ஞாயிறு, 15 ஜூலை, 2018

அன்பே உருவான ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்! - எஸ். ஸ்ரீதுரை


ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத நெறியினை நாடெங்கும் பரப்பி, வடமொழி வேதம் மற்றும் திவ்யப் பிரபந்தம் இரண்டையும் கண்ணாகப் போற்றி வருகின்ற வைணவ மடங்களில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமும் ஒன்று

இம்மடத்தின் முதல் ஜீயர், ஸ்ரீ வேதாந்தராமானுஜமஹாதேசிகன் ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் மங்களாசாஸனம் செய்யச் சென்றபோது, வாரும் எம் ஆண்டவனே!' என்று ஸ்ரீ ரங்கநாதப் பெருமானே அசரீரியாக வரவேற்றதால் இந்த மடத்திற்கு ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் என்ற பெயர் உண்டாயிற்று

அன்னார் தாம் அவதரித்த ஊராகிய வழுத்தூர் என்பதையும் சேர்த்து ஸ்ரீ வழுத்தூர் ஆண்டவன் என்று அழைக்கப்பட்டார். தற்போது முக்தியடைந்த ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் எனப்படும் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் இப்பரம்பரையில் வந்த பதினோராவது ஜீயராவார். இம்மடத்தின் ஜீயர்கள் ஒவ்வொருவரும் தம்மை நாடி வரும் சீடர்களின் புஜங்களில் சங்கு சக்கர முத்திரை பதித்தல் உள்ளிட்ட ஐந்து கிரியைகள் கொண்ட பஞ்ச சமஸ்காரமும், பரஸமர்ப்பணம் என்னும் தீட்சையினையும் கொடுத்து சீடர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு வழிவகுப்பது வழக்கம்

இம்மடத்தின் ஒன்பதாவது ஜீயர் திருக்குடந்தை ஆண்டவன் எனப்படும் ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் மூலம் பரஸமர்ப்பணம் பெற்று, அவரிடம் சாஸ்திர உபதேசங்களும் பெற்றவர்தாம் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள்

திருக்குடந்தை ஆண்டவனின் அருளாணைக்கிணங்கி, தமது குடும்பத்தைத் துறந்து ஸ்ரீவைஷ்ணவத்திருப்பணிக்கே தம்மை அர்ப்பணிக்க முன்வந்த ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் சுவாமிகள், 1989 -ஆம் வருடம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் பதினோராவது ஜீயராகப் பொறுப்பெற்றார்

1935 -ஆம் வருடம் ஸ்ரீமுஷ்ணம் என்ற திருத்தலத்தில், ஸ்ரீநிவாஸாச்சாரியார் மற்றும் குமுதவல்லி அம்மாள் தம்பதியினருடைய திருமகனாக அவதரித்த இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வராஹன் என்பதாகும். முதலில் சென்னையிலும், பின்னர் ஸ்ரீபெரும்புதூரிலும் படித்து முடித்து சிரோமணி பட்டம் பெற்ற பின்பு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகிலுள்ள ஓர் ஊரில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவ் ஊரில் நீண்ட காலம் மழையில்லாமல் தண்ணீர்ப்பிரச்சினை ஏற்பட்ட போது, ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் குறித்து பஞ்சானன பஞ்சாமிருதம் என்ற வடமொழி ஸ்தோத்திரத்தை இயற்றி அதைத் தாமும் தினமும் பாடி, அவ்வூர் மக்களையும் பாடச் செய்தார். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் அருளால் விரைவில் மழைபொழிந்து அவ்வூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பிறகு தமிழகம் திரும்பிய ஸ்வாமிகள், தமிழ் வித்துவான் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று, இன்றைய காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் (துறவு ஏற்பதற்கு முன்பு வரை) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். இசை, ஜோதிடம், சிற்பம், தமிழ் இலக்கணம், ஆயுர்வேதம் என்று பல்வேறு துறைகளில் புலமை பெற்று விளங்கிய இவரது காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் புகழ் மேன்மேலும் பரவியது

இவர் சாத்திரங்கள் அனைத்தையும் பிழையறக் கற்ற மகாவித்துவானாக இருந்தபோதிலும் தம்மை நாடி வரும் அன்பர்களிடம் எவ்வித வித்தியாசமும் பார்க்காமல் அன்புகாட்டி, அவரவர் பிரச்சினைகளைக் காதாரக் கேட்டு, அவற்றிலிருந்து மீளும் வழியினை உபதேசித்து வந்தார்

தம்மை தரிசிக்க வரும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அக்கறையுடன் விசாரித்து ஆசி வழங்குபவர், அடுத்த முறை அவர்கள் வரும்போது மறக்காமல் பெயர் ஊரைச் சொல்லி விசாரித்து மகிழ்விப்பார். பெண்குழந்தைகளை மேல்படிப்புப் படிக்க வைக்க ஊக்கப்படுத்துவார். தம்மை தரிசிக்க வரும் குழந்தைகளுக்குப் பழங்களையும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பேனாவையும் வழங்கி ஆசீர்வதிப்பது இவர் வழக்கம்

பல இடங்களில் வேத திவ்வியப்பிரபந்த பாடசாலைகளைத் தொடங்கியதுடன், ஸ்ரீரங்கம் திருவானைக்காவலில் இவர் ஸ்ரீமத்தாண்டவன் கலை அறிவியல் கல்லூரியையும் தொடங்கி திருச்சி வட்டாரத்திலுள்ள ஏழை எளிய மக்கள் மேற்கல்வி பெற வழிவகை செய்தார்

ஆசிரமத்து கோசாலைகளில் உள்ள பசுக்களையும் கன்றுகளையும் பெயர்சொல்லி அழைத்துப் பிரியமுடன் அவற்றைக் கொஞ்சி மகிழ்வார். பசுக்களுக்குப் பிரசவ வலி கண்டால், அவை கன்றுபோடும் வரை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர் இவர்.

தாம் உடல் நலிவுறுவதற்கு முன்பு வரை, தினந்தோறும் தமது ஆசிரமத்தில் உள்ள பெருமாள் திருமேனிகளுக்கு மட்டுமின்றி, தமக்கு முந்தைய பத்து ஆண்டவன் ஸ்வாமிகளுடைய பாதுகைகளுக்கு சிரத்தையுடன் பூஜை செய்து வழிபடுவதைக் காண்பதே ஒரு சிலிர்ப்பான அனுபவம்

நன்றி - தினமணி 30 03 2018

திருவரங்கத்தமுதனார்! - இரா.இரகுநாதன்

காஞ்சியிலிருந்து ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து கோயிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். கோயில் நடைமுறையில் பல நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தினார். ராமானுஜரின் செய்கைகளால் தங்கள், நிர்வாக உரிமையில் அவர் குறுக்கிடுவதாகக் கருதினர். பலர் ராமானுஜருக்கு பல வகைகளில் இடையூறு செய்தனர்.

கோயிலின் நடைமுறைகளில் பலகாலமாய் பழகியிருந்த பெரிய கோயில் நம்பி தடையாக இருப்பதாக பலர் ராமானுஜரிடம் வாதிட்டனர். அவரை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால், ராமானுஜரின் எண்ணம் ஈடேறாது என்றனர். அவரும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வாகம் செய்து வந்த கோவில் பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்.

ராமானுஜர் ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் போது, மண்டபத்திலேயே சற்றே கண் சாய்த்தார் . அரைகுறை தூக்கத்தில், பெருமாள் ஸ்ரீவைணவராய் தோன்றி "கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி என்னுடன் இருக்கிறார். அவரை வெளியேற்ற வேண்டாம்' என்று சொல்லி மறைந்தார்.

கூரத்தாழ்வானிடம் இதுபற்றி தெரிவித்தார் ராமானுஜர். கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் மெள்ள நட்புக் கொண்டு, உடையவரின் பெருமை பண்புகளைச் சொல்லவும் கோயில் நம்பிக்கு உடையவர் மீது பிடிப்பு உண்டாகி, பக்தியாக மாறியது.

ஒருநாள், ராமானுஜர் அவரது இலக்கிய அறிவையும், வாக்கு வன்மையையும் பாராட்டி "அமுதன்' என்ற திருநாமத்தைச் சூட்டினார். அதனால் திருவரங்கத்தமுதனார் என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினர். ராமானுஜர் மீது கொண்ட பற்றால் கூரத்தாழ்வானின் அறிவுரைப்படி "ராமானுஜ நூற்றந்தாதி'யை புதியதாக அமுதனார் எழுதினார்.

பெருமாள் உலாவில் உடன் செல்லும் பழக்கம் உடையவருக்கு உண்டு. சித்திரை மாதம் 11 ஆம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி இன்று தாள வாத்தியங்கள் கூட வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவித்ததை, பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒருவராக ஆக்கிக் கொள்கிறார் எனப்படுகிறது. இன்றும் திருவரங்கம் கோயில் ரங்கநாதர் சந்நிதியில் இயற்பா சாற்றி முடித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப் படுகிறது.

திருவரங்கத்தமுதனார் ராமானுஜரைக் காட்டிலும் மூத்தவர் என்ற குறிப்புக் கிடைக்கிறது. மேலும் 108 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீ சுதர்சனர் சந்நிதியில் இந்த ராமானுஜதாசர், சிலா உருவில் இருக்கிறார்.

நன்றி - தினமணி 13 04 2018