திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 14


முதல் ஸ்கந்தம் – நான்காம் அத்தியாயம்

வியாஸர், நாரதர் - உரையாடல்

நைமிசாரண்ய க்ஷேத்திரத்தில் அமர்ந்திருந்த சௌனகர் முதலான ரிஷிகள், சுகாசாரியர் உபதேசம் செய்த முறையைத் தெரிந்து கொள்ள எண்ணி, பௌராணிகரைப் பார்த்து இப்படிக் கேட்டார்கள் :

இந்த பாகவத புராணம் எந்த யுகத்தில் யாரால் சுகருக்குக் கொடுக்கப்பட்டது?

சுகாசாரியரும், வேத வியாஸரும் ஆற்றங்கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தபோது, அங்கே நீராடிக் கொண்டிருந்த பெண்கள் வேத வியாஸரைப் பார்த்து வெட்கப்பட்டுத் தங்கள் மானத்தை மறைத்துக் கொண்டார்கள். ஆனால், சுகர் இளைஞராக இருந்தாலும், அவரைக் கண்டு அவர்கள் வெட்கப்படவில்லை. வியாஸர் இதற்குக் காரணம் கேட்டபோது, அப்பெண்கள், “ஆண் பெண் என்ற பேதம் சுகருக்குத் தெரியாது. அவர் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கக் கூடியவர் என்றல்லவா கூறினர்!

இத்தகைய பெருமையை உடைய சுகாசாரியர் எங்கும் தங்கி நிற்காதவர். அப்படிப்பட்டவர் எதற்காக ஏழு நாட்கள் ஓரிடத்தில் அமர்ந்து பரீக்ஷித்துக்கு உபதேசித்தார்? மேலும், உலகத்தை ஆள்வதற்காகப் பிறந்த பரீக்ஷித், தன் உயிரைத் துறக்க எதனால் முயற்சி செய்தார்?

பரோபகாரார்த்தம் இதம் சரீரம்

– என்றன்றோ பெரியோர்கள் கூறுகிறார்கள்!

மற்றவர்களுக்கு உதவுவதற்குத்தான் நாம் உடலோடு பிறந்திருக்கிறோம். பகவான் அதை நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். ‘பரீக்ஷித்துக்கு இருந்த பெருமைக்கு அவர் உயிர் வாழ்ந்தால் எத்தனையோ பேருக்கு நன்மை! பின், எப்படி அவர் உயிர் துறக்கத் துணிந்தார்? மேலும், தற்கொலை செய்து கொள்வது பெரும் பாவத்தைக் கொடுக்காதா? அப்படியிருந்தும் ஏன் அதற்குத் துணிந்தார்? என்று ரிஷிகள் கேட்டார்கள்.

ஸூதர் பதில் கூறலானார்: “சுகாசாரியாருக்கு பாகவதம் கிடைத்த கதையை, நான் முதலிலிருந்து கூறுகிறேன். வசிஷ்டருடைய வம்சத்தில் உதித்தவர், பராசரர். அவருடைய திருக்குமாரரான வேத வியாஸர் பகவானுடைய அம்சம். துவாபர யுகத்தில், அவர் வேதங்களை நான்காகப் பிரித்தார். வேதங்கள் அனைத்தும், முதல் இரண்டு யுகங்களில் ஒன்றாக இருந்தன. அப்படி இருந்தால், படித்து அதை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. அதற்காக, வியாஸர் அவற்றை ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், அதர்வண வேதம் என்று நான்காப் பிரித்தார். ரிக் வேதத்தை பைலரைக் கொண்டும், ஸாம வேதத்துக்கு ஜைமினி, யஜுர் வேதத்துக்கு வைசம்பாயனர், அதர்வண வேதத்துக்கு ஸுமந்து ஆகியோரைக் கொண்டும் உலகில் பரவச் செய்தார். அதேபோல இதிஹாஸங்களுக்கும், புராணங்களுக்கும் என் தந்தையான ரோமஹர்ஷணர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இப்படியாக வேத வியாஸரிடம் இதிஹாஸ புராணங்களின் கருத்துகளை எத்தனையோ சிஷ்யர்கள் கற்றார்கள். வியாஸர், மஹாபாரதத்தை இயற்றினார். ஆனால், அவருடைய உள்ளத்தில் திருப்தி ஏற்படவில்லை. சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து சிந்திக்கலுற்றார். ‘இவ்வளவு பெரிய காவியத்தை இயற்றியிருந்தாலும், நான் ஏன் வருத்தத்தோடு இருக்கிறேன்? சொல்ல வேண்டியதைச் சொல்லாமல் விட்டுவிட்டேனா? விரிவாகச் சொல்ல வேண்டாததை தேவையின்றி விளக்கி விட்டேனா? பகவானுடைய கதையை முழுமையாகக் கூறாமல் இருந்தேன் போலும்! - இப்படி வியாஸர் சிந்தித்தபோது, அவருடைய ஆச்ரமத்துக்கு நாரதர் எழுந்தருளினார். நாரதரை வியாஸர் வணங்கினார்.

நாரதர், வியாஸருக்கு அருகில் வந்து, உற்று நோக்கி, சிரித்த முகத்தோடு, “வியாஸரே! நலமாக உள்ளீரா? உம்முடைய உடல் ஆத்மாவுக்குப் பிடித்தமாக நடந்து கொள்கிறதா? உம் மனது உமக்குப் பிடித்தமாக நடந்து கொள்கிறதா? என்று கேட்டார்.

வியாஸர் அங்குதானே துன்பப்பட்டுக் கொண்டு இருந்தார்! அவருடைய உள்ளம் இன்பமாக இல்லையே! உண்மையை ஒத்துக் கொண்ட வியாஸர், “நான் ஏன் பிறந்தேன்? இவ்வளவு பெரிய மஹாபாரதத்தை இயற்றியிருந்தும், ஏன் வருத்தத்தில் துவள்கிறேன்? நாரதரே! அடியேனுக்கு இவற்றுக்கு விடை தெரியவில்லை. நீரே கூற வேண்டும் என்று வினவினார்.



நாரதர், உபதேசம் செய்யலுற்றார். “வியாஸரே! நீர் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கைப் பற்றியும் பேசினீர். அதை நீர் செய்திருக்கக் கூடாது. முக்கியமான வீடு பேறாகிற மோட்சத்தை பற்றித்தான் விரிவாக உபதேசித்திருக்க வேண்டும். மக்களிடம் தேவையான அளவு மட்டுமே தர்மத்தை பற்றியும், அர்த்தத்தைப் பற்றியும் கூற வேண்டும். நிரம்ப மோட்சத்தைப் பற்றித்தான் கூற வேண்டும். ஒரு சிறு குழியில் சாதப் பருக்கைகள் கிடந்தால், காக்கைகள் அதை உண்டு விட்டுப் போகும். ஆனால், மானஸரோவரத்தில் பறக்கும் ஹம்ஸப் பறவைகள் அதைத் தீண்டாது. அதேபோல், நீர் செய்திருக்கும் உபதேசம் பெரியோர்களால் தீண்டப்படாது. வியாஸரே! தர்மத்தையும், அர்த்தத்தையும் பேசப் பேசச் செருக்கு வளரும். ஆனால், மோட்சத்தைப் பற்றியும், பகவானைப் பற்றியும் பேசினால் பண்பும், பணிவும் வளரும் என்றார் நாரதர்.

பெருமானைப் பற்றி பேசுவதற்கு நமக்கு என்ன தகுதி? அதற்குரியவர்கள் அன்றோ பேச வேண்டும்! ஆகையால், நாம் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே நலம் என்று நாம் நினைக்கலாம்! ஆனால், இது தவறான எண்ணம். தொண்டரடிப் பொடியாழ்வார் ‘திருமாலை என்னும் பிரபந்தத்தில், ‘இளையபுன் கவிதையேலும் எம்பிரார்க்கு இனியவாறே என்று கூறுகிறார். நம்முடைய நாக்கு பெருமானைப் பற்றிப் பேசுவதற்கே படைக்கப்பட்டது. அதை விட்டு, மற்றவற்றைப் பேசினால், அது எச்சில் நாக்காகிறது. அவரைப் பற்றிப் பேசும் தகுதி நமக்கு இல்லாவிட்டாலும், ஒரு குழந்தை சொல்லைக் கேட்டு, ஒரு தாய் எப்படி உவப்பாளோ, அதைப் போல் பகவானைப் பற்றி நாம் உளறினாலும் கூட, அதை மழலைச் சொல்லாகக் கருதி பெருமான் ஆனந்தப்படுகிறார். அதனால் அவனைப் பற்றித்தான் நாம் பேச வேண்டும்.

இப்போது உலகத்தில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? எதைக் குறித்து அவற்றைச் செய்கிறார்கள்? - என்று ஒரு சிறு ஆய்வு செய்வோம். பல பேர் தீயவர்களாக இருக்கலாம்; பாபங்களைச் சேர்க்கலாம். அவர்கள் ஒரு வகை. இப்போது அவர்களை விட்டு விடுவோம். அடுத்து, ‘நல்லவனாக வாழ்கிறோம்; உலகுக்கு நல்லது செய்வோம்; மக்களுக்கு உபகாரமாக இருப்போம். அதற்கு மேல் பாபத்தைப் பற்றியும், புண்ணியத்தைப் பற்றியும் நமக்குக் கவலையோ, நம்பிக்கையோ இல்லை. மறுபிறவியைப் பற்றியும் நம்பிக்கை இல்லை. இப்பிறவியில் பலருக்கு உபகாரமாக இருப்போம் - என்று பலர் வாழ்கிறார்கள். இவர்களுடைய கதி என்ன? சொர்க்கத்திற்குப் போவார்களா? மோட்சத்தை அடைவார்களா? திரும்பப் பிறப்பார்களா? சந்தேகமே வேண்டாம்! இவர்கள் அனைவரும் கண்டிப்பாக மறுபடியும் பிறப்பார்கள்.

இனி, அடுத்த வகை மனிதர்கள். ‘நல்லவ னாக வாழ்வோம்; ஊருக்கு நல்லது செய்வோம். ஆனால், சாஸ்திரங்களில் இப்படிச் செய்தால் புண்ணியம் கிட்டும் என்று சொல்லியிருக்கிறபடியால், அந்த புண்ணியத்தையும் சேமிப்போம். அதன் பயனாக, அடுத்த பிறவியில் இன்னும் நல்ல பிறவியை எடுப்போம் அல்லது சொர்க்கத்தையே அடைவோம் என்று நினைப்பவர்களும் உண்டு. இவர்கள் காலம் காலமாக புண்ணியங்களைச் சேர்த்தாலும், அது நேரே முக்தி பெற்று கொடுக்காது. சில பிறவிகள் கழித்து இவர்களே யோசிப்பார்கள். ‘இந்தப் புண்ணியத்தால் நாம் எந்தப் பயனை அடைந்தோமோ, அது தாழ்ந்த பயனாக உள்ளதே! அது நிலையற்ற பயனாக உள்ளதே! இனி உயர்ந்த பயன், நிலையான பயன் நமக்குக் கிட்டுமா? என்று யோசிப்பார்கள். அப்போதுதான் மூன்றாவது வகை மக்களை நாம் நோக்குகிறோம். ‘நல்லவனாக வாழ வேண்டும்; ஊருக்கு உபகாரமாக நல்லது செய்ய வேண்டும்; ஆனால், அதனால் நமக்குச் சேரும் புண்ணியத்தை எதிர்பார்க்கக் கூடாது. அந்தப் புண்ணியத்தையும் பகவானுடைய திருவடிகளிலே ஸமர்ப்பித்து, அதற்கும், நமக்கும் தொடர்பு இல்லை என்று கருதி விட்டு விடுவோம். இந்தப் பிறவியின் இறுதியில் நம் உடலை விடுத்து, இனி அடுத்த பிறவி எடுக்காமல் முக்தி அடைய வேண்டும் என்று விருப்பப்படுவார்கள்.

இதில் இரு வகைப்பட்டவர்களைப் பற்றி வியாஸர் நிரம்பப் பேசினார். அதாவது, நல்லது செய்ய வேண்டும், நல்லவனாக வாழ வேண்டும், அதற்கு மேல் கவலை இல்லை என்பவர்களைப் பற்றியும்; நல்லது செய்து புண்ணியத்தைச் சேமித்து, அதனால் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பவர்களைப் பற்றியும் பேசினார். ஆனால், புண்ணிய - பாபங்கள் இரண்டையும் தொலைத்து முக்தி அடைய வேண்டும் என்பதைப் பற்றிக் குறைவாகக் கூறி விட்டார். அதுதான் இப்போது நாரதருக்குக் கவலை. “வியாஸரே! நீர் ஏன் திருப்தி இல்லாமல் இருக்கிறீர் தெரியுமா? உபதேசிக்கும்போது, மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்ததைத்தான் உபதேசிக்க வேண்டும். நீர் ‘கர்மங்களைச் செய்வாயாக! அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று உபேசித்தீர். மக்களும் கர்மங்களைச் செய்து, அதனால் மேலும் மேலும் பிறவி அடைவார்கள். நீர் என்ன சொல்லியிருக்க வேண்டும்? இந்தக் கர்மங்களோ, பாபமோ, புண்ணியமோ ஏதும் பயன் இல்லை. பலனைக் கருதாமல் செய்த கர்மத்தால் - அதுவும் பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்கப்பட்டு விட்ட கர்மத்தால்தான் முக்தி கிட்டும். இதைத் தெளிவாகச் சொல்லியிருந்தால், மக்களும் இன்பப்பட்டிருப்பார்கள்; மகேசனும் இன்பப்பட்டிருப்பான்! உம்முடைய உள்ளமும் ஆனந்தப்பட்டிருக்கும். நல்ல வாய்ப்பை இழந்து விட்டீர்!

ஓர் உதாரணம் கூறுகின்றேன். சில பொருள்களை நேரே உட்கொண்டால், கெடுதி செய்யும். அவற்றையே மற்றொரு பொருளோடு சேர்த்து மருந்தாக்கினால் நல்லது செய்யும். விஷத்தை எடுத்துக் கொள்வோம்! நேரே உண்டால் உயிர் பிரியும். ஆனால் பாம்புக் கடிக்கு விஷத்தையே மருந்தாக்கிக் கொடுக்கிறார்களே! மற்றொன்று, பாதரஸம். நேரே உட்கொண்டால் ஆபத்து. ஆனால், பாதரஸத்தை, மற்றொன்றோடு கலந்து மருந்தாக்கி உட்கொள்கிறோமே! அது நல்லது செய்யும் அல்லவா! அதுபோல, கர்மங்களை கர்மங்களுக்காகச் செய்தால், அது மறுபடியும் மறுபடியும் பிறவி என்னும் ஆபத்தில் முடியும். ஆனால், அதே கர்மங்களை பெருமானிடத்தில் ஸமர்ப்பித்து, வேறொரு பயனை எதிர்பார்க்காமல் செய்தால், அது மோட்சத்தையே நமக்குக் கொடுக்கும்!

வியாஸருக்கு உண்மை விளங்கிற்று. நாரதரை வணங்கிக் கேட்டார். “இப்பேர்ப்பட்ட உயர்ந்த கருத்துக்களை நீர் எங்கு கற்றுக் கொண்டீர்? உம்முடைய பிறவியின் ரகசியம் யாது? என்று வினவினார்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக