கண்ணன் பகவத் கீதையை அர்ஜூனனுக்காக மட்டுமா உபதேசித்தான்? கீதையின் 18வது அத்தியாயத்தில், "மா மேகம் சரணம் வ்ரஜ'' என்று சரண ஸ்லோகம் இடம்பெற்றிருக்கும். "என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு' என்று கண்ணனே சொல்கிறான். அப்படியானால் கண்ணனின் உபதேசத்தைத் தொடர்ந்து அர்ஜூனனின் சரணாகதி பற்றித்தானே அடுத்த ஸ்லோகம் இருக்க வேண்டும். கீதை மட்டுமில்லாமல், மகாபாரதம் முழுவதுமே அர்ஜூன சரணாகதி பற்றிய குறிப்பு எங்குமே பார்க்க முடியாது. கேட்டது என்னவோ அர்ஜூனன் என்றாலும், உலக நன்மைக்காகத் தான் கண்ணன் இதை உபதேசித்தான் என்பது தான் இதன் அடிப்படை. புராணம், இதிகாசம், சாஸ்திரம் இப்படியான உயர்ந்த விஷயம் எல்லாம் ஒருவருக்காக எழுந்தது அல்ல. அது உலக நன்மை கருதி உண்டானது. மைத்ரேயர் வாயிலாக விஷ்ணு புராணத்தின் மகத்துவத்தை உலகமே அறிந்து கொண்டது.
"உலகம் எதுவாக இருக்கிறது?' என்று கேட்ட மைத்ரேயரின் கேள்விக்கு பதிலாக, ""இந்த உலகம் விஷ்ணுவிடம் இருந்து தோன்றியது. பிரளய காலத்தில் இது அவனையே சென்று சேரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் நிகழ்த்துபவனும் அவனே. இந்த உலகம் முழுவதும் அவனே வியாபித்து இருக்கிறான். அவனே உலகமாக இருக்கிறான்,'' என்று பராசரர் பதிலளித்தார்.
மைத்ரேயர் கேட்ட கேள்வியும், பராசரர் சொன்ன பதிலும் உயர்வான விஷயங்கள். நம்மைப் போன்றவர்களுக்கு இதன் விசேஷ உள்ளர்த்தங்கள் புரிவதில்லை.
இப்படித்தான், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் 16ஆண்டு காலம் உணவு, உறக்கம் இல்லாமல் புளிய மரத்தடியில் கண்மூடி தியானத்தில் இருந்தார். அவர் அமர்ந்திருந்த புளியமரமும் புனிதம் பெற்றது. இதனால், "திருப்புளியாழ்வார்' என்று அந்த மரத்திற்கே பெயர் வைத்து விட்டார்கள். அவரைத் தரிசிக்க வடநாட்டில் இருந்து மதுரகவி ஆழ்வார் வந்தார்.
நம்மாழ்வார் வெளியுலக பிரக்ஞை அற்றவராக அசைவற்று இருந்ததைப் பார்த்தார். அவர் மீது கல்லை வீசிப் பார்த்த போது லேசாகக் கண் திறந்தார். அவரிடம், "செத்ததின் வயிற்றில் சிறியது கிடக்கில் எத்தை தின்று எங்கே கிடக்கும்' என்று கேள்வி கேட்டார் மதுரகவியார். நம்மாழ்வாரும், "அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார். இந்த கேள்வியும், பதிலும் பார்த்தால் ஏதும் நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு குரு, சீடராக மாறினர்.
""ஜீவாத்மாவாகிய உயிர்களிடம், கடவுளைப் பற்றிய அறிவு உண்டானால் என்ன செய்யும்?'' என்பது தான் மதுரகவியாழ்வாரின் கேள்வி. ""கடவுளின் திருவடி இன்பத்திலே உயிர் ஒன்றி விடும்'' என்பது நம்மாழ்வாரின் பதில். தத்துவார்த்தமான இதனைக் கேட்பவருக்கு விளக்கிச் சொன்னால் தான் புரிகிறது. பராசரர், மைத்ரேயர் உரையாடலும் இப்படித் தான் இருந்தது.
உதாரணத்திற்கு ஒரு மண்பாண்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மண்பாண்டம் செய்ய வேண்டுமானால், மண், குயவன், தண்டச் சக்கரம் ஆகிய மூன்றும் அடிப்படைக் காரணங்கள். அது போல வேட்டிக்கு பஞ்சு, நெசவாளி, தறி மூன்றும் அடிப்படை.
சங்கிலி செய்ய வேண்டுமானால் தங்கம், பொற்கொல்லர், கொல்லரின் கருவி ஆகிய மூன்றும் அவசியம்.
எந்த பொருள் செய்ய வேண்டுமானாலும் இந்த மூன்று காரணம் இல்லாமல் முடியாது. ஆனால், உலக சிருஷ்டிக்கு இது பொருந்துவதில்லை. அங்கு பண்ணுவதும், பண்ணப்படுவதும் ஒன்று தான். பிரம்மமே (தெய்வமே) உலகமாக இருக்கிறது. உலகமே பிரம்மரூபம் தான். எந்த ஒரு குயவனும் "நான் குடமாக ஆவேன்' என்று சொல்ல முடியாது. மண்ணும், குயவனும் தனித்தனி தான். ஆனால், "நான் உலகமாக ஆவேன்' என்று பிரம்மம் சொல்கிறது. அப்படியானால் பிரம்மமும், உலகமும் ஒன்று தானே என்று கேட்க முடியுமா என்றால் அதுவும் கிடையாது.
விளக்கம் ஒன்றைத் தெரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தை உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
பழுதாகிப் போன கடிகாரம் ஒன்று இருந்தது. அதை கடிகாரக் கடைக்குச் சென்று பழுது பார்த்துத் தரும் படி கொடுத்தால் தெரியும். பழுதுபார்ப்பவர் அதில் உள்ள முள் அத்தனையையும் கழற்றி வைத்துக் கொண்டு பழுது பார்ப்பார். அங்கு போய்ப் பார்த்தால், நாம் கொடுத்த ஒரு கடிகாரம் அக்கு வேறு ஆணிவேறாக கழற்றப்பட்டு 150 கடிகாரம் போல பரப்பிக் கிடக்கும். கேட்டால், "இதோ 5 நிமிஷம் பொறுங்கள் கடிகாரம் தயாராயிடும்' என்று சொல்வார் கடைக்காரர். உண்மையாகவே, கண்மூடித் திறப்பதற்குள் அத்தனையையும் ஒன்றாக்கி கையில் கொடுத்து விடுவார்.
பொற்கொல்லர் தங்கவேலை செய்து கொண்டிருக்கும் போது தங்கத் துகள் கீழே விழுந்து கொண்டிருக்கும். வேலை முடிந்ததும் மெழுகு உருண்டையை எடுத்துக் கொண்டு ஒற்றி எடுத்தால் போதும். அத்தனை துகளும் அதில் ஒட்டிக் கொண்டு விடும். உலகில் கூடியிருக்கும் அத்தனை பேருக்குள்ளும் பிரம்மமே இருக்கிறது. ஆனால், நாம் தான் வேறு வேறாக உணர்கிறோம்!
எப்படி என்றால், அத்தனை தங்கமும் மெழுகில் ஒட்டிக் கொண்டிருந்தாலும், தங்கமும், மெழுகும் வேறு வேறாக இருப்பது போல!
ஆண்மயிலுக்குத் தோகை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பெண்மயிலான லட்சுமியைக் கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சியில் ஆண்மயிலான திருமால் தோகை விரித்து ஆடுகிறார். தோகை விரிப்பது தான் உலக சிருஷ்டி. ஆடி முடித்ததும் மயில் தன் அழகிய சிறகை ஒடுக்கி ஒன்றாக்கி விடுவது போல, உலகை ஒடுக்கி தன்னுள்ளே சேர்த்துக் கொள்கிறார். அது தான் உலகத்தின் அழிவு.
தனக்குரிய வீட்டினைக் கட்டும் சிலந்திப் பூச்சி தன் எச்சிலிலே இழையைப் பின்னிக் கொண்டு அதிலே தங்கிக் கொள்கிறது. அதே சிலந்தி அந்த இழைகளை வாய்க்குள் இழுத்துக் கொள்ளவும் செய்யும். இந்த இரண்டும் படைத்தல், அழித்தல் ஆகிய இரண்டும் போல இருக்கிறது. மயிலுக்குள் தோகையும், பூச்சிக்குள் நூல் இழையும் அடங்கி இருப்பது போல உயிர்களும், உலகமும் பிரம்மத்திற்குள் அடங்கி இருக்கின்றன.
இதே தத்துவத்தை துள்ளல் ஓசை நயத்துடன் ஒரு ஆழ்வார் பாசுரம் வேறுவிதமாகச் சொல்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.
- இன்னும் இனிக்கும்
திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...
நன்றி - தினமலர்
நன்றி - தினமலர்