முதல் ஸ்கந்தம் – நான்காம் அத்தியாயம் (தொடர்ச்சி)
வியாஸர், நாரதர் - உரையாடல்
நாரதரின் பிறவி ரகசியம் பற்றி வியாஸர் வினவியவுடன், நாரதர் விளக்கம்
அளித்தார்: “இதற்கு முன் பிறவியில் நான் எங்கோ திரிந்து கொண்டிருந்தேன்.நான் ஐந்து
வயது பிள்ளையாக இருந்தபோது, மஹரிஷிகள் வாழ்ந்து வந்த ஒரு ஆசிரமத்தில் பணிவிடைகள் செய்து
வந்தேன். அவர்கள் கொடுக்கும் மிச்சச் சோற்றைத்தான் உண்பேன். அதுவே எனக்கு எவ்வளவு நல்லது
செய்தது! சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, அந்த யோகிகள் எல்லாம் பகவானுடைய கதையை நிரம்பப்
பேசிக் கொண்டார்கள். அவையனைத்தையும் நான் கேட்கலுற்றேன். என்னுடைய பிஞ்சு மனத்தில்
அனைத்தும் பதிந்தது. ஆனால், என் தாய்க்கோ இதுபற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. ரிஷிகள்
எனக்கு உபதேசித்தார்கள். புறப்பட்டுப் போனார்கள்.
“பிற்பாடு
சில காலத்தில் என் தாய் இறந்து போனாள். நான் வட தேசத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு
காட்டை அடைந்தேன். அங்கு அமர்ந்து கொண்டு தனிமையில் பகவானைத் தியானித்தேன். அப்போது,
எம்பெருமான் என்னுடைய மனக்கண்ணில் தோன்றினார். கண் திறந்தால் தோற்றம் இல்லை. கண்ணை
மூடினால் தோன்றினார். இது என்ன வியப்பு! ‘ஈசனே! நீ என் முன்னே தோன்ற வேண்டும்’ என்று வேண்டினேன். பகவான்
உள்ளிருந்தே கூறினார். ‘உமக்கு நாம் பக்தியைக் கொடுத்தோம். அதனால் நீர் ஸித்தியை அடைவீர்.
ஆனால், அடுத்த பிறவி எடுத்து அதில் நம்மைக் குறித்தே கானம் செய்து, உலகத்துக்கெல்லாம்
நம் நாமத்தை பரப்பிவிட்டு, முக்தி அடைவீர்” என்று கூறினார்.
“....
அவிபக்வ கஷாயாணாம் துர்தர்சோ
(அ)ஹம் குயோகிநாம்
ஸக்ருத் யத்தர்சிதம் ரூபம் ஏதத் காமாய
தே(அ)னக
மத்காம: சனகை: ஸாது: ஸர்வான்
முஞ்சதி ஹ்ருச்சயான்
ஸத்ஸேவயா தீர்கயா தே ஜாதா மயி
த்ருடா மதி:
........”
அதாவது, “பக்குவம் அடையாதவர்களுக்கு நான் காட்சி கொடுப்பதில்லை. என்னை
ஒருமுறை கண்டாலும், அது என்னிடத்தில் பக்தியை வளர்க்கும். அது, உனது சிந்தனையை என்னை
விட்டு எங்கும் போக விடாது. என்னிடத்தில் பக்தி ஏற்பட்டால், மெது மெதுவே அனைத்துப்
பாபங்களும் விலகும். ஸாதுக்களான ரிஷிகளுக்கு நீர் சேவை புரிந்தபடியால் என்னைக் கண்டீர்.
என்னிடத்தில் பக்தி பிறந்தது. இனி, நீர் அடுத்த பிறவி எடுத்து எனது மெய்யடியவராக விளங்குவீர்!” என்று பெருமான் அருள, சில காலத்தில்
நாரதர் தனது முற்பிறவி உடலைத் துறந்தார்.
பின்னர் அவர் ஆத்ம ஜோதியாகப் புறப்பட்டு, ப்ரஹ்மாவினுடைய உள்மூச்சு
காற்றின் வழியாக அவருடைய ஹிருதயத்துக்குள் புகுந்தார். ப்ரஹ்மாவும் சிருஷ்டிக்கத் தொடங்கி,
தனக்குக் குமாரர்களாய் பல பல ரிஷிகளை சிருஷ்டித்த போது, தேவ ரிஷியான நாரதரையும் பிறப்பித்தார்.
பகவானால் ‘மஹதி’ என்று
பெயர் பெற்ற வீணையை அடைந்தார் நாரதர். அதன் மூலம் இவ்வுலகம் முழுவதும் பகவானுடைய நாமத்தைப்
பரப்பி வருகிறார். தர்மத்தைப் பற்றியும், கர்மத்தைப் பற்றியும் பேச நாரதருக்குத் தெரியாதா
என்ன? ஆனால், அவற்றைப் பேசுவதை விட, பெருமானுடைய திவ்யமான லீலைகள், அவனுடைய கல்யாண
குணங்கள் இவற்றைப் பேசினால், அதுவே நமக்கு பெரிய கப்பலாக இருந்து, ஸம்ஸாரத்தின் இக்கரையிலிருந்து,
மோக்ஷமாகிற அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்.
ஆக, நாரதருடைய உபதேசத்தால், நாம் தெரிந்து கொள்வது என்ன? கர்மங்களோ,
தர்மங்களோ மட்டும் போதாது. அவை பயனில் எண்ணமில்லாமல், பெருமானிடத்தில் பக்தியோடு, அவன்
திருவடிகளிலேயே ஸமர்ப்பித்துச் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஆகவே, நல்லவனாக இருந்தால்
மட்டும் போதுமா? போதாது. பக்தனாக இருந்து நல்லவனாகவும் இருக்க வேண்டும். இது நம் வாழ்க்கையில்
ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியது. பெரியோர்கள் இருவர் பேசிக் கொண்டால், அதனால்
நமக்கு எத்தனையோ உயர்ந்த கருத்துகள் கிடைக்கும் என்றோம் அல்லவா! – இப்படி நாரதரும்,
வியாஸரும் பேசிக் கொண்டதில் - நல்லவனாக இருத்தல்; அதே சமயத்தில் பக்தியோடு இருத்தல்
- இதன் இன்றியமையாமை ஆகியவற்றைப் புரிந்து கொண்டோம். இனி பரீக்ஷித், அச்வத்தாமா - ஆகியவர்களைச்
சந்திப்போம்.
முதல் ஸ்கந்தம் – ஐந்தாம் அத்தியாயம்
அச்வத்தாமாவுக்கு மன்னிப்பு!
வீணையை மீட்டி, பகவானுடைய திருநாமங்களைப் பாடி, அவன் கதையை வேத வியாஸருக்கு
எடுத்துரைத்த நாரதர் அவ்விடத்தை விட்டு அகன்றார். தன்னுடைய மனச் சோர்வுக்குக் காரணம்,
பகவானைப் பற்றியே முழுவதும் பேசாமல், வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசியதே என்று புரிந்து
கொண்ட வியாஸர் தற்போது தெளிவுற்றார். பிரஹ்மாவினுடைய தர்ம பத்தினியான சரஸ்வதி தேவியின்
பெயரில் ஓடும் சரஸ்வதி ஆறு, பத்ரிநாத்துக்கு மேலே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள மானா என்னும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் காட்சி அளிக்கிறது.
நாரதர் புறப்பட்டுச் சென்ற பிறகு, சரஸ்வதி நதிக்கரையின் மேற்குக் கரையில்
வியாஸர் சம்யாப்ராஸம் என்ற பெயர் கொண்ட தன் ஆச்ரமத்தில் அமர்ந்து கொண்டார். மனத்தை
அடக்கி, பெருமானை நோக்கி தியானித்தார். எம்பெருமானின் அருளால் பாகவதத்தில் சொல்ல வேண்டிய
கதைகள் அனைத்தும் அவருடைய உள்ளத்தில் காட்சியளித்தன. தூய்மையான தெளிந்த நீர்வீழ்ச்சியைப்
போல, பக்தி அவர் உள்ளத்தில் பெருகிற்று. அந்த பக்தி வெள்ளம் அவருடைய வாயிலிருந்து பெருகி,
அதுவே பாகவத புராணமாக வெளிவந்தது. இப்படித்தான் வியாஸர், நாரதரிடத்தில் உபதேசம் பெற்று
பாகவதத்தை இயற்றி, அதைத் தன் மகனான சுகாசாரியாருக்கு உபதேசித்தார். இக்கதையைக் கேட்ட
சௌனகர் முதலானோர் ஓர் ஐயத்தை எழுப்பினார்கள். ‘சுகாசாரியார் யோகியாயிற்றே! முற்றும்
துறந்தவர்! அவர் எதற்காக மறுபடியும் பகவானைப் பற்றிய கதையைக் கேட்க வேண்டும்? நாம்
அனைவரும் கதையைக் கேட்பது, அதைக் கேட்டு பக்தி பிறக்க வேண்டும் என்பதற்காக! ஆனால்,
சுகரோ முற்றிய பக்திமான். அப்படி இருக்கும்போது, அவர் எதற்காக இந்தக் கதையைக் கேட்டார்?’ என்பது அவர்கள் கேள்வி.
இந்தக் கேள்வியில் கருத்து உள்ளது. நாம் பக்தர்களாக ஆகும் வரை, பெருமானைப்
பற்றி கேட்க வேண்டும்; கோயிலுக்குப் போக வேண்டும்; விளக்கு ஏற்ற வேண்டும்; ச்லோகங்கள்
சொல்ல வேண்டும். நாம் பக்திமானாகி விட்டால், இவை அனைத்தையும் விட்டு விடலாமே! நாம்தான்
அந்த ஆரம்ப நிலையைக் கடந்து விட்டோமே! – என்று தோன்றலாம். நமக்குத் தோன்றும் இந்த ஐயத்தையே
சௌனகர் முதலான ரிஷிகள் கேள்வியாக எழுப்பினார்கள்.
ஸூதர் பதில் கூறுகிறார்: ‘பகவானுடைய கதையைக் கேட்பதும், கோயிலுக்குச்
செல்வதும், அவன் குணங்களைப் பாடுவதும் பக்தியைக் கொடுக்கும் என்பது உண்மைதான்! ஆனால்,
அவற்றின் பயன் அதோடு முடிந்து விடவில்லை. எப்பேர்ப்பட்ட பக்தனாயினும், ஏன், சிறந்த
ஞான யோகியாயினும் கூட, பெருமானுடைய கதைகள் மேலும் மேலும் மனதை ஈர்க்கும். அவர்களுடைய
உள்ளமும், கண்களும் அவனைப் பற்றிக் கேட்பதற்கும், அவனைக் காண்பதற்கும் துடிக்கும்.
அத்தோடு மட்டும் அல்ல. இந்த ஸம்ஸாரத்தில் நாம் இருக்கும் வரைக்கும் எவ்வளவுதான் பக்தியில்
திளைத்தாலும் மீண்டும் மீண்டும் பாவங்கள் வந்து மூட வாய்ப்பு உண்டு. அவன் கதைகளைக்
கேட்டுக் கொண்டேயிருந்து, அவன் குணங்களைப் பாடிக் கொண்டே இருந்தால், நம் பாவங்களை அடிக்கடி
துடைத்து, விலக்கிக் கொண்டே இருக்கலாம். மேலும், ஒரு பயன் உண்டு. அவன் கதையைக் கேட்கக்
கேட்க பக்தி மேன்மேலும் வளரும்.
பக்தி இவ்வுலகத்தோடு முடிந்து போவதில்லை. இதைவிட்டு நாம் வைகுண்டத்தை
அடைந்த பிறகும், பெருமானுக்குத் தொண்டு புரிய பக்திதானே வேண்டும்! மாடி ஏறிய பிறகு,
படிக்கட்டுகளோ, ஏணிகளோ பயனற்றுப் போகலாம். அதேபோல ‘நாம் பக்தி என்னும் மாடி ஏறி விட்டோம்.
இனி அவனுடைய கதையையும், குணங்களையும் எதற்காகக் கேட்க வேண்டும்?’ என்று நினைத்தால், அந்த உதாரணம் இங்கு
எடுபடாது. பக்தியில் மாடிப் பகுதியை அடைந்து விட்டோம். இனி ஏதும் செல்ல வேண்டியதில்லை
– என்று ஒன்று கிடையாது. வெகு தூரத்தில், உயரத்தில் வைகுண்டத்தை அடைந்த பிறகும், அங்கும்
பக்தி மேலிடத் தொண்டு புரியத்தானே போகிறோம்! ஆகையால் எப்போதும் முற்றும் துறந்தவர்கள்
கூட, சுகாசாரியார் போன்ற மஹா ஞானிகள் கூட, பெருமானுடைய கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில்
ஆசையோடு உள்ளார்கள். இதுகாறும் வியாஸர், சுகாசாரியாருக்கு பாகவதத்தை உபதேசித்ததைக்
கேட்டோம். இனி, சுகர், எப்படி பரீக்ஷித்துக்கு அதை உபதேசித்தார் என்பதைப் பார்ப்போம்.
இந்தச் சமயத்தில் பரீக்ஷித்தினுடைய கதையைக் கூற வேண்டி உள்ளது. மஹாபாரதப்
போர் முடிந்தது. துரியோதனனும் மாண்டு போனான். பாண்டவர்கள் வென்றார்கள். துரோணாச்சாரியாருடைய
மகனான அச்வத்தாமா, துரியோதனனுக்குச் செஞ்சோற்றுக் கடன் பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு,
துரியோதனனுடைய திருப்திக்காக, பாண்டவர்களுடைய பிள்ளைகளை எல்லாம் கொன்று விடவேண்டும்
என்று தவறான உறுதி பூண்டான்.
அதற்காக, இரவு நேரத்தில் கூடாரங்களில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின்
புத்திரர்களைக் கொன்று விட்டு ஓடி விட்டான். மேலும், அபிமன்யுவின் மனைவியான உத்தரையின்
கர்ப்பத்தில் வளரும் சிசுவையும் கொன்று விட ஓர் அஸ்திரத்தை ஏவினான். இது கண்டு திரௌபதி
சோகத்தால் துடித்தாள். ‘உன் பிள்ளைகளைக் கொன்ற அச்வத்தாமாவை நான் விட மாட்டேன். இதோ
அவனைப் பிடித்துக் கொன்று வருகிறேன்’
என்று அர்ஜுனன், அவளிடத்தில் சூளுரைத்தான். அர்ஜுனன், அச்வத்தாமாவைத் துரத்த, அவன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடினான். ஆனால், அவனால் தப்பிக்க முடியவில்லை. இனி, அர்ஜுனனை
அழிப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்று நினைத்து, பிரம்மாஸ்திரத்தை எய்தான் அச்வத்தாமா.
ஒரு அஸ்திரத்தை எய்யும்போது, அதைத் திரும்ப எடுக்கக் கூடிய வல்லமை ஒருவனுக்கு இருக்க
வேண்டும். ஆனால், அச்வத்தாமாவுக்கு அந்த வல்லமை கிடையாது. ஆத்திரத்தில் அஸ்திரத்தை
எய்து விட்டான். அது அவனையும் துன்புறுத்தத் தொடங்கிற்று. அர்ஜுனன் தன்னுடனேயே இருந்த
கண்ணனிடம், ‘நான் இந்த அஸ்திரத்துக்கு என்ன பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்?’ என்று கேட்டான்.
அப்போது கண்ணனோ, ‘வேறு வழியில்லை. பிரம்மாஸ்திரத்துக்கு பதில், அதே
பிரம்மாஸ்திரத்தை அச்வத்தாமாவை நோக்கி எய்வாய்’ என்று ஆணையிட்டார். அர்ஜுனனும் எய்தான். இரண்டு அஸ்திரங்களும்
ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு, உலகத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தத் தொடங்கின. அப்போது
முனிவர்களுடைய வேண்டுகோளால், கண்ணனுடைய ஆணையால், அர்ஜுனன் இரண்டு அஸ்திரங்களையும் நாசம்
செய்தான். இதனால் அச்வத்தாமாவினுடைய ஆன்ம பலம் மங்கிற்று; அவனுக்கு சக்தி இல்லாமல்
போயிற்று. உடனே அர்ஜுனன், அச்வத்தாமாவைக் கட்டி, தன்னுடைய படை வீட்டுக்குக் கைதியாக
பிடித்துக் கொண்டு போகப் பார்த்தான்.
ஆனால், கண்ணனோ அர்ஜுனனை பரீட்சை செய்ய எண்ணி, ‘அர்ஜுனா! உங்கள் குலத்தையே
அழித்தவன் இவன். துரியோதனனுக்குத் துணை போனவன். இப்படிப்பட்டவனுக்கு தண்டனை கொடுத்தே
தீர வேண்டும். இவனைக் கொன்று விடு!’
என்று கூறினான். ஆனால், உடனடியாக அர்ஜுனன் அவனைக் கொல்லாமல், நேரே திரௌபதியிடம் அவனை
அழைத்துச் சென்றான். ‘திரௌபதி! உன் மக்களைக் கொன்றவன் இவன். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
என்று நீயே கூறு’ என்றான்
அர்ஜுனன்.
ஆனால், மாதர்குல அரசியல்லவோ திரௌபதி! நம் பாரதப் பெண்டிற்கே மன்னிக்கும்
குணம் அதிகம். ஆகையால், ‘குருவான துரோணாச்சாரியாருடைய புதல்வன் இவன். மேலும் சிறந்த
வீரன். அப்படி இருப்பவனைக் கொல்லலாகாது. மேலும் ஒரு குருவினுடைய புதல்வனும் கூட குருவுக்கு
ஸமானம் ஆகிறான். தவிரவும், நான் அடைந்த புத்திர சோகத்தை இவனது தாய் அடைய வேண்டாம்.
ஆகையால், இவனை விடுதலை செய்து விடுவோம்’ என்றாள் திரௌபதி. அனைவரும் சம்மதித்தார்கள்.
ஆனால், பீமசேனன் மட்டும், ‘இவனைக் கொன்றே தீர வேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தான்.
கண்ணனோ, இரண்டு பேருக்கும் நடுநிலையாக தீர்ப்புச் சொல்வதுபோல, ‘அர்ஜுனா! நீ க்ஷத்ரியன்.
ஏற்கெனவே திரௌபதியிடம், ‘அச்வத்தாமாவைக் கொன்று வருகிறேன்’ என்று சூளுரைத்து விட்டுச் சென்றாய். அதன்படி நடக்க வேண்டும்;
ஆனால், மற்றொருபுறம் பார்த்தால், திரௌபதி கூறுவதும் நியாயமாகத்தான் உள்ளது. குருவின்
புத்திரனைக் கொல்வது என்பது கூடாதுதான்! ஆகவே, இந்த இரண்டுக்கும் ஊறு நேராதவாறு ஒரு
முடிவு எடுத்துச் செயல்படு’
என்று புன்னகையோடு கூறினார்.
அர்ஜுனனும், கண்ணனுடைய உட்கருத்தை அறிந்து கொண்டு, அச்வத்தாமாவை மொட்டை
அடித்து, அவனுடைய நெற்றியில் எப்போதும் பதிந்திருந்து ஒளிரும் ஓர் உயர்ந்த இரத்தினத்தைத்
தன் கத்தியால் குத்தி பிளந்து எடுத்தான். எதற்காகத் தெரியுமா? ஒரு மனிதனை மொட்டை அடித்து
விட்டாலோ, அவன் பணத்தை அபகரித்து விட்டாலோ, அல்லது அவனுடைய இடத்தை விட்டு துரத்தி விட்டாலோ,
அவனைக் கொன்றதற்குச் சமம். இப்போது அர்ஜுனன், அவன் தலையை மொட்டை அடித்து, மணியை எடுத்துவிட்ட
படியால், அவனைக் கொன்றதற்குச் சமமாகி விட்டது; அதே நேரத்தில், அவனை உடலோடு விட்டு,
குருவினுடைய புதல்வனிடத்தில் அபசாரப்படாதபடியும் ஆகிவிட்டது. இதைத்தான் கண்ணனும் எதிர்பார்த்தார்.
ஆக, கண்ணன் தண்டிக்கச் சொன்னாலும், திரௌபதி தண்டிக்கவில்லை. மன்னித்தாள், மறந்தாள்!
இனி இதிலிருந்து அடுத்து நாம் ஆறாம் அத்தியாயத்திற்குச் செல்கிறோம்.
(தொடரும்)
நன்றி - துக்ளக்