந்திருக்கிறான். யோகீந்திரர்களாலே கூட அடைய முடியாத திருமால், நம்மைத் தேடி வந்தது பெரும் பாக்யம். நம்மிடத்திலிருந்து புறப்பட்டு, கண்ணன் துவாரகைக்குச் செல்கின்றானாமே! அவனை இழந்தே போனோம் என்று ஒரு புறத்தில் வருத்தமும் உற்றார்கள். கண்ணன் மாறாத புன்சிரிப்போடே தேரில் ஏறி, ஹஸ்தினாபுரத்திலிருந்து கிளம்பி குருதேசம், ஜாங்கல தேசம், பாஞ்சாலம், யமுனைக் கரை, ப்ரஹ்மாவர்த்தம், குருக்ஷேத்ரம், மத்ஸ்ய தேசம், ஸாரஸ்வத ப்ரதேசம் ஆகியவற்றை எல்லாம் கடந்து, ஆனர்த தேசத்தை அடைகிறான். அங்கே நம் கண் முன்னால் துவாரகை பரந்து, விரிந்து நம்மை வரவேற்கிறது. கண்ணனும் துவாரகைக்குள் நுழைய, அவன் திருவடிகளைப் பின்பற்றி நாமும் அங்கே நுழைவோம்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக