செவ்வாய், 10 செப்டம்பர், 2024

குரு பக்தி! - சைதை முரளி

கண்பார்வை பறிபோன ஒருவர், திரும்பவும் தனக்குக் கண்பார்வை கிடைக்கிறதென்றால், எப்படியெல்லாம் ஆனந்தக் கூத்தாடுவார்? அதுவும் முன்பு உலகத்தைப் பார்த்த கண்களின் பார்வை நடுவில் பறிபோய் விடுகிறதெனில், 'எப்படியெல்லாம் உலகத்தைப் பார்த்தோம், ரசித்தோம். இப்போது பார்க்க முடியாமல் போய்விட்டதே' என எவ்வளவு வேதனைப் படுவார்? அப்படிப்பட்ட பார்வைதான், திரும்பவும் பகவத் கிருபையால் ஒருவருக்குக் கிடைக்கப்போகிறது!

நாமாக இருந்தால் எவ்வளவு ஆனந்தப்படுவோம்? ஆனால், இவரோ அப்படி நினைக்க வில்லை. 'இந்தப் பார்வை தனக்கு எதற்கு? நம் உடலிலுள்ள அனைத்து இந்திரியங்களையும் அடக்கினால்தான், இறை தரிசனம் கிட்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அரச தண்டனையால் பறிபோன தன் கண்பார்வை, போனபடியே இருக்கட்டுமே. இந்த உலகில் கண்டதையும் பார்த்துக் கெட்டுப்போகாமல், இந்த ஒரு இந்திரியமாவது தன்னைக் காப்பாற்றி, பேருதவி புரிகிறது. எதற்குத் திரும்பவும் பார்வை' என்றே நினைத்தார் இந்த ஸ்ரீராமானுஜதாசன்.


உடையவர் என்று அறியப்படும் ஸ்ரீராமானுஜரின் அபிமான சீடராக விளங்கிய இவர் கூரத்தாழ்வார். தம் குருவிடம் இவர் வைத்திருந்த பக்தி என்பது வெகு அசாத்தியமான ஒன்று.


தன் குருவுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமாக இருந்த கூரத்தாழ்வாரின் உயிரை, பறிக்காமல், கண் பார்வையை மட்டும் பறித்தான் ஒரு சோழ மன்னன். ஸ்ரீராமானுஜரோ தீவிர வைணவர். 'விஷ்ணுவே பரம்பொருள்' என்கிற விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை பிரசாரம் செய்துகொண்டிருந்தார் ராமானுஜர். தீவிர, சிவ பக்தனான மன்னனிடம், "சிவ வழிபாட்டை நிந்திக்கிறார் ராமானுஜர்” என்று சொல்லித் தூண்டினர் சிலர். மன்னன், சேவகன் ஒருவனை அனுப்பி ராமானுஜரை அழைத்து வரும்படி பணித்தான். அப்போது, ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். ராஜசேவகனைப் பார்த்த கூரத்தாழ்வாருக்கு பெருத்த கவலை. மன்னன், தம் குருவை ஏதாவது செய்துவிடுவானோ என்று கவலைப்பட்டார்.


அந்தப் பரிதவிப்பிலும் அவருக்குள் ஒரு யோசனை. உடனே குருவிடம் சென்று, "உங்கள் காஷாயத்தை நான் அணிந்து அரச சபைக்குச் செல்கிறேன். வருகிற ஆபத்து எதுவானாலும் எனக்கே வரட்டும். உங்களுக்காக சேவை செய்யும் இந்த பாக்கியத்தை எனக்கு மறுக்காமல் அருளவேண்டும்" என்று வேண்டி அவரைச் சம்மதிக்க வைத்தார். ராமானுஜரும் காஷாய உடைகளைத் துறந்து வெள்ளை வேஷ்டி அணிந்து கர்நாடகத்திலுள்ள மேல் கோட்டை எனும் திருநாராயணபுரத்துக்குச் சென்றுவிட்டார். கூரத்தாழ்வார் காவி உடை தரித்து மன்னனின் அரண்மனைக்குச் சென்றார்.


அங்கே, நடைபெற்ற சபைக்கூட்டத்தில், சிவ வழிபாட்டை இவர் ஒப்புக்கொள்ள மறுத்த போதுதான் மன்னன் இவர் கண்களைப் பிடுங்கும்படியாக உத்தரவிட்டான். குருவைக் காப்பாற்றும் ஒரு சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்து, அந்தத் தண்டனையை மிகுந்த விருப்பமுடன் ஏற்றுக்கொண்டு குருடரானார். தம் பொருட்டு சீடன் கண்ணை இழந்துவிட்டதை அறிந்து மிகுந்த வேதனைப் பட்டார் ராமானுஜர்.


எனவே, ஸ்ரீரங்கத்துக்கு திரும்பிய பிறகு கூரத்தாழ்வாரிடம், "வரதராஜரிடம் வேண்டி நீ உன் கண் பார்வையைப் பெற்றால்தான் என் மனம் ஆறுதலடையும்” என்றார். கூரத்தாழ்வாரும் தம் குருவின் மன வேதனை போவதற்காக, காஞ்சி வரதராஜரிடம் வேண்டிக்கொண்டார். எப்படித் தெரியுமா?


''திரும்பவும் உலகியல் விஷயங்களைப் பார்க்கும்படியான பார்வையை எனக்குத் தந்து விடாதே! என் ஆசார்யனுடைய திவ்யரூபத்தைக் காண்பதற்கும், உன் திவ்யமங்கள விக்ரகத்தைத் தரிசிப்பதற்கும் மட்டுமே என் கண்ணுக்குச் சக்தியைக் கொடு" என்று வேண்டி நிற்க, வரதராஜப் பெருமாளும் அப்படியே வரம் தந்தார்.


இந்த கூரத்தாழ்வாரை, குருவுக்கு முன்னதாகவே தம்மிடம் அழைத்து திருவடி நிழலில் இருத்திக்கொண்டான் அரங்கன்.


“உன்னைவிட்டு நான் எப்படி இருப்பேன்?" என ராமானுஜர் மனம் கசிந்தபோது, "நான் பரமபதத்தில் தங்களை வரவேற்பதற்காக முதலில் போய் காத்திருக்கிறேன்" என்றார் கூரத்தாழ்வார். எப்பேர்ப்பட்ட குருபக்தி! நல்ல குருவைத் தேடும் நாம், நல்ல சீடராக இருக்கிறோமா? இவரை நினைக்கும்போது, நமக்குள் எழும் கேள்வி இதுதான்!


நன்றி - தீபம் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக