ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 14 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 14 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

பக்தனின் தன்மை!

கண்ணன் நம்முடைய உள்ளத்திலே இருந்தால் பயப் பிராப்தி கிடையாது. ஏன் பயம் கிடையாது? தன்னுடைய பக்தனை, சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பேன் என்று வாக்களித்தவன் ஸ்ரீகிருஷ்ணன். அதனாலே, கண்ணனை நினைத்தவர்க்கு பயமென்பது இல்லை. அதேதான் பிரஹ்லாதன் வாக்கும். ‘பயம் காரணமாக என்றைக்கும் நான் உன் காலில் விழப்போவதும் இல்லை. நீ எனக்கு அபயப் பிரதானமும் பண்ண வேண்டாம்’ என்று பிரஹ்லாதன் மறுத்துவிட்டான்.

அடுத்ததாக என்ன பண்ணலாம் என்று பார்த்தான் ஹிரண்யன். சர்ப்பங்களை யெல்லாம் கூப்பிட்டு, இவனைப் போய்க் கடித்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னான். பெரிய பெரிய தக்ஷகன் முதலான சர்ப்பங்களெல்லாம், இவனைப் போய்க் கடிக்க வேண்டும் என்று பார்த்தனவாம். அதைப் பார்த்தவுடன், குழந்தை நினைத்துக்கொண்டதாம். ‘ஆதிசேஷன் எதற்காக நம்மிடம் வருகிறார்? ஒருவேளை அனுக்கிரஹம் செய்ய வருகிறாரோ?’ என்று நினைத்ததாம்.

பிரஹ்லானுக்கு சர்ப்பமும் புரியவில்லை. கடிக்கப் போவதும் புரியவில்லை. பகவானின் பள்ளியாகிய ஆதிசேஷன் நம்மை நோக்கி வருகிறாரே என்று நினைத்து, “வாரும்…வாரும்” என்று அழைக்கிறான். உடனே, சர்ப்பமெல்லாம் அவனைப் பிரதட்சிணம் செய்துவிட்டுக் கடிக்க முடியாமல் திரும்பிப் போகின்றன.

பக்தன் கலங்கிப் போய்விட்டானென்றால், அவன் என்ன பண்ணுகிறான் என்று அவனுக்கே தெரியாது. நமக்கெல்லாம் பாம்பைப் பார்த்தால் பாம்பாகத் தோன்றும். பக்தனுக்குப் பாம்பைப் பார்த்தால் படுக்கை என்று தோன்றும். நமக்கெல்லாம் கருடனைப் பார்த்தால், பக்ஷி என்று தோன்றும். பக்தனுக்கு கருடனைப் பார்த்தால், வாகனம் என்று தோன்றும்.

நமக்குத் தண்ணீரைப் பார்த்தால், மூழ்கிப் போய்விடுவோமோ என்று தோன்றும். பக்தனுக்கு அது பாற்கடல் என்றும் பகவான் படுக்கும் இடம் என்றும் தோன்றும். ஒவ்வொன்றும் நமக்குத் தோன்றும் விதம் வேறு; பக்தனுக்குத் தோன்றும் விதம் வேறு. அதுபோலவே பாம்பைப் பார்த்ததும், ஆதிசேஷன் வருவதாக நினைத்துக் கொண்டான் பிரஹ்லாதன்.



ஆழ்வார் பார்க்கிறார். மண்ணைத் துழாவித் துழாவிப் பார்க்கிறாராம். இந்த மண்ணைத்தானே வாமனன் பிரார்த்தித்துப் பெற்றான்? என்று தோன்றுகிறது.

மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இதுவென்னு

நம் வீட்டு மண்ணை, நாம் துழாவிப் பார்த்துவிட்டு வாமனன் மண் இது என்று சொல்வோமா? பக்தன்தான் சொல்வான்!

மண்ணைத் துழாவிப்பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த கன்றுக்குட்டியைப் போய் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டாராம். ‘கோவிந்தன் மேய்த்த கன்று இதுதான். எங்கள் கோவிந்தன் கறந்த பசுமாடு இதுதான்’ என்று ஒவ்வொன்றையும் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பக்கத்தில் நாகப்பாம்பு இருந்ததாம்.

‘இள நாகத்தின் பின் போய் அவன்
கிடக்க ஈதென்னும்’

நாகப் பாம்பின் பின்னால் ஓடுகிறார். பகவான் படுத்த நாகப்பாம்பு இதுதானே என்று பார்க்கிறார்.
இதுபோல் பிரஹ்லாதன் பாம்புகளைப் பார்த்து நினைக்க, ஒன்றும் பண்ண முடியாமல் அவை அத்தனையும் திரும்பிப் போயின.

அடுத்ததாக, ‘நிறையத் தீ மூட்டி, அந்தத் தீக்குள்ளே இவனை விட்டுவிடுங்கள்’ என்று ஆணையிட்டானாம் ஹிரண்யன்.

கம்பநாட்டாழ்வார் சொல்கிறார்:
குழியில் இந்தனம்
அடுக்கினர், குன்றென
குடந்தொறும்
கொணர்ந்தனர்
எண்ணை இழுது
நெய்…

பெரிய குழி வெட்டினார்களாம். நிறைய விறகுக் கட்டைகளை அதில் அடுக்கினார்களாம். குடம் குடமாக நெய்யைக் கொண்டு வந்து அதில் கொட்டினார்களாம். அதில் பிள்ளையைப் போட்டு எரித்து மூடிவிட வேண்டும் என்றான் ஹிரண்யன்.

பெருமாளுக்கு அகிற் புகைக்கு ஒரு நாளும் ஒரு கட்டையும் எடுத்து வர மாட்டான்; பெருமாளுக்கு தீபம் ஏற்றுவதற்காக அவன் ஒரு சொட்டு நெய்யையும் சேர்க்க மாட்டான், ஹிரண்யன். ஆனால், இந்தப் பிள்ளையை முடிப்பதற்காக இத்தனை கட்டை! இத்தனை நெய்! குடம் குடமாய் விட்ட நெய்யில் அந்தத் தீ கொழுந்து விட்டு எரிகிறதாம். குழந்தை பிரஹ்லாதன் அதைப் பார்க்கிறான்.

அரி என்று தொழுது
நின்றனன் நாயகன்
தாளினை
குளிர்ந்தது சுடு தீயே

சிவப்பாக எரியும் தீயைக் குழந்தை பார்த்தானாம். இதேபோல சிவந்த திருமேனிதானே எங்கள் பெரிய பிராட்டியார் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு! அவளை ஆலிங்கனம் பண்ணிக்கொள்ளும் பெருமான், அவன் எப்படி இருப்பான் என்றால் சாஸ்திரம் சொல்கிறது: ‘திருவடியிலிருந்து திருமுடி வரைக்கும் எரிகிற பொன் நிறமாக இருப்பான் பகவான்.’

ஆக, அக்னியைப் பார்த்தவுடனேயே பகவானின் தோற்றம் நினைவுக்கு வருகிறது குழந்தைக்கு. ‘ஓஹோ… அவரின் வண்ணத்தை நமக்கு நினைவு படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் அக்னியாய் வந்திருக்கிறார் போலிக்கிறது’ என்று நினைத்துக் கொள்கிறானாம். ஆகவே, அக்னி அவனை எதுவுமே பண்ணவில்லையாம்.

ஆழ்வாரின் பாசுரமும் அதேதான்.
அரியும் செந்தீயைத் தழுவி
அச்சுததன் என்னு மெய்வேவாள்

அக்னியைப் போய் நம்மாழ்வார் ஆலிங்கனம் பண்ணிக் கொள்கிறார். இதுதான் அச்சுதன். அப்படி சொன்னவுடன் என்ன ஆயிற்று? மெய்வேவாள் – அதாவது உடம்பு சுடவே இல்லை.

‘குளிர்ந்தது சுடு தீயும்’ என்கிறார் கம்பர். ஆக, குழந்தையை முடிப்பதற்குத் தீயாலும் முடியவில்லை.

பார்த்தார்கள் புரோகிதர்களெல்லாம். இந்தக் குழந்தையை முடிப்பதற்கு இப்போது முடியாது போலிருக்கிறது. “கொஞ்ச காலத்துக்கு எங்களிடத்தில் விட்டுவிடுங்கள்.” என்றார்களாம். ஏற்கனவே, கல்வி கற்பதற்கு அனுப்பியவர்களிடமிருந்து எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை. வேறு சிலர் கற்றுக் கொடுப்பதாக சொல்கிறார்களே, அவர்களிடத்தில் விட்டுப் பார்ப்போம் என்று நினைத்து, அவர்களிடம் குழந்தையை விட்டான் ஹிரண்யன். அங்கே போய் என்ன பண்ணினான் பிரஹ்லாதன்? மறுபடியும் உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டானாம்!

(வைபவம் வளரும்)

நன்றி - தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை