திங்கள், 9 செப்டம்பர், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 26 - இந்திரா சவுந்தரராஜன்

சந்திரனை, "இனி நீ இருளன்' என்று கணபதி சாபமிடவும், சந்திரன் பதைத்துப் போனான். கணபதிக்கோ கோபம் அடங்கவே இல்லை.
"சந்திரா....உனக்கு இந்த அகங்காரம் ஆகவே ஆகாது. நான் சர்வலோக சஞ்சாரம் மேற்கொண்டு தேவர்கள், மூவர்கள் என்று எல்லோரையும் சந்தித்து சந்தோஷம் கொள்ளவே வந்தேன். ஆனால், நீயோ முறக்காது, பானை வயிறு என்று என்னை உருவத்தைக் கண்டு எள்ளி நகைத்தாய்! இதற்கு ஒரே காரணம் தான்.... தான் ஒரு பேரழகன் என்கிற உன் மமதை தான்... உன்னை யார் கண்டாலும் களங்கத்திற்கு ஆளாவார்கள். இதனால், உன்னைக் காண யாரும் விரும்ப மாட்டார்கள்'' என்று சபித்தார்.
கணபதியை ஒரு வேடிக்கையான பாலகனாக கருதி விட்ட அவசரம் சந்திரனுக்கு அப்போது தான் புரிந்தது.
சந்திரன் இப்போது தான் கர்வமாய் நடந்தான் என்றல்ல.... இதற்கும் முன்பே அவன் மாமனாரான தட்சனிடமே மொத்த ஒளியை இழந்து போகும்படி சாபம் பெற்றவன்!
தேவர்கள் சாபமிட விரும்ப மாட்டார்கள். கோபம் வந்தாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்படவே விரும்புவார்கள். ஏனென்றால் சாபமிட்டால் தவசக்தி அவ்வளவும் வீணாகும். கஷ்டப்பட்டு கிடைத்த தவசக்தியை சாபத்திற்காக இழக்க சம்மதிக்க மாட்டார்கள். இந்த நியதி மனிதர்களுக்கும் பொருந்தும். கோபத்தினால் சபிக்கும் போது ஒருவனது பூஜா சக்தி அவ்வளவும் எதிரிக்குச் சென்று விடுகிறது. எனவே தான், ஆறுவது சினம் என்றும் "சினம் கொள்ளாதே' என்றும் கூறினர்.
இதெல்லாம் சந்திரனுக்கும் தெரியும். அவனுக்கு நட்சத்திரங்கள் 27 பேரும் மனைவியர். அவர்களில் ரோகிணி மீது மட்டும் அன்பு கொண்டிருந்தான். மற்றவர்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தான். அவர்கள் அனைவரும் தந்தை தட்சனிடம் முறையிட்டு அழுதனர். தட்சன் சந்திரனுக்குப் புத்தி சொல்லியும் கேட்கவில்லை. அதனால், மருமகனை இருண்டு போகும்படி சபித்தான். சாபவிமோசனம் பெற சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தான் சந்திரன். சிவன் கொஞ்சம் கொஞ்சமாய் வளரும் பாக்கியத்தை அளித்தார். இருந்தாலும் கர்வத்தோடு ஒருதலைபட்சமாய் நடந்ததன் விளைவைச் சந்திரன் மறந்து போகாத விதத்தில் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலைபாட்டை ஏற்படுத்தினார். இப்படி நடந்தும் கூட சந்திரன் திருந்தவில்லை. கணபதியிடம் தன் அகங்காரத்தைக் காட்டி மீண்டும் சாபம் பெற்று விட்டான்
சந்திரன் சாபம் பெற்ற விஷயம் எங்கும் பரவியது. அதனால், யாரும் சந்திரனைப் பார்க்க விரும்பாமல் புறக்கணித்தனர். இதனால், சந்திரனும் கடலுக்கடியில் ஒளிந்து கொண்டு மறைந்து வாழ்ந்தான். சந்திரன் 
இல்லாததால் மூலிகைகள் வளர முடியாமல் பட்டுப் போகத் தொடங்கின. மருத்துவ உலகமே தடுமாற ஆரம்பித்தது. இதனால் எல்லோரும் சந்திரனைத் தேடிச் சென்று, கணபதியிடம் மன்னிப்பு கோரும்படி வேண்டினர். சந்திரனும் அவ்வாறே செய்ய கணபதி சாபத்தை மாற்றித் தர முன் வந்தார்.
சந்திரனை எப்போது யார் பார்த்தாலும் அவர்களுக்கு அபவாதம் நேரும் என்பதை மாதத்தில் ஒருநாள் மட்டும் வளர்பிறை திதியின் நான்காம் நாளான சுக்ல சதுர்த்தியன்று பார்ப்போருக்கு அபவாதம் நேரும் என மாற்றினார் கணபதி. வேறு வழியின்றி சந்திரனும் அதை ஏற்றுக் கொண்டான்.
- இந்த சம்பவத்தைக் கோர்வையாக சொல்லி முடித்த நாரதரை பாமாவும், ருக்மிணியும் ஒரு சேரப் பார்த்தனர்.
""நாரதரே!இப்படி ஒரு சாபம் இருப்பது மானிடர்களுக்கு எப்படி தெரியும்? குறிப்பாக கிருஷ்ணருக்குத் தெரியுமோ... தெரியாதோ...? இப்படி ஏதும் அறியாதவர் நான்காம் பிறையைப் பார்க்க நேர்ந்தால் அதற்குப் பரிகாரம் இல்லையா? பால கணபதி இப்படியா சபிப்பார்....?'' என்று கேட்டனர்
நாரதரும் பரிகாரத்தை சொல்லத் தொடங்கினார். கண்ணனோ அவர்களை விட்டு நீங்கியிருந்தான்.
""தேவியர்களே! எந்த சாபத்துக்கும் பரிகாரம் உண்டு. இதற்கும் அப்படித் தான்... ஒருநாள் மட்டுமே சந்திரனைப் பார்க்கக் கூடாது என்று கணபதி சந்திரனை அதாவது அந்த நான்காம் நாள் சந்திரனைத் தூக்கி தன் தலையில் வைத்துக் கொண்டு பாலச்சந்திரன் என்னும் பெயருக்கும் உரியவராகிப் போனார். இப்படி சுக்லபட்ச சதுர்த்தியில் சந்திரனைப் பார்த்தவர்கள் அதற்குப் பரிகாரமாக கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை சதுர்த்தியில் விரதம் இருந்து கணபதியைப் பூஜித்தால் அந்த அபவாதம் நீங்கி விடும் என்பது தான் பரிகாரம். கூடவே கணபதியை துதிப்பவர்கள் சந்திரனையும் பூஜிக்க வேண்டும். இதனால், சந்திரன் மகிழ்வதோடு தான் பூஜை பெற காரணமே ஒரு தவறு தான்- எனவே, தவறுக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் என்கிற முடிவுக்கு வருவான் அல்லவா?'' - நாரதர் விஷயத்தை சொல்லி அதை ஒரு கேள்வியோடு முடித்தார்.
பாமாவுக்கும், ருக்மிணிக்கும் நான்காம் பிறைக்கு பின்னால் உள்ள சந்திரன் சாபம் பெற்ற விஷயம் முற்றாகத் தெரிந்தது.
"" கணபதிக்கும், சந்திரனுக்கும் பூஜை செய்தால் தான் எங்கள் பதியின் அபவாதம் நீங்குமா?'' என்று அவர்கள் இருவரும் நாரதரைக் கேட்டனர்
""ஆமாம்... கிருஷ்ண பிரபு வனம் சென்ற சமயம் பாத்ரபத சுக்ல சதுர்த்தி... சந்திரன் சாபம் பெற்ற அதே தினம்! எனவே தான் இத்தனை அபவாதம். சமந்தக மணியும் எங்கிருக்கிறது என்பதே தெரியாத நிலை. நீங்கள் கணபதியை துதித்திட நிச்சயம் விமோசனம் கிடைக்கும்'' என்றார் நாரதர்.
""தேவியர்களே... சந்திரனை கிருஷ்ண பிரபு தன் முன் அவதாரமான ராமாவதாரத்தில் கவுரவப்படுத்தி ராமச்சந்திரன் என்று பெயர் பெற்றுத் திகழ்ந்தார். அப்படிப்பட்டவர் இப்போது சந்திரனை உத்தேசித்து நாடகம் நடத்துகிறார் என்றும் கூறலாம்
மனோகாரகரான சந்திரனை எப்படி துதிக்க வேண்டும் என்பதற்கு கிருஷ்ண பிரபுவே காரணமாகி விட்டார். இன்னமும் கூட சூட்சுமமாக அநேக விஷயங்கள் இதில் உள்ளது. பிரபு அறியாதது என்று எதுவுமே இல்லை. எனவே, இந்தச் சிக்கலின் முடிச்சை அவிழ்க்க அவராலேயே முடியும். அவரையும் அழைத்து விக்னபூஜையைத் தொடங்குங்கள். அப்போது தெரியும் கிருஷ்ணப் பிரபுவின் திருவுள்ளம்'' - என்றார் நாரதர்.

பாமா, ருக்மிணி இருவரும் அதன் பொருட்டு கண்ணனை காணப் புறப்பட்டனர்.
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக