கண்ணன் என்னும் மன்னன் - 22 - இந்திரா சவுந்தரராஜன்

கண்ணன் என்னும் மன்னன் - 22 - இந்திரா சவுந்தரராஜன்

சததன்வா சமந்தகமணியோடு தன் மாளிகை போன்ற வீட்டிற்குள் நுழைந்தான். மணியோடு வருபவனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவனைப் பயத்துடன் பார்த்தனர்.
""உங்களுக்கு என்ன ஆயிற்று... நான் இப்போது பாதி ஆதித்தன்! உங்களுக்கெல்லாம் என் மூலம் ஆதித்தன் அருள் கிடைக்கட்டும்...'' - என்று சொல்லி வலக்கரத்தை உயர்த்தினான். சததன்வாவின் குரலில் ஆணவம் தொனித்தது
""அந்தணர்களை அழைத்து வாருங்கள். இந்த மணியைக் கொண்டு பூஜையை செய்யப் போகிறேன். கொட்டப் போகும் பொன்னைக் கொண்டு அனைவரையும் விலைக்கு வாங்கப் போகிறேன்,'' என்றான்.
பணியாளர்களில் மேலாளனைப் பார்த்து, ""ஏன் இன்னமும் நின்று கொண்டிருக்கிறாய். இன்னும் மூன்று நாழிகைக்குள் வேதம் ஓதும் அந்தணர்கள் இங்கு வந்தாக வேண்டும்,'' என்று முழங்கினான். மேலாளன் பயந்தபடி ஓடினான்
அப்போது மெய் காப்பாளர்களில் ஒருவன் குதிரை மேல் இருந்து இறங்கி வேகமாக அவனை நெருங்கி வந்தவனாய், ""சத்ராஜித் இறந்து விட்ட செய்தி ஹஸ்தினாபுரத்திற்கு செல்லத் தொடங்கி விட்டது. பாமாதேவி இரு தூதர்கள் மூலம் ஓலை அனுப்பியுள்ளார். கிருஷ்ணபிரபு எப்போது வேண்டுமானாலும் படையுடன் வரலாம்,'' என்றான்.
அவன் கன்னத்தில் அறைந்த சததன்வா, "" என்ன துணிச்சல் உனக்கு.... கிருஷ்ணனை பிரபு என்று பெரிதாகச் சொல்கிறாயே....'' என்று கத்தினான்.
""மன்னியுங்கள்.... பழக்க தோஷத்தில் வந்து விட்டது. இருந்தாலும், ஒரு விஷயத்தைச் சொல்லித் தான் ஆக வேண்டும். வரும் வழியில் பல கருத்துக்கள் என் காதில் விழுந்தன. எனக்கு அச்சமாக இருக்கிறது'' 
""கருத்துக்களா.... எவரிடம் இருந்து....?''
""மகா ஜனங்களிடம் இருந்து தான்....'' 
""மகா ஜனங்களா... யார் அது?''
""நான் நம் நாட்டு மக்களைத் தான் சொன்னேன்'' 
""... மந்தை மனிதர்கள் என்று சொல். சரி என்ன சொன்னார்கள்.... சததன்வா சாதித்து விட்டான். அவனை வெல்ல முடியாது என்று தானே?'' 
""இல்லை பிரபு... அசுர சக்தியான சமந்தகமணி இருக்கும் இடத்தில் எல்லாம் அழிவே நேர்கிறது. இது நல்லதல்ல...'' என்றே பேசிக் கொண்டனர்
""உளறல்.... ஆதித்த சக்தி எப்படி அசுர சக்தியாகும். பேதமை.... அவ்வாறு நடக்கக் கூடாது என்றே அந்தணர்களைக் கொண்டு பூஜிக்க உள்ளேன். தினமும் இங்கே அபிஷேக, ஆராதனைகள், மந்திர முழக்கங்கள் உருவாகி, என் மாளிகையே ஒரு மந்திரக் கோட்டையாகப் போகிறது....'' என்று கர்ஜித்தான்.
குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த சததன்வா, தாகம் எடுத்ததால் பழரசம் கொண்டு வர ஏவலாளைப் பணித்தான். ஒரு பணிப்பெண் பழரசம் கொடுத்து நின்றாள். அவன் வாங்கி குடித்த போது, அருகில் இருந்த திரைச்சீலையில் நெருப்பு பற்றியது
எல்லோரும் ஓடி வந்து தீயை அணைத்தார்கள்
அந்த இடத்தில் அணைக்கவும், இன்னொரு இடத்தில் தீப்பற்றியது. சேடிப்பெண்கள் அங்கு ஓடிச் சென்று அணைக்க முயன்றனர். இப்படி மாறி மாறி தீப்பிடிப்பதைக் கண்ட பணியாளர்கள், இனி இங்கே இருந்தால் ஆபத்து என்று அஞ்சி வெளியேற ஆரம்பித்தனர்.
அந்தணர்களை அழைக்கச் சென்ற மேலாளனும் ஏமாற்றத்துடன் வந்தான்.
""என்னாயிற்று?'' 
"" ஒரு அந்தணர் கூட தங்களின் அழைப்பை ஏற்க முன் வரவில்லை பிரபு...'' 
""ஏன் அப்படி?'' 
""களவாடப்பட்டது சமந்தகமணி.... அதை பூஜிக்க எங்கள் தர்மத்தில் இடமில்லை என்று கூறிவிட்டனர்''
""நான் எங்கே களவாடினேன்.? சத்ராஜித்தை வீழ்த்தி எனக்கு உரிமைப்படுத்திக் கொண்டேன். ஒரு அரசன் நாட்டை அபகரிக்கலாம்- நான் அதுபோல செயல்படக் கூடாதா?'' சததன்வா குதித்தான்.
மேலாளன் மவுனம் காத்தான். பின் மெல்லிய குரலில், "" எனக்கும் அச்சமாக உள்ளது. இதை யாரெல்லாம் வைத்திருந்தார்களோ, அவர்கள் பாடாய் பட்டு விட்டனர். இங்கும் கெட்ட சகுனங்கள்.....'' 
""என்னைக் கோழையாக்க வேண்டாம். நான் வீரன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.'' 
""இனி உங்கள் விருப்பம்.... என்னாலும் இனி உங்களோடு உடன்பட்டு செயல்பட முடியாது... நான் 
வருகிறேன்....'' - மேலாளன் தன் தலைப்பாகையை அவிழ்த்துப் போட்டு புறப்பட்டான். அதைக் கண்ட சததன்வாவுக்கு நடுக்கம் உண்டானது. அப்போது காலகண்டர் அங்கு வந்து சேர்ந்தார்.
""..... காலகண்டரா?''
""ஆமாம்.... சததன்வா! நீ ஆத்திரத்தில் அறிவிழந்து செய்யக் கூடாததையெல்லாம் செய்து விட்டாய்
அநியாயமாக சத்ராஜித்தைக் கொன்று விட்டாய். விஷயம்அறிந்த கிருஷ்ண பிரபு உன்னைக் கொல்ல புறப்பட்டு விட்டார். உடன் பலராமரும் வருகிறார். அவர் வந்து உன்னைக் கொல்லும் முன், இந்த மாளிகை நெருப்பே உன்னைச் சாம்பலாக்கி விடும் என்பது இங்கு வந்த பிறகு எனக்கே புரிகிறது. பேராசை பெருநஷ்டம் என்பதற்கு நீயே ஒரு உதாரணம்...'' - காலகண்டர் வருத்தம் கலந்த கோபத்துடன் கூறினார்.
""காலகண்டரே... என்னை நீங்களும் மிரட்டாதீர்கள். என் மாளிகையில் தீப்பிடிக்க எது காரணம்?'' 

""உன் மாளிகையில் மட்டுமல்ல.... சத்ராஜித் அழிவுக்கும் கூட ஆச்சாரம் இன்மையே காரணம். சமந்தகம் மிகவும் பவித்ரமானது. ஸ்படிகம் போல தூய்மையான அதை வணங்கி வழிபட்டால் தொட்டதெல்லாம் வெற்றியாக முடியும். பூஜைக்குரியதை உங்களின் ஆசைக்குரியதாக மட்டுமே கருதிய உங்களின் அறிவு விலாசமே சகலத்துக்கும் காரணம். நீயும் உயிர் பிழைத்து இருக்கப் போவதில்லை. ஒரு வேளை நீ உயிர் பிழைக்க வேண்டும் என்று விரும்பினால், இதோடு இப்போதே புறப்பட்டு, எதிர் வரும் கிருஷ்ணர், பலராமர் முன் சரணாகதி அடைந்திடு. அன்றேல் உனக்கு நரகத்திலும் கூட இடம் கிடைப்பது சிரமம்.....'' -காலகண்டர் கூறி விட்டுச் செல்ல அந்த நிலையிலும், சததன்வாவிடம் ஒரு குரூரமான முடிவே எழுந்தது. சமந்தகமணியுடன் நேராக அக்ரூரரை நோக்கிப் புறப்பட்டான்.
நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை