திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 20


முதல் ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

திருதராஷ்டிரன் முக்தி விழைதல்

தர்மபுத்திரன் தன்னுடைய பந்துமித்திரர்களோடு நாட்டை ஆண்டு கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். திருதராஷ்டிரன் போன்ற பெரியோர்களும் அவனோடு வசித்து வந்தார்கள். இவர்களிடமிருந்து பிரிந்து விதுரர் தீர்த்த யாத்திரை சென்றார். ஒவ்வொரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கும் சென்று பகவானை தரிசித்து, அங்குள்ள புண்ணிய நதிகளில் நீராடினார். வழியில் ஒரு நதிக்கரையில் மைத்ரேயரைக் கண்டார். வஸிஷ்டருடைய பேரனான பராசர மஹரிஷியினுடைய சிஷ்யர் மைத்ரேயர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடமே பல உபதேசங்களைப் பெற்றவர். அவரைச் சந்தித்த விதுரர், தனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களைக் கேட்டார். பதில்களைப் பெற்றுத் தெளிவடைந்தார்.

நாம் எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும், அறிவாளிகளாக இருந்தாலும் சான்றோர்களைக் காணும்போது, அவர்களிடம் பகவானைப் பற்றியும், அவனது திவ்யமான செயல்களைப் பற்றியும் அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டு, அவற்றை மனத்தினால் சிந்தித்து அறிந்து கொண்டு, மனத்தில் தோன்றும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளவும் வேண்டும். ‘தவம் என்னும் வடமொழிச் சொல், ஆலோசித்தல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ரிஷி தவம் புரிகிறார் என்றால், காட்டில் அமர்ந்து கொண்டு கண் மூடி ஜபித்துக் கொண்டிருக்கிறார் என்று மட்டும் பொருள் அல்ல. மேன்மேலும் ப்ரஹ்மத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்; அதனால் தன் அறிவையும், பண்பையும் வளர்த்துக் கொள்கிறார் என்பது பொருள்.



பல நாட்கள் கழித்து, விதுரர் நாட்டுக்குத் திரும்பினார். அப்போது, திருதராஷ்டிரன், தர்ம புத்திரன், காந்தாரி, திரௌபதி ஆகிய அனைவரும் அவரை ஆசையோடு வரவேற்றார்கள். நம் உடலை விட்டுப் பிரிந்த பிராணன், மீண்டும் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியை எய்துவோமோ, அதைப் போல் விதுரர் திரும்ப வந்ததை குறித்து அனைவரும் ஆனந்தப்பட்டார்கள். நாடே அவர் வருகையாலே இன்பப்பட்டது. தர்மபுத்திரன் அவரை வணங்கி, ஆஸனத்திலே அமர்த்தி, “தாங்கள் தீர்த்த யாத்திரை சென்று வந்தீர்கள்! அந்தப் பிரயாணத்தின் செய்திகளை எல்லாம் எங்களுக்கு விவரமாகக் கூறுவீராக! புண்ணிய க்ஷேத்திரங்களைப் பற்றிக் கேட்பதால், நம் பாவங்கள் அனைத்தும் தொலைகின்றன. எனவே அவற்றை கேட்கும் ஆவலோடு இருக்கிறேன் என்று கேட்டான்.

விதுரர், தான் சென்று வந்த இடங்களையும், அங்கு தரிசித்த பெருமானுடைய மகாத்மியங்களையும் விளக்கமாகக் கூறினார். விதுரருடைய வரலாறு ஆச்சரியமானது. மாண்டவ்யர் என்னும் முனிவரின் சாபத்திற்கு இணங்க எமதர்மராஜன் நூறு ஆண்டுகள் பூலோகத்தில் பிறக்க நேரிட்டது. மாண்டவ்யர் என்னும் ரிஷி, தான் செய்யாத குற்றத்திற்காக ஓர் அரசனால் கழுவில் ஏற்றப்பட்டார். குற்றம் செய்யாதபடியாலும், தவ வலிமை மிக்கவராக இருந்தபடியாலும் அவர் கழுவினால் ஊடுருவப் படாமல் இருந்தார். இந்த ஆச்சரியத்தைக் கண்ட அரசன், இவருடைய பெருமையை உணர்ந்து கொண்டு, இவர் குற்றமற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு விடுவித்தான். பிறகு, இவர் நரக லோகத்துக்குச் சென்று எமதர்மராஜனிடத்தில் ‘நான் குற்றமே செய்யாத போதிலும், ஏன் கழுவில் ஏற்றப்பட்டேன்? என்று முறையிட்டார்.

இது கண்டு பயந்து போன எமதர்மன், ‘நீர் போன பிறவியில் ஆறு வயதாக இருக்கும்போது ஒரு பூச்சியைக் கட்டி வைத்துக் குத்தினீர். அதனால்தான் தற்போது கழுவில் ஏற்றப்பட்டீர். குற்றமில்லாதபடியால் விடுவிக்கப்பட்டீர் என்று பதிலளித்தான். இதைக் கேட்ட ரிஷிக்குக் கோபம் ஏற்பட்டு, ‘ஆறு வயதுக் குழந்தை செய்த குற்றம், தண்டிக்கத்தக்க குற்றத்தில் சேராது. பன்னிரெண்டு வயது வரை, குற்றம் புரிந்தாலும், அது அறியாமையால் நேரக் கூடியதாகையால் பாவத்திலோ, தண்டனையிலோ சேர்க்கப்படுவது நியாயமில்லை! ஆனாலும், என் குற்றத்தைக் கணக்கு வைத்துக் கொண்டு, நீ எனக்குத் தண்டனை கொடுத்தாய். ஆகவே, நீ குற்றவாளி ஆகிறாய். எனவே, நீ பூலோகத்தில் போய் மனிதனாகப் பிறப்பாயாக என்று சபித்தார்.

அன்று தொடங்கி எமதர்மராஜன், ‘ஒரு மனிதன் தன்னுடைய பன்னிரெண்டு வயதுக்குள் சேமிக்கும் பாவம் கணக்கிடப்படாது என்று ஆணையிட்டான். பின் அவனே விதுரராகப் பிறந்து, சிறந்த தர்மங்களை அறிந்தவனாய், அதை அனைவருக்கும் எடுத்துரைத்தான். இதுவே விதுரரின் பிறப்பின் ரகசியம்.

தாம் சென்று வந்த கதை அனைத்தையும் விதுரர் தர்மபுத்திரருக்குக் கூறினார். பின் திருதராஷ்டிரனுடன் தனிமையில் அமர்ந்து, அவனுக்கு உபதேசித்தார். “திருதராஷ்டிரா! நீ எத்தனையோ குற்றங்களுக்குத் துணை போய், பாண்டவர்களை அழிக்கப் பார்த்தாய். நம் குலத்தின் மருமகளைத் துகிலுரித்தபோது, அதைக் கண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தாய். அரக்கு மாளிகையில் பாண்டவர்களை வைத்து எரிக்கப் பார்த்தது, விஷம் கொடுத்தது, சூதாட்டத்தில் தோற்கடித்தது, பதின்மூன்று ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பியபோது வாளாவிருந்தது... என்று எத்தனை குற்றங்களைப் புரிந்தாய்! இவ்வளவு நடந்தும் இன்னும் உனக்கு உடலிலும், ஸம்சாரத்திலும் வெறுப்பு ஏற்படாமலும், காட்டுக்குச் சென்று பகவானை தியானிக்காமலும் இருக்கிறாயே! இவ்வாழ்க்கையிலும், உடலிலும், உணவிலும் உனக்கு அவ்வளவு விருப்பமா? தன் உடலின் மீது விருப்பத்தோடு இருப்பவன், சாவதற்குப் பயப்படுபவன் ஆகியோர் முக்தி அடைவதில்லை. உன்னுடைய வாழ்க்கை ஆனந்தமாக இருக்கிறது என்றா நினைக்கிறாய்? வேறு வழியின்றி பெரியப்பனாகிய கிழவனுக்குச் சோறு இட வேண்டும் என்ற கடமைக்காக, இகழ்ந்து கொண்டே பீமசேனன் உனக்கு சோறு போடுகின்றான். இப்படி வேண்டாதவர்களோடு வாழ்ந்து, உடலைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, அந்த உடலின் மீது வெறுப்பு ஏற்பட்டு பெருமாளை நினைத்து அவனை அடைவது எவ்வளவு சிறந்தது? இது ஏன் உனக்குப் புரிய மறுக்கிறது?

நீ காட்டுக்குச் செல்ல வேண்டும். காலம் வலியது. உன் தேஹத்தில் எவ்வளவுதான் ஆசையாக இருந்தாலும், ஒருநாள் திடீரென்று காலதேவன் வந்து அதைப் பறித்துப் போவான். தேஹம் ஒழிந்த பிறகு அடுத்த பிறவி எடுத்து, அதில் முதல் மூன்று வருஷங்கள் மல, மூத்திரங்களை விலக்கி கொள்ளத் தெரியாமலும்; அடுத்த எட்டு வருஷங்கள், குழந்தையாய் விளையாடியும்; மேலே இளைஞனாய் காம சுகத்தில் ஈடுபட்டும்; இன்னும் வயதானால், பெண், பிள்ளை என்று பெற்றுப் பொறுப்பு எடுத்துக் கொண்டும்; மேலும் வயதானபோது, மூப்புற்று, துன்புற்று... என்று காலம் விரயமாக, எப்போதுதான் ப்ரஹ்மத்தை தெரிந்து கொள்ளப் போகிறாய்? உனக்கு ஸம்சாரத்தில் வெறுப்பு ஏற்படவில்லையா? ஒருவன் ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு, சம்பாதித்து கொண்டே, உற்றார் உறவினரோடு இருந்து கொண்டே, முக்தி அடைய முடியாது. முக்தி அடைவதற்கு முதல்படி, ஸம்சாரத்தில் (உலகியல் வாழ்வில்) வெறுப்பு! இதை ஆச்சாரியர்கள் ‘நிர்வேதம் என்று கூறுவார்கள். பற்றற்ற தன்மை ஏற்படாமல், வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளாமல், அனைத்திலும் பற்றுதலோடு இருந்து கொண்டே முக்தி அடைவது என்பது நடக்காது.

திருதராஷ்டிரா! இந்த உண்மையைப் புரிந்து கொள்! நீ சிறு வயதில் பெருமாள் முன் வளைந்திருந்தால், இப்போது உன் முதுகு கேள்விக்குறி போல் வளையாமல் இருந்திருக்கும். நீ இப்போதும், ஒரு கோலின் உதவியோடே வளைந்து நிற்கிறாய். இவ்வளவு நாளும், தாயே தந்தை என்றும், தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தாய்! இப்போதாவது அனைத்து உறவும் பகவான் மட்டுமே என்று தெரிந்து கொள் என்றார்.

திருமங்கையாழ்வார், பதரிகாச்ரமம் திருத்தலத்தை பாடும்போது,

முற்றமூத்துக்கோல் துணையா முன்னடி நோக்கி
வளைந்து,
இற்றகால்போல் தள்ளிமெள்ள இருந்து அங்கு
இளையாமுன்
பெற்றதாய்போல் வந்த பேய்ச்சி பெருமுலையூடு,
உயிரை
வற்றவாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே.

– என்று பாடுகிறார். (பெருமான் முன்பாக வளைந்தால், நாம் வயதானாலும் வளையாமல் நிமிர்ந்து நிற்கலாம். ஆனால், அவனிடம் பணிவோடு வளையாமல் போனால் கையிலே கோல் ஊன்றி கொண்டு, முதுகே வளைந்து போய் மூப்பில் தவிப்போம். இந்த நிலை நமக்கு வேண்டாம்.)

விதுரர் தொடர்ந்தார் : “திருதராஷ்டிரா! யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தவம் செய்யக் காட்டிற்குப் புறப்படு! இதுவே அதற்குத் தக்க தருணம் என்று வலியுறுத்தினார்.

திருதராஷ்டிரனும் உண்மையை உணர்ந்தான். பொழுது புலர்வதற்குள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திருதராஷ்டிரனும், காந்தாரியும், விதுரரும் புறப்பட்டு ஹிமாசலத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். பொழுது புலர்ந்தது. தர்மபுத்திரன் அவர்களைத் தேடினான். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ‘வயதானபடியால், எங்காவது தள்ளாட்டத்தில் விழுந்து விட்டார்களோ? புத்திர சோகத்தினால் காந்தாரி கங்கையில் விழுந்து உயிர் துறந்தாளோ? இவர்களை கவனிக்காமல் விட்டுக் கடமை தவறினார்கள் – என்ற பெரும் பழி நம் மேல் ஏறப் போகிறதோ? என் செய்வோம்? என்று வருத்தத்தோடு, எதிர்பட்ட சஞ்சயனிடத்தில் வினவினான்.

சஞ்சயனும், “என்னிடத்தில் திருதராஷ்டிரர் சொல்லிக் கொள்ளவில்லை. நம்மை ஏமாற்றிச் சென்று விட்டார். எங்கு சென்றாரோ தெரியவில்லை! என்று உரைத்தான். இவர்கள் தேடிக் கொண்டிருந்தபோது, தேவரிஷியான நாரதர், தும்புருவோடு அவ்விடத்திற்கு வந்தார். யுதிஷ்டிரர் அவரை வணங்கி, தன்னுடைய சோகத்தை எடுத்துரைத்து, ‘திருதராஷ்டிரன் எங்கு சென்றார்? என்று வினவினான்.

தேவ ரிஷியான நாரதர், யுதிஷ்டிரனை சமாதானப்படுத்தி, “ஹே! தர்மபுத்திரா! சோகப்படாதே! அவர் இப்போதுதான் போக வேண்டிய இடத்தை நாடிச் சென்று, அடைந்திருக்கிறார். மறுபடியும் உன் பாச வலைக்குள் அவரை இழுத்து விடாதே! அவர் இந்த வலையிலிருந்து மீண்டு முக்தி பெற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொம்மையைப் போல் விளையாடப்படுகிறான். ஈச்வர மாயை என்னும் மூக்கணாங்கயிற்றினால் கட்டப்பட்டு இருக்கிறான். பகவானுக்கும், காலத்துக்கும், கர்மத்துக்கும், முக்குணங்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் அடிமைப்பட்டுத்தான் இந்த ஆத்மா உலகில் வாழுகிறான். இதை எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ, அவன் இவற்றில் பற்றின்மையை அடைந்து, தன்னுடைய புலன்களை அடக்கி, மனத்தையும் அடக்கி, புத்தியோடு அவற்றை ஆத்மாவிடத்தில் சேர்த்து, அந்த ஆத்மாவை முழுமையாக பெருமானிடத்தில் லயிக்க விடுகிறான்.

கண்ணன் பகவத் கீதையில், இரண்டாவது அத்தியாயத்தில் 58, 57, 56, 55 – ஆகிய நான்கு ச்லோகங்களால் – யோகத்தின் நான்கு நிலைகளைப் பற்றி கூறுகிறார். முதல் நிலைக்கு, ‘யதமான ஸம்ஜ்ஞா என்று பெயர். அதாவது, நம்முடைய புலன்களை அடக்கும் முயற்சியைத் தொடங்கும் நிலை. ஓர் ஆமை எதிரியைக் கண்டால், தன்னுடைய அவயவங்களை எல்லாம் ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்ளும். எதிரி விலகிய பிறகு, அவயவங்களை வெளியே விடும். அதேபோல, தேவையற்ற விஷயங்களைப் பார்த்தாலோ, கேட்டாலோ அவற்றில் ஈடுபடாமல், நம்முடைய புலன்களை நமக்குள் சுருக்கிக் கொள்ள வேண்டும். இதுவே முதல் முயற்சி.

அடுத்தது, ‘வ்யதிரேக ஸம்ஜ்ஞா. கண்ட விஷயங்களில் புலன்களைப் போக விடாமல், அவற்றைத் திருப்பி, பெருமானுடைய திருமேனியில் ஈடுபடுத்துதல்.

மூன்றாவது, ‘ஏகேந்த்ரிய ஸம்ஜ்ஞா. வெளிப் புலன்கள் அடங்கி விட்டாலும், உட்புலனாகிய மனது எளிதில் அடங்காது. அப்படிப்பட்ட மனத்தையும் அடக்கி ஆத்மாவில் செலுத்துதல்.

நான்காவது, ‘வசீகார ஸம்ஜ்ஞா. ஆத்மா, பெருமானைப் பற்றியே சிந்தித்து, பகவானையே வசீகரணம் பண்ணி விடுதல். இப்படிப்பட்ட நான்கு நிலைகளிலும் உயர்ந்தவனே, சிறந்த யோகி.

“இப்போதாவது, திருதராஷ்டிரன் யோகத்தைப் பயில காட்டுக்குச் சென்றிருக்கிறாரே – என்று திருப்தி அடைவாயாக! அவர் ஹிமாசலத்தின் தெற்கு பக்கத்தில் வாழ்கிறார். எங்கு கங்கா தேவி ஏழாகப் பிரிந்து, ஸப்த ஸ்ரோதஸ் என்கிற பெயரோடு ஓடுகின்றாளோ, அங்கு வாழ்ந்து வருகிறார். அவர் மனத்தை அடக்கி பெருமானிடத்தில் ஒருமுகப்படுத்தி இருக்கிறார். இன்றிலிருந்து ஐந்தாவது நாள் அவர் உயிர் துறப்பார். உடனே உடல் எரிந்து போகும். காந்தாரியும் அவரோடேயே முக்தி அடைவாள். இது கண்டு ஒருபுறம் வருத்தம் இருந்தாலும், மறுபுறம் மகிழ்ச்சி எய்தப் போகும் விதுரர், மறுபடியும் தீர்த்த யாத்திரைக்குச் செல்வார்! என்று கூறி நாரதர் விடைபெற்றுச் சென்றார்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக