வியாழன், 9 நவம்பர், 2017

ராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு - முனைவர். இரா.வ.கமலக்கண்ணன்

ராமானுஜர் சமயக் கருத்துகளைக் கூற ஏற்ற மொழியாக இருந்த காரணத்தால், வடமொழியில் ஒன்பது நூல்களை இயற்றினார். ஆனால் தமிழ் நூல்கள் எதற்கும் விளக்கவுரை எழுதவில்லை. இதனால் இவருக்குத் தமிழ்ப் புலமை குறைவாக இருக்குமோ என்று கருதுபவரும் உண்டு.

இவர் இயற்றிய தனியன்கள்: (நூலை விட்டு தனியே இருப்பது தனியன்)

‘வாழி பரகாலன் வாழி கலிகன்றி
வாழி குறையலூர் வாழ்குவந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர் கோன்
தூயோன் சுடர் மான வேல்
--- உடையவர் இயற்றிய பெரிய திருமொழித் தனியன்.

தம்மை ஒரு தலைவியாகக் கருதிப் பாடிய பெருமாள் திருமொழித் தனியன்:

‘ இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தன்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலை சேர் நுதலியர்வேள் சேரலர் கோன் எங்கள்
குலசேகரன் என்றே கூறு

‘சீரார் திரு வெழுகூற்றிருக்கை யென்னும் செந்தமிழால்
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தன் அடியிணைக் கீழ்
ஏரார் மறைப்பொருள் எல்லாம் எடுத்திவ்வுலகுய்யவே
சோராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணை நமக்கே
என்கிறது திருவெழுகூற்றிருக்கை தனியன்.

திவ்யப் பிரபந்த ஈடுபாடு

திருப்பாவையில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டினால், ‘திருப்பாவை ஜீயர் என்ற பட்டம் பெற்றார். ராமானுஜர் உரை, நயங்களாகவும் ஆட்சிகளாகவும் ஈட்டு உரையில் பல குறிப்புகள் உள்ளன. ஒரு நாள் உலாவச் சென்றவர் பாதியிலேயே திரும்பிவிட்டார். திருமடத்திலிருந்த எம்பார் கதவைத் திறந்த படி, ‘ திருமாலிருஞ் சோலை மலைத் திருவாய்மொழி திருவுள்ளத்தில் ஓடுகிறது போலும்? என்று வினவ, இவரும் ‘ஆம்; அப்படியே என்று கூறினார்.

தம் அரிய சீடர் கூரத்தாழ்வான் பரமபதித்தபோது, உடையவர் அவரது பிரிவைத் தாங்காமல், (பெரியாழ்வார் திருமொழிப்பாசுரத்தைப்பாடி) ‘ஒரு மகள் தன்னை உடையேன் என்றும், ‘உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்ந்தேன் என்றும், ‘செங்கண்மால் தான் கொண்டு போனான் என்றும் அருளிச் செய்தார் என்று பிரசித்தமிறே என்பது மணவாள மாமுனிகளின் உரைக் குறிப்பு. மேலும் இவர் திவ்யப் பிரபந்தப் பாசுரத் தொடர்களுக்கு நுட்பமான உரைகளை உரைத்துள்ளார்.

‘வான் திகழும் சோலை, என்று தொடங்கும் திருவாய்மொழித் தனியனில், ‘தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன், மொய்ம்யில் வளர்த்த இதத் தாய் இராமானுஜன் என்று கூறப்பட்டுள்ளது. திருவாய்மொழியை இவர் எவ்வாறு வளர்த்தார்? எனின், வியாக்கியானங்கள் தோன்ற நியமித்தார். ‘திருத்தலங்களில் இன்னின்ன சமயங்களில் இன்னின்ன பாசுரங்களை சேவிக்க வேண்டும் என்று கட்டளை வகுத்தார்.

ஸ்ரீ பாஷ்யம் வரைந்தபோது, ‘பாஷியக்காரர் இது கொண்டு சூத்திர வாக்கியங்கள் ஒருங்க விடுவர் என்னும் ஆசாரிய இருதய சூத்திரப்படி ஸ்ரீபாஷியத்தின் நிதியான பொருட்களை ஆழ்வாருடைய திருவாய்மொழியைக் கொண்டு நிர்ணயித்து ஒருங்கவிட்டார். இங்ஙனம் பலவகையிலும் தமிழ்மறையின் ஏற்றத்திற்கு எம்பெருமானார் பாடுபட்டதால், “மாறன் உரை செய் தமிழ்மறை வளர்த்தோன் வாழியே என்று வாழித் திருநாமப்பாடலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டார்.

மேலும் அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து அவர் மேல், ‘இராமாநுச நூற்றந்தாதி பாடிய திருவரங்கத்தமுதனார் தம் நூலில்,‘சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அறநெறியாவும் தெரிந்தவன் (44) என்றும், ‘உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணம்திகழ் கொண்டல் குலக்கொழுந்து இராமானுஜன் (60) என்றும் போற்றிப் பாடியுள்ளார்.

திருவாய்மொழிக்கு ஒரு தனியன் பாடிய அனந்தாழ்வான் என்பவர், ‘ஏய்ந்த பெருங் கீர்த்தி இராமாநுச முனி தன் வாய்ந்த மலர்ப்பாதம் வணங்குகின்றேன் ஆய்ந்த பெருஞ்சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும் பேராத உள்ளம் பெற என்று உடையவரின் திருவடிகளை வேண்டுகிறார்.

பெரிய திருமொழிக்கு ஒரு தனியன் பாடிய எம்பார் என்பவரும்,

‘எங்கள் கதியே இராமாநுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்குபுகழ்
மங்கையர் குகான் ஈந்த மறையாயிர மனைத்தும்
தங்கு மனம் நீ யெனக்குத் தா என்று உடையவரை முன்னிலைப்படுத்தி விண்ணப்பிக்கிறார். அரையர் சேவை நடைபெற ஊக்கமளித்தார். இவ்வகையில் உடையவரின் பணிகள் அமையாமல் இருந்திருப்பின் நாதமுனிகளின் காலத்திற்கு முன் இருந்த நிலையிலேயே திவ்யப் பிரபந்தங்கள் அமைந்திருக்கும். அந்நிலை நேரா வண்ணம் இவர் பலவகையில் திவ்யப் பிரபந்தங்களுக்கு ஏற்றமளித்துப் பாதுகாத்தார்.

நன்றி - தி இந்து