கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 15

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 15



துவாதசி அன்று, காலை எட்டரை - ஒன்பது மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட வேண்டும் என்பார்கள். இதைக் கேட்ட அன்பர் ஒருவர், 'அட... நான் தினமுமே எட்டரை- ஒன்பதுக்கெல்லாம் கரெக்டா சாப்பிடறவன்தான்! என்றார்.

அதாவது, முந்தைய நாளான ஏகாதசி அன்று பச்சைத் தண்ணீர் கூடப் பல்லில் படாமல் விரதம் மேற்கொண்ட அன்பர்கள், மறுநாள் துவாதசி அன்று சீக்கிரம் சாப்பிடவேண்டும் என்பதற்காகக் சொல்லப்பட்ட விஷயம் இது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

அன்பர்கள் பலர், 'ஏகாதசி அன்று விரதம். ஆனால், கோயிலுக்குச் சென்றபோது, அங்கே துளசி தீர்த்தமும் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த வெண்பொங்கலும் தந்தார்கள். விரதம் என்று சொல்லி, வாங்க மறுத்துவிட்டேன் என்பார்கள். இதற்கு அவசியமே இல்லை. ஏகாதசி விரதம் இருக்கிற அன்பர்கள், கோயிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்கிற தருணத்தில், அங்கே தருகிற தீர்த்தத்தை வேண்டாம் என்று சொல்வதும், பிரசாதத்தைப் புறக்கணிப்பதும் தவறு. 'விரத நேரத்தில் வயிற்றுக்கு இப்படி ஏதேனும் போட்டுக்கொண்டால் தேவலைஎன்று நாம் நினைப்பதில்லை. மாறாக, பகவானின் பிரசாதம் கிடைக்கிறபோது, அதை மறுப்பது சரியல்ல! ஆகவே, ஏகாதசி விரதம் இருந்தாலும், தெய்வப் பிரசாதத்தை உட்கொள்ளலாம். மற்றபடி கோயிலில் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை எனப் பிரசாதங்கள் கிடைக்கும் என்று காலையில் இருந்து மாலை வரைக்கும் கோயிலே கதியென்று கிடப்பதுதான் தவறு!

பகவானுக்கும் நமக்குமான உறவில், நாம் எப்போதும்போல இருப்பதே சிறப்பு. சதாசர்வ காலமும் அவனை நினைத்தபடி, அவனுடைய திவ்விய நாமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதே பெருமை. அவன் நமக்கு அருளுவதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வான்; எப்படி வேண்டுமானாலும் நெருங்கி வருவான். நாம் நாமாகவே இருந்தால், பகவான் நம்மைத் தேடியும் நெருங்கியும் வந்தருள்வான். ஏனெனில், உலகத்தில் உள்ள பொருட்கள் யாவற்றுக்கும் வாசஸ்தலமாக இருப்பவன், பகவான்.

'அர்ஜுனா, இந்த உலகத்தின் பொருட்கள் அனைத்தும் என்னுள் அடங்கியிருக்கின்றனஎன்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அதேபோல், ஒருகட்டத்தில் சிலிர்ப்பும் வியப்புமாக, 'கிருஷ்ணா, உலக உயிர்கள் அனைத்தையும் உன்னுள், உனது திருமேனியில் பார்க்கிறேன்எனப் பெருமிதத்துடன் சொல்கிறான் அர்ஜுனன்.

அது எப்படி அர்ஜுனனுக்குச் சாத்தியமாயிற்று?

அவனுக்கு எங்கே சாத்தியமானது? பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருவுளப்படி என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடந்தது. தன்னுடைய விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டியருளினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். ஸ்ரீநரசிம்ம மூர்த்தமாக வந்தபோதும் உக்கிரத்தைக் காட்டினாரே தவிர, விஸ்வரூபம் காட்டவில்லை. கிருஷ்ணாவதாரத்தில்தான் இந்த அளவுக்கு விஸ்வரூபம் காட்டி அருளினார் பகவான். எனவே, 'பூதாவாஸஹ எனும் திருநாமத்தைப் பெற்றார்.

'பூத என்றால் இருப்பு என்று அர்த்தம். 'வாஸஹஎன்றால், அந்த இருப்பு அனைத்துமே அதனுள் அடங்கியிருக்கிறது என்று பொருள். இந்தத் திருநாமத்துக்குப் பெருமை உண்டு. எனினும், தன் வயதையத்த குழந்தைகளுக்கு, அதாவது தன் நண்பர்களுக்கு பிரகலாதன் சொன்ன திருநாமம் என்ன தெரியுமா? 'நாராயணாய!

பகவானுக்கு ஆயிரம் நாமங்கள் உள்ளன. அவற்றுள் மிக உன்னதமானதும் உயிர்ப்பானதுமான திருநாமம் இதுதான். பிரகலாதன் இந்த ஒரே ஒரு திருநாமத்தைதான் நண்பர்களிடம் வலியுறுத்தினான். ஆனால், இந்த ஒற்றைத் திருநாமத்தை, ஆயிரம் திருநாமங்கள் என வர்ணிக்கிறார்கள் ஆன்றோர்கள்.

'நாராயணா எனும் திருநாமம், ஆயிரம் திருநாமங்களுக்குச் சமம் என்று சிலாகிக்கிறார் பராசர பட்டர்.  'நார என்றால், ஜீவாத்மாவை விட்டொழிந்தவை என்று அர்த்தம். அயனம் என்றால், ஆஸ்ரயம். அதாவது, பகவானே கதி; அவனே நல்வழி; அவனுடைய  இருப்பிடமே புகலிடம் என்று அர்த்தம். ஆகவே, பகவான் ஸ்ரீமந் நாராயணனின் திவ்விய நாமங்களைச் சொல்வது உத்தமம். குறிப்பாக, ஓம் நமோ நாராயணாய எனும் திருநாமத்தைச் சொல்வது அதிகப் பலன்களைத் தரக்கூடியது!

ஸ்ரீகிருஷ்ணருக்கு உள்ள மற்றொரு சிறப்பு என்ன தெரியுமா? அவனே அனைத்துக்கும் ஆதாரம். இதனால்தான் அர்ஜுனன், 'ஸ்ரீகிருஷ்ணா! நீ உள்ளேயும் நிறைந்திருக்கிறாய்; வெளியேயும் நிறைந்திருக்கிறாய்! என வியப்புடன் சொல்கிறான். அவன் எப்படியும் இருப்பான்; எங்கும் நிறைந்திருப்பான். ஏனெனில், அவன் பிரம்மம்!

பகிர் வ்யாபதி, அந்தர் வ்யாபதி என உண்டு. பகிர் வ்யாபதி என்றால், வெளியில் இருந்து தாங்குபவன் என்று அர்த்தம். அந்தர் வ்யாபதி என்றால், நம் ஜீவாத்மாவுக்குள் வியாபித்தபடி தாங்குபவன்; காத்தருள்பவன்  என்று பொருள்.

எதற்காக உள்ளேயும் வெளியேயும் தாங்குபவனாக இருக்கிறான் ஸ்ரீகிருஷ்ணன்?

ஜீவாத்மாவின் ஆசைகளை உடல் செயல்படுத்துகிறது, அல்லவா? அதேபோல், பகவான் வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் தாங்கி, தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக் கொள்கிறானாம்! இதனால் அவனுக்கு 'பூதாவாஸஹ எனும் திருநாமம் உண்டானது.

அவதாரங்களும் அவனுடைய திவ்விய நாமங்களும் அலாதியானவை. அதில் கிருஷ்ணாவதாரத்தை விவரித்துக்கொண்டே இருக்கலாம்; அவன் அர்ஜுனனுக்கு அருளிய கீதையின் அர்த்தத்தை உணர்ந்துவிட்டால், அந்தச் சிலிர்ப்பில் இருந்து மீள்வது என்பது எளிதல்ல! அவனுடைய திவ்விய நாமத்தில், 'வாசுதேவஹ என்பதும் முக்கியமானது. ஏற்கெனவே இந்த நாமத்தைப் பார்த்தோம். ஆனால், அப்போது வசுவின் பிள்ளை வாசுதேவன் என்று பார்த்தது நினைவிருக்கிறதா? இப்போதும் அதே 'வாசுதேவஹ எனும் திருநாமம் வந்துள்ளது. ஆனால், இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய... என்கிற மந்திரத்தை, இவ்வுலகில் ப்ரவர்த்தனம் செய்தவன் என்று அர்த்தம்.

பகவானின் பெயருக்கு முன்னே 'ஓம் என்பதையும், பின்னால் 'நமஹஎன்பதையும் சேர்த்துக் கொண்டால், அதுவே மந்திரமாகிவிடுகிறது. ஓம் நமோ நாராயணாய நமஹ!

'நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தில், நாராயண நாமத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. அடுத்து வருகிற 'வாசுதேவாய என்கிற நாமமும் வலிமையானது.

'ஓம் என்றால், உனக்கு நான் அடிமை; நமஹ என்றால், எனக்கு நான் அடிமை அல்லேன் என்று அர்த்தம்! பகவானின் திருநாமத்துக்கும், அந்தத் திருநாமத்துடன் ஓம் மற்றும் நமஹ சேர்த்துச் சொல்லப்படுகிற மந்திரத்துக்கும் அளப்பரிய மகிமைகள் உண்டு. தன்னை எவன் நினைத்துச் சொல்கிறானோ, அவனை அந்த மந்திர உச்சாடனம் கட்டிக் காபந்து செய்யும் என்பதே இதன் தாத்பரியம்! ஆகவே, பகவானின் திருநாமத்தையும் அவனுடைய திவ்விய மந்திரத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜபியுங்கள். அர்ஜுனனுக்கு அருளிய ஸ்ரீகிருஷ்ணர், உங்களுக்கும் அருளிச் செய்வார்!

- இன்னும் கேட்போம்

நன்றி - சக்தி விகடன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை