திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 18


முதல் ஸ்கந்தம் – எட்டாம் அத்தியாயம்

துவாரகை திரும்பிய கண்ணனுக்கு வரவேற்பு

இந்திரப்ரஸ்தத்திலிருந்து புறப்பட்ட கண்ணனும் துவாரகையில் நுழைந்தார். நம் பாரத தேசத்தின், குஜராத் மாநிலத்தில், மேற்கு கோடியில், கடலோரமாக உள்ள திருத்தலம் துவாரகை. பஞ்ச துவாரகையில் ஒன்றாகச் சிறப்புப் பெற்றது கோமதி துவாரகை. இங்கே கோமதி நதி கடலோடு கலக்கிறாள். அதன் கரையில் அன்றே கண்ண பெருமான் அரண்மனை கட்டி, நாட்டை நலம் பெருக ஆண்டார். இன்றும், கோவர்த்தன கிரியைத் தன் திருக்கரத்தில் ஏந்தி, கண்ணன் எழுந்தருளியிருக்கும் ஸன்னிதானம் நம் அனைவருடைய மனத்தையும், கண்ணையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இன்று கோமதி, துவாரகையிலிருந்து, கடலில் சிறிது தொலைவு பிரயாணம் செய்தால், அடுத்து, பேட் துவாரகை வருகிறது. இங்குதான் கண்ணன், குசேலரைச் சந்தித்துப் பேசி, அனைத்துச் செல்வங்களையும் அருளினான். கோமதி துவாரகையும், பேட் துவாரகையும் சிறப்புறுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்மையாக, நம் பாரத தேசத்தின் நுழைவாயிலில் இது இருக்கிறபடியால், அதாவது, துவாரத்தில் இருக்கிறபடியால், இதற்கு ‘துவாரகா என்று பெயர் பெற்றது. அடுத்து, முக்தி தரும் க்ஷேத்திரங்கள் ஏழுக்குள் இது சிறந்து விளங்குகின்றது. அயோத்தியா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா ஆகிய இவை ‘முக்தி தரும் நகர் ஏழு என்ற பிரஸித்தி பெற்றவை.

அயோத்யா மதுரா, மாயா
காசீ காஞ்சீ அவந்திகா
புரீ ஸ்ரீமத் துவாரவதீ சைவ ஸப்தைதா
முக்தி தாயிகா:

– என்ற இந்த ச்லோகம் அயோத்தியா, மதுரா, மாயா எனும் ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜயினி, துவாரகை ஆகிய ஏழு க்ஷேத்திரங்களில் இருந்து கொண்டு பெருமானை பூஜித்தால் நம் பாபங்கள் அனைத்தும் விலகி, முக்தி கிட்டும் என்று சொல்ல வந்தது. அதிலும், கண்ண பெருமான் எழுந்தருளியிருந்து ஆண்ட இடமான துவாரகைக்கு என்றே ஒரு தனிச் சிறப்பு உண்டு!



இன்று இருக்கும் துவாரகைக் கோயிலின் அமைப்பின் சிறப்பைச் சற்றே நோக்குவோம். 56 படிகள் கொண்ட கோயில். கண்ணனுடைய ஆட்சியில் 56 குழுக்களாய் அமைந்த யாதவர்களை நினைவூட்டுகிறது. இக்கோயிலில் நான்கு நிலைகள் உள்ளன. வடக்கே பதரீநாதன் உறையும் பதரிகாச்ரமம்; கிழக்கே ஜகந்நாதன் பொலியும் புரி ஜகந்நாதம்; தெற்கே ஸ்ரீரங்கநாதன் பள்ளி கொள்ளும் ஸ்ரீரங்கம்; மேற்கே துவாரகாநாதன் அருள்பாலிக்கும் துவாரகை – என்று நான்கு திக்குகளில் இருந்து கொண்டு இந்நானிலத்தை ஆளும் நான்கு ‘நாதர்கள் எழுந்தருளியிருக்கும் திவ்யக்ஷேத்ரங்களையும் இவை கோடி காட்டுகின்றன. ஏழு நிலைகளில் கோபுரம் உள்ளது. முக்தி தரும் க்ஷேத்திரங்கள் ஏழினையும், ஸப்த ரிஷிகளையும் குறிக்கும் வண்ணம் இக்கோபுரங்கள் விளங்குகின்றன. இக்கோயிலில் உள்ள நீண்ட கொடியை ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றுகிறார்கள். பட்டொளி வீசிப் பறக்கும் இவ்வழகிய கொடி 52 கஜ நீளம் உடையது. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் – என்றவற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது! இப்படிப்பட்ட துவாரகையில் கோவர்த்தன கிரிதாரியாக, அங்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குக் கண்ணன் இன்றும் காட்சியளித்துக் கொண்டு எழுந்தருளியிருக்கிறான்.

கண்ணன் எம்பெருமான் துவாரகைக்குள் நுழைந்தார். அவனை விட்டுப் பிரிந்திருந்த ஆண்களும், பெண்களும் ஆவலோடு அவனை தரிசிப்பதற்காக ஓடோடி வந்தார்கள். நாள் முழுவதும் தந்தை வெளியில் சென்றிருந்தால், மாலை வீடு திரும்பும்போது, ஆசையோடு குழந்தை வந்து காலை கட்டிக் கொள்ளும் அல்லவா? அதைப்போல், கண்ணனுடைய பிரஜைகள் அனைவரும், கண்ணனைக் காண்பதற்காக விரைந்தோடி வந்தார்கள்; தோத்திரம் செய்தார்கள். கண்ணன் வரும் வீதிகளில் எல்லாம் பலவகைச் சித்திரங்கள் வரையப்பட்டு, வண்ணப்பொடி தூவிய கோலங்கள் இடப்பட்டு, தோரணங்கள் நாட்டப்பட்டிருந்தன. பூர்ண கும்பங்களை ஏந்திக் கொண்டு, ஆரத்தி எடுப்பதற்காகவும் இரு மருங்கிலும் மக்கள் காத்திருந்தனர். பொதுவாகவே பகவான் கோவிலில் இருந்து புறப்பாடு கண்டு அருளி, திருவீதி உலாவாக எழுந்தருளும்போது, நம் வீட்டு வாசலைத் திறந்து வைக்க வேண்டும். அவன் நம் வீதியில் எழுந்தருளும்படியாக, நாம் ஒரு கோயிலுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்றால், அதுவே ஒரு பெரும் பாக்கியம்! உத்ஸவத்தின்போது, பெருமான் பல்லக்கில் புறப்பட்டு வருவார். அப்போது, நம் வீட்டின் வாயில் கதவை திறந்து வைப்பது மட்டுமின்றி விளக்கேற்றி, கோலமிட்டு, பூர்ண கும்பத்தை வைத்து, தட்டில் வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவற்றை வைத்து பெருமானை வரவேற்று, அவற்றை ஸமர்ப்பிக்க வேண்டும்,

நம் வீடு தேடி வந்தீரே! என்று போற்றி அவனுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும். பழம்பெருமை மிக்க நம் பாரதப் பண்பாட்டில் இதுவே நாம் பகவானை கௌரவமாக வரவேற்கும் முறை. இந்த முறையை அனுசரித்து, துவாரகா மக்கள் கண்ணனை வரவேற்றார்கள். ஒரு தந்தைக்கும், குழந்தைக்கும் 40 அல்லது 50 ஆண்டுகளோ அல்லது ஒரு பிறவியிலோ உறவு முறை இருக்கலாம். அவர்களுக்குள்ளேயே இத்தனை பாசமும், பரிவும் இருக்குமானால், பரமாத்மாவான கண்ணனுக்கும், அவனுடைய பிரஜைகளான ஜீவாத்மாக்களுக்கும் எத்தனை உறுதியான உறவு இருக்கும்! அவனை விட்டுப் பிரிந்து, அவர்களால் சகிக்க முடியுமா? ஆழ்வார் ஒரு பாசுரத்தில்,

‘ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ...

– என்று பகவானின் பிரிவாற்றாமையால் தெரிவிக்கிறார். நமக்கு மிகவும் வேண்டியவர்களோடு இருந்தால், பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும், சில மணித் துளிகளாகத்தான் தோன்றும். ஆனால், வேண்டாதவர்களோடு பேசினால், சில மணித் துளிகளே, ஓர் ஆயுட் காலத்தைப் போல நீண்டு இருக்கும். கண்ணனைப் பிரிந்து ஒரு பகல் பொழுதைக் கழிப்பதற்குள் கோபிகாஸ்திரீகளுக்கு ஆயிரம் ஆண்டுகள் போனது போல இருந்ததாம். இங்கே துவாரகா நகரத்துவாசிகளுக்கு, கண்ணன் வெளியேறி, பூபாரம் தீர்ப்பதற்காக மஹாபாரதப் போரை முடித்து, தர்மபுத்திரன் முதலானோருக்கு உபதேசம் செய்து, திரும்பி வரும் வரை அவர்களால் காத்திருக்க முடியவில்லை. அவர்களுக்குப் பெருமானோடே பல தொடர்புகள் உண்டு. இவ்விடத்தில் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் இடையே உண்டான ஒன்பதுவித உறவு முறைகளைப் பற்றிச் சிறிது சொல்லியாக வேண்டும். இதை ‘நவ வித ஸம்பந்தம் என்று கொண்டாடுகிறார்கள்.

பிதா ச ரக்ஷக: சேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி:
ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா
சாத்யமநூதித:

– என்று ஒரு ச்லோகம், பிள்ளை உலகாசிரியர் எனும் வைணவப் பேராசிரியராலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள ஒன்பது உறவு முறைகளைப் பற்றிக் கூறுகிறேன்.

1. பகவான் நமக்குத் தந்தை : நாம் அவனுக்கு மக்கள். ஒரு தந்தை அவசியம் தனது மக்களைக் கனிவுடன் கவனித்துக் கொள்வான்.

2. அவனே ரக்ஷகன் : பெருமான் காப்பாளன். நாம் அனைவரும் அவனால் காக்கப்படுபவர்கள்.

3. சேஷீ : அதாவது அடிமைகளான நம்முடைய, தொண்டுகளை ஏற்றுக் கொள்பவன் பகவான் என்பது இதன் பொருள். நாம் அனைவரும் அவனுக்குத் தொண்டு புரியும் இயல்புடைய தொண்டர்கள் என்பதும் இதனால் உணர்த்தப்படுகிறது.

4. பர்த்தா : பெருமான்தான் கணவன். ஜீவாத்மாக்கள் அனைவரும் மனைவி போன்றவர்கள். இதிலே ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது. நாம் அனைவரும் மனைவிகள். புருஷோத்தமனான பெருமாள் ஒருவனே கணவன்.

5. ஜ்ஞேய : அதாவது அறியப்பட வேண்டியவனான பரம்பொருள். நாம் கண்ணனுக்கு நேராகவோ அல்லது யூகித்தோ அல்லது சாத்திரங்கள் மூலமோ எல்லா வகையாலும் அறிந்து கொள்ள வேண்டியது – ப்ரஹ்மத்தையே. ஆக, அறிந்து கொள்ள வேண்டியவர்கள் நாம். அறிந்து கொள்ளப்படுபவன் பரம்பொருளான பகவான்.

6. ஸ்வாமி : பகவான் அனைத்தையும் உடையவனாக – ஸ்வாமியாக – உள்ளான். நாம் அவனுடைய உடமையாக, சொத்தாக உள்ளோம்.

7. ஆதாரம் : உலகனைத்தையும், ஜீவாத்மாக்கள் - அனைவரையும் தாங்குபவனாக பகவான் உள்ளான். நாம் அவனால் தாங்கப்படுபவர்களாக உள்ளோம்.

8. ஆத்மா : நாம் அனைவரும் பெருமானுக்கு உடல் போன்றவர்கள். பகவான் நமக்கு ஆத்மா. இதைத் ‘சரீராத்ம ஸம்பந்தம் என்று பகவத் ராமானுஜர் கூறுகின்றார்.

9. போக்தா : பெருமான் நம்மை அனுபவிப்பவன். நாம் பெருமானாலே அனுபவிக்கப்பட வேண்டியவர்கள். ஒருவன் உணவை எப்படி அனுபவிப்பானோ, அல்லது பூமாலை சூடி எப்படி இன்பப்படுவானோ அல்லது சந்தனத்தை பூசிக் கொண்டு எப்படி ஆனந்தப்படுவானோ, அதைப்போல பரமாத்மா ஒவ்வொரு ஜீவாத்மாவையும் அனுபவிக்கிறார்.

– இப்படி ஒன்பது வகையான உறவு முறைகள் பெருமானுக்கும், நமக்கும் உண்டு. இந்த உறவை நாம் விரும்பினாலும் வெட்டிவிட முடியாது. கருணையே உருவான மஹாலக்ஷ்மி கூட ஒருக்கால் நினைத்தாலும் வெட்ட முடியாது. ஏன்! எம்பெருமானே நினைத்தாலும் கூட வெட்ட முடியாது. இதை ‘ஒழிக்க ஒழியாத ஒன்பதுவித ஸம்பந்தம் என்று கூறுவார்கள். ஆண்டாளும் ‘இதையே தனது திருப்பாவைப் பாசுரத்தில் ‘உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று கூறியருளினாள்! இந்தத் தொடர்புகள் அத்தனையும் உள்ளது என்று புரிந்து கொண்டிருந்த துவாரகா வாசிகளுக்குத்தான், கண்ணன் திரும்பி வந்ததில் என்ன ஓர் ஆனந்தம்!

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக