ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 23 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

பிதா!


பகவான்தான் அனைவருக்கும் பிதா. இங்கே பெற்ற பிதாவான ஹிரண்யன், இந்த இடத்தில் கைவிட்டு விட்டானே! கொல்வதற்கல்லவா பார்த்தான். கைகேயி பெற்ற தாயார். ஆனால், பரதனுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாள்? அப்போதும் ராமன் கைவிட வில்லை. நம் உற்றார், உறவினர், தாய், தந்தை இவர்களெல்லாம் ரட்சகன்... ரட்சகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே! இவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட போதும் பகவான்தான் வந்து ரட்சிக்கிறான்.


அங்கற்கிடறின்றி என்று பாடினார் ஆழ்வார். பிறந்த குழந்தைக்குக் கஷ்டம் கொடுக்காமல் நடத்தினாராம் பகவான். ஆனால், ஹிரண்யகசிபு எவ்வளவு கஷ்டம் கொடுத்தான்! மலை முகட்டிலிருந்து பிடித்து உருட்டிவிட்டான். குழந்தை உருண்டு உருண்டு வரும்போது, தனது ஹ்ருதயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டானாம். இந்த இடத்தில்தான் பகவான் வசிக்கிறார். ‘நான் உருண்டு விழும்போது, என் உடம்பு உருண்டு அவரும் உள்ளே உருண்டு விழுந்துவிட்டால்,’ என்ன செய்வது என்றானாம்.


நாம் கோயிலாழ்வார் வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அதற்குள் சாளக்கிராம மூர்த்தியாக பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அவர் உருளவே கூடாது. நாம் எங்கேயாவது ஊர்ப் பிரயாணம் செல்ல வேண்டுமென்றால், அதை ஜாக்கிரதையாகக் கட்டி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனேயே, அவரவர் நேராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். நாம் பாட்டுக்கு ஏதோ ஒரு பொருள் எடுத்துக்கொண்டு செல்வது போல் அவரை எடுத்துக்கொண்டு போகக் கூடாது. அவரை, அவராக எடுத்துக் கொண்டு போக வேண்டும். அவரைப் பற்றிய எண்ணத்தோடேயே எடுத்துக் கொண்டு போக வேண்டும். போனவுடனேயே தீர்த்தமாடிவிட்டு, ‘பத்திரமாக் கொண்டு போனோமா’ என்று திறந்து பார்க்க வேண்டும். நாம் செய்வோமோ இல்லையோ, பிரஹ்லாதன் செய்தான்.

பகவான் என்னுடைய ஹ்ருதய கமலத்தில் எழுந்தருளியிருக்கிறார். ‘நான் உருளப்போக, அவர் உருண்டுவிட்டால் என்ன செய்வது’ என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம். மலையிலிருந்து பிடித்து உருட்டிவிட்டால், கீழே வந்து பெருமாள் ஏந்திக் கொள்கிறார். மலையைப் பார்த்தவுடனேயே அவனுக்கு பயமே வரவில்லையாம்.


‘நீலமலையிரண்டு....திண்டோள்’ என்கிறார் ஆழ்வார். பெருமாளுடைய தோள்களைப் போன்று, இந்த மலையிருக்கிறதே... என்று நினைத்துக் கொள்கிறான். அவனை நெருப்பில் போட்டு அழுத்தப்போனால், அந்த நெருப்பைப் பார்க்கிறான். ‘என் பிரபுவுக்கு இப்படித் தான் ஒளி இருக்கும்’ என்று நினைக்கிறான். ‘அவருடைய திருமேனி ஒளியைப் போல் இருக்கிறதே’ என்று நினைக்கிறான். விஷத்தைக் கொடுத்தால், ‘இது என் கண்ணனுடைய கருமேனி வர்ணத்திலிருக்கிறதே’ என்று நினைத்துக் கொள்கிறானாம். யானைக் காலில் இடற வைத்தால், இதைப்போல ஒரு யானையை ரக்ஷிக்கத்தானே எம்பெருமாள் ஓடோடி வந்தார்’ என்று நினைக்கிறான். பாம்பை விட்டுக் கடிக்க வைத்தால், ‘இந்தப் பாம்பில்தானே சயனித்துக் கொண்டிருப்பார் பெருமாள்’ என்று நினைக்கிறான்.


கடலில் போட்டு அழுத்தப்பார்த்தால், ‘மனத்துள்ளான், மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்’ என்று தோன்றுகிறதாம். ‘இந்தக் கடலில் தானே அவன் சயனித்துக் கொண்டிருக்கிறான்’ என்று நினைத்தான். ஆக ஒன்றுமே அவனுக்குத் தீங்கு செய்ய மறுக்கிறது. இப்படியே எல்லாவற்றையும் பகவானுடைய சம்பந்தத்தோடேயே நினைத்துக் கொண்டிருந்தாராம். இவற்றையெல்லாம் பார்த்தும், இவை தன் பிள்ளையின் பெருமை என்று ஒத்துக் கொள்வதற்கு, ஹிரண்ய கசிபுவுக்கு மனசு வரவில்லை. என்ன ஒரு இறுமாப்பு. இந்தக் குழந்தை, நல்ல குழந்தை பக்தன் என்று நினைப்பதற்கு அவனுக்கு மனசு வரவில்லை. அவன் ‘என்னைக் கண்டு எமனுக்கு பயமல்லவா? அதனால் என் பிள்ளையையும் பார்த்து பயப்படுகிறான். அவனையும் நெருங்க மாட்டேன் என்கிறான்,’ என நினைத்துக் கொண்டான். தன் பிள்ளைக்கு உயிர் போகாமல் இருப்பதற்குக் காரணம் இறைவனாலே என்று ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு செருக்கு. தன்னாலே என்று நினைக்கிறான்.


கொல்லப் பார்த்தான். அடிக்கப் பார்த்தான். சிறையில் அடைக்கப் பார்த்தான். இந்தச் சிரமங்களைப் பெற்ற தகப்பனே கொடுத்தபோதும்கூட, பகவான் வந்து ரக்ஷித்துவிட்டான். பொங்கினான். அரி உருவமாகப் பிளந்தான். ஹிரண்ய கசிபுவை முடித்த நரசிம்மப் பெருமான் என்று பெயர் பெற்றான். இதைப் பாடிய இதே பேயாழ்வார் கடைசியில் மூன்றாம் திருவந்தாதியில் அற்புதமாய் சொல்கிறார்.


புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியா
இகழ்ந்த இரணியனதாகம் சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே!
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து!


வந்தித்து என்றால் சேவித்து என்று அர்த்தம். நெஞ்சமே பெருமானை வணங்கு. அவனை சேவித்து வாழ்த்த வேணும். ‘நமஹ நமஹ’ என்று போற்ற வேண்டும். பல்லாண்டு பல்லாண்டு என்று சொல்லு. அதனால்தான் லக்ஷ்மியும் பெருமாளும் சேர்ந்திருப்பது பல்லாண்டு. எல்லோரும் மனசார அவனுக்கு மங்களா சாசனம் பண்ண வேண்டுமாம்.


ஆழ்வார் சொல்கிறார், ‘சிந்தப் பிளந்த திருமால் திருவடியே’ என்கிறார். சிந்தப் பிளந்த மால். சிந்தப் பிளந்த நரசிங்கன். சிந்தப் பிளந்த திருமால் திருவடியே என்றார். ஆளரி என்று சொல்லாமல் திருமால் என்று சொன்னதிலிருந்து லக்ஷ்மியுடன் கூடிய நரசிம்மன் என்று ஆகிறதல்லவா! அந்திப் பொழுதத்து என்கிறார். அந்த மாலைப் பொழுது மிகவும் சிறப்பாக இருந்ததாம். என்ன சிறப்பு என்று கேட்டால், ஹிரண்ய கசிபுவே செக்கச் செவேல் என்றிருக்கிறானாம். பெருமாளுக்குக் கோபம் கொப்பளிப்பதால் சிவப்பாய் இருக்கிறார். அவர் பிடரிமயிரை சிலிர்த்துக் கொண்டிருக்கிறார். அது சிவப்பாக உள்ளது. இவனைக் கிழித்தவுடனேயே, உடம்பிலிருந்து ரத்தம் பீறிட்டெழுகிறது. அது சிவப்பாக உள்ளது. சாயங்கால வேளை. ஆகாயம் வேறு சிவப்பாக உள்ளது. இந்த மொத்த சிவப்பும் சேர்ந்து, எந்த சிவப்பு எதில் உள்ளது என்றே தெரியவில்லையாம். ஒரே பளபளப்பு. ஒரே சிவப்பு.


இகழ்ந்த இரணியன் என்றால் பெருமாள் இல்லை என்று நாத்திக வாதம் செய்த இரணியன் என்கிறார். சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த என்றால், அவனுடைய மார்பைப் பிளந்து ரத்தம் சிந்தும்படியாக கிழித்துப் பிளந்தார் என்கிறார். திருமாலே - லக்ஷ்மி நரசிம்மனுடைய திருவடியே. வந்தித்து - என் நெஞ்சமே வாழ்த்து. இது பேயாழ்வார் பாசுரத்தில் சாதித்தது.


பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பார்த்து விட்டோம்.


இனி அடுத்தது திருமழிசையாழ்வார். அவர் இரண்டு திவ்யப் பிரபந்தங்கள் பாடினார். ஒன்று நான்முகன் திருவந்தாதி. மற்றொன்று திருச்சந்த விருத்தம். அதில் நான்முகன் திருவந்தாதியில் பதினெட்டாவது பாசுரத்தில்,


மாறு ஆய தானவனை வள் உகிரால்
மார்வு இரண்டு கூறாகக்
கீறிய கோள் அரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே
மற்று அவரைச்
சார்த்தியிருப்பார் தவம்


என்று பாடினார்.


நரசிம்மப் பெருமானை யாரெல்லாம் போற்றுகிறார்களோ, யாரெல்லாம் ஸ்தோத்திரம் செய்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கும் வைபவத்தைச் சொல்கிறார் இந்தப் பாசுரத்தில். அது என்னவென்று பார்ப்போமே!


(வைபவம் தொடரும்)


நன்றி - தீபம் டிசம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக