ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 3 - இந்திரா சௌந்தர்ராஜன்

அஸ்தினாபுரத்தின் அரசன் பரீட்சித்து. பாண்டவ வம்சத்தின் வித்து.... அரசர்களின் பொழுதுபோக்குகளில் ஒன்று வேட்டையாடுதல்! இந்த வேட்டையாடுதலில் தான் பரீட்சித்துவிடம் விதி தன் விளையாட்டைத் தொடங்கியது.
அது என்ன?
இந்த கேள்விக்கு பதிலை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சமூக விதிகள் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். பெரியவர்களை வணங்க வேண்டும். தாய், தந்தையரை போற்ற வேண்டும். சகோதர, சகோதரிகளை கண்ணீர் சிந்த விடக் கூடாது. விரோதியே ஆனாலும் வீடு தேடி வந்து விட்டால் வரவேற்க வேண்டும். உப்பும், தண்ணீரும் நமக்கே பற்றாக்குறை என்றாலும் பிறர் யாசகம் கேட்கும் போது இல்லை என்று மறுக்கக் கூடாது. ஒருவர் முதுகில் குத்தக்கூடாது. புறம் பேசக்கூடாது. செய்த நன்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது. தர்மம் தவறக் கூடாது இப்படி மனித வாழ்வில் நன்னெறிக்கான விதிகள் ஒருபுறம்...!
அடுத்து தன் கர்மத்தின் படி தனக்கென உள்ள விதியின் படி வாழ்வு நடத்துவது.... குறிப்பாக சிறந்த தாய், தந்தை வயிற்றில் பிறப்பது, நல்ல பெண்ணை மணப்பது, பிள்ளைப் பேற்றை அடைவது, வீடுவாசல், சொத்து சுகம், தொழில், பணம் என்று நம் பூர்வஜென்ம கர்மவினைகளுக்கு ஏற்பவே வாழ்வு அமைகிறது அல்லது வாழ்வில் கிடைக்கிறது என்பதை உணர்ந்து அதைப் புரிந்து கொண்டு வாழ்வது...
மூன்றாவது நாம் வாழும் சமூகத்திற்கென உள்ள விதிகளைப் பின்பற்றி நடப்பது.... 
அதாவது அரசுக்கு வரி செலுத்துவது, சாலையை விதிப்படி பயன்படுத்துவது, பொது இடங்களில் நாகரிகமாக நடப்பது போன்றவை.
ஆக மொத்தத்தில் விதி என்றவுடன் பொதுவான மனித குலத்துக்கான விதிகள், கர்ம வினையால் அமைந்த விதிகள், சமூக நலனுக்கான விதிகள் என மூன்று விதமாக அது பிரிந்து செயலாற்றுகிறது.
இந்த விதிகள் அவ்வளவுமே மதி என்னும் நம் அறிவால் உருவானவை. மதி தான் நாம் நலமுடன் வாழ இந்த விதிகளை உருவாக்கி வைத்தது. இந்த விதிக்கு 'ஒழுங்கு' என்றும் பெயருண்டு.
எங்கே ஒழுங்கு இருக்கிறதோ அங்கே தீங்கு உண்டாகாது. சொல்லப் போனால் தீங்கு உண்டாகக் கூடாது என்பதற்காகவே விதிகள் உருவாக்கப்பட்டன. ஆக மொத்தத்தில் மனிதனின் மதியாகிய அறிவு மற்ற உயிரினங்களைப் போல போகிற போக்கில் போகாமல், தன் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும், பிறருக்கு துன்பம் நேரக் கூடாது என்பதற்காகவும் உருவாக்கிய மதி நிறைந்த ஒழுங்குக்கு பெயரே விதி!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். விதி தானாக உருவாகவில்லை. மதி தான் அதை தன் நலனின் பொருட்டு உருவாக்குகிறது. இந்த மதியால், விதியை மாற்றவும் திருத்தவும் முடியும் என்பதை மறந்து விடக் கூடாது. அதே சமயம் தான் உருவாக்கிய விதியை தானே மதிக்கவில்லை என்றால், அந்த விதிக்கும் மதிப்பு உருவாகாது. மதிக்க மதிக்கத் தான் மதிப்பு. இந்த மதிப்பு என்னும் சொல்லில் கூட மதிப்பு உள்ளது. நீ எதை மதிக்கிறாயோ, அது பூப்போல மலர்ந்து வாசம் வீசும். இந்த பொருள் கொண்டே மதிக்கப்பட்டது பூவாகி பின் மதிப்பு என்றும் ஆனது. 
நாம் பிறரால் மதிக்கப்படும் போது நம் மதியும் மகிழ்ந்து குளிர்கிறது. மதிக்கப்படாத போது குளிர்ச்சி விலகி சூடேறுகிறது. 
ஆக எங்கும் எப்போதும் ஒருவருக்கு மதிப்பு உருவாக விதிப்படி அவர் நடப்பது முக்கியம். விதியை மீறும் போது மதிப்பு போய் கொதிப்பு உண்டாகி விடுகிறது. இந்த விதியும் மூன்று கூறாக அறம், கர்மம், சமூகம் என்னும் தளங்களில் உருவாகி மானுட வாழ்வு மகிழ்வான வாழ்வாக திகழ வகை செய்கிறது. 
விதி குறித்த இந்த தெளிவோடு அடுத்த கட்டம் செல்வோம். இந்த கட்டம் விதி பெரிதா? இல்லை இதைப் படைத்த மதி பெரிதா? என்று கேட்கும் கட்டம். நிச்சயமாக விதியே பெரிது என்பதே விடை! ஏனென்றால் மதி தான் இதை படைத்துள்ளது... அதுவும் எதற்காக? தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக..... ஆக விதியே பெரியது என்பது ஒரு விடை....
இல்லை .... இல்லை... விதியைப் படைத்த மதியே பெரியது. படைக்க முடிந்தது தானே எப்போதும் பெரிதாகவும் இருக்க முடியும்? என்று கேட்டு மதியே பெரியது என்பது ஒரு விடை....இது கிட்டத்தட்ட முட்டையில் இருந்து கோழியா... கோழியில் இருந்து முட்டையா? என்கிற கேள்வியைப் போன்றதே....
சரி.. இந்த விதி, மதி சர்ச்சைக்கும் கிருஷ்ண ஜாலத்துக்கும் என்ன சம்பந்தம்? 
இந்த சர்ச்சைக்கும் பரீட்சித்து ராஜாவுக்கும் என்ன சம்பந்தம்? 
இந்த கேள்விக்கும் விடை காண நாம் இந்த வரலாற்றுக்குள் நுழைய வேண்டும். பரீட்சித்து நமக்கெல்லாம் ஒரு முன்னோடி. அவன் கடைத்தேற காரணம் ஸ்ரீகிருஷ்ணன்!
பரீட்சித்துவின் அப்பா அபிமன்யு, அபிமன்யுவின் அப்பா அர்ஜுனன் அர்ஜுனனின் நண்பன், ஞானகுரு, மோட்சகதி, எல்லாமே ஸ்ரீ கிருஷ்ணன் தான்!
இந்த கிருஷ்ணன் பரீட்சித்துவைக் கொண்டே, தன்னையும், தன் மதியால் படைத்த உலகையும், உயிர்களையும் அதற்கேற்ற விதியோடு நடத்தி வருவதை நமக்கு உணர்த்தப் போகிறான். அதாவது எது விதி? எது மதி என்று நமக்கு புரிய வைக்கப் போகிறான். 
இனி நாம் பரீட்சித்துவின் வாழ்க்கைக்குள் அவன் வேட்டையாட சென்ற இடத்தில் இருந்து தொடங்குவோம். காட்டுக்குள் வீரர்கள் பலர் துணையோடு சென்ற போதிலும், விதி பரீட்சித்துவை தனிமைப்படுத்த தணியாத தாகத்திற்கு ஆளானான். கிட்டத்தட்ட பாலைவனத்தில் திரியும் நாடோடி போல ஆகி விட்டான். இந்த நிலையில் தான் சமீகரிஷி என்ற முனிவரின் ஆஸ்ரமம் கண்ணில் பட்டது. சமீக ரிஷியோ தவத்தில் இருந்தார். தவம் என்றால் மேலோட்டமான தியானத்திலும் அல்ல! சமாதி நிலையில் அவர் இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் பூமி இரண்டாகப் பிளந்து இடைவெளியில் விழ நேர்ந்தால், அதில் விழுவது கூட தெரியாது. பரீட்சித்துவும் தாகத் தவிப்போடு அவர் முன் போய் நின்றான். 
அவரது சமாதி நிலையைப் புரிந்து கொள்ள முடியாத தாகத்தில் இருந்தவன், “முனிவர் பெருமானே! எனக்கு குடிக்க தண்ணீர் வேண்டும்,” என்று உரத்த குரலில் கேட்டான். பின் தோளைத் தொட்டு உலுக்கிக் கேட்டான். எதற்கும் அசையாத அவரை ஒரு கட்டத்தில் தரையில் தள்ளி கீழே சாய்த்து விட்டு, அந்த ஆஸ்ரமக் குடிசை முழுக்க தண்ணீர் எங்காவது உள்ளதா என்று தேடினான். அந்த இடமே ஒரு வித உஷ்ணத்தால் கொதித்தது. அங்கங்கே தண்ணீர் இன்றி பல புழு, பூச்சிகள் இறந்து கிடந்தன. அதில் ஒரு பாம்பும் கிடந்தது தான் விந்தை... அவனுக்குப் புரிந்து விட்டது. இங்கு எங்குமே தண்ணீர் இல்லை. அதனால் தான் செடி, கொடிகள் கூட கருகிக் கிடக்கின்றன என்று.
இப்படி ஒரு நிலையில் தண்ணீருக்காக கவலைப்படாமல், இந்த முனிவர் இப்படி ஒரு தவத்தில் இருக்கிறாரே....? தன்னை விடுவித்துக் கொள்ள முயலும் இவருக்குத் தான் எவ்வளவு சுயநலம்....? பரீட்சித்துவுக்குள் இப்படி எல்லாம் கேள்விகள்!
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக