புதன், 11 செப்டம்பர், 2024

ஸ்ரீவரதராஜப் பெருமாள் யதிராஜருக்கு அருளிய உபதேசம் - சுவாமி புத்திதானந்தர்

“பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை 

கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்” 


என்று நம்மாழ்வார் திருவாய்மொழியிலே (5.2.1) சாதித்திருக்கிறார். இதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானாருடைய (ஸ்ரீராமானுஜர்) திருஅவதாரத்தையே நம்மாழ்வார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறியுள்ளதாகக் கொண்டாடுகிறார்கள். அங்ஙனம் ஸ்ரீ எம்பெருமானார் திருஅவதாரம் செய்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் அடியார்களாகிய நமக்குத் தந்த கொடையினைச் சிந்திப்போம். 


சிந்தனைக்கு எட்டாத ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்த போதிலும் ஒரு ஜீவனுக்கு எப்போதும் இருக்கக்கூடிய யம பயத்தைப் போக்கியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஞானமே வடிவாகிய இந்த ஜீவன் தன்னுடைய கர்ம வினையினால் நாள்தோறும் துயருறும் பொழுது எம்பெருமானுடைய கருணை ஒன்றையே உபாயமாகக் கொண்டு இந்த சம்சாரமாகிய துன்பக் கடலைக் கடக்க முயற்சிக்கிறது.


அப்போது இந்த ஜீவனுக்கு எழக்கூடிய சந்தேகங்களினால் கைக்கொண்ட ஒரே உபாயத்தை நழுவ விடாது இருக்க ‘ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்கள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்' என்று மணவாள மாமுனிகள் சாதித்தாப்போலே, உலகம் உய்ய அந்த சந்தேகங்களுக்குரிய விடையை காஞ்சி பேரருளாளனிடமே கேட்டுப் பெற்றார் யதிராஜராகிய ஸ்ரீராமானுஜர். அதனைக் காண்போம்.


யமுனாச்சாரியர் என்ற திருநாமம் பெற்ற ஸ்ரீ ஆளவந்தாரை ஆச்சாரியராக ஏற்று அவரோடு காலம் கழிக்க எண்ணிய ஸ்ரீ ராமானுஜர் அவரைத் தரிசிக்க ஸ்ரீ ரங்கத்துக்குச் சென்றார். ஆனால் அவர் வருவதற்கு முன்பே ஸ்ரீஆளவந்தார் திருநாட்டுக்கு (பரமபதம்) எழுந்தருளி விட்டார். அதனால் மிகவும் கலக்கமடைந்தவராய் மேற்கொண்டு செய்வதறியாது பதறினார்.


“யாரை ஆச்சாரியராகக் கொள்வது? ஜீவர்களுடைய அந்திமநிலை என்ன? கீதையில் கண்ணன் கூறியதைப் போல் அந்திமக்காலத்தில் இறைநினைவு இல்லாமல் போனால், சரணடைந்த அந்த ஜீவனின் கதி என்ன?” என்ற பல கேள்விகள் ஸ்ரீராமானுஜரை வாட்டி வதைத்தன. 


இயல்பாக காஞ்சி க்ஷேத்திரத்தில் சேவை சாதிக்கும் பேரருளாளனாகிய ஸ்ரீவரதனிடம் உரையாடும் பேற்றைப் பெற்ற மகாத்மாவான திருக்கச்சி நம்பிகளிடம் தஞ்சம் அடைந்தார் ஸ்ரீராமானுஜர்.


“என் மனதிலுள்ள ஐயங்களை விலக்கும் விடைகளை பேரருளாளனான அவனிடம் கேட்டு என் துன்பம் தீர்த்து வையுங்கள்” என்று கோரினார் எம்பெருமானார். திருக்கச்சி நம்பிகள், "அதுபற்றி பரமனிடம் விண்ணப்பிக்கிறேன்" என்று கூறி மறுநாள் காலையில் பேரருளாளன் கூறிய ஆறு வாக்கியங்களைக் கூறினார். அவை வருமாறு:


1. அஹம் ஏவ பரம் தத்வம் 

2. தர்சனம் பேத ஏவ ச

3. உபாயேஷு ப்ரபத்தி ஸ்யாத் 

4. அந்திம ஸ்மிருதி வர்ஜனம் 

5. தேஹாவசானே முக்திஸ்யாத்

6. பூர்ணாச்சார்ய ஸமாஸ்ரயாத்


பேரருளாளன் அருளிய இந்த ஆறு வாக்கியங்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படி உள்ள விளக்கம் வருமாறு:


1. நாமே பரம்பொருள்.

2. இறைவன் ஜீவர்களிடத்திருந்து வேறுபட்டவன்.

3. (இறைவனை அடைய) உபாயமும் ப்ரபத்தியே (சரணாகதி).

4. (ஆச்சாரியர்களிடம் சரண்புகுந்த) ப்ரபன்னர்களின் இறுதிக் காலத்தில் நாமே அவர்களைப் பற்றி நினைப்பதால் அந்திமஸ்ம்ருதி (இறுதிக் காலத்தில் இறைவனை நினைத்தல்) அவசியமன்று.

5. ப்ரபன்னர்களுக்கு சரீரம் முடியும்போது முக்தி நிச்சயம்.

6. பெரிய நம்பியை ஆசார்யராக ஏற்றுக்கொள்.


இதைக்கேட்டதும் ஸ்ரீராமானுஜர் பைத்தியம் பிடித்தவர் போலக் கூத்தாடலானார். பேரருளாளனின் கோவிலை நோக்கித் தரையில் வீழ்ந்து வணங்கினார். நெடுநாட்களாக அவர் மனதைக் குழப்பி வந்த ஆறு ஐயங்களும் இன்று தீர்ந்துவிட்டன. எவ்வளவு தடுத்தும் கேளாமல் அவர் திருக்கச்சி நம்பியின் திருவடிகளில் பணிந்தார். பின்னர், நேராகப் பெரியநம்பியைச் சந்திப்பதற்காக திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.


பேரருளாளன் உலகத்திற்கே ரக்ஷகன். அன்னையாய், தந்தையாய், அத்தனாய், ஸ்வாமியாய் உலகிலுள்ள எல்லா, ஜீவன்களும் உய்யும் பொருட்டு, கண்ணனாய் அவதரித்து உலகிற்கு கீதையாகிய அமிர்தத்தைத் தந்தவன். அவன் அருளிய கீதைக்கு ஆச்சார்யர்கள் தத்தம் சித்தாந்தப்படி உரை இயற்றினார்கள்.


அப்படியானால் இந்த ஆறு வாக்கியங்களும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அத்வைதம் முதலான சித்தாந்தங்களுக்கு ஏற்புடையவையாகவே இருக்க வேண்டும். ஏனெனில் அவன் கருணையே வடிவானவன். ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் ஸ்வாமி அல்லன் அவன். எனவே கீதையைப் போலவே இந்த ஆறு வாக்கியங்களுக்கும் அத்வைத சாதகர்களுக்கு ஏற்ற பொருள் இருக்க வேண்டும். 'தஸ்மாத் சாஸ்திரம் பிரமாணம் தே' என்ற கீதை வாக்கியப்படி, ப்ரமாணத்தோடு அத்வைத ரீதியிலான அர்த்தத்தைக் காண்போம்.


1.அஹம் ஏவ பரம் தத்வம் - 'அஹம் ப்ரம்ஹாஸ்மி நான் பிரம்மமாக இருக்கிறேன்' என்பது மஹா வாக்கியங்களுள் ஒன்று. இதையே 'ஸோஹம் - நானே அவன்' என்று அத்வைத சந்நியாஸிகள் பாவனை செய்கிறார்கள். ஆக அந்த 'அஹம் - நானே எல்லாமாக இருக்கிறேன்.'


ப்ரமாணம்: ஸ த்வமே வ த்வமேவ தத் 

அதுவே நீ, நீயே அது - கைவல்ய உபநிஷத் 1-16


2. தர்சனம் பேத ஏவ ச - 'பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்' என்றபடி, இருக்கும் ஒரே பரம்பொருளை நாம் வேறு வேறாகக் காண்கிறோம். நம் பார்வையில் தான் ஜீவாத்மா - பரமாத்மா என்ற பேதம் உள்ளது. இருக்கும் பொருளில் அல்ல.


ப்ரமாணம்: இந்திரோ மாயாபி: பூருரூப ஈயதே - ‘இறைவன் தமது மாயா சக்தியின் காரணமாக பலவாகக் காணப்படுகிறார்.' (பிருஹதாரண்ய உபநிஷத் -2.5.19)


3.உபாயேஷு ப்ரபத்தி: ஸ்யாத் - நாம் இந்த உலகில் கட்டுண்டு கிடப்பதற்கு இந்திரியங்கள் காரணம். அவற்றைப் படிப்படியாக வெளியில் செல்லாமல் ஒடுக்கும் பொழுது அல்லது சரணடையச் செய்யும் பொழுது நாம் முக்தனாகிறோம்.


ப்ரமாணம்: 'புலன்களைவிட உலகப் பொருட்கள் வலிமை வாய்ந்தவை. பொருட்களைவிட மனம் வலிமை வாய்ந்தது. மனதைவிட புத்தி வலிமை வாய்ந்தது. மகிமை வாய்ந்ததான ஆன்மா புத்தியைவிட வலிமை வாய்ந்தது.


'மகிமை வாய்ந்ததான ஆன்மாவைவிட அவ்யக்தம் வலிமை வாய்ந்தது. அவ்யக்தத்தைவிட இறைவன் வலிமை வாய்ந்தவர். இறைவனைவிட வலிமை வாய்ந்தது எதுவும் இல்லை. அவரே அறுதிப் பொருள். அவரே அறுதிப் புகலிடம்.


'இந்த ஆன்மா எல்லா உயிர்களிலும் மறைவாக உள்ளது; வெளிப்பட்டுத் தெரிவதில்லை. ஆனால் ஒருமைப்படுத்தப்பட்ட, நுண்ணிய புத்தியால் மகான்கள் இந்த ஆன்மாவைக் காண்கின்றனர்.


'அக நாட்டம் உடையவன் பேச்சை மனதில் ஒடுக்க வேண்டும். மனதை விழிப்புற்ற புத்தியில் ஒடுக்க வேண்டும். புத்தியை மகிமை வாய்ந்த ஆன்மாவில் ஒடுக்க வேண்டும். ஆன்மாவை அமைதியின் இருப்பிடமான இறைவனில் ஒடுக்க வேண்டும். - கடஉபநிஷத் 1.3.10-13.


எனவே புலன்களைச் சரணடையச் செய்வதே வழி. 


பொருட்களில் விருப்பும் வெறுப்பும் கொள்வது இயல்பு. அவற்றிற்கு வசப்படக் கூடாது. அவை மனிதனின் எதிரிகள். (கீதை.3-34)


4. அந்திம ஸ்மிருதி வர்ஜனம் - பூரண ஞானம் அடைந்த பிறகு, பிராரப்த வசத்தினால் அந்த ஜீவன் எந்த விதமான செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவனுக்கு அதனால் மறு பிறப்பு இல்லை. பிரம்மத்தைத் தவிர இன்னொன்று இல்லை என்ற ஞானத்தினால், நினைப்பது எல்லாம் பிரம்மமே. அதனால் எந்த ஜீவனும் உயிர் விடும்போது இறைவனைத் தனியாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.


மனோ விருத்திக்கு ஆசை காரணம். ஆசைக்குத் தன்னைத் தவிர இன்னொரு பொருள் இருக்கிறது என்ற அஞ்ஞானம் காரணம். நானே எல்லாமாக இருக்கிறேன் என்பதே ஞானம்.


ப்ரமாணம்: பெரிய பாவம் செய்தவனாக இருந்தாலும் எல்லாப் பாவங்களையும் ஞானமாகிய (நானே ப்ரம்மம் என்ற) தெப்பத்தால் கடப்பாய். (கீதை: 4-36)


5. தேஹாவஸானே முக்தி: ஸ்யாத் - பூரண ஞானத்தை அடைந்த பிறகு இந்த ஜீவன் பிராரப்தம் உள்ள மட்டும் சரீர யாத்திரையை நடத்திக் கொண்டிருக்கிறது. அவனுடைய ஜீவ தசையில் ஜீவன் முக்தனாகவும் சரீரம் சரியும் போது விதேக முக்தனாகவும் ஆகிறான். எனவே, ஞானத்திற்குப் பின் உள்ள ஜீவ தசையில் நடைபெறும் அவனது இந்திரிய வியவகாரங்களைப் பற்றிக் கவலை இல்லை. ஏனெனில் அவனுடைய செயல்கள் வறுக்கப்பட்ட விதைபோல் ஸம்ஸ்காரங்களாக முளைப்பதில்லை.


ப்ரமாணம்: யாருடைய செயல்கள் ஆசையும் சங்கல்பமும் அற்றதாகவும் ஞானத்தீயில் எரிக்கப்பட்டதாகவும் இருக்குமோ அவனையே விவேகி என்கிறார்கள் அறிஞர்கள். (கீதை 4-19)


6. பூர்ணாச்சார்ய ஸமாஸ்ரயாத் - முக்தியை விரும்பும் ஒரு மனிதன் உய்ய வழி என்னவெனில், பூரணமான ஆச்சாரியன் ஒருவரைச் சரணடைய வேண்டும். 


ப்ரமாணம்: 

ஸ வேதைதத் பரமம் ப்ரஹ்ம தாம 

யத்ர விச்வம் நிஹிதம் பாதி சுப்ரம்| 

உபாஸதே புருஷம் யே ஹ்யகாமா 

ஸ்தே சுக்ரதேத் அதிவர்த்தந்தி தீரா:|| 


யாரிடம் பிரபஞ்சம் நிலைபெற்றுள்ளதோ, மேலான இருப்பிடமும், புனித ஒளியுடன் பிரகாசிப்பவருமான அந்த இறைவனை ஆன்ம ஞானிகள் அறிகின்றனர். ஆசையற்ற, விழிப்புணர்வு பெற்ற அவர்கள் அவரை வழிபட்டு, பிறவிகளற்ற நிலையை அடைகிறார்கள். 

- முண்டக உபநிஷதம் 3.2.1.


இறைவனுடைய வார்த்தைகள் எந்த யுகமாக இருந்தாலும், உலகம் உய்ய வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் எந்த ஆச்சாரியரைப் பின்பற்றினாலும் அவை முடிவில் இறைவனின் திருவடிகளையே நம்மை அடையச் செய்கின்றன.


அதனால் மேற்கண்ட இந்த ஆறுதலான ஆறு வாக்கியங்களிலும் மாறாத நம்பிக்கை கொண்டு, ஐயம் திரிபு அற அவன் நாமத்தை ஓதி இந்த ஸம்ஸாரமாகிய பந்தத்தில் இருந்து விடுபட்டு முக்தி நிலை அடைய பேரருளாளன் அருள்வாராக!


நன்றி - ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக