பாகவதத்தை அனுபவிப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஆத்மாவை கடைத்தேற்றிக் கொள்வார்கள். 'உறுதுணையாக இருப்பது' என்பதே பாகவதம் என்பதன் நுட்பமான பொருள்.
பாகவதத்தை நாம் அனுபவிக்கச் செய்தவர் வியாச முனிவர். இவர் பராசர முனிவருக்கும், ஒரு மீனவனின் வளர்ப்புப் பெண்ணான மச்சகந்திக்கும் விசேஷமான கிரக சஞ்சார நேரத்தில் கருக்கொண்டு பிறந்தவர்.
அதனாலேயே தன்னைச் சுற்றி நடப்பதை எல்லாம் அப்படியே கிரகித்துக் கொண்டு அதைக் காலத்தால் அழிக்க முடியாதபடி வியாசித்து அதாவது விரிவுபடுத்தி எழுதவும் முடிந்தவர். இவரது தாய் மீனவப் பெண்ணாக இருந்தாலும், உண்மையில் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவள். தந்தை பராசரரோ புலன்களை அடக்கியாள முடிந்த தவசீலர். இந்த தவசி தன் புலனடக்கத்தை சற்று தளர்த்திக் கொண்டு வியாசரைப் பெற்றது, தன் வம்சம் விளங்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த உலகிற்கு எந்த காலத்திற்கும் அழியாத நிலையில் வாழ்ந்திடும் இதிகாசங்களை எழுத வேண்டும் என்பதற்காகவே.
அதனால் வியாசரிடம் தாய் வழியில் வந்த ரஜோகுணத்தோடு, தந்தை வழியில் வந்த தவசக்தியும் சேர்ந்தது. கூடவே விசேஷ கிரகநிலையின் சக்தியும் நிரம்பியிருந்தது. அதனாலேயே வியாசர் இன்றும் வாழ்ந்திடும் சந்நியாசிகளால் குருநாதராக பூஜிக்கப்படுகிறார். இந்த பூஜையும் அவரின் காரணப் பெயரான 'வியாச' என்னும் பெயரால் வியாச பூஜையாகக் கொண்டாடப்படுகிறது.
இப்படிப்பட்ட வியாசரே மகாபாரதத்தையும் நமக்கு தந்தருளினார். பின்னர் பதினெட்டு புராணங்களையும் வழங்கினார். அதில் இந்த பாகவதமே மிக விசேஷமானது. இதில் 18,000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இதை எழுதி முடித்த நிலையில் வியாசர் முதன் முதலாக தன் புத்திரனான சுகர் எனப்படும் சுகனுக்கு உபதேசித்தார். முன்னதாக சுகரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி வியாசரின் பிறப்பில் விசேஷ கிரக சஞ்சாரங்கள் இருந்ததோ, அதே போல சுகரின் பிறப்பின் பின்புலத்தில் நுட்பம் பல உண்டு.
மகனுக்காக தன் சந்நியாசத்தில் சிறு சமரசம் செய்து கொண்ட பராசரரைப் போலவே, வியாசரும் தனக்குப் பின் தர்மவழியில் நடக்க ஒரு பிள்ளை வேண்டும் என்றும், அவன் இனி வரும் யுகங்களில் வாழப் போகிறவர்களெல்லாம் முக்தி பெற வழி காட்டுபவனாகவும் இருக்க வேண்டும் என்றும் விருப்பம் கொண்டார். சிவபெருமானை எண்ணி தவத்தில் ஆழ்ந்து பிள்ளைவரம் வேண்டினார். பிறக்கப் போகும் பிள்ளை தன் போலவே ஞானியாக திகழ வேண்டும் என்று விரும்பினார். அதன் விளைவாக சிவபெருமானும் ஒரு தேவலோக கன்னியை அனுப்பி வைத்தார். அக்கன்னிப்பெண் கிளிவடிவில் வியாசர் முன் தோன்றி, அவருக்குள் காம எண்ணத்தை ஏற்படுத்த, அதனால் சுக்கிலம் வெளிப்பட்டது. அது யாகம் செய்யும் போது பயன்படும் அரணிக்கட்டையின் குழிபாகத்தில் சேர்ந்தது. அதிலிருந்து கிளியின் தலையும், மனித உடலுமாக ஒரு பிள்ளை தோன்றியது. உயிரினங்களில் கிளியானது பறவையினமாக இருந்தாலும், மனிதர் போல பேசும் சக்தி பெற்றது. எல்லா உயிர்களும் பரம்பொருள் முன்னால் சமமாக கவுரவிக்கப்படும் என்பதை உணர்த்தும் விதத்திலும் பேசும் சக்தி கொண்ட கிளியின் உருவத்தில் இவர் பிறந்தார் என்பர். சுகரூபமான பெண்ணின் முகத்துடன் கலந்து பிறந்தவர் என்பதால் சுகமே இவர் பெயரானது. அதுவே சுகன் என்றானது. நாரதரால் ஞான உபதேசம் பெற்று பிரம்ம ஞானியாகி பின் சுகர் என்றானார்.
ஞானிக்கும், பிரம்ம ஞானிக்கும் என்ன வேற்றுமை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிரம்ம ஞானி என்பவன் தன் எதிரில் பரம்பொருளே வந்தாலும் உணர்ச்சிவசப்பட மாட்டான். பரம்பொருளை பெரிதாகவும், மற்றதை அதாவது தன்னை சிறிதாகவும் கருத மாட்டான். சுருக்கமாகச் சொல்வதென்றால், பிரம்ம ஞானி கொலை செய்தவனையும், கொலையானவனையும் ஒன்றாகவே பார்ப்பான். அந்த கொலை சம்பவத்தை கர்மச் செயலாகவும், இருவர் பின்புலத்திலும் அவ்வாறு நடந்திட சரியான காரணம் இருப்பதையும் யாரும் கூறாமலேயே தெரிந்து கொள்வான். இருவரையும் பாரபட்சம் இன்றி அணுகுவான். இதைச் சொல்லி புரிய வைப்பது கடினம். ஒரு பிரம்ம ஞானி நடந்து கொள்வதைப் பார்த்தால் மட்டுமே, நம்மால் இதை உணர முடியும்.
பிரம்மாவின் புதல்வர்களில் ஒருவரான சனத்குமாரர் ஒரு பிரம்மஞானி. ஒருநாள் பிரம்மாவும், சனத்குமாரரும் ஒன்றாக அமர்ந்திருந்த நேரத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் பிரசன்னமாகின்றனர். பிரம்மா அவர்களை துதி செய்து வரவேற்கிறார். ஆனால் சனத்குமாரரோ அமைதியாக அவர்களை நோக்குகிறார். அப்பா வணங்கிட, பிள்ளை வணங்காமல் இருப்பது பார்வதி தேவியை கேள்வி கேட்கச் செய்கிறது.
ஒரு பிரம்மஞானி ஒன்றை உயர்வாக கருதி துதிப்பதும் இல்லை. இழிவாக கருதி வெறுப்பதும் இல்லை. பரமன் முதல் புல், பூண்டு வரை சகலமும் பிரம்மம் (கடவுள்) என்று உணர்ந்து சமநிலையில் இருப்பதே பிரம்மஞானம் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சனத்குமாரரே பின் சிவபெருமானின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டு அவருக்கு புத்திரனாக அதாவது முருகப்பெருமானாக தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.
சுகரும் அப்படி ஒரு பிரம்மஞானியாக விளங்க வேண்டும் என்பதற்காக வியாசரும் பாகவதத்தை உபதேசித்தார்.
ஒரு பிரம்மஞானியாலேயே இந்த பாகவதத்தை, தக்க பொருளுடன் பிறருக்கு உபதேசிக்க முடியும். ஏனென்றால் இந்த பாகவதத்தின் கதாநாயகரான கிருஷ்ணனும் பிரம்மஞானியாக தன் அவதாரத்தில் வாழ்ந்து காட்டியவன்.
பிரம்மஞானியாலேயே இன்னொரு பிரம்மஞானியை குறைவுபடாமல் வெளிக்காட்ட முடியும். அந்த வகையில் கிருஷ்ணனை நாம் நுட்பமாக உணரும் எல்லா கட்டங்களிலும் மறைவாக சுக மகரிஷியே இருக்கிறார்.
இப்படிப்பட்ட சுக மகரிஷி தன் தந்தையிடம் இருந்து பெற்ற இந்த பாகவதத்தை பரீட்சித்து என்னும் அரசனுக்குத் தான் முதன் முதலில் உபதேசித்தார். ஏன் இவனிடம் இருந்த இந்த பாகவதம் அறிமுகமானது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பரீட்சித்துவின் காலத்தில் இருந்தே இப்போதைய கலியுகம் தொடங்கியது. அதற்கு முன் வரை துவாபரயுகம் இருந்தது. அதில் வாழ்ந்த அர்ஜுனனின் பேரனே பரீட்சித்து. இவனது தந்தையான அபிமன்யு, தாயின் கருவில் இருக்கும் போதே பாரதப்போரில் வஞ்சகமாய் கொல்லப்பட்டான்.
பரீட்சித்துவின் பிறப்பும் சூட்சுமம் நிறைந்தது. இவன் தன் தாயான உத்தரையின் கருவில் இருக்கும் போதே, அசுவத்தாமனின் அஸ்திரத்தால் கொல்லப்பட இருந்த சூழ்நிலையில், கிருஷ்ணனின் சக்ராயுதம் இவனைக் காப்பாற்றியது. துரோணரின் புத்திரனான அஸ்வத்தாமனின் அஸ்திரத்தை செயல் இழக்கச் செய்தது கிருஷ்ணனின் சக்ராயுதம். கருவில் இருக்கும் போது பரீட்சித்து காப்பாற்றப்பட்டாலும், விதிவசத்தால் பாம்பு தீண்டி இறக்க வேண்டும் என்பதே விதியின் முடிவாகும்.
இந்த சம்பவத்தின் பின்னணியிலும் நுட்பமான ஒரு விஷயம் புதைந்துள்ளது. விதி வலியது என்றாலும், அந்த சூழ்நிலையிலும் ஒரு மனிதனுக்கு கிருஷ்ண சம்பந்தம் ஏற்பட முடியும். பின் அதுவே முக்திக்கும் இட்டுச் செல்லும் என்பதே அந்த நுட்பம். இதை வெறும் சம்பவமாக பார்க்காமல், மாறுபட்ட கோணத்தில் நாம் பார்க்க வேண்டும். அப்போது தான் நாம் இப்போது வாழ்ந்து வரும் கலியுகத்தின் தன்மை, இதை வெற்றி கொள்ள உதவும் கிருஷ்ணரின் திண்மை ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும். இது புரிந்தால், இந்த கிருஷ்ண ஜாலமும் புரியும்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்