அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். உத்தராயண புண்ணிய காலத்தில்
உயிரை விட வேண்டும் என்று கருதிய பீஷ்மருக்கு, உத்தராயணம் பிறந்தும் அது நிகழவில்லையே
என்ற ஆதங்கம். அப்போது அங்கு வந்தார் வியாச பகவான்.
பீஷ்மர் அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? இன்னும்
எவ்வளவு காலம் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டுமோ, தெரியவில்லை! என்று வருத்தத்துடன் கூறினார்.
அதற்கு வியாசர், பீஷ்மா... ஒருவர் மனம், மொழி, மெய்யால்
தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருப்பதும் பெரும் பாவம்தான்! என்றார்.
பீஷ்மரின் கண்களிலிருந்து நீர் பெருகியது. ''புரிந்தது பகவானே! பாஞ்சாலியை
அரசவையில் துச்சாதனன் துகிலுரிந்தபோது, வேட்டையாடப்பட்ட மான் போல் என்னையும் துரோணரையும்,
திருதராஷ்டிரனையும் மலங்க மலங்கப் பார்த்தாள் அவள். அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்தாலும்
அம்புகளை விடக் கூர்மையாகத் துளைக்கிறது என் மனத்தை. அந்த அபலைக்கு நான் செய்தது மகா
பாவம்தான். அதற்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்துவிட்டுப் பரலோகம் செல்வேன்?'' என்று புலம்பினார் பீஷ்மர்.
''நீ உன் பாவத்தை உணர்ந்துகொண்டதுமே அது உன்னை விட்டு அகன்றுவிட்டது.
ஆனாலும் அம்புப் படுக்கைக்குப் பின்னரும் நீ உடலால் அனுபவிக்க வேண்டிய வேதனை மீதம்
இருக்கிறது. 'கிருஷ்ணா...
துவாரகாநாதா... அச்சுதா... கேசவா... என்னை ரட்சிக்க மாட்டாயா!' என்று பாஞ்சாலி அந்தச் சந்தர்ப்பத்தில் கதறியபோது கேளாமல் இருந்த இரு செவிகளும், அதைக்
கவனித்த இரு கண்களும், தட்டிக் கேட்காத வாயும், தோள்வலிமை இருந்தும் அநியாயக்காரனுடன்
மோதாத இரு தோள்களும், அவளுக்கு உதவாத இரு கரங்களும், இருக்கையிலிருந்து எழும்பாத இரு
கால்களும் இன்னமும் அந்தப் பாவத்துக்குக் கூலி தரவேண்டியுள்ளது பீஷ்மா!''
என்றார் வியாசர்.
உடனே பீஷ்மர், ''அப்படிப்பட்ட என் அங்கங்களைப் பொசுக்கச்
சாதாரண நெருப்பு போதாது. உங்களது தவ பலத்தால் சூரிய சக்தியைப் பிழிந்து தாருங்கள்.
அதனால் சூடு போட்டுக் கொள்கிறேன்!'' என்றார்.
பீஷ்மரிடம் எருக்க இலை ஒன்றைக் கொண்டு வந்து காட்டினார் வியாசர். ''இதன்
பெயர் அர்க்க பத்ரம். அர்க்கன் என்றால் சூரியன். இதில் சூரியனின் சாரம் உள்ளது. அதனால்தான்
சந்திரனை முடியில் சூடும் சிவபெருமான் சூரியனாக எருக்க இலையையும் தரிக்கிறார். பீஷ்மா!
நீ ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. பிரம்மச்சரியத்தின் உருவமான கணேசனுக்கும் உகந்தது, இந்த
எருக்கஞ்செடி. இதன் மூலமே உன் பாவத்தைத் துடைத்து விடுகிறேன்'' என்று பரிவுடன் கூறிய வியாசர், பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார்.
அதன் பின் சப்தமி திதியன்று தியானத்தில் மூழ்கினார் பீஷ்மர். மூன்றாவது
நாளான ஏகாதசியன்று பீஷ்மரின் ஆன்மா, அவர் உடலிலிருந்து விடைபெற்றது. பீஷ்மர் விண்ணுலகை
அடைந்தார்.
அவரை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த தர்ம நந்தனர், வியாசரிடம் கூறினார். ''பிதாமகன்
பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்து விட்டாரே. அதனால் அவருக்கு வழி வழியான சிராத்தம்
கிடையாதே!''
அதற்கு வியாசர், ''தர்ம நந்தனா... இதற்காகவா கவலைப் படுகிறாய்?
ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரியும் துறவியும் பிதுர்லோகத்துக்கும் மேம்பட்ட நிலையை அடைகின்றனர்.
அவர்களுக்காக யாரும் எந்த விதமான பிதுர்க்கடனும் செய்ய வேண்டியதில்லை. இருந்தாலும்
உன் திருப்திக்காக இனி இந்த நாடு முழுவதும் பீஷ்மருக்கு நீர்க்கடன் அளிக்கும். அது
மட்டுமல்ல... பீஷ்மருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சூரியனின் ஏழு குதிரை பூட்டிய
தேர் சுழலும் ரத சப்தமியன்று, மக்கள் அனைவரும் எருக்க இலையைத் தங்கள் அங்கங்களில் வைத்துக்
குளிப்பார்கள். அப்படியே அவர்கள் தங்கள் உடலால் செய்த பாவங்களையும் போக்கிக் கொள்வார்கள்’’
என்று கூறினார்.
அதிலிருந்துதான் ரதசப்தமி தினத்தன்று எருக்க இலையைத் தங்கள் அங்கங்களில்
வைத்து ஸ்நானம் செய்யும் வழக்கம் வந்தது!
- ஆர். கண்ணன், சென்னை
நன்றி - சக்தி விகடன்