புதன், 27 அக்டோபர், 2004

முதலில் இலக்கியத்தைப் பற்றி பார்ப்போம்.....

சங்க நூல் காலத்தையும் நீதிநூல் காலத்தையும் அடுத்துத் தெளிவாகக் காணப்படுவது பக்தி இயக்கக்காலம். கி.பி.ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சைவ சமய நாயன்மார்களும், வைணவத்தில் ஆழ்வார்களும் தோன்றி மக்களிடையே தம் பக்திப் பாடல்களைப் பாடி சமயத்தை வளர்த்தனர். இந்த ஆழ்வார்களின் காலம்ப் பற்றி பேரா. வையாபுரி பிள்ளை வித்தியாசப்படுவார். நமக்கு அவை தேவையில்லை. இந்த இலக்கியச் சுவை மட்டும் ரசித்தால் போதும். முதல் ஆழ்வார் மூவரில் பூதத்தாழ்வார் ஒரு பாடலில்



அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன் புருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.



பாடலை நன்கு கவணியுங்கள் பூதத்தாழ்வார் ஒரு ஞான விளக்கு ஏற்றினாராம் எப்படி, அன்பே தகளியாகவும் , ஆர்வமே நெய்யாகவும், திரியாக தன்னுடைய பக்தியால் உருகும் மனத்தையும் , நாராயணனுக்கு ஞானச்சுடர்விளக்கு ஏற்றினேன் என்கிறார். அதாவது நாம் உடல் வருத்த வேண்டியதில்லை. நல்ல பாடல் மனமுருகும் பாடல் இவை போதும். அந்த ஆண்டவனை அடைய....... அவ்வளவுதானா? இந்தப் பாடலைப் பாருங்கள்



மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப் பொன்னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ

வையம் அளந்தானே தாலேலோ




ஆகா என்னவொரு தாலாட்டுப்பார்த்தீரா.... வையத்தை அளந்தவனுக்கு மாணிக்கம் இடையிடையே வைரம் பதித்து ஆணிப்பொன்னால் செய்யப்பட்ட சிறுத்தொட்டில், அதுவும் யார் தந்தது அந்த நான்முகனே கொடுத்தத் தொட்டிலில் அழாமல் கண்ணுறங்கு மாதவனே.... தாலேலோ..... வையம் அளந்தவனே தாலேலோ.... யார் இந்தப்பாடலை பாடியவர் என்றால் பெரியாழ்வார்.... இவர் மட்டும்தானா தாலாட்டுப் பாடியுள்ளார் என்றால் நம்ம குலசேகராழ்வார்....சேர நாட்டை ஆண்ட மன்னர்.....



மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய செம்பொன்சேர்

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ....



குலசேகராழ்வார் இராமாயணத்திலே மிகுந்து ஈடுபாடுக் கொண்டவர், ஒரு தடவை இராமகாதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதிலும் குறிப்பாக இலக்குமனனால் அங்கஹீனமடைந்த சூர்ப்பனகை, அரக்கன் கரனிடம் சென்று விவரிக்க அந்த அரக்கன் இராம இலக்குவனர்களை அழிக்க பெரும் படையுடன் வந்தான். இராமன் தனிமையில் வில்லை வளைத்து போர்தொடுத்தான் என்று கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது, இவையெல்லாம் நிகழ்கால நிகழ்ச்சியென்று எண்ணி தம் படைகளை திரட்டிக்கொண்டு வருமாறு படைத்தலைவனிடம் கூறி தாமும் சென்று இராமனுக்கு உதவவேண்டும் என்றுப் புறப்பட்டார், பிறகு பெரியவர்கள் இராமன் கரனை வென்று பர்னசாலையில் சீதையுடன் இருக்கிறார் என்று சொன்னபிறகே தன் சயநிலைக்கு வந்தாராம். அவர் எழுதிய தாலாட்டு மிகப்பிரசித்தம், கௌசலையில் மனிவயிற்றில் உதித்த இராமனே நீ தென்னிலங்கை சென்று தசமுகனை வென்றாய், இங்கே இந்த திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சௌரிராஜனயை இராமனாக பாவித்து இந்தத்தாலாட்டை எழுதியுள்ளார்.

இவை மடடும்தானா ஒவ்வொரு ஆழ்வாரைப்பற்றியும் கூறிக்கொண்டே இருக்கலாம்... சின்னச்சின்ன குறிப்புகளுடன் இனி இந்தப்பக்கங்களில் பார்க்கலாம்.......

ஓம் நமோ நாராயணாய நம.


1 கருத்து: