திங்கள், 9 செப்டம்பர், 2019

கண்ணன் என்னும் மன்னன் - 23 - இந்திரா சவுந்தரராஜன்

அக்ரூரர் தன் மாளிகையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார். சததன்வா இப்படி சத்ராஜித்தை கொலை செய்யுமளவு போவான் என்று அவர் எண்ணிப் பார்க்கவில்லை.
ஆனால், எல்லாம் நடந்து முடிந்து விட்டது. நிச்சயம் அடுத்தடுத்து நடக்கப் போவது எதுவும் நல்லதாக இருக்கப் போவதில்லை.
கண்ணபிரான் புன்னகை முகத்தவர்
வசீகரப் பேரழகர்.... ஆனால், யுத்தம் என்று வந்து விட்டால் அந்தப் பேரழகு வசீகரம் அப்படியே மாறிப் போய் அவர் கொள்ளும் தோற்றம் அக்ரூரர் மனக்கண்ணில் ஒருமுறை வந்து போனது. அந்த நொடியே, சததன்வா கிருஷ்ண பாணங்களால் தாக்குண்டு மண் மேல் விழப் போகும் காட்சியும் தோன்றியது.
இந்நிலையில் சததன்வா தன்னை உதவிக்கு அழைக்கக் கூடும். சததன்வாவோடு சேர்ந்து தானும் யுத்தம் புரிந்தாலும் புண்ணியமில்லை. தன் உயிர் பிரிவதும் நிச்சயம். சததன்வா தன்னை மட்டுமல்ல.. கிருதவர்மாவையும் துணைக்கு அழைப்பான். அவன் உயிர் போவதும் நிச்சயம்.
ஒரு துஷ்டனை நண்பனாகப் பெற்றதன் பயன், ஒரு முழுவாழ்வு வாழாமல் கொல்லப் படப் போகிறோம் என்பது தான்! அக்ரூரருக்குள் இப்படித் தான் எண்ணங்கள் கொந்தளித்துக் கொண்டே இருந்தது. அப்போது கிருதவர்மாவும் அங்கு வந்தான். வரும் போதே பதட்டம்!
""அக்ரூரரே.... நடந்ததை கேள்விப்பட்டீர்களா?''
""என்ன அது கிருதவர்மா?''
""சததன்வா மாளிகை தீப்பிடித்து எரிகிறதாம். அந்த சமந்தகமணியை அவனால் வைத்துக் கொள்ள முடியவில்லையாம்....'' 
""ஹும்... இதை நான் எதிர்பார்த்தேன்''
""இப்படி சொன்னால் எப்படி?'' 
""விதி சததன்வாவை விபரீதமாய் இயக்கிக் கொண்டிருக்கிறது''
""உண்மை தான்... கிருஷ்ணனோடு நடக்கும் யுத்தத்தில் சததன்வா இறப்பது உறுதி. அவனோடு சேர்ந்து நம் உயிரும் போய்விடுமே என்பது என் கவலை''
""சததன்வா நிச்சயம் நம் உதவியைக் கேட்பான். நாம் மறுத்தால் நம்மைக் கொல்லவும் தயங்க மாட்டான்''
""சரி... நீ முடிவாக என்ன செய்யப் போகிறாய்?''
""நான் இனியும் இங்கிருக்க விரும்பவில்லை. தீர்த்த யாத்திரை செல்ல முடிவு செய்து விட்டேன்''
""வேறு வழியில்லை... நானும் அந்த முடிவுக்கே வந்தாக வேண்டும். சற்று பொறு.. தயாராகி வருகிறேன்''
""சீக்கிரம்...'' - கிருதவர்மா காத்திருக்க அக்ரூரர் புறப்பட்டார். அப்போது சததன்வாவின் ரதம் புயல் போல வந்தது. கழுத்திலே அந்த சமந்தகமணி மாலையை அணிந்திருந்தான்
அவன் ரதத்தை விட்டு இறங்கி வருவதைக் கண்ட கிருதவர்மா, வேகமாய் ஒளிந்து கொண்டான். சததன்வா கடந்து செல்லவும், அங்கிருந்தால் ஆபத்து என்று தலை தெறிக்க ஓடினான்.
அதே வேளையில், சததன்வா வசம் அக்ரூரர் அகப்பட்டுக் கொண்டார். தீர்த்த யாத்திரைக்கான கோலத்தோடு வந்தவரைப் பார்த்து வெறித்தான் சததன்வா
""இது என்ன கோலம்?''
""பார்த்தால் தெரியவில்லை.... தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப் போகிறேன்''
""புரிகிறது... அந்த கிருஷ்ணன் வந்து உங்களையும் கொன்று விடப் போகிறான் என்கிற பயமா?''
""பயமல்ல.... அது தான் சத்தியம். நீ செய்த செயல் அப்படிப்பட்டது...''
""அக்ரூரரே...... வாழ்நாளெல்லாம் என்னோடு உடன் இருந்து எனக்கு பக்கபலமாக இருந்து விட்டு, இப்போது என்னிடம் எதிரி போல பேசாதீர்கள்.....''
""சததன்வா.. நீ விவேகம் இல்லாமல் நடந்து கொண்டு விட்டாய். நான் உன்னை தடுத்தும் நீ கேட்கவில்லை
இப்போது இப்படிப் புலம்புவது சரியில்லை...''
""போகட்டும். நான் காரணமாகவே வந்துள்ளேன்...''
""தெரியும். கிருஷ்ணன் வந்து விட்டான். அவனோடு மோத என்னையும் துணைக்கு அழைக்கப் போகிறாய்....'' 
""இல்லை......எனக்கு என் முடிவு தெரிந்து விட்டது. நான் இந்த மணியை நம்பினேன். ஆனால், இது என்னை கை விட்டு விட்டது. எனவே, நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முன், இதை உம்மிடம் ஒப்படைக்கவே வந்தேன். இவ்வளவு நாள் நண்பனாக இருந்தவன் என்கிற அடிப்படையில் ஒரு உதவி மட்டும் எனக்கு செய்தால் போதும். எக்காரணம் கொண்டும் இந்த சமந்தகமணி கிருஷ்ணனை அடையக் கூடாது. இது நம் நட்பின் மேல் சத்தியம்...''
இப்படி சொன்னதோடு, சமந்தகத்தை அக்ரூரரின் கழுத்தில் அணிவித்த சததன்வா, வந்த வேகத்தில் திரும்பினான்.
அக்ரூரர் கழுத்தில் சமந்தகமணி மாலை...
இது இன்னும் எத்தனை பேர் கழுத்தில் போய் விழுமோ
அக்ரூரர் கிருதவர்மாவைத் தேடவும், அவன் பயந்து ஓடி விட்டது தெரிந்தது
மாலையோடு தன் கழுத்தில்...
தன் மாளிகையும் எரிந்து விடுமோ என்கிற அச்சம் அக்ரூரருக்குள் ஏற்பட்டது. அப்படியே வெளியில் வந்து வானை நோக்கினார். சூரியனின் உஷ்ண ஜாலம். அக்ரூரர் மனதில் பிரார்த்தனை
""சூரிய பகவானே! இதை நான் களவாடவில்லை. எதிர்பாராமல் என்னிடம் வந்து விட்டது. இதை உன் கருணையோ... விதியோ....? தெரியவில்லை. சததன்வா சத்தியம் செய்து விட்டதால், இதை கிருஷ்ணனிடம் சேர்க்க முடியாது. இதை உதறி எறியவும் மனம் வரவில்லை.....இது உன்னுடைய அருள் அம்சம்!
கதிரவனே...! நான் உனக்கொரு உறுதி அளிக்கிறேன். இதை பவித்ரமாய் பூஜிப்பேன். எக்காரணம் கொண்டும் என் நலனுக்கு பயன்படுத்த மாட்டேன். இனி உலக நன்மைக்கு மட்டுமே பயன்படும். நானும் இனி இங்கிருக்க விரும்பவில்லை. நான் அசலான தீர்த்த யாத்திரை புரிந்து பூஜிப்பேன். இதை கண்ணன் அடையும் விதி இருந்தால், அவனாக வந்து பெற்றுச் செல்லட்டும். அதுவரை இது உலகுக்கு உரியது. இது சத்தியம்!'' - என சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு காசிக்குப் புறப்பட்டார்
இதனிடையே தப்பி ஓடப் பார்த்த சததன்வாவை கண்ணன் பாணத்தால் வீழ்த்தினான். உடன் வந்த பலராமர், "எங்கே சமந்தகம்?' என்று கேட்டார். அது சததன்வாவிடம் இருந்தால் தானே? கண்ணன், ""தெரியவில்லை அண்ணா'' என்றான்.
""கண்ணா... விளையாடாமல் ஒப்படைத்துவிடு''
""அண்ணா... அது எங்கிருக்கிறது என்பது தெரியாமல் எப்படி ஒப்படைப்பது?''
""அது எனக்குத் தெரியாது. மணி வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் , இனி இதனால் ஒரு உயிர் போனாலும், உன்னைத் தான் குற்றவாளியாகச் சொல்வேன்'' - பலராமர் பேசியது கண்ணனுக்கு பேரிடியாக இருந்தது.
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக