ஞாயிறு, 29 மார்ச், 2020

ஒப்பிலியப்பனுக்கு பங்குனி பிரம்மோற்சவம் - திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ்

“தபஸ்யே பால்குனே மாஸே ஏகாதச்யாம் திதௌ முனே
புண்யே ச்ரவண நக்ஷத்ரே முஹூர்த்தே அபிஜித் ஆஹ்வயே
ஆஜகாம வஹாயோகீ ஸாக்ஷாத் நாராயணோ ஹரி:
ஸ தேவ: ஸ்ரீநிவாஸாக்யோ பூமிதேவ்யா: பதி: விபு:
வஸுந்தரா விவாஹார்த்தம் லோகாநுக்ரஹ காம்யயா”

- என்கிறது ஒப்பிலியப்பனின் தல புராணம். 

இதன் பொருள்: “பங்குனி மாதம் ஏகாதசி திதியில், திருவோண  நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில், திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலத்தில், பூமி தேவியை மணந்து கொள்வதற்காகவும், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அனைத்து வரங்களும் அருட்வதற்காகவும் ஶ்ரீநிவாசன் என்ற பெயரோடு திருமால் அவதாரம் செய்தார்!”

எனவே வருடந்தோறும் பங்குனி மாதத் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, கும்பகோணத்துக்கு 5 கி.மீ. கிழக்கில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவோணத்துக்கு ஒன்பது நாள் முன் தொடங்கும் இந்த உற்சவம், பங்குனி திருவோணத்தன்று நிறைவடையும். 

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஒப்பிலியப்பனுக்கும் பூமிதேவித் தாயாருக்கும் புறப்பாடு நடைபெறும். அந்தப் புறப்பாடுகளுக்கான பின்னணிகளை ஆசுகவி வில்லூர் ஶ்ரீநிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்னும் காவியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை  அவரது ஸ்லோகங்களோடு இணைத்து இக்கட்டுரையில் காண்போம்:


1. முதல் நாள் - இந்திர விமானம்:

“ஐந்த்ரம் விமானம் அதிருஹ்ய ஸமுஜ்ஜ்வலந்தீம்
இந்த்ரேண ஸர்வ ஜகதாம் தயிதேன ஸாகம்
இந்த்ராதி தேவ வினுதாம் அவலோக்ய மாத:
இந்த்ரப்ரியா இதி பவதீம் நிஜகாத வேத:”

பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் ஒப்பிலியப்பனோடு இந்திர விமானத்தில் பூமி தேவி காட்சி தருகிறாள். இதற்கான காரணம் என்ன? அனைத்துலகுக்கும் இந்திரனாகத் (தலைவனாக) திகழும் திருமாலுக்கு மனைவியாக பூமிதேவி இருக்கிறாள். இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமாளையும் பூமிதேவியையும் வந்து பணிகிறார்கள். வேதமும் பூமிதேவியை ‘இந்திரப் பிரியா’ என்று அழைக்கிறது. இந்தக் கருத்துகளை நமக்கு உணர்த்தவே பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலையில் இந்திர விமான வாகனத்தில் தன் கணவனோடு பூமிதேவி வலம் வருகிறாள்.

2. இரண்டாம் நாள் - சந்திரப்பிரபை வாகனம்:

“ஓஷதீச ப்ரபா வாஹ மத்யக: ஸூன பூஷித:
நிஷ்கலங்கம் யசோ தத்தே ஸுவம்ச கர பங்கஜ:”

இரண்டாம் நாள் மாலை பெருமாளும் தாயாரும் சந்திரப் பிரபை வாகனத்தில் வலம் வருவார்கள். சந்திரனில் சில களங்கங்கள் தெரிகின்றன அல்லவா? ஆங்கிலத்தில் அவற்றை ‘craters’ என்று சொல்வார்கள். வெண்ணிலவைக் களங்கமற்றதாக ஆக்க நினைத்த ஒப்பிலியப்பன், அதையே தனக்கு வாகனமாக்கி அதன் நடுவே பூமிதேவியோடு எழுந்தருளினார். அதனால் சந்திரன் களங்கமில்லாததாக ஆனது! தூய்மை பெற்றது!

3. மூன்றாம் நாள் - சேஷ வாகனம்:

“த்வாம் யோ வஹேத பஹவ: கில தம் வஹந்தி
தத்ர ப்ரமாணம் இஹ மே புஜகாதிபோஸௌ
யஸ்த்வாம் நிஜேன சிரஸா வினதோ ததான:
ஸர்வை: அமீபி: அதுனா த்ரியதே மஹே தே”

யார் ஒருவர் பூமிதேவியைத் தலையால் தாங்குகிறாரோ, அவரை மக்கள் அனைவரும் தலையால் தூக்கிக் கொண்டாடுவார்களாம். அதற்குச் சான்றாகத் தான், உலகத்தைப் (பூமிதேவியை) பாதாளத்தில் இருந்தபடி தலையாலே தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனை உற்சவத்தின் மூன்றாம் திருநாளன்று பலர் தூக்கிக் கொண்டாடுகிறார்களாம். அந்த ஆதிசேஷன் மேல் மூன்றாம் நாள் மாலையில் பூமிதேவியும் ஒப்பிலியப்பனும் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

4. நான்காம் நாள் - கருட,ஹம்ச வாகனங்கள்:

“த்விஜேஷு ஹம்ஸோ பவதீம் ததாதி
த்விஜேஷு ய: குண்டலினாம் நிஹந்தா
நாதம் த்வதீயம் யுவயோ: ப்ரதீதம்
ஸ்புடம் ஹி லோகே ப்ருது தாரதம்யம்”

நான்காம் திருநாளன்று மாலையில் பெருமாள் கருட வாகனத்திலும் பூமிதேவி அன்ன வாகனத்திலும் (ஹம்ச வாகனத்திலும்) புறப்பாடு கண்டருளுவார்கள். பரமஹம்சர்கள் என்று போற்றப்படும் ஞானியர்கள் பூமிதேவியை எப்போதும் தம் உள்ளத்தில் தாங்குகிறார்கள் என்பதை உணர்த்தவே, அந்தப் பரமஹம்சர்களுக்குப் பிரதிநிதியான ஹம்சத்தின் மேல் பூமிதேவி புறப்பாடு கண்டருளுகிறாள். அடியார்களின் துன்பத்தை அழிப்பவராகத் திருமால் திகழ்வதால், பாம்புகளை அழிக்கும் கருடனின் மேல் அவர் புறப்பாடு கண்டருளுகிறார். இப்படித் தாயார் ஹம்ச வாகனத்திலும் பெருமாள் கருட வாகனத்திலும் புறப்பாடு கண்டருளுவதில் இருந்து இருவரின் தன்மைகளையும் நாம் அறிய முடிகிறது.

5. ஐந்தாம் நாள் - ஹநுமந்த, கமல வாகனங்கள்:

“லங்கா புர்யாம் கில ஆஸீத் அதிகமலம் அலம் ஸ்வாமினீ யா ஸதீனாம்
தஸ்யா மாதா ஹி ஸேயம் ஸ்வயம் இதி ஹநுமான் தர்சயதி ஆதரேண”

ஐந்தாம் திருநாளன்று பெருமாள் ஹநுமந்த வாகனத்திலும், பூமிதேவி கமல (தாமரை) வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். இலங்கையில் பூமிதேவியின் மகளான சீதையை ஆஞ்ஜநேயர் முதன்முதலில் கண்ட போது, கலைந்த கூந்தலோடும், கிழிந்த ஆடையோடும், மெலிந்த மேனியோடும், வாடிய முகத்தோடும், கண்ணீரில் தோய்ந்த கண்களோடும் அவள் இருப்பதைக் கண்டு அவர் மிகவும் வருந்தினாராம். 

அந்தக் குறை தீரும் படியாக, பட்டாபிஷேகக் கோலத்தில் ஆஞ்ஜநேயருக்குக் காட்சி தர விழைந்தாளாம் பூமிதேவி. அதனால் தான் ஐந்தாம் திருநாளன்று பெருமாள் அனுமனின் மேல் (ஹநுமந்த வாகனத்தில்) உலா வருகையில், பூமிதேவி தாமரையின் மேல் (கமல வாகனத்தில்) பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் காட்சி தந்து அனுமனை மகிழ்விக்கிறாளாம்.

6. ஆறாம் நாள் - யானை வாகனம்:

“ராஜதே கஜவரே விராஜதே
ராஜ ராஜ நத பாத பங்கஜே
நாயகோ கஜ கதி: ஸுஹம்ஸகா:
த்வம் து ஹம்ஸ கமனேதி ஸாம்ப்ரதம்”
    
ஆறாம் திருநாள் மாலையில் பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் யானை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். யானையைப் போன்ற நடையை உடைய திருமால் யானை வாகனத்தில் வருவதில் வியப்பில்லை. ஆனால் அன்னம் போல் நடக்கும் அன்னை பூமிதேவியும் ஏன் யானை வாகனத்தில் உலா வருகிறாள்? வில்லிபுத்தூரில் ஆண்டாளாக அவதரித்த பூமிதேவி, திருமால் வந்து தன்னை மணந்து கொள்வதாகக் கனவு கண்டாள். அதில்,

“அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!”

என்று, யானையில் திருமாலோடு சேர்ந்து எழுந்தருள விழைந்தாள். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாகவே பூமிதேவி பெருமாளோடு சேர்ந்து யானை வாகனத்தில் எழுந்தருளிப் புறப்பாடு கண்டருளுகிறாள்.

7. ஏழாம் நாள் - சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனம், தோளுக்கு இனியான்:

“ஆந்தோலிகாந்த: அவனீ ரமணம் யுவானம்
ஆஸாத்ய ஸாது திஷணா ஸமயம் ச ஸாயம்
த்ருஷ்ட்வா ரதிம் கலயிதும் க்ருத கௌதுகேயம்
தத்ர க்ஷமேதி பவதீம் அவலோக்ய த்ருத்யா”
    
ஏழாம் திருநாள் பொன்மாலைப் பொழுதில், பெருமாளுக்கும் பூமிதேவிக்கும் சூர்ணாபிஷேகம் நடைபெறும். வடநாட்டில் நடைபெறும் ஹோலிப் பண்டிகையில் வண்ணப் பொடிகளை மக்கள் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்வதைக் காண்கிறோம். அதற்கெல்லாம் வித்திட்டது வண்ணப் பொடியால் இறைவனுக்குச் செய்யும் அபிஷேகமான சூர்ணாபிஷேகம். அந்த சூர்ணாபிஷேகம் நிறைவடைந்தவாறே, பூமிதேவியோடு இளங்குமரனாய்த் தோளுக்கு இனியானில் பெருமாள் புறப்பாடு கண்டருளும் அழகைக் காண்கையில், அடியார்களின் மனம் ஒரு பெண்ணின் நிலைக்கு மாறி இறைவன் மேல் காதல் கொள்கிறது.

“புந்நாகம் அம்ப புருஷே புரத: அதிரூடே
ஸந்நாகம் அம்ஸ மதுரே பவதீ ததாதி
கிந்நாம தேன ஸஹ வாஹனதா கதா ஸ்யாத்
யந்நாம கோப வனிதாஸு ததா க்ஷமாவான்”

அதன் பின் ஏழாம் திருநாள் இரவில் பெருமாள் புன்னை மர வாகனத்திலும், தாயார் தோளுக்கு இனியானிலும் புறப்பாடு கண்டருள்வார்கள். கோபிகைகளின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு புன்னை மரத்தின் மீதேறிக் கண்ணன் அமர்ந்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா? அதை நினைவூட்டவே புன்னை மர வாகனத்தில் பெருமாள் வருகிறார். 

புன்னை மரத்தில் அமர்ந்திருந்த கண்ணன், சாஸ்திர விதிகளை மீறி ஆடையின்றி நீராடிய கோபிகைகளைத் தண்டிக்காமல் அவர்களிடம் பொறுமையையும் கருணையையும் காட்டினான் அல்லவா? அதை உணர்த்தவே புன்னை மரத்தில் செல்லும் பெருமாளைப் பின் தொடர்ந்து, பொறுமை, கருணை இவற்றின் வடிவாய்  இருக்கும் பூமிதேவி தோளுக்கு இனியானில் செல்கிறாள்.

8. எட்டாம் நாள் - குதிரை வாகனம், தோளுக்கு இனியான்:

“ஸுபக துரக வாஹே நாயகே அஸ்மின் த்வதீயே
த்வம் அஸி நனு புரஸ்தாம் அம்ஸ ரம்யே நிவிஷ்டா
துரக முக தவ ஏதத் யுஜ்யதே யுஜ்யதே அதோ
துரக வதன பேத்து: ச இதி மந்த ஸ்மிதாஸ்யா”

எட்டாம் நாள் மாலையில் பெருமாள் குதிரைவாகனத்திலும் பூமிதேவி தோளுக்கு இனியானிலும் காட்சி தருவது வழக்கம். “குதிரை முகத்தோடு ஹயக்ரீவராக அவதரித்த நீங்கள் குதிரை வாகனத்தில் வருவது பொருத்தமாகவே உள்ளது!” என்று பெருமாளைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி தோளுக்கு இனியானில் புறப்பாடு கண்டருளுகிறாள் பூமிதேவி.

9. ஒன்பதாம் நாள் - திருத்தேரோட்டம்:

“ரதஸ்யாந்த: ஸ்தாயாம் த்வயி ஜனனி பவ்யே தவ பதேயயௌ தஸ்யாம் வீத்யாம் ரத இதி லஸன் வர்தத இதி”

நிறைவு நாளான பங்குனி திருவோணத்தன்று காலை திருத்தேரில் பெருமாளும் பூமிதேவியும் எழுந்தருளும் போது, “இறைவன் நம்மைத் தேடி நம் வீதிக்கு வந்துள்ளாரே!” எனப் பரவசப்பட்டு பக்தகோடிகள் பேசும் வார்த்தைகளைக் கேட்டுப் பெருமாளும் பூமிதேவியும் ஆனந்தம் கொள்கிறார்கள்.

10. காலை பல்லக்குப் புறப்பாடு:

“ஆந்தோலிகாஸு பவதீம் ஜனதா வஹந்தீ
சாகாச பத்தன கதாம் தரணீம் ஸ்மரந்தீ
ஆனந்தம் அம்ப நியதம் ஹ்ருதயே பஜந்தீ
சாரோஹயந்தீ அத ச பாதி அவரோஹயந்தீ”
    
உற்சவத்தின் இரண்டாம் திருநாள் தொடங்கி எட்டாம் நாள் வரை காலையில் பெருமாளும் தாயாரும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளுவார்கள். மண்மடந்தையான பூமிதேவி, விண்ணகரம் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் கோவில் கொண்டிருக்கிறாள் அல்லவா? இது (அதாவது விண்ணகரத்தில் மண்மடந்தை குடியிருப்பது) விண்ணிலே மண் குடி இருப்பது போல் உள்ளதாம்! விண்ணிலே மண் குடியிருப்பதைக் காட்ட, மண்மடந்தையான பூமிதேவியைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து விண்ணை நோக்கி உயர்த்திப் பிடிக்கிறார்களாம். பெருமாளோடு பூமிதேவி பல்லக்கில் வலம் வந்தபின், மண்மடந்தை மண்ணில் இருப்பதே பொருத்தம் என்று கருதி பல்லக்கைக் கீழே இறக்கி வைக்கிறார்களாம்.

“டோலாயமானம் கோவிந்தம் மஞ்சஸ்தம் மதுஸூதனம்
ரதஸ்தம் கேசவம் த்ருஷ்ட்வா புனர்ஜன்ம ந வித்யதே”

- என்ற ஸ்லோகம் பிரம்மோற்சவக் காலத்தில் திருமகளையும் திருமாலையும் தரிசிப்போர் மறுபிறவி இல்லாத பேரானந்தமாகிய முக்தியை அடைவார்கள் என்று சொல்கிறது.

நன்றி - தினகரன் ஆன்மிகம் மார்ச் 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக