சனி, 14 செப்டம்பர், 2024

படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்! - சுதர்சன்

மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். மார்கழி மாதத்தில் அதே கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர் பெரியநம்பிகள் என்ற வைணவ ஆச்சாரியர்.

ஆளவந்தாரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்கள் பிரதானமானவர். அதாவது ராமானுஜருக்கு வைணவ தீட்சை எனப்படும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த நேரடி ஆசாரியர், பெரிய நம்பிகள். இன்றும் பெரியநம்பிகள் வம்சத்தவர்கள் திருவரங்கத்திலிருந்து கைங்கரியம் செய்து வருகின்றனர்.


பெரிய நம்பிகள் வாழ்க்கை வரலாறு சுவையானது, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. ஒரு ஆசாரியன் உத்தமமான ஞானத்தோடு வாழ வேண்டும். சாதுவாக இருக்கவேண்டும். குருநாதர் மீது அகலாத பக்தி இருக்க வேண்டும். சீடர்கள் மீது சாலச் சிறந்த அன்பு இருக்க வேண்டும். இத்தனையும் ஒரே இடத்தில் பரிபூரணமாக அமைந்தவர் பெரிய நம்பிகள்.


எந்தத் தத்துவத்தை நம்பினோமோ, அந்தத் தத்துவத்தை, விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தவர் பெரிய நம்பிகள். சொல் வேறு; செயல் வேறு என்று வாழாதவர் பெரிய நம்பிகள். தனது ஆசாரியன் கட்டளைப்படி, தனது சீடனை வைணவக் குலத்தலைவராக்கி, அவருடைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வைணவத் தொண்டனாகப் பணியாற்றியவர் பெரியநம்பிகள்.


அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் ராமானுஜர் அவருடைய சீடர்களுடன் நடந்து வரும் பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். எல்லோரும் வியந்தனர். 


சிலர் “இது என்ன மரியாதை? ஒரு சீடனை ஆசாரியன் விழுந்து வணங்குவதா?” என்றனர்.


‘‘ஏன் உம் சீடனை சேவித்தீர், இது சரியா?’’ என்று பெரிய நம்பியிடம் கேட்டனர். 


“சீடனை சேவிக்கவில்லை. அடியேன் குருவைத்தான் சேவித்தேன்” என்றார் பெரிய நம்பி. அவர்களுக்குக் குழப்பம் அதிகமாகியது.


“ராமானுஜர் நடந்து வரும்போது, ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது. அதனால் சேவித்தேன்’’ என்று கூறினார். 


சரி என்று ராமானுஜரிடம் போய்க் கேட்டனர். ‘‘நீர் வைணவர்களுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் பெரியநம்பி உமக்கு குரு அல்லவா. அவர் சாஷ்டாங்கமாக விழுந்து சேவிப்பதை நீர் ஏற்றுக்கொள்ளலாமா?’’


ராமானுஜர் சொன்னார். ‘‘அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அடியேனை சேவிப்பதாக நினைக்கவில்லை. அவர் பாவனா கர்ஷத்தில் தனது ஆசாரியரை (ஆளவந்தாரை) சேவிக்கிறார். அந்த வணக்கம் அவருக்கு உரியது என்று நினைத்து கொண்டதால் தடுக்கவில்லை’’ இதன்படியே வாழ்ந்தவர் பெரியநம்பி.


மாறநேரி நம்பி சீரிய ஸ்ரீவைஷ்ணவர், ஆளவந்தாருடைய சிஷ்யர். அவர் பரமபதித்த போது பெரியநம்பி அவருக்கு சரம (சரமஸ்லோகத்தை சொல்லுதல்) கைங்கர்யங்களை செய்தார். பிறந்த குல வேறுபாடுகளை காரணம் காட்டிய சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ராமானுஜரிடம் சென்று குறை கூறினார்கள். ராமானுஜரும் எல்லா ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரியநம்பிகளின் உண்மை வைணவ உள்ளத்தை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பெரியநம்பியிடம் கேட்டார்.


‘‘ஆழ்வார் திருவுள்ளத்தின் படியும், ஆழ்வார் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி (3.7) மற்றும் நெடுமாற்கடிமை (8.10) பதிகத்தில் அருளி செய்தபடியும் தான் செய்தேன். வைணவ அடியார்களில் வேறுபாடு இல்லை. எல்லோரும் பாகவதரே. ராமபிரான் ராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு அந்தக் கிரியைகளை முறையாக செய்தார். அந்த ஜடாயு என்ற பறவையை விட மாறனேரி நம்பி என்கின்ற வைணவ மகான் தாழ்ந்தவர் அல்ல. நானும் ஸ்ரீராமரை விட உயர்ந்தவன் அல்ல.


ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமபிரான் செய்து காட்டிய விஷயத்தைத்தான் நான் செய்தேன். மகாபாரதத்தில் பொதுமகளுக்குப் பிறந்தவராக துரியோதனன் முதலியவர்களால் இழிவாகப் பேசப்பட்ட விதுரனுக்கு தர்மபுத்திரர் அந்திமக் காரியங்கள் செய்தார். மாறனேரி நம்பி விதுரனை விட தாழ்ந்தவர் அல்ல. நானும் தர்மரை விட உயர்ந்தவன் அல்ல. சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளை நான் பின்பற்றினேன்.


‘‘சாத்திரத்தை படித்துவிட்டு அதில் உள்ளவற்றை வாழ்க்கையில் பின்பற்றாமல் இருந்தால், அந்த சாஸ்திரங்கள் வெறும் கடலோசை போல யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.’’ என்று விளக்கம் அளித்தார். பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) வாழ்க்கையில் தனது மதக்கருத்தை பரப்புவதைவிட அப்பட்டமாக வாழ்க்கையில் பின்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார்.


சோழ அரசன் அல்லது அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஏதோ ஒரு சிற்றரசனால் கண்கள் பறிக்கப்பட்ட பெரிய நம்பிகள் வயோதிகத்தாலும் வேதனையாலும் உடல் தளர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து திருவரங்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார். துணைக்கு ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வார். பெரிய நம்பிகள் மகள் அத்துழாய் வருகிறார்கள். தனக்கு மரணம் நெருங்குவதை உணர்கிறார் பெரியநம்பிகள். பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்திலேயே காலமெல்லாம் வாழ்ந்தவர். எப்படியாவது திருவரங்கம் திரும்பிவிடலாம் என்று நடந்து வருகிறார்கள்.


கும்பகோணம் அய்யம்பேட்டை தாண்டி பசுபதி கோயில் என்று சொல்லப்படும் ஊருக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கேட்டை கோயில் என்று அழைக்கப்படும் இச்சிறிய ஊரில் பெரியநம்பிகளின் திருவரசு (பெரிய நம்பிகள் அடக்கம் செய்யப்பட்ட இடம்) அமைந்திருக்கிறது. பெரிய நம்பிகளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மகள் அத்துழாய்க்கோ மனம் பொறுக்க முடியவில்லை. தளர்ந்துபோய் அப்படியே சாய்ந்து விடுகிறார். தலை கூரத்தாழ்வான் மடியிலும், திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார்.

இருவரும் பெரிய நம்பிகளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


அத்துழாய் பேசுகிறாள்.



‘‘அப்பா.... அப்பா…’’



‘’ம்...’’


“அப்பா.... கொஞ்சம் சமாளித்துக்கொள்ளுங்கள்... ஓரிரண்டு நாட்கள்... கொஞ்சம் முயன்றால் திருவரங்கம் போய்விடலாம்.... கிடைத்தற்கரிய திருவரங்கவாசம் கிடைக்கப் பெற்று காலமெல்லாம் அரங்கனே கதி என்று நினைத்திருந்த தங்களின் இன்றையநிலை எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.”


‘‘அம்மா...’’ மெல்ல அழைக்கிறார் பெரிய நம்பிகள். மகள் சொன்னதைக் கேட்டு அந்தச் சூழ்நிலையிலும் அவர் இதற்கிடையில் புன்னகை விரிகிறது.


‘‘திருவரங்கத்தில் சென்று உயிரை விட்டால் மோட்சம் என்கிறாய்.... இல்லையா’’.


‘‘அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கின்றன. காவேரிதான் விரஜா நதி. வைகுண்டம்தான் ரங்கமந்திரம். ரங்கநாதன்தான் பரமபதநாதன். அங்கே பிறக்கத் கொடுத்து வைத்த தங்களின் அந்திம நாட்கள் அங்கேதான் கழியவேண்டும். வைகுந்த வான் போகத்தின் திறவுகோலும் முகவாசலும் அரங்கத்தில் இருப்பதாகத்தானே சொல்கிறார்கள்.’’


‘‘அம்மா. சாத்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றன. நீ சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகளுக்கு மேலே சில பேருண்மைகள் உண்டு.’’


‘’அப்படியா...’’


‘‘ஆம். அம்மா. அரங்கன் அந்தப் பேற்றினை இந்த எளியவனுக்குக் கொடுத்திருக்கிறான். அரங்கம்தான் சிறந்தது. அங்கே வாழ்ந்தால்தான் மோட்சம். என்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் அரங்கத்தில் குடியேறுவது சாத்தியமா...? அப்படி வார்த்தைகளை பிடித்துக்கொண்டு  உள் அர்த்தத்தை கவனிக்காது போனால் அரங்கம் தான் தாங்குமா? அப்படி திருவரங்கத்தில் வாழாதவர்களுக்கும் திருவரங்கத்தில் சாகாதவர்களுக்கும் மோட்சம் கிடையாதா?’’ தட்டுத்தடுமாறி பேசினாலும் குரலில் நடுக்கமில்லை.


‘‘அப்படியானால்’’ என்று கேட்டுவிட்டு பெரிய நம்பி முகத்தை பார்த்தாள் அத்துழாய். 


பெரியநம்பி சொன்னார், ‘‘எல்லோரும் திருவரங்கத்திற்குப் போவது இருக்கட்டும் ... எல்லா ஊரும் திருவரங்கமாக வேண்டாமா….’’


‘‘அப்பா. நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் திருவரங்கம்?’’ 


பெரியநம்பிகள் இப்போது ஓர் அற்புதமான வாக்கியத்தைச் சொல்கிறார். ‘‘அம்மா. இப்போது இந்த தளர்ந்த வயோதிக நிலையில் அந்திம நேரத்தை எண்ணிக் கொண்டிருக்கும் அடியேன் தலை சாய்த்திருக்கிறேனே - கூரத்தாழ்வான் என்கிற பரமபாகவதன் மடியில்... இந்த பாகவதன் மடியை விட உயர்ந்ததா திருவரங்கம்?’’ அத்துழாய் பேசவில்லை.


நன்றி - தினகரன் 2022


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக