ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 1 - இந்திரா சௌந்தர்ராஜன்

நம் புராண பாத்திரங்கள் மிக நுட்பமானவை. அவை தங்களுக்குள் அரிய செய்திகளை வைத்துக் கொண்டிருப்பவை. இதை உணர நமக்கு மதி நுட்பம் தேவை. இப்போது வளர்ந்து விட்ட விஞ்ஞான யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ஆன்மிக கட்டுரையை எழுத நான் பயன்படுத்தும் தாள் முதல் பேனா வரை சகலமும் விஞ்ஞானத்தின் கொடை தான். 
இதைக் கொண்டு அச்சாகி வர இருக்கும் புத்தகமும் விஞ்ஞானத்தின் கொடையே... வரும் நாளில் பேனாவும், பேப்பரும் இன்றி பேசுவதே கூட எழுத்தாகி, கண் எதிரில் காட்சி தரலாம். எலக்ட்ரானிக்ஸ் எனப்படும் ஒளி உலகம் அப்படி ஒரு வளர்ச்சி நோக்கி சென்றபடி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது பழைய புராணங்கள் வெறும் கற்பனையாகவும், பொருளற்றதாகவும் சிலருக்குத் தோன்றலாம். அப்படி தோன்றினால் அதுவும் அவர்கள் குற்றமில்லை. இது மிக இயல்பான ஒரு விஷயமே.... ஆனாலும் இந்த விஞ்ஞான காலத்திலும், நம் புராண நுட்பங்களை சிலர் தங்களுக்குள் கிரகித்துக் கொண்டு, அதை நமக்குச் சொல்லும் போது அது இந்த விஞ்ஞான தாக்கங்களை எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாக்கி விடுகிறது.
என் நண்பர் ஒரு கிருஷ்ண பக்தர். அவரது சட்டை பாக்கெட்டில் எப்போதும் ஒரு கிருஷ்ணர் படம் இருந்து கொண்டேயிருக்கும். அவரைப் பொறுத்த வரையில் கிருஷ்ணர் நூறு சதவீதம் கடவுளுக்கும் மேலான பாத்திரம். அது என்ன 'கடவுளுக்கும் மேலானவர்' என்று கூட கேட்கத் தோன்றலாம். 
கடவுள் தான் உலகில் பெரியவர் என்று ஆத்திகவாதி ஒப்புக் கொள்கிறான். 
நாத்திகவாதியோ கடவுளை ஒப்புக் கொள்வதில்லை. இந்த உலகமோ கடவுளை மறுப்பவர்களையும் தன் வசம் கொண்டு தான் சுழல்கிறது. ஆக, நாத்திகவாதிகளைப் பொறுத்தவரை கடவுளுக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அதை இயற்கை என்றும், பேராற்றல் என்றும், சில சமயத்தில் புரியாத புதிர் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி கடவுளை தள்ளி விட்டு, வேறு பலவாறாகவும் கூறுவதை நாம் கேட்கவே செய்கிறோம். 
இதிலிருந்து கடவுளை ஒப்புக் கொள்பவர், மறுப்பவர் என இரு சாரார் இருப்பதால் என் நண்பரும் கிருஷ்ணனை கடவுள் என்றும், கடவுளுக்கும் மேலானவர் என்றும் கூறுகிறார். அதே சமயம் கண்ணனே எல்லாம் என்பதே அவரது முடிவு. புழு, பூச்சி முதல் மனிதன் வரையுள்ள அனைத்து உயிர்களும் கிருஷ்ண மயம் என்பதே அவரது தீர்மானம். 
கண்ணனாகிய அந்த கிருஷ்ணனை அவர் எப்படி எல்லாம் வியக்கிறார் என்பதையும் பார்ப்போம்.
“கிருஷ்ணனுக்கு கருநீல வண்ண மேனி. தமிழில் சொல்வது என்றால் கருப்புச்சாமி. அதாவது இரவின் வண்ணம் கொண்டவன். இரவு மட்டும் இல்லாவிட்டால் உலகில் ஒரு உயிரினமும் நலமுடன் வாழ முடியாது. பகல் பொழுதில் நின்று இயங்கும் உயிர்கள் மண்ணுக்கும், வானத்திற்குமாக செயலாற்றுகின்றன. இரவில் படுக்கும் போது தான் செயலற்று கிடக்கின்றன. செயல்படும் போது தன்முனைப்பு உண்டு. இரவில் ஓய்வு எடுப்பதால் தன்முனைப்பு என்ற ஒன்றே இல்லை. பகலில் செயல்பட தெம்பைத் தருவது இரவே. அந்த வகையில் கிருஷ்ணனே நமக்கெல்லாம் சக்தி தருபவன் என்று தொடங்கினார் நண்பர். அப்புறம் அவன் தோற்றத்தைப் பார் என்றவர், அப்படியே விவரிக்கத் தொடங்கி விட்டார்.
“அவன் தலையில் அழகான மயிற்பீலி இருக்கும். அதில் பல வண்ணங்கள் உண்டு. நிறமற்ற கருப்பன் என்ற போதிலும் என்னிலும் பல வண்ணங்கள் உண்டு என்று சொல்லாமல் சொல்கிறானாம் அவன். அடுத்தது அவனது புல்லாங்குழல்! மயிற்பீலியின் வண்ணங்களைக் காண முடியாத கண்களுக்கு என்றால், புல்லாங்குழலோ கேட்க முடிந்த காதுகளுக்கானது. ஒன்று ஒளி! மற்றொன்று ஒலி!
இரண்டும் நானே என்கிறான் கண்ணன். அவன் எப்போதும் மாலை சூடியவனாகவே இருக்கிறான். மாலை என்பது மதிப்புக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. வாசமிகு மலர்களால் உருவானது. மலர்களுக்கு நிறம், மணம், மென்மை, தேன் என்னும் தித்திப்பு, கனமில்லாத லேசான தன்மை ஆகிய ஐவகை சிறப்புகள் உண்டு. அதனால் தான் மாலை சூடுதல் என்பதை மங்கல நிகழ்வாக கருதுகிறோம். இந்த மாலையை கண்ணன் எப்போதும் கழுத்தில் சூடியிருப்பான். 
மொத்தத்தில் நானே சக்தி தருபவன், பல வண்ண வாழ்வை வடிவமைப்பவன், நானே எப்போதும் மதிப்பிற்குரியவன், நானே ஒலியும், ஒளியுமானவன், உண்டு என்பாருக்கு பல வண்ணங்களில் மிளிர்பவன், இல்லை என்பாருக்கு இருந்தும் இல்லாது போகின்ற கரிய இரவாக காட்சி தருபவன். அதே சமயம் ஏற்பவரையும், மறுப்பவரையும் சமமாகக் கருதி ரட்சிப்பவன்' என்று கிருஷ்ண பரமாத்மா எனக்குள் அர்த்தமாகின்றார்,” என்றார் நண்பர். 
அவருடைய பேச்சை என்னால் ஏற்காமல் இருக்க முடியவில்லை. காஞ்சி மகா பெரியவர் கூட இதை வைத்து தான் கிருஷ்ணனே பூர்ணாவதாரி என்றாரோ என்று நானும் எண்ணிப் பார்க்கிறேன். 
கரிய இரவில் பிறக்கிறான். அதே இரவில் இடம் மாறுகிறான். பெற்றவள் ஒருத்தி. வளர்த்தவள் இன்னொருத்தி. இந்த உலகில் பிறக்கும் குழந்தை எதுவாக இருந்தாலும், அது அன்புக்கும் பாசத்துக்கும் மட்டுமே ஆளாகும். பிச்சைக்காரி கூட தான் பெற்ற பிள்ளையைத் தன் அரவணைப்பில் பராமரிப்பாள். ஆனால் கண்ணனோ பிறக்கும் போதே உயிருக்கு ஆபத்தோடு பிறந்தவன். 
இந்த பூமி ஒன்று தான் என்றாலும் அது இரவு, பகல் என்று இரு கூறாகப் பிரிந்து செயலாற்றுகிறது. சுவை என்பதும் ஒன்றே. ஆனால் இனிப்பு, கசப்பு என்று அதுவும் இரு கூறாகவே செயலாற்றுகிறது. மனிதனும் ஆண், பெண் என்று இரு பகுப்பாகவே உள்ளான். அவனது உணர்வும் இன்பம், வலி என்னும் இரண்டாக உள்ளது. தொடு உணர்வில் சூடு, குளிர்ச்சி என்னும் இரண்டு இருக்கிறது. 
இப்படி எல்லாம் இரண்டின் தன்மையாக இருப்பதாலேயே ஒன்றைக் கொண்டு மற்றொன்றை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஒட்டு மொத்தமும் நான் தான்... என்னுள் இருந்தே எல்லாம் தோன்றின என்று கிருஷ்ணன் கீதையில் கூறுவது எத்தனை பெரிய உண்மை? இதன் காரணமாகத் தானோ என்னவோ, அந்தக் கண்ணனை நாம் உற்று நோக்கும் போது அவன் ஏற்காத பாத்திரங்களே இல்லை என்பது தெரிய வருகிறது. 
குதிரை வண்டிக்காரன் என்னும் சாரதி பாத்திரத்தில் இருந்து தூது செல்வது, மாடு மேய்ப்பது, குழலிசைப்பது, வெண்ணெய் திருடுவது, மல்யுத்தம் புரிவது, அடி கொடுப்பது, அடி வாங்குவது, போதிப்பது, காதலிப்பது, எச்சரிப்பது, ஏமாற்றுவது, ஏமாறுவது, வணங்குவது, வணங்கச் செய்வது, நண்பனாக இருப்பது, சேவகனாக பணி செய்வது, வழிகாட்டியாக இருப்பது, காட்டிய வழியில் நடப்பது, முற்றாக கீதை நாயகனாக, 'என்ன கொண்டு வந்தாய்? எதைக் கொண்டு போக உன்னால் முடியும்?' என்று உணர்த்துவது, மாறிக் கொண்டேயிருப்பதே வாழ்க்கை என்று எடுத்துச் சொல்வது... இப்படி இருவகையாக நடந்து கொள்கிறான்.
நடப்பவை அனைத்திலும் நன்மை உள்ளது. இதை உணர சாமானிய அறிவால் முடியாது. அதற்கு பிரம்ம ஞானம் வேண்டும் என்பதைச்சொன்ன, உயிர்களின் கண் போன்ற கண்ணனின் பாகவத லீலைகளின் சில துளிகளை சிந்திப்பதே கிருஷ்ண ஜாலம் என்னும் இந்த தொடரின் நோக்கம். அதற்கு முன்னதாக எது பிரம்ம ஞானம் என்பது குறித்து நாம் சற்று சிந்திக்கலாமா? 
கிருஷ்ண பரமாத்மாவை நாம் முழுமையாக அனுபவித்து தெரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பாக உள்ள நூல் பாகவதம். இந்த 'பாகவதம்' என்கிற சொல்லை நுணுக்கிப் பிளந்து பார்த்தால் ஒரு உண்மை நமக்குப் புலனாகும். எவன் ஒருவன் தான் யார் என்கிற கேள்விக்குள் விழுந்து, தன்னை முழுமையாக அறிந்து, தன்னுள் இருந்தே தனக்கான விடுதலையை பெற்றுக் கொள்கிறானோ அவனே பாகவதன்! 
அதாவது தனது ஒரு பாகத்தை வதம் செய்து தன் ஆத்மாவை கடைத்தேற்றிக் கொள்கிறவன் என்று கூறலாம். 'வதம்' என்பதை இங்கே 'சித்ரவதை' என்று பொருள் கொள்வது கூடாது. 'தன்னை அடக்கி வெற்றி கொள்ளுதல்' என்று பொருள் கொள்ள வேண்டும். பாகவதனுக்கு இது பொருள் என்றால் பாகவதத்துக்கு என்ன பொருள் தெரியுமா?
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக