திங்கள், 9 செப்டம்பர், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 24 - இந்திரா சவுந்தரராஜன்

பலராமர் கண்ணனிடம் கட்டளையிடுவது போலவும், கண்ணனே ஏதோ செய்கிறான் என்பது போலவும் பேசிய பேச்சு கண்ணனையே சற்று கலங்கச் செய்து விட்டது
"தன் அண்ணனுக்கே இந்த கண்ணன் எந்தத் தவறும் செய்யாதவன் என்பது தெரியவில்லையே...?' 
- இந்த கேள்வி கண்ணனுக்குள் எழும்பி கண்ணனையே பெருமூச்சு விடச் செய்தது. ஆனால், எல்லாம் சில நொடிகள் தான்
சூழ்நிலையும் அப்படித் தானே இருக்கிறது
எப்போது இந்த சமந்தகமணி துவாரகைக்கு வந்ததோ அப்போது ஆரம்பித்தது வருத்தம். இந்த நொடி வரை அது வளர்ந்து கொண்டே தான் போகிறதேயன்றி துளி கூட குறையவே இல்லை. அந்த மணி இப்போது எங்குள்ளது என்பதும் தெரியவில்லை. இதெல்லாம் தான் பலராமரையே கோபமாக பேச வைத்து விட்டது
"எதனால் இப்படி எல்லாம் நடக்கிறது?' ஒருவேளை சமந்தகமணியே ஒரு அழிவுக்கான கருவியா?' - இப்படி எல்லாம் கூட கேள்விகள் சிலருக்குள் ஓட ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பாமாவும், ருக்மிணியும் மிகவே கவலைப்பட்டனர்
ஆதரவாகவும், ஆறுதலாகவும் திகழ வேண்டிய பலராமரே கோபத்தோடும் கண்ணன் மீது சந்தேகத்தோடும் பேசியதை அவர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. பலராமர் கண்ணனை கோபித்துக் கொண்டு விட்ட செய்தியும் துவாரகை முழுவதும் பரவியது
""பலராமர் கண்ணபிரானை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டாராமே...?'' 
""இருக்காதா.... பின்னே.... சததன்வாவை கொல்ல முடிந்தவருக்கு அவன் வசமிருந்த சமந்தக மணியை மட்டும் கொண்டு வர முடியவில்லை என்றால் எப்படி?'' 
""எதனால் கிருஷ்ணபிரபு இப்படிச் சொல்கிறார்? சமந்தகமணியை ஒளித்து வைத்திருப்பாரோ?'' 
""அப்படித்தான் இருக்கும். ஒருவருக்கு மூன்று பேரை பலி வாங்கி விட்ட அதை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதே அவர் விருப்பம்...!'' 
""இனி அதனால் விபரீதம் தொடரக் கூடாது என்றும் பிரபு அதை தானே வைத்துக் கொண்டு விட்டிருக்கலாம்'' 
""பலராம மன்னர் இப்படிச் சொல்லி விட்டாரே... கிருஷ்ணபிரபு இனி என்ன செய்வார்?'' 
""எனக்கென்னவோ அந்த சமந்தகமணி கிருஷ்ண பலராமரையே கூட பலி வாங்கி விடும் என்று தான் தோன்றுகிறது....'' 
""அதெல்லாம் நம் பிரபுவிடம் பலிக்காது. பிரபு அதன் கொட்டத்தை அடக்கி, தானே அதை வைத்துக் கொள்ள தகுதியானவர் என்று இந்த உலகுக்கு நிரூபிக்கப் போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்'' 
-இப்படி ஊருக்குள் பலரும் பலவிதமாக பேசிக் கொள்ளவும் தொடங்கி விட்டனர்
கண்ணனோ எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் அந்தப்புரத்தில் குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவன் எப்போது வாசித்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகளும் கோவினங்களும் கூட அன்று ஏனோ அவனைப் புறம் தள்ளின
அவன் வாசிப்பை கன்னத்தில் கை வைத்தபடி கேட்டு மயங்கி விழும் பாமாவும், ருக்மிணியும் அந்த புல்லாங்குழலை பிடுங்கி எறிந்து விடலாமா என்று கருதி முகம் சிவக்க அவன் முன்னால் நின்றனர்
ஓரளவு வாசித்து முடித்த கண்ணனும் நிமிர்ந்தான்
பாமாவும், ருக்மிணியும் ஆளுக்கொரு பக்கம் நின்று வெறித்தனர்
""பாமா.... ருக்மிணி ... என்னவாயிற்று உங்களுக்கு? எப்போதும் <ங்கள் மை விழிகள் என் முன்னால் மயங்கியல்லவா காட்சி தரும்?'' 
"" என்ன செய்வது... இன்று என்னால் மயங்க முடியவில்லை. மருளத்தான் முடிகிறது...'' - என்று சொன்னாள் பாமா
"" என் மனம் இருண்டே போய் விட்டது''- என்றாள் ருக்மிணி
""எதனால் அப்படி?'' - கண்ணனும் தெரியாதவன் போல கேட்டான்
""போதும்... எதுவும் தெரியாத மாதிரி பேச வேண்டாம்'' 
""தெரிந்ததாலும் பேசாமல் இருக்கிறேன் ருக்மிணி...'' 
""அது எப்படி முடிகிறது.... அண்ணா பலராமர் இட்ட கட்டளை மறந்து விட்டதா? '' 
"" அதை எப்படி மறப்பேன்....?'' 
""மறக்கவில்லை என்றால், அந்த சமந்தகமணியை தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும். இப்படியா எனக்கென்ன என்று புல்லாங்குழல் வாசித்தபடி இருப்பீர்கள்?'' 
""பாமா... அதை நான் எத்தனை முறை தான் தேடுவது ? போகட்டும் விடு...'' 
""அப்படி விட்டு விட்டால் நீங்களே கள்வன் என்றுதூற்றமாட்டார்களா?'' 
""இப்போது என்னை அப்படி யாரும் எண்ணவில்லை என்பது உன் எண்ணமா?'' 
""இப்படி எல்லா கேள்விக்கும் பதில் சொன்னால் எப்படி?'' 
""கேள்வி கேட்பதே பதிலுக்காக தானே பாமா....?'' 
""போதும் உங்கள் குறும்பு.. நீங்கள் வேண்டுமானால் பழி, பாவம் என்று அனைத்தையும் துச்சமாக கருத முடிந்தவராக இருக்கலாம். நாங்கள் அப்படியில்லை....'' 
""நான் எப்போது அப்படி சொன்னேன்?'' 
""சொன்னால் தானா.... நடந்து கொள்வதில் இருந்தே தெரிகிறதே...'' 
""சரி நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?'' 
""சமந்தகமணி இப்போது யாரிடம் உள்ளது என்பதைக் கண்டறிந்து மீட்டு வந்து அண்ணாவிடம் அளித்து விடுங்கள். அப்போது தான் எங்கள் மனம் அடங்கும்'' 
""இல்லாவிட்டால்...?'' 
""நாங்களும் உங்களைச் சந்தேகிப்போம்....'' - இருவரும் அப்படிச் சொன்ன நொடி "நாராயண நாராயண....' என்னும் நாமக்குரல்
மூவரும் திரும்பினர் எதிரில் நாரத முனிவர்
""அடடே நாரத முனிவரா.... வாருங்கள் நாரதரே...'' - கண்ணனின் வரவேற்பு
""கிருஷ்ண பிரபு நான் தவறான நேரத்தில் வந்து விட்டேனோ?'' - நாரதர் மெதுவாக ஆரம்பித்தார்
""என்ன நாரதரே.... நீங்கள் வந்தாலே அது நல்ல நேரமாகத்தானே இருக்கும்!'' 
""பிரபு... என்னை சோதிக்கத் தொடங்கி விடாதீர்கள். அவசர கதியில் உங்களுக்கும், பாமா தேவியாருக்கும் நடந்த திருமணத்தின் தொடர்ச்சியில் அடுத்து இப்போது தான் வந்திருக்கிறேன்'' 
""ஏன் வந்தேன் என்று இருக்கிறது பரமாத்மா...'' 
""அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்?'' 
""எப்படிச் சொல்லாமல் இருப்பேன். பூலோகவாசிகள் பேசிக் கொண்டால் கூட பரவாயில்லை. ஆனால்....'' 
""என்ன ஆனால்?'' 
"" ஏழு உலகங்களிலும் உங்களைக் கள்வன் என்று பேசுகிறார்களே. கேட்கவே சகிக்கவில்லை.'' 
""நான் கள்வன் தானே?'' 
""பிரபோ.. உங்கள் வரையில் தீதும், நன்றும் ஒன்றாயிருக்கலாம். அந்த இரண்டுமே நீங்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களைத் துதிப்போருக்கு மனம் வருந்துகிறதே....?'' 
""அதற்கு நான் என்ன செய்வேன்...?'' 
""பிரபோ.... நீங்கள் சமந்தக மணியைத் தேடி வனத்துக்குள் சென்ற தினம் ஞாபகம் இருக்கிறதா?'' 
""அது எப்படி மறக்க முடியும்... அன்று கூட நான் பிறை வானில்... நானும் தான் பார்த்தேனே...!'' 
""அது தான் நீங்கள் செய்த தவறு...'' 

-நாரதர் அழுத்தமாகச் சொன்னார். பாமா, ருக்மிணி இருவர் முகத்திலும் ஆச்சரியம்
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக