கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 30

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 30


'இவன், நான் தவமா தவமிருந்து பெற்ற பிள்ளை என்கிற வசனத்தை நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்லாதவர்கள், நம் தேசத்தில் மிகக் குறைவுதான். குழந்தை என்பது இங்கே மிகப் பெரிய உன்னதமான வரமாகப் பார்க்கப்படுகிறது. வரம் என்பது தவத்தால் அடையக்கூடியது.

தேடல் இருப்பவர்களே தவம் இருக்க முடியும். அது கடவுள் தேடலாக இருந்துவிட்டால், அந்தத் தவத்தின் பலனைச் சொல்லவே வேண்டாம். அப்படியொரு தவத்தின் பலனாக, வரமாகக் கிடைப்பது காணக் கிடைக்காத ரத்தினமாக, பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!

தசரத மகாராஜா, தனக்கும் தன் தேசத்துக்கும் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டார். புத்திர பாக்கியம் இல்லையே என்கிற சோகத்தைத் தவிர, வேறு எந்தச் சோகமும் அவருக்கு இல்லை. புத்திர பாக்கியம் என்கிற ஒரு சந்தோஷம் இருந்துவிட்டால், வேறு எந்தச் சந்தோஷமும் இந்த உலகில் முக்கியமில்லை.

அப்பேர்ப்பட்ட தசரத மகாராஜா, இறைவனை வேண்டித் தவமிருந்தார். கோயில் கோயிலாக அலைந்து தரிசித்து, மனமுருகப் பிரார்த்தித்தார். குருமார்களின் ஆசியுடனும் அறிவுரையுடனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அந்த தவத்தின் பலனாக, யாகத்தின் பலமாக, கேட்ட வரம் அவருக்குக் கிடைத்தது. சந்தான பாக்கியம் கேட்டவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

இங்கே ராமாயணத்தில் இப்படி என்றால், அங்கே மகாபாரதத்தில் என்ன நிகழ்ந்தது?

'அழகிய மகனைப் பெறுகிற பாக்கியத்தைக் கொடு என்று யசோதை வேண்டினாள். நந்தகோபனின் சிந்தனையில் பிள்ளை வரம் தவிர, வேறு எதுவும் இல்லை. இதேபோல், அனவரதமும் வசுதேவன், குழந்தைச் செல்வம் வேண்டும் வேண்டும் என்றே பிரார்த்தித்து வந்தார். மனமுருகி, ஆத்மார்த்தமாக, உள்ளுணர்வுடன்... குழந்தை கேட்டு தேவகியும் கண்ணீர்விட்டுப் பிரார்த்தனை செய்தாள்.

நந்தகோபன் - யசோதை, வசுதேவன் - தேவகி ஆகிய நான்கு பேரும் வேறெந்தச் சிந்தனையுமின்றி, 'எனக்கும் இந்த உலகுக்கும் நன்மை செய்யும் விதமாக குழந்தை வேண்டும் என்பதையே வரமாகக் கேட்டனர். அந்த நான்கு பேரின் தவத்தை நிறைவேற்றும் விதமாக, ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார்.

அதாவது, ஒரேயொருவர் மட்டுமே வேண்டிக்கொள்ள, ஸ்ரீராமபிரான் உட்பட நான்கு பேர் பிறந்தார்கள். இங்கே நான்கு பேர் வேண்டி விரும்பிப் பிரார்த்திக்க, ஒரேயொரு கிருஷ்ண பகவான் அவதரித்தார். என்ன விளையாட்டு இது?

'சரி, அப்படின்னா... ஒருத்தர் வேண்டிக்கிட்டதுக்காக, நாலு பேர் பிறந்தது உசத்தியா? நாலு பேர் பிரார்த்தனை பண்ணினதுக்காக ஒருத்தர் பிறந்தாரே, அது உசத்தியா?' என்று கேள்வி எழலாம்.

இதில் உசத்தி என்ன, தாழ்த்தி என்ன? இரண்டு பேருமே உசத்திதான்! அதுவொரு விதம், இதுவொரு விதம்! ஒருவர் விரதமிருந்து நான்கு பேர் பிறந்தனர். அங்கே... மூத்தவருக்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீராம ரத்தினம் என்று பெயர் அமைந்தது. அதேபோல் நான்கு பேர் விரதம் மேற்கொண்டு, பிரார்த்தனை அனுஷ்டித்தனர். அந்தக் குழந்தைக்கு, ஸ்ரீகோபால ரத்தினம் எனும் பெயர் அமைந்தது. அவர்... ராமரத்தினம்; இவர்... கோபால ரத்தினம், இரண்டு பேருமே உலகை உய்விக்க வந்தவர்கள்தான்.

ஆக, தவமிருந்து, விரதம் மேற்கொண்டு பிறந்த ஸ்ரீகண்ணபிரானுக்கு 'மேதேஜ:' என்று திருநாமம் அமைந்தது. மேதேஜ என்றால் விரதத்தில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம். நான்கு பேர் மட்டுமின்றி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ணரின் வருகையையும் பிறப்பையும் அவதரிப்பையும் ஆவலுடன் எதிர்பார்த்துப் பிரார்த்தித்தனர்.

அதுமட்டுமா? ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு காரணத்தினாலும் அவதரித்தாராம்!

அதாவது, நந்தகோபனும் யசோதையும், வசுதேவரும் தேவகியும், தேவர்பெருமக்களும் வேண்டிக் கொண்டதற்காக மட்டுமின்றி, இந்த உலக மக்களுக்காக, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, அவதரிக்க வேண்டும் என தாமே விரும்பி, விரதம் போல் உறுதிகொண்டு, பூமியில் அவதரித்தாராம் பகவான் ஸ்ரீகண்ணன்.

இப்படி, தாமே விரும்பி விரத உறுதி கொண்டு, அவதரித்ததால், சமேதஹ என்கிற திருநாமமும் கண்ண பரமாத்மாவுக்கு உண்டு. கிருஷ்ணாவதாரம் என்பது மிக உன்னதமானது. ஆகவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களில் எல்லாம் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திக்கொள்ளுங்கள்.

ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு குறித்து பெரியாழ்வார் பாடும்போது, ரோகிணியில் அவதரித்தவன் என்று நேரிடையாகச் சொல்லவில்லை. அஸ்தத்தில் இருந்து 10-ஆம் நாள் அவதரிப்பவன் என்று குறிப்பிடுகிறார். அதற்கு நேரடியாகவே ரோகிணி நட்சத்திரம் என்று சொல்லியிருக்கலாமே!

ரோகிணி நட்சத்திரம் என்று பளிச்சென்று சொன்னால், அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையை, கம்சன் நிமிட நேரத்தில் கண்டுபிடித்துவிடுவான். பிறகு, ஆவேசத்துடன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பான். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் மரண பயமும் கொண்டு திரிகிற கம்சனுக்கு அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் அவதரித்த குழந்தை என்றால், சட்டென்று எந்த நட்சத்திரம் என்று தெரியாதாம்! அப்படித் தெரிந்து கொள்வதற்கு சில விநாடிகள் பிடிக்குமாம். தவிர, அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் என்றால் முன்னே வரவேண்டுமா பின்னே செல்ல வேண்டுமா என்று குழம்பித் தவிப்பானாம் கம்சன். இந்தத் தவிப்பு அடங்கி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை என்று தெரிவதற்கு முன்பாக, தன்னை எப்படித் தற்காத்துக் கொள்வது என வியூகம் அமைத்துவிடுவானாம், குறும்புக் கண்ணன்!

பெரியாழ்வாரின் ஸ்ரீகிருஷ்ண பக்தி எத்தகையது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நினைக்க நி¬னைக்க... கண்ண பரமாத்மா மீதும் பெரியாழ்வார் மீதும் அளப்பரிய பக்தி வந்து நம்முள் வியாபிக்கிறது!

பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு யசோதை போல், நந்தகோபனைப் போல, வசுதேவரைப் போல, தேவகியைப் போல, ஏன்... நம் பெரியாழ்வார் போல், எத்தனையோ தன்யன்கள் இருக்கிறார்கள். கிருஷ்ண பிறப்பைச் சொல்லிச் சொல்லிப் பூரித்து, அவன் திருவடியை அடைந்தார்கள்.

ஆனால், இந்த உலக மக்களுக்கெல்லாம் அந்த கண்ண பரமாத்மா தன்யனாக இருக்கிறான். நம்மை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான். நம் ஒவ்வொருவரின் நலனிலும் அதீத அக்கறை கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு தன்யஹ என்கிற அழகிய திருநாமமும் அமைந்தது.

நாம் அவனுக்குத் தன்யனாவோம். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை, அவனுடைய மகா பிறப்பை நினைத்துப் பூரிப்போம். அவன், நமக்குத் தன்யனாவான். நம் வீட்டுக்கு வந்து, இல்லத்தையே சுபிட்சமாக்குவான்!

- இன்னும் கேட்போம்...

நன்றி - சக்தி விகடன்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை