ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 24 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஆழ்வார் எழுப்பிய வினா !


நரசிம்மப் பெருமானுக்கு இருக்கும் வைபவத்தைவிட, அவனைச் சார்ந்திருக்கும் பக்தர்களுக்கு வைபவம் அதிகம். அந்த பக்தர்களைவிட, அந்த பக்தர்களின் பக்தர்களுக்குப் பெருமை.


எப்படி?


மாறாய தானவனை - மாறாய - பகவானுக்கு மாற்றுக் கருத்து கொண்ட, அவனை எதிர்த்த - தானவனான ஹிரண்ய கசிபுவை, வள் உகிரால் மார்பிரண்டுக் கூராகக் கீறிய - வள் உகிரால் - கூரான நகத்தால் இரண்டு கூராகக் கிளறிய, கோள் அரியை வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே - அந்தப் பெருமாளை யாரெல்லாம் ஏத்திக் கொண்டு இருப்பார்களோ, யாரெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணுகிறார்களோ, மற்று அவரைச் சார்த்தியிருப்பவர் தவம் - அவனை யார் சார்ந்து இருக்கிறார்களோ, அவர்கள் செய்யும் தவம் இன்னும் உயர்ந்தது என்கிறார்.


அப்படியானால் பெருமாளை ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்கள் ஒரு கோஷ்டி. ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்களை ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்கள் இன்னொரு கோஷ்டி. இந்த கோஷ்டியைவிட, அந்த கோஷ்டி உயர்ந்தது என்கிறார்.


அடுத்து பார்க்கப் போகிற பாசுரம்தான் லக்ஷ்மிநரசிம்மனுடைய அழகைச் சொல்லும் பாசுரம். பகவானுக்கு, ‘நாரசிம்ஹ வபுஹு,’ ‘ஸ்ரீமான்’ என்று இரண்டு திருநாமங்கள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில், நாரசிம்ஹ வபுஹு - விஷ்ணு நரசிம்மப் பெருமான் உருவத்தை எடுத்துக் கொண்டார். ஸ்ரீமான் - பார்த்தவுடனேயே பயம் ஏற்படும் உருவம் அல்லவா. இந்த இடத்தில் லக்ஷ்மி நரசிம்மன் என்று மட்டும் அல்ல, அழகுடைய ஸ்ரீ, அழகுதான் ஸ்ரீ. அழகே வடிவெடுத்தவன் பெருமானாம்.


இவையா திலவாத் திலந்தெரி காண்
இவையா எரிவட்டக் கண்கள் -இவையா
எரிபொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரிபொங்கிக் காட்டும் அழகு


பெருமாள் வாயைப் பெரிதாகத் திறந்தார் அல்லவா - இவையா திலவா - பெரிய பிலத்துவாரத்தைப் போல, குகையைப் போல இருந்தது. எரி காண் - நாக்கு வெளியே வந்து எரிவதுபோல இருக்கிறது - இவையா எரிபட்ட கண்கள் - கொழுந்து விட்டு எரியும் துண்டங்களைப் போன்ற இரண்டு கண்கள் - அங்கண் ஞால மஞ்ச அங்கோர் அரியா அவதரித்தவன். இவையா எரிபொங்கு காட்டும் இமையோர் பெருமான் - இமையவர்களுக்கெல்லாம் பெருமான், சர்வேஸ்வரன். சர்வ வியாபகன், - அரி பொங்கிக் காட்டும் அழகு - அரி, நரசிங்கப் பெருமான், சிங்கத்தின் பொங்கும் அழகு. அதனால் பெருமாள் பயங்கரமானவர் என்று நினைக்கக் கூடாது. பயங்கரம்தான்!

நான் ஹிரண்யகசிபுவாக இருந்தால் பெருமாள் பயங்கரமாகத்தான் இருப்பார். நான் பிரஹலாதனாக இருந்தாலோ, அதே பெருமாள் அழகாக இருப்பார். ஆகவே, நான் யாராக இருக்கிறேன் என்பது முக்கியம். நான் ஹிரண்யகசிபுவாக இருந்தால், அவர் பயங்கரமாக இருப்பார். நான் பிரஹலாதனாக இருந்தால், அவர் பிரியங்கரமாக இருப்பார். என் உள்ளத்தில் நல்ல சிந்தனையுடன் போனேனா, அல்லது தீய சிந்தனையுடன் போனேனா என்பதுதான் முக்கியம். இதை அடுத்த பாசுரத்தில் திருமழிசை ஆழ்வார் சாதிக்கிறார்.


அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - 
குழவியாத் தானேழுலகும் தன்மைக்கும்
தன்மையனே
மீனா உயிரெடுக்கும் வித்து


அழகியான் தானே அரி உருவம் தானே - அரி உரு, சிங்க உரு. சிங்க உரு ரொம்ப அழகாக இருக்கிறது. இருக்குமா? பார்த்தால் பயங்கரமாக இருக்கிறதே. எப்படி அழகாக இருக்கும்? சிங்கம் காட்டுக்கே அரசன். நாம் எல்லோரும் மிருகக்காட்சி சாலையில் பார்க்கிறோமே! என்னதான் மற்ற மிருகங்களுக்கு என்று ஒரு அழகு இருந்தாலும், சிங்கத்தின் அழகு அழகு தான். திரும்பத் திருப்பத் தன்னைப் பார்க்க வைக்கும் சிங்கம். கூண்டுகிட்டே அது வந்தா ஓடி வந்துவிடுவோம்.


ஆனால், தூர நின்று பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது, அல்லவா? அது சிங்கத்துக்கே இருக்கும் பெருமை. அது அவருக்கே இருக்கும் அழகு. அதனால் தான் - அழகியான் தானே அரி உருவம் தானே என்றார். பழகியான் தாளே பணிமின் - நம்முடன் எப்போதுமே பழகி அணுகுவதற்குப் பரம சுலபராக இருப்பவர் பகவான். அதனால்தான், அவரது திருவடித் தாமரைகளைப் பற்றுங்கள் என்று, திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் ரொம்ப ஆச்சரியமாகப் பாடினார். அவரே திருச்சந்தவிருத்தத்தில் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார்.


வரத்தினில் சிரத்தை மிக்க வாளெயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய்
இரத்திநீ இதென்ன பொய்? இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே!


கண்ணனே உன் கருத்து யாருக்குத் தான் தெரியும்? உன்னுடைய வயிற்றில் அனைத்து உலகத்தையும் ஒரு நாள் வைத்தாய். காப்பாற்றினாய். அப்படி என்றால் அது உன்னுடைய சொத்தாகி விட்டதல்லவா? எப்போது உலகத்தையெல்லாம், ‘மஞ்சாடு வரையேழும் கானகமும் மண்ணகமும் எஞ்சாமல் வயிற்ற டக்கினா’ என்று உன் வயிற்றில் வைத்து ரட்சித்தாயோ, அப்போதே அதெல்லாம் உன்னுடையது.


உன்னுடையதை மகாபலிச் சக்கரவர்த்தி பறித்துக் கொண்டு போய்விட்டான் என்றவுடன், அவனிடம் நீ சென்று யாசித்தாயாமே? பிச்சை எடுத்தாயாமே? யாராவது தன் சொத்தை, தானே பிச்சை எடுத்துத் திரும்பிப் பெறுவார்களா? இதென்ன எங்கும் இல்லாத அதிசயமாக இருக்கிறது? எங்கும் இல்லாத கூத்தாக இருக்கிறது? என்று வியக்கிறார்.


இதேபோல, கூரத்தாழ்வான் ஒரு ஸ்லோகத்தில் பகவானை விசாரிக்கிறார். ‘உன்னால் படைக்கப்பட்ட உலகம், உன்னால் காக்கப்படும் உலகம், உன்னால் அழிக்கப்படும் உலகம். அந்த உலகத்தில் ஒரு சின்னப் பகுதியை மகாபலி எடுத்துக் கொண்டு போய்விட்டானாம்! அதை நீ பிச்சை எடுத்துக் கேட்கிறாயாம்! என்ன கதை என்றே எனக்குத் தெரியவில்லை. போ! இதை மீட்பதற்கு பிச்சை எடுப்பதைத் தவிர, உனக்கு வேறு வழியே தெரியவில்லையா?’


அங்கு அவர் கேட்டதைப் போலவே, இங்கு இவர் கேட்கிறார், - இரத்தினி இதென்ன பொய் இரந்த மண் வயிற்றுளே கரத்தி - இந்த மண்ணை நீதானே வயிற்றில் வைத்திருந்தாய்? உன் கருத்தை யார் தான் அறிவார்கள்? என்ன கருத்து என்பதை முதல் வரியில் சொல்கிறார்! - வரத்தினில் சிரத்தை மிக்க வாளெயிற்று மற்றவன்.


உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய் - வரத்தால் இறுமாய்ந்து போனான். வரத்திலேயே சிரத்தையாக இருந்து விட்டான். வாளைப் போன்ற எயிறு கொண்ட மற்றவனான ஹிரண்யகசிபு. ஹிரண்யகசிபுவின் மார்பினில் கரத்தை வைத்தாய்.


பக்த பிரகலாதனுக்காக ஹிரண்யகசிபுவை முடித்தான். அவனுக்குத் தன் தரிசனத்தையே வரமாகக் கொடுத்தான். பிரகலாத வரதனாக பெருமான் சேவை சாதிக்கிறார்.


குழந்தைக்கு நல்லது நடந்தால் யாருக்கு முதலில் சந்தோஷம்? தாய்க்கு! தாயின் திருப்தி அடைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே லக்ஷ்மி நரசிம்மனாக பெருமாள் சேவை சாதித்துக் கொண்டு இருக்கிறார்.


(வைபவம் தொடரும்)


நன்றி - தீபம் - ஜனவரி 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக