புதன், 30 ஜூலை, 2014

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 15 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஏற்றச்சால் வாழ்க்கை!

குருகுலத்துக்கு வந்த பிரஹ்லாதன், அங்கு உள்ள எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக உட்கார வைத்துக் கொண்டான். அங்கும் உபதேசத்தை ஆரம்பித்துவிட்டான்.

ஏய் குழந்தைகாள். பிறக்கிறீர்கள். வளர்கிறீர்கள். இறக்கிறீர்கள். மறுபடியும் பிறக்கிறீர்கள். வளர்கிறீர்கள். இறக்கிறீர்கள். என்ன கண்டீர்கள்? இப்படிச் சுற்றிச் சுற்றி வருவதனாலே எந்த லாபத்தையாவது நீங்கள் கண்டீர்களா?” என்று கேட்டான்.

நாம் கிராமத்துப் பக்கம் போனோமானால், உழவுத் தொழிலுக்காக ஒரு பெரிய எந்திரம் வைத்திருப்பார்கள். ஏற்றசால் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? நடுவில் ஒரு கட்டையைக் கொடுத்து, நீண்ட ஒரு மரக்கட்டையைக் கட்டியிருப்பார்கள். பெரிய கங்காளம் போன்ற பாத்திரம் ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மேல் ஒருவர் நின்று கொண்டு நடப்பார். அவர் அந்தப் பக்கம் நடந்தால் இது முங்கும். முங்கியவுடன் தீர்த்தத்தை முழுவதும் எடுத்துக் கொள்ளும். அவன் இன்னொரு புறம் நடந்தானானால், அது ஜலம் மொத்தத்தையும் வயல் வரப்பில் கொட்டிவிடும். மறுபடியும், அவன் மாற்றி நடந்தால் மறுபடியும் அது முழுகி தீர்த்தத்தையெல்லாம் எடுத்துக்கொள்ளும்.

ஏற்றச்சால் இந்த இரண்டு வேலையைத் தவிர வேறு எதையும் செய்யவே முடியாது. ஒன்றாய் அப்படிப் போனால் உள்ளே மூழ்கும், ஜலத்தை எடுத்துக்கொள்ளும். இல்லையா இப்படிப் போனால் ஜலத்தைக் கொட்டும். கொட்டிவிட்டேனே என்று அதனால் பேசாமல் இருந்துவிட முடியாது. மறுபடியும் போய் ஜலத்தை எடுத்துத்தான் ஆக வேண்டும். நாமும் இந்த ஏற்றச்சால் போன்றவர்கள்தான். சம்சாரத்துக்குள் வருவோம்; பாவ புண்ணியங்கள் என்ற தீர்த்தத்தை நிறைய எடுத்துக் கொள்வோம்.



இதை முடிப்பதற்காக ஒன்று சொர்க்கத்துக்குப் போய்ப் புண்ணியத்தைத் தீர்த்துவிடுவோம் அல்லது நரகத்துக்குப் போய்ப் பாவத்தைத் தீர்த்துவிடுவோம். தீர்த்துவிட்டாலும் மறுபடியும் சம்சாரத்துக்குள் வந்து விடுவோம். ஆகவே, நாமும் ஏற்றச்சாலைப் போலே பாவ புண்ணியங்களை முகந்து எடுத்துக் கொள்கிறோம். அங்கே போய் அவற்றைக் கொட்டிவிட்டு வருகிறோம். வந்துவிட்டு சும்மா இருக்கிறோமோ? மறுபடியும் பாவ புண்ணியங்களை முகந்து எடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இதுபோல் மாற்றி மாற்றி எத்தனை நாட்கள் போய்விட்டு வரப் போகிறீர்கள் குழந்தைகளே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அதற்கு என்ன வழி? ஒரே வழி நாராயணன் நாமத்தைச் சொல்லுவதுதான்” என்று உபதேசம் பண்ண ஆரம்பிக்கிறான் பிரஹ்லாதன். இவர்களுக்குப் பசி, பிணி, மூப்பு, துன்பம் இவை வேண்டாம். கர்ப்பத்தில் இருக்கும்போது எவ்வளவு கஷ்டம்? வெளியில் வந்தவுடன் எவ்வளவு கஷ்டம்? பாவத்தைத் தொலைப்பதற்கு எவ்வளவு கஷ்டங்கள்?
ஒரு சின்னக் குழந்தையை எடுத்துக் கொள்வோம். தனக்குப் பால் வேண்டும் என்றால்கூட அதற்குக் கேட்கத் தெரியாது. தனது மல மூத்திராதிகளைப் பார்த்துக் கொள்ளக்கூட அதற்குத் தெரியாது. ஆகவே, அதற்கு பகவத் விஷயங்கள் எதுவும் தெரியாது. சரி போகட்டும்; ஒரு ஆறு வயதுக்குமேல் எல்லாம் தெரிந்துகொண்டு விடுகிறது அல்லவா? ஆறு வயதிலிருந்து, பன்னிரண்டு வயதுக்குள் தெரிந்துகொண்டு விடலாமே என்றால்.. ‘பால்யே க்ரீடனகா சக்த:’ விளையாட்டில்தான் அப்போது புத்தி போகுமே தவிர, ஞானத்தில் புத்தி போகாது. சரி; பன்னிரண்டிலிருந்து இருபது இருபத்தியிரண்டு வயது வரைக்கும் தெரிந்துகொள்ளலாமே என்றால், ‘நவ யௌவன பருவம்’. இப்போது தெரிந்துகொள்ளலாமே? எதுவும் சீக்கிரமாகப் புரியுமே என்றால், முடியாது!

‘யௌவனே விஷயேசினாம்’. விஷய சுகத்தை அனுபவிக்கும் ஆசை அப்போதுதான் வருகிறது. முதல் ஆறு வயது ஒன்றுமே தெரியவில்லை. அப்புறம் பத்து வயதுவரை விளையாட்டில் ஆசை. அப்புறம் ஏதேதோ விஷய சுகங்களை அனுபவிக்கும் ஆசைகள். ஆக, ஆகிவிட்டது முப்பது வயதுக்கு மேலே. இனியாவது தெரிந்து கொள்ளலாமே என்றால், பிள்ளையைக் காப்பாற்றியாக வேண்டும். பத்தினியைக் காப்பாற்றியாக வேண்டும். பிள்ளை குட்டிகளுக்கு உபநயனம் பண்ணியாக வேண்டும். கல்யாணம் பண்ணிக் கொடுத்தாக வேண்டும். இதுவரைக்கும் கடமைகளை முடித்தேன் என்றான்.

சரி… இப்போதுதான் கடமைகள் முடிந்துவிட்டதே, இனியாவது பகவானைப் பற்றித் தெரிந்து கொள்வது பற்றி யோசிக்கலாமே என்றால், ஆம் இப்போது ஆசை வந்துவிட்டது… ஆனால், கண்கள் பார் என்றால் பார்க்கமாட்டேன் என்கின்றன. காதுகள் கேள் என்றால் கேட்க மாட்டேன் என்கின்றன. இப்போது, நாம் சொல்கிறபடி இந்திரியங்கள் கேட்காது. இந்திரியங்களெல்லாம் சரியாக இருந்த அன்றைக்கு மனசு கேட்கவில்லை. மனம் சரியாக இருக்கும்போது இந்திரியங்கள் கேட்கவில்லை.

எப்போதுதான் பகவானை அறிவது? பாவ புண்ணியங்களைத் தொலைக்க வேண்டாமா? சரி; பகவானை அறிவது, பகவானை அறிவது என்கிறோமே… அப்படி என்றால் என்ன?

ஒரு சமயம் வேதாந்தங்களெல்லாம் யார் பரதேவதை என்று தேட ஆரம்பித்தனவாம். விசாரிக்க ஆரம்பித்தன. ஒவ்வொருவருடைய நெஞ்சையும் பார்த்துக் கொண்டே போயினவாம். இந்திரனைப் பார்த்ததாம். இவர் இல்லை. குபேரனைப் பார்த்ததாம். இவர் இல்லை. சந்திரனைப் பார்த்ததாம். இவர் இல்லை. பிரம்மாவைப் பார்த்ததாம். இவர் இல்லை. இவ்வாறாக ஒவ்வொருவரையாகப் பார்த்துப் பார்த்து இவர் இல்லை என்று சொல்லிக்கொண்டே வந்ததாம். எந்தத் திருமார்பில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாளோ அந்தத் திருமார்வை உடையவன்தான் பராத்பரன். அவன்தான் பரமாத்மாவாக இருக்கமுடியும். வேதாந்தம் அதைத் தேடிக்கொண்டே போகிறது. நல்ல வேளையாக ரமா என்கிற மகாலட்சுமியை ஸ்ரீமன் நாராயணனுடைய திருமார்பிலே கண்டது.

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடந்தான் வாட்டாறு

ஆக, திருமாலின் திருமார்புக்கு எதனால் ஏற்றம்? மகாலட்சுமி அமர்ந்திருப்பதனாலேதான் ஏற்றம். லட்சுமிக்கு எதனாலே ஏற்றம்? அவர், திருமாலின் திருமார்பில் உட்கார்ந்திருப்பதனாலே ஏற்றம்!

‘ராமன் ஸ்வாமி வீடு எது?’ என்று கேட்டான். கிருஷ்ணன் ஸ்வாமி வீட்டுக்குப் பக்கத்தில் என்றார்களாம். ‘கிருஷ்ணன் ஸ்வாமி வீடு எது?’ என்று கேட்டான். ராமன் ஸ்வாமி வீட்டுக்குப் பக்கத்தில் என்றார்களாம். அப்போது, இப்படிப் பார்த்தால் அதனால் ஏற்றம்; அப்படிப் பார்த்தால் இதனால் ஏற்றம். அப்போது சாத்திரம் விசாரித்தது. யாருடைய திருமார்பில் பிராட்டி அமர்ந்திருக்கிறாளோ அவனேதான் முழு முதற்கடவுள். இதற்கு மேல் வேத விசாரம் பண்ண வேண்டாம் என்று, அதோடு தன் தேடலை நிறுத்திக் கொண்டதாம்.

ஆக, நரசிம்மன் பரதேவதை என்று எதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்? திருமார்பில் இருக்கிற நாச்சியாரைப் பார்த்தாலும் அல்லது திருமடியிலே அமர்ந்திருக்கிற லக்ஷ்மிதேவியைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். அப்படி அமர்ந்திருந்த லக்ஷ்மிதேவியே பயப்படும்படியாக ‘பொன் பெயரோன் மார்பிளந்த’ என்கிறார் ஆழ்வார்.

பொன் பெயரோன் என்றால் ஹிரண்ய கசிபு. ஹிரண்ய என்றால் பொன். ஏன் அந்தப் பெயர் என்றால், பொன்னை உருக்கி வார்த்தாற்போல் இருப்பானாம் ஹிரண்ய கசிபு. ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு இரண்டு பேருமே அசுரர்கள். பிரம்மாவின் மானச குமாரர்கள். சனகர் முதல் சனத் குமாரர் ஈறாக நான்கு பேர்கள். இந்த நான்கு பேரும், வைகுண்ட வாசலில் காவல் காக்கும் ஜயன் விஜயன் என்ற இரண்டு துவாரபாலகர்களுக்கும் சாபம் இட்டுவிட்டார்கள். (என்ன சாபம்? ராட்சஸப் பிறவிதான்!) அந்த சாபத்தால், முதல்முறை இரண்டு பேரும் ஹிரண் யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்று பிறந்தார்கள். அடுத்தமுறை ராவணன், கும்பகர்ணன் என்று பிறந்தார்கள்! கடைசி முறை, சிசுபாலன், தந்த வக்த்ரன். இவர்களில் ஹிரண்யாக்ஷனை வராகப் பெருமான் வதம் செய்தார். ஹிரண்ய கசிபுவை நரசிம்மப் பெருமான் அழித்தார். ராவண, கும்பகர்ணனை ராமன் முடித்தான். சிசுபாலன், தந்த வக்த்ரன் இருவரையும் கண்ணன் முடித்தான்!

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக