திங்கள், 2 செப்டம்பர், 2024

கண்ணன், தீராத விளையாட்டுப்பிள்ளை - அவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகமில்லை - தேதியூர் பாலு

கண்ணனின் பால்ய லீலைகள் பற்றிப் பாடாத - அதில் மனதைப் பறிகொடுத்துப் பரவசப்படாத பாவலர்களே இல்லை! ஸ்ரீமத்பாகவதம் தொடங்கி ஊத்துக்காடு கவி கீர்த்தனைகள் வரை - ஆழ்வார்கள் முதல் மகாகவி பாரதி வரை - ஏன் கண்ணதாசன் வரை கண்ணனின் பால்ய லீலைகளை சுவை சொட்டச் சொட்ட பாடிப் பரவசப் பட்டிருக்கின்றனர்.

அவற்றில் பெரியாழ்வார் பாசுரம் ஒன்றையும் மகாகவி பாரதி பாடல் ஒன்றையும் ஒரு "ஸாம்பிள்' பார்த்து பேரானந்தம் பெறலாமே!

பெரியாழ்வார், ஓர் ஆய்ச்சியின் குற்றப் பத்திரிகையைக் கவிதையாக்கி ஆன்ம அனுபூதி பெறுவது சுவைக்கத்தக்க ஓர் உன்னதம்!

யசோதையிடம் ஓர் ஆய்ச்சி வந்து, 

"அம்மா யசோதை... உன் கண்ணன் பிறந்த ஊரில் பசுக்களிடமிருந்து பாலைக் கறப்பதே நடக்கிற காரியமாக இல்லையம்மா...'' என்கிறாள்.

"என்ன சொல்கிறீர்கள்? பசுவிடமிருந்து பால் கறப்பது இல்லையா... ஏன்?'' என்று மனத்துக்குள் நகைத்தபடி கேட்கிறாள் யசோதை.

"கன்றுக்குட்டிபோல வந்து பசுவின் மடியில் வாயை வைத்து உறிஞ்சிக் குடித்து விடுகிறானம்மா அந்த மாயக் கண்ணன்!''

"அப்படியா... அதற்கு எச்சரிக்கையாக என்ன செய்தீர்கள்?''

"அதற்காக மிகக் கவனமாக இருந்து பாலைக் கறந்து அடுப்பில் வைத்தேன்!''

"சரி... அப்புறம் என்ன நடந்தது...?''

"அடுப்புக்குத் தீ இல்லை என்று அப்போதுதான் தெரிந்தது!''

"ம்...ம்... மேலே சொல்லடி பெண்ணே...''

"மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்றேன்.''

"சரி... மேலே சொல்...''

"நான் சும்மாகூட செல்லவில்லை யசோதை...''

"அப்படியானால்...''

"என் மகளை அடுப்பில் வைத்த பாலுக்குக் காவலாக வைத்து எச்சரித்து விட்டுத்தான் போனேன்.''

"ம்... சரியான காரியம்தான். அப்புறம்?''

"காவலாக இருந்த என் மகள் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள்.''

"அப்படியா... அது எதற்காம்?''

"திருட்டுத்தனமாகப் பால் குடிக்க வரும் கண்ணன் என் மகளின் வாயைப் பொத்திவிட்டால்கூட, அவள் கைவளைகள் ஓசையெழுப்பி எனக்குத் தெரியப்படுத்தி விடாதா?''

"நல்ல யோசனைதான். பிறகு?''

"ஆனால் நடந்ததே வேறு.''

"எப்படி...?''

"கண்ணன் வந்து அடுப்பில் இருந்த பாலைக் குடிக்கிறவரை அவன் அழகையும் குறும்புத்தனத்தையும் ரசித்த அவள், அவன் பால் குடித்து முடித்ததும், "ஆகா... கிருஷ்ணன் எல்லா பாலையும் குடித்தாயிற்றா!' என்று கை தட்டுகிறாள்!''

"நெருப்புக் கடன் வாங்க அயல் அகம் போன நீ ஏன் விரைவில் வரவில்லை?''

"என்னம்மா இப்படிக் கேட்கிறீர்கள்? நம்மைப் போன்ற பெண்களின் இயல்பு தெரியாதா உங்களுக்கு... கொஞ்சநேரம் அடுத்த வீட்டுப் பெண்ணுடன் அரட்டை அடித்துக்கொண்டு நின்று விட்டேன். அப்போதுதான் சாளக்கிராமம் உடைய நம்பி...''

"யாரைச் சொல்கிறாய் பெண்ணே... என் கண்ணனையா?''

"ஆமாம்... பால் முழுதும் குடித்துவிட்டு ஒன்றுமே அறியாதவன்போல நிற்கிறான்.''

இப்படி கோபியர் சொன்ன குற்றச்சாட்டைக் கேட்ட யசோதை கருப்பஞ்சாறு குடித்தவள்போல மனம் இனிக்க ஆத்மபரவசத்துடன் நிற்கிறாள்.

"என்ன யசோதையம்மா, நான் சொன்னதை யெல்லாம் ரசிக்கிறீர்களா... உன் மகனைக் கூப்பிட்டுக் கண்டிக்கக் கூடாதா...'' என்கிறாள்.

பெரியாழ்வார் பாடிய ரசனை நிரம்பிய அந்த அற்புதமான பாசுரத்தைக் காண்போமா...

"பாலைக் கறந்து அடுப்பேற வைத்து

பலவளையாள் என் மகள் இருப்ப

மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் 

சென்றிறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்

சாலிக்கிராமம் உடைய நம்பி

சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்

ஆலைக்கரும்பின் மொழி யனைய

யசோதை நங்காய் உன் மகனைக் கூவாய்!'

எவ்வளவு அற்புதமான பாசுரம் இது!

மகாகவி பாரதியோ தன் இஷ்ட தெய்வமான கண்ணனை பல பரிமாணங்களில் பாடிப் பரவசப்படுகிறார்.

கண்ணனைத் தோழனாக - தாயாக, தந்தையாக - சேவகனாக - அரசனாக - சீடனாக - சற்குருவாக - குழந்தையாக விளையாட்டுப் பிள்ளையாக - ஆண்டானாக - தன் குலதெய்வமாகப் பாடுகிறார். இவ்வளவு பரிமாணங்களில் கண்ணனைப் பாடிய கவி வேறு எவருமே இல்லையெனலாம். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு, சுவை!

"தீராத விளையாட்டுப் பிள்ளை- கண்ணன்

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை'

என்று தொடங்கும் பாரதி எளிய - இனிய வரிகளில் அவனது விளையாட்டுகளை சுவைபடக் கூறுகிறார். அதற்குத் தனியாக விளக்கம் கூறத் தேவையில்லை.

"தின்னப்பழம் கொண்டு தருவான்.''

"அப்புறம்?''

"பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்.''

"அப்படியா... அதற்கு மேலே?''

"என்னப்பன் என்னையன் என்றால்...''

கண்ணனைக் கெஞ்சுகிறாள் பெண்.

"அதற்கு அவன் என்ன செய்வான்?''

"அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்.''

"அடடா... அப்படியா!''

"ஆமாம்... தீராத விளையாட்டுப் பிள்ளை.''

"அப்புறம்?''

தொடர்கிறாள் பெண்...

"தேனொத்த பண்டங்கள் கொண்டு...''

"என்ன செய்வான்...?''

"என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்!''

"ம்...''

"மானொத்த பெண்ணடி என்பான்.''

"அப்படிப் புகழ்வானா... அப்புறம்?''

"ஐயோ அதையேன் கேட்கிறீர்கள். அவன் புகழுரையைக் கேட்டு மனமகிழும் நேரத்தில் கிள்ளி விடுவான்.''

"அட போக்கிரிப் பயலே...''

"அது மட்டுமா... அழகுள்ள மலர் கொண்டு வந்தே...''

"மலரா?''

"ஆமாம்... என்னை அழ அழச் செய்து பின், கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன் என்பான்...''

"சூட்டி விடுவானா...?''

"ஊஹூம்...''

"அப்படியென்றால்...''

"என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்!''

"அட போக்கிரிப் பயலே! இன்னும் உண்டோ பெண்ணே?''

"ம்... பின்னலைப் பின்னின்று இழுப்பான். தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்.''

"சிரிப்பாய்த்தான் இருக்கு!''

"இன்னும் கேளுங்க... வண்ணப் புதுச்சேலை தனிலே...''

"என்ன பண்ணுவான்?''

"புழுதிவாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்!''

"அடப்பாவி! அப்புறம்?''

"புல்லாங்குழல் கொண்டு வருவான்!''

"ஆகா... வேணுகோபாலனாச்சே!''

"அமுது பொங்கித் ததும்பும் நற்கீதம் படிப்பான்!''

"இங்கேயும் குறும்புத்தனமா...?''

"கள்ளால் மயங்குவதுபோல - அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.''

"அப்போ என்ன செய்வான்?''

"அங்காந்திருக்கும் வாய்தனிலே...''

"திறந்த வாயிலேயா... என்ன?''

"கண்ணன் ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்.''

"அடப்பாவிப்புள்ளே!''

"எங்காகினும் பார்த்ததுண்டோ கண்ணன் எங்களைச் செய்கின்ற வேடிக்கையெல்லாம்?''

"ஆமாம்மா... எங்கினும் இதுபோல பார்த்ததில்லையம்மா.''

"இத்தோடு இல்லை.''

"ஓ... இன்னுமா?''

"விளையாட வாவென்றழைப்பான்.''

"நல்லது.''

"வீட்டில் வேலையென்றால் அதைக் கேளாது இழுப்பான்.''

"ம்... ம்...''

"இளையாரோடிக் குதிப்பான் - எம்மை இடையிலே பிரிந்து போய் வீட்டிலே சொல்வான்.''

"அது வேறயா...''

"அம்மைக்கு நல்லவன் கண்டீர்!''

"சரி...''

"மூளி அத்தைக்கும் நல்லவன்; தந்தைக்கும் அஃதே.

எம்மைத் துயர் செய்யும் பெரியோர்- வீட்டில் 

யாவர்க்கும் "நல்லவன்' போலே நடப்பான்

கோளுக்கு மிகவும் சமர்த்தன்- பொய்மைக் 

குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்

ஆளுக்கிசைந்தபடி பேசி- தெருவில்

அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்

தீராத விளையாட்டுப் பிள்ளை- கண்ணன் 

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை!''

எப்படி மகாகவி வர்ணித்த கண்ணனின் லீலைகள்!

-இப்படி கண்ணனின் பால்ய லீலைகள் என்ற அமுதக் குடத்தில் சிதறிய ஓரிரு துளிகள் மட்டும் இங்கு காட்டினேன்.

இன்னும் அவன் செய்த லீலைகள் எத்தனை எத்தனையோ…

நன்றி - ஓம் சரவணபவா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக