திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 19


முதல் ஸ்கந்தம் – எட்டாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

துவாரகை திரும்பிய கண்ணனுக்கு வரவேற்பு

கண்ணன் துவாரகாவாசிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு மெதுமெதுவே நாட்டுக்குள்ளே நுழைகிறான். மக்கள் எல்லோரும் தோத்திரம் செய்தார்கள்.

பவாய நஸ்த்வம் பவ விச்வ பாவன
த்வமேவ மாதா அதஸுஹ்ருத் பதி: பிதா
த்வம் ஸத்குரு: ந: பரமஞ்ச தைவதம்
யஸ்யானு வ்ருத்யா க்ருதினோப பூவிம

கண்ணனே! நீயே எங்களுக்குத் தந்தை. நீயே பிரியமான தாய்! நீயே வழி நடத்தக்கூடிய குரு! நீயே ஆண்டு அனுபவிக்கும் தெய்வம்! இப்படிப்பட்ட உன்னை எங்களால் பிரிந்திருக்க இயலாது. உன்னுடைய திருக்கண்கள், அழகிய திருப்புருவம், கேச பாசம் உருண்டோடிடும் திருநெற்றி, உன்னுடைய நீண்ட அழகான கழுத்து, பரந்து விரிந்து இருக்கும் திருமார்பு, அனைவருக்கும் தஞ்சமாக இருக்கும் திருவடி இவற்றையெல்லாம் எங்கள் கண்களில் படாமல் மறைத்துக் கொண்டு இத்தனை நாள் எங்கு சென்றாய்? என்று ஏங்கி வினவினர்.

அவர்களுடைய பக்தியைக் கண்ட கண்ணன், அவ்வனைவரையும் தனக்கு ஸமமாக மதித்தான். பணக்காரன், ஏழை; படித்தவன், படிக்காதவன் – அனைவரையும் கட்டிக் கொண்டு, தழுவி, புன்சிரிப்பாலே அவர்களது இதயத்தை உருக வைத்துக் கொண்டு, நலம் விசாரித்து எல்லாருக்கும் ஆனந்தத்தை ஏற்படுத்தினான். பெருமானுடைய திரு முன்பாக ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும் ஸமம்தானே! இன்றும் துவாரகையில் ஸேவிக்கப் போனால், ஒரு விசேஷம்! தனித்தனியாக வரிசைகள் கிடையாது; தனித்தனியாக சீட்டுகளும் கிடையாது. அனைவரும் ஒரு பெரும் கூடத்தில் குழும வேண்டும். கண்ணனோ கோவர்த்தன கிரிதாரியாக அங்கு எழுந்தருளி இருப்பார். ‘இதிலே, பணக்காரர்கள் முன்னே செல்லலாம். ஏழைகள் பின்தங்கி இருக்க வேண்டும் என்கிற வேறுபாடு கிடையாது. ஆனால், ஒரு வேறுபாடு உண்டு. பெண்கள் அனைவருக்கும் முன்வரிசையில் இடம். ஆண்கள் அனைவரும் பின்னால்தான் இருக்க வேண்டும். ஆக, கண்ணனுக்கு முன்னால், பெண்களுக்குத்தான் முதல் இடம். உலகத்தின் முறைகள் எப்படியும் இருக்கலாம். ஆனால், கண்ணன் எப்போதும் பெண்களுக்குத்தான் முதலிடம் கொடுத்தான். அவர்கள்தானே எப்போதும் அவனுக்கென்றே வாழ்ந்தவர்கள்! இங்கே, கண்ணன் துவாரகைக்குள் நுழைந்ததை பாகவதத்தில் சுகாசாரியர் அழகான எடுத்துக்காட்டின் மூலம் விளக்குகிறார்.

நாம் ஆகாயத்தை நோக்கினால், கருத்த மேகங்கள் இருக்கக் கூடும். ஒரு சமயம் சூரியனும், மற்றொரு சமயத்தில் சந்திரனும் – அந்த மேகத்துக்கு அழகூட்டும். சில சமயங்களில், அதன் அருகிலே ஏழு வர்ணங்கள் கொண்ட வானவில் மெருகூட்டுகிறது. இரவில் பார்த்தால் நட்சத்திரங்கள் குளிர்ந்த ஒளியை உமிழ்கின்றன. அதே சமயத்தில் மழைக் காலத்தில் மின்னல் வெட்டி வானத்தையே ஓர் அழகான சித்திரமாக்கி விடுகிறது. இதேபோலத்தான் கண்ணனும்! கண்ணனே மேக வண்ணன்தானே! ஆகவே, கருத்த மேகத்தைப் போல கண்ணன்! அவனுக்கு அடியார்கள் பிடித்த வெளுத்த குடை, சூரியனைப் போலே ஒளிபரப்பியது. அவனுக்கு வெள்ளைச் சாமரம் வீசினார்கள். அது குளிர்ந்த சந்திரனைப் போல இருந்தது. வானில் கார்மேகத்தையொட்டி வானவில் இருக்குமே! பெருமான் தன் திருமார்பில் சாற்றிக் கொண்டிருந்த துளசி வனமாலையும் வெவ்வேறு வர்ணப் பூக்களோடு அந்த வானவில்லைப் போல காட்சியளித்தது. பெருமான் வருவதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பூக்களை வாரி இறைத்தார்கள். அது, நக்ஷத்திரம் பூச்சொரிந்தாற் போலே இருந்ததாம்.



கண்ணன் சாற்றிக் கொண்டிருந்த பட்டுப் பீதாம்பரம் மின்னலைப் போல ஒளியைப் பரப்பிற்று. இதையெல்லாம் நாம் ஊனக்கண் கொண்டு பார்க்க இயலுமா? ஞானக் கண்ணன்றோ தேவை! இதை நம் தமிழ் மரபில் ‘இல் பொருள் உவமை அணி என்று கூறுவோம். நம் அகக்கண்ணில் இந்தக் காட்சியை தியானித்தால், கண்ணனே நம் மனத்துக்குள் இறங்கிவிட மாட்டானா? இதோ! கண்ணன் தன் அரண்மனைக்குள் நுழைகிறான்! தன் தாய்மார்களையும், மனைவிகளையும் கண்டு ஆசையுடனும், பாசத்துடனும் அணைத்துக் கொள்கிறான். அங்கு இருப்பவர்கள் எல்லாம், ஒரு புறத்தில் கண்ணன் மிக உயர்ந்தவன் என்று நினைத்திருந்தாலும், அவர்கள் தம் களங்கமற்ற அன்பினால் அவனிடம் பழகி வந்தது, அவனைத் தங்களைப் போல் ஒரு மனிதனாக நினைத்தே! நமக்கு ஓர் ஐயம் எழலாம். ‘மாணிக்கமாகவே இருந்தாலும், சேற்றில் விழுந்தால் அதன் ஒளி மங்கிப் போகுமே! அதேபோல், திருமால் இப்பூவுலகத்தில் மனித வேஷத்தில் இருந்தால், அவன் ஒளி மங்கி, இந்த உலகுக்கே உரிய தோஷங்கள் – குற்றங்கள் – அவனையும் பாதிக்காதா? என்று தோன்றலாம். ஆனால், அப்படியல்ல! அவன் இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் ஸம்ஸாரத்தில் பிறந்தாலும், இதனுடைய குற்றங்கள் ஒன்றும் அவனை பாதிக்காது. ஏனெனில், அவன் கர்மத்தின் அடிப்படையில் பிறக்கவில்லை. தன் விருப்பத்தினால் உந்தப்பட்டு பிறந்திருக்கிறான். ஆகவே, கண்ணன் தன் ஒளி மங்காமலே மனிதனாக இவர்களோடு பழகி, ஆனந்தத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தான் – என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்பதாம் அத்தியாயம் – பரீக்ஷித்தின் பிறப்பு

சௌனகர் முதலான ரிஷிகள் ஸூத பௌராணிகரிடத்தே, ‘பரீக்ஷித்தின் பிறப்பைப் பற்றியும், அவன் வளர்ந்த விதத்தையும், சுகாசாரியாரிடத்தே உபதேசம் பெற்றதையும், இறுதியாக பாம்பு கடித்து இறந்து போனது பற்றியும் சொல்லும்படி கேட்டார்கள். ஸூதர் கூறத் தொடங்கினார்: “தர்மபுத்திரன் செங்கோலாட்சி புரிந்து வந்தான். நாட்டு மக்கள் ஆனந்தமாக இருந்தார்கள். உத்தரையின் கர்ப்பம் வளர்ந்தது. அச்வத்தாமா விடுத்த அஸ்திரம், உத்தரையின் கர்ப்பத்துக்குள் புகுந்து கலக்கத் தொடங்கிற்று. அப்போது ஒரு கட்டை விரல் அளவு மட்டுமே உள்ளபடி, தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு, சூட்சும வடிவில் கண்ணன் எம்பெருமான் பரீக்ஷித் உறையும் கர்ப்பத்துக்குள்ளே புகுந்தார். தன் சுதர்சன சக்கரத்தோடும், ஒளி வீசும் திருமேனியோடும் சுற்றிச் சுற்றி வந்து அவனைக் காத்தார். அந்த பகவான் ஒருவன்தானே அனைத்துலகத்துக்கும் காப்பாளன். உரிய காலத்தில் குழந்தை வந்து பிறந்தது. ஆனால், கரிக்கட்டையாக இருந்தது. கண்ணன் தன் திருவடிகளால் தீண்டி, அக்குழந்தைக்கு உயிர் ஊட்டினான். இதைப் பார்த்த ஜோதிடர்கள் எல்லோரும் வியந்தார்கள். கண்ணனுடைய அனுக்ரஹம் பெற்றது இக்குழந்தை என்பதாலும், விஷ்ணுவாலே உயிர் கொடுக்கப்பட்டவன் என்பதாலும் இவனுக்கு ‘விஷ்ணுராதன் என்ற பெயர் இருக்கட்டும் என்றுரைத்தனர். அடுத்து பாண்டுவே திரும்பி வந்து பிறந்தான் என்று கொண்டாடும்படியான ஒளியோடு குழந்தை இருந்ததாம். இந்தக் குழந்தையை, கண்ணன் கர்ப்பத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்து காத்தபடியால் ‘பரித: ஈக்ஷணம் – (சுற்றிச் சுற்றி வந்து கருணை நோக்கினால் பகவானால் காக்கப்பட்டவன்) என்ற விளக்கத்தையொட்டி ‘பரீக்ஷித் என்ற பெயர் ஏற்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல், வெளியே வந்த குழந்தை, கர்ப்பத்துக்குள் தன்னைக் காத்த அந்தப் பரம்பொருள் எங்கே? அந்த மஹா புருஷன் எங்கே? என்று பார்க்கும் இடங்களில் எல்லாம் பரீட்சித்துப் பரீட்சித்துத் தேடி வந்ததாம்! ஆகையால், ‘பரீக்ஷித் என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் கொள்வர். இப்படியாக பரீக்ஷித் சிறப்பானதொரு பிறவி பெற்றான். பெருமானுடைய அருளாலே வளர்ந்தான். அனைவரையும் ஸமமாக மதித்து, நாட்டை நன்கு ஆளத் தொடங்கினான். ‘இவன் பல யாகங்கள் செய்வான். கலி புருஷனையே கட்டுப்படுத்துவான். ஆனால், பிற்காலத்தில் இவன் ‘சிருங்கி என்னும் முனிகுமாரனாலே சபிக்கப் பெற்று, ஏழு நாட்களில் தக்ஷகன் எனும் பாம்பு கடித்து இறந்து போவான். அதற்கு முன்னால், தான் அதுவரை நினைத்தும் பேசியும் பார்த்திராத சுகாசாரியாரிடத்திலிருந்து, ஏழு நாட்களில் ‘பாகவத புராணத்தை உபதேசமாகப் பெறுவான். அவன் பெற்ற உபதேசம் உலகனைத்துக்குமாக ஆகி, அனைவருக்குமே நன்மை செய்யப் போகிறது – என்று இப்படி ஜோதிடர்கள் பரீக்ஷித் பிறந்தபோது சொன்ன ஆரூடம் அனைத்தும் பிற்காலத்தில் பலித்தது. நமக்கும் பரம பவித்ரமான பாகவதம் கிட்டிற்று.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக