ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 13

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 13


நாரதமுனிவரைப் பணிவுடன் வரவேற்றாள் பத்மாவதி.

அப்போது அவளுக்கு பதினைந்து வயது. பருவத்துக்கு வந்துவிட்ட மங்கை. நம் வீட்டுக்கு வரும் அழகான மருமகளை "எங்கவீட்டு மகாலட்சுமி' என்று பெருமையுடன் சொல்வோம். ஆகாசராஜனின் மகளாக மகாலட்சுமியே வந்திருக்கிறாள். பிறகென்ன! கேட்கவா வேண்டும்! அழகு ரதமாகத் திகழ்ந்தாள் அவள். அவளைப் பார்ப்பவர்கள் அப்படியே மெய்மறந்து போவார்கள். அந்த பேரழகு பெட்டகத்துக்கு திருமணத்துக்குரிய நேரம் வந்துவிட்டது. அதைச் சொல்லத்தானே நாரதர் வந்திருக்கிறார்.
வழக்கமாக அவர் கலகம் செய்வார். தந்தையைக் கூட கலக்கி விடுவார். ஆனால், தன் தாயான மகாலட்சுமிக்கு அவர் திருக்கல்யாணம் நடத்திப் பார்க்க வந்திருக்கிறார்.

ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், ""குழந்தை பத்மாவதி! சீக்கிரமேவ கல்யாண பிராப்திரஸ்து,'' என்றார்.

பத்மாவதியின் தாமரைக் கன்னங்களில் செம்பருத்தியை பிழிந்து விட்டது போல அப்படி ஒரு சிவப்பு... வெட்கத்தில் குனிந்து நின்றாள். கால்கள் கோலமிட்டன.

அவளை அருகில் அமர்த்தி, ""பத்மா! உன் இடது கையைக் கொடு,'' என்றார்.

பத்மாவதி பணிவுடன் கைகளை நீட்டினாள்.

""ஆஹா.. இவ்வுலகில் உன் ஒருத்திக்கு மட்டுமே இப்படி ஒரு ரேகை! உன் கையிலுள்ள த்வஜரேகையும் மத்ஸ்ய ரேகையுமே சொல்லிவிட்டன! நீ அரண்மனையில் வாழப் பிறந்தவள் என்று! பத்மரேகையோ நீ செல்வவளமிக்கவள் என்பதையும், தன தான்ய பிராப்திமிக்கவள் என்பதையும் சொல்கின்றன. உன்ரேகைகளின் அடிப்படையைப் பார்த்தால், நீ எம்பெருமான் நாராயணனுக்கு மனைவியாகப் போகிறாய் என்பது தெளிவாகத் தெரிகிறது. சந்தோஷம் தானே,'' என்றார் புன்னகைத்தபடியே!

பத்மாவதிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றாலும், "அந்த நாராயணன் எனக்கு மணாளனாகப் போகிறாரா...ஆஹா.. நான் கொடுத்து வைத்தவள்' என்ற எண்ண மேலீடு, பரவசத்தையும் தந்தது.
நாரதர் அவளை ஆசிர்வாதம் செய்து புறப்பட்டார்.

இதனிடையே, வகுளாதேவியின் பொறுப்பில் இருந்த சீனிவாசன், சுட்டிப்பிள்ளையாகத் திகழ்ந்தார். ஒரு பொழுதும் சும்மா இருப்பதில்லை. சேஷ்டை என்றால் சாதாரண சேஷ்டை இல்லை! கிருஷ்ணாவதார காலத்தில் செய்த அதே சேஷ்டை. காட்டுக்குப் போக வேண்டும், வேட்டையாட வேண்டும், இன்னும் பல சாகசங்கள் செய்ய வேண்டும் என்ற விருப்பம் வேறு!
நல்ல பிள்ளைகள் தாயை மதித்தே நடப்பார்கள்.

தாயிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் செய்வார்கள். சீனிவாசனும் அதையே செய்தார். இருபது வயது மதிக்கத்தக்க கட்டிளங்காளை அவர்! கட்டு மஸ்தான உடம்பு. நீலவண்ண மேக நிறம். உதடுகளில் சாயம் பூசி சிவப்பாக்கிக் கொண்டார். அங்கவஸ்திரத்துடன் அம்மா வகுளாதேவி முன் வந்து நின்றார்.

""அம்மா,''...பேச்சில் கடும் குழைவு. ஏதாவது, கோரிக்கை வைக்க வேண்டுமென்றால், நம் வீட்டுக்குழந்தைகள் அம்மாவிடம் குழைவார்களே! அதே குழையல்!

""என்னடா,''

""நான் இன்றைக்கு காட்டுக்குப் வேட்டைக்குப் போக வேண்டும். மாலையே வந்து விடுகிறேன் அம்மா! இந்தக் காட்டில் நான் சுற்றாத இடமில்லை. எந்த இடமும் எனக்கு அத்துப்படி! போய் வருகிறேனே!'' என்றார் நளினமாக.

""என்ன! காட்டுக்கா...அதுவும் வேட்டைக்கா! வேண்டாமடா மகனே! நீ சுகுமாரன் அல்லவா! உனக்கு அது சரிப்பட்டு வருமா,'' என்றாள்.

"சுகுமாரன்' என்றால் "சாந்த குணமுள்ளவன்' என்று பொருள்.

காட்டுக்குப் போக வேண்டுமானால் பயம் கூடாது, திடமனது வேண்டும், சாதுக்களுக்கு அங்கே வேலையில்லை. சீனிவாசன் இளைஞன். அவன் சேஷ்டைகள் செய்வான் என்றாலும், அதை ஊருக்குள் நிறுத்திக் கொள்வான். கிருஷ்ணாவதார காலத்தில் கோகுலத்திலுள்ள கோபியரை கொஞ்சமாகவா படுத்தினான்! இப்போது காட்டுக்குள் போக வேண்டும் என்கிறானே இந்த இளசு! இளங்கன்று பயமறியாது என்று சொன்னது சரியாகத்தான் போய்விட்டது போலும்!' என்று எண்ணினாள் வகுளாதேவி.

அம்மாவிடம் மீண்டும் கெஞ்சினார் சீனிவாசன்.

மனிதனாகப் பிறந்து விட்டால் பகவானுக்கே சோதனை வந்து விடுகிறது. காட்டுக்கும் நாட்டுக்கும் வீட்டுக்கும் அனைத்துக்கும் அவனே அதிபதியானாலும் கூட, மனிதனாகப் பிறந்து விட்டால் ஒரு சின்ன விஷயத்துக்காக அம்மாவிடம் கெஞ்ச வேண்டி வந்து விட்டது! அதாவது, தன்னை விட தன் பக்தனே உயர்ந்தவன் என்பதை இப்படிப்பட்ட நிகழ்வுகள் மூலம் பரந்தாமன் எடுத்துக்காட்டுகிறான்.

பிள்ளை கெஞ்சினால் பெற்றவளுக்கு பொறுக்குமா? இவள் பெறாத தாய் என்றாலும் கூட, அவளுக்கு தான் அவன் மீது கொள்ளைப் பிரியமாயிற்றே!

""சரி..சரி...போய் வா!
காட்டுக்குள் விலங்குகளிடம் கவனமாக நடந்து கொள்.
பத்திரம்! மாலையே வந்து விட வேண்டும்! இல்லாவிட்டால், நான் அங்கே வந்துவிடுவேன்,'' என்று அன்பும் கண்டிப்பும் கலந்து சொன்னாள்.

சீனிவாசனுக்கு ஏக சந்தோஷம். அம்மாவிடம் ஆசி பெற்று புறப்பட்டார்.

மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கோ, நேர்முகத்தேர்வுக்கோ, பிற வகை பணிகளுக்கோ, வெளியூருக்குப் புறப்படும் போதோ, அம்மாவின் பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்து புறப்பட வேண்டும். அப்படி செல்லும் பணிநிச்சயம் வெற்றியடையும்.கடமைக்காகவோ, பிறர் தன்னைப்பாராட்ட வேண்டுமே என்பதற்காகவோ, ஒரு சடங்காகக் கருதியோ "மாத்ரு நமஸ்காரம்' செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது. மனதார செய்ய வேண்டும். சீனிவாசனும் வேட்டையில் வெற்றி பெற புறப்பட்டார். காட்டுக்குச் சென்ற அவருக்கு புள்ளிமான் மட்டுமல்ல! அவர் மனதைக் கொள்ளை கொண்ட இன்னொரு மானும் கிடைத்தது.

—தொடரும்

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை