ஶ்ரீமத் பாகவதம் - 293

ஶ்ரீமத் பாகவதம் - 293

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தேழாவது அத்தியாயம்

(த்யுமானை ப்ரத்யும்னன் அடிக்கையில், யதுக்கள் யுத்தம் செய்து கொண்டிருக்கையில், ஸ்ரீக்ருஷ்ண பகவான் வந்து, ஸால்வனை வதித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ப்ரத்யும்னன், ஜலத்தை ஆசமனம் செய்து, கவசம் பூண்டு, தனுஸ்ஸைத் தரித்து, “ஸாரதி! என்னை வீரனாகிய த்யுமானிடம் கொண்டு போய்ச் சேர்ப்பாயாக” என்றான். அந்த ருக்மிணி புத்ரன், தன் ஸைன்யங்களை (படைகளை) அழிக்கின்ற த்யுமானைக் கிட்டி, எதிர்த்துத் தகைந்து, புன்னகை செய்து கொண்டே, எட்டு பாணங்களால் (அம்புகளால்) அடித்தான்; மற்றும், நான்கு குதிரைகளை நான்கு பாணங்களாலும், ஸாரதியை ஒரு பாணத்தினாலும் அடித்து, இரண்டு பாணங்களால் தனுஸ்ஸையும் (வில்லையும்) த்வஜத்தையும் (கொடியையும்), மற்றொரு பாணத்தினால் த்யுமானுடைய சிரஸ்ஸையும் (தலையையும்) அறுத்தான். 

கதன், ஸாத்யகி, ஸாம்பன் முதலிய யாதவர்கள் ஸௌபப்பதியான ஸால்வனுடைய ஸைன்யத்தை (படையை) அடித்தார்கள். ஸௌப விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் கழுத்தறுப்புண்டு ஸமுத்ரத்தில் விழுந்தார்கள். 

இவ்வாறு யாதவர்களும், ஸால்வர்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருக்கையில், அந்த யுத்தம் பயங்கரமாகவும், துமுலமாகவும் (ஆரவாரத்துடனும்) ஒன்பது ராத்ரிகள் நடந்தது. தர்ம புத்ரனால் அழைக்கப் பெற்று, இந்த்ர ப்ரஸ்தத்திற்குச் சென்ற ஸ்ரீக்ருஷ்ணன், ராஜஸூய யாகம் நடந்து சிசுபாலனும் முடிகையில், குருவ்ருத்தர்களிடத்திலும் (குரு வம்சத்துப் பெரியோர்களிடமும்), முனிவர்களிடத்திலும், குந்தியிடத்திலும், அவன் பிள்ளைகளான தர்மபுத்ராதிகளிடத்திலும், சென்று “நான் தமையனாகிய பலராமனுடன் இவ்விடம் வந்தேன். சிசுபாலனுடைய பக்ஷத்தில் சேர்ந்த மன்னவர்கள் என் பட்டணத்தை நிச்சயமாய் நாசம் செய்வார்கள். ஆகையால், நான் புறப்பட்டுப் போக வேண்டும்” என்று மொழிந்து விடை பெற்றுக்கொண்டு, மிகவும் பயங்கரமான அவ சகுனங்களைப் (தீய அறிகுறிகளைப்) பார்த்துக்கொண்டே, த்வாரகைக்குத் திரும்பி வந்தான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணன், தன்னுடையவர்கள் யுத்தம் செய்வதையும், ஸௌப விமானத்தையும், ஸால்வனையும் கண்டு, பட்டணத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்படி பலராமனை ஏற்படுத்தி, தாருகனைப் பார்த்து “ஸாரதீ! என் ரதத்தைச் சீக்ரத்தில் ஸால்வனிடம் கொண்டு போவாயாக. அவனோடு நான் யுத்தம் செய்ய வேண்டும். இந்த ஸால்வன், பெரிய மாயாவி; ஒருவராலும் போதிக்க முடியாத ஸௌபமென்னும் விமானமுடையவன்” என்று மொழிந்தான்.

 இவ்வாறு சொல்லப்பட்ட தாருகன், ரதத்தின் மேல் படிய உட்கார்ந்து, குதிரைகளை ஓட்டினான். கருடக் கொடியுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ண ரதத்தை, யுத்த பூமியில், அவன் பக்ஷத்தைச் சேர்ந்த யாதவர்களும், சத்ரு பக்ஷத்திலுள்ளவர்களும் கண்டார்கள். 

ஸைன்யமெல்லாம் பெரும்பாலும் அழியப்பெற்ற ஸால்வன், யுத்த பூமியில் ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, பயங்கரமான ஒலியுடைய கதையை அவனுடைய ஸாரதியின் மேல் ப்ரயோகித்தான். ஸ்ரீக்ருஷ்ணன், குறைக் கொள்ளிபோல் (தீப்பந்தம் போன்று) வேகத்துடன் ஆகாயத்தில் வருவதும், திசைகளையெல்லாம் விளங்கச் செய்வதுமாகிய அந்தக் கதையைப் பாணங்களால் நூறு துண்டங்களாகச் சேதித்தான். மற்றும், அவன் அந்த ஸால்வனைப் பதினாறு பாணங்களால் அடித்து, ஸூர்யன் தன் கிரணங்களால் ஆகாயத்தைத் துளைப்பது போல ஆகாயத்தில் சுழல் மிடுகின்ற ஸௌப விமானத்தையும் பாண ஸமூஹங்களால் அடித்தான். ஸால்வன் சார்ங்கமென்னும் தனுஸ்ஸோடு கூடிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜத்தை (கையை) அடித்தான். அவனுடைய புஜத்தினின்று (கையிலிருந்து) சார்ங்கம் (வில்) விழுந்தது. அப்படி ஒருகாலும் நடந்ததில்லையாகையால், அது மிகவும் ஆச்சர்யத்திற்கிடமாயிருந்தது. அங்கு யுத்தம் பார்க்கிற ப்ராணிகள் அனைவரும், பெரிய ஹா ஹாகாரம் (சப்தம்) செய்தனர். ஸௌப விமானத்தையுடைய ஸால்வன் (சார்ங்கம் நழுவி விழுந்ததற்கு மிகவும் ஸந்தோஷம் அடைந்து) உரக்க ஸிம்ஹநாதம் செய்து, ஜனார்த்தனனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ஸால்வன் சொல்லுகிறான்:- மூடனே! நீ எங்கள் ஸ்னேஹிதனான சிசுபாலனுக்குப் பார்யையாக ஏற்படுத்தப்பட்ட ருக்மிணியை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் பறித்துக் கொண்டு போனாய். மற்றும், எங்கள் ஸ்னேஹிதன் ஸபையினிடையில் மனவூக்கமற்றிருக்கையில், அவனை வதித்தாய். நாம் எங்கும் தோற்பதில்லையென்று அபிமானித்துக் கொண்டிருக்கிற அத்தகையனான உன்னை, இப்பொழுது கூரான பாணங்களால் மீண்டு வரமுடியாத ம்ருத்யுவினிடம் (யமனிடம்) அனுப்பி விடுகிறேன். என்னெதிரில் நிற்பாயாயின், இவ்வாறு நிச்சயமாய் நடத்தி விடுகிறேன். நிற்பாயாக.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- மந்தனே! (மதியற்றவனே!) வீணாகப் பிதற்றுகின்றாய். அருகாமையில் வந்திருக்கின்ற ம்ருத்யுவையும் (மரணத்தையும்) நீ காணப் பெறாதிருக்கின்றாய். சூரர்கள் பௌருஷத்தைக் (போராண்மையைக்) காட்டுவார்களன்றி, வீணாகப் பலவும் பேசமாட்டார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு மொழிந்து, மிகவும் கோபித்து, பயங்கரமான வேகமுடைய கதையால் ஸால்வனைக் கழுத்துக்கும், தோளுக்கும் ஸந்தியில் (இடையில்) அடித்தான். அந்த ஸால்வன், குருதியைக் கக்கிக் கொண்டு நடுங்கினான். கதை திரும்பி வருகையில், ஸால்வன் மறைந்தான். அப்பால், ஒரு முஹூர்த்த காலம் கழித்தவுடனே, ஒரு புருஷன் வந்து, ஸ்ரீக்ருஷ்ணனைத் தலையால் வணங்கி, அழுதுகொண்டே, “தேவகியால் அனுப்பப்பட்டேன்” என்று, மீளவும் அவனைக் குறித்துத் “தந்தையிடத்தில் மிகுந்த அன்புடையவனே! பசு ஹிம்ஸை செய்பவன் பசுவைக் கட்டிக்கொண்டு போவது போல, ஸால்வன் உன் தந்தையாகிய வஸுதேவனைக் கட்டிக் கொண்டு போனான்” என்றான். ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு அனிஷ்டமான (துன்பம் தரும்) வார்த்தையைக் கேட்டு, மனுஷ்யர்களின் ஸ்வபாவத்தைப் பின் சென்று, மன இரக்கமும் மனவருத்தமுற்று, அற்ப புருஷன் போல இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:- மிகவும் அற்ப பலனான ஸால்வன், எப்படிப்பட்ட ஸங்கடத்திலும் பரபரப்பின்றிப் பின் வாங்காதிருக்கும் தீரனும், தேவதைகளாலாவது, அஸுரர்களாலாவது ஜயிக்க முடியாதவனுமாகிய பலராமனை ஜயித்து, என் தந்தையைக் கொண்டு வந்தான். ஆ! தெய்வம் மிக்க வலிவுடையது.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீ க்ருஷ்ணன் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், ஸால்வன் தன் மாயையினால் வஸுதேவனைப் போல ஒருவனைக் கொண்டு வந்து, ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

ஸால்வன் சொல்லுகிறான்:- நீ எவனுக்காக இங்குப் பிழைத்திருக்கின்றாயோ, அத்தகைய உன்னைப் பிறப்பித்த தந்தையை இதோ நான் கொண்டு வந்திருக்கின்றேன். இவனை நான், இப்பொழுது நீ பார்த்துக் கொண்டிருக்கையில், வதிக்கப் போகிறேன். மூடனே! நீ வல்லையாயின் இவனை என்னிடத்தினின்று காப்பாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாயாவியாகிய ஸால்வன் இவ்வாறு விரட்டி அவ்வஸுதேவனுடைய தலையை அறுத்தெடுத்துக் கொண்டு, ஆகாயத்திலிருக்கிற ஸௌப விமானத்தில் ஏறிக் கொண்டான். தனக்கு அஸாதாரணமான அறிவையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஒரு முஹூர்த்த காலம் இவ்வாறு மனுஷ்யர்களின் ஸ்வபாவத்தில் ஆழ்ந்து, பந்துக்களிடத்தில் மனவிருப்பம் தலைக் கொண்டு வருத்தமுற்றிருந்தான். அப்பால், மஹானுபாவனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அவையெல்லாம் மயனால் போதிக்கப்பட்ட ஸால்வன் ப்ரயோகித்த அஸுர மாயை என்று தெரிந்து கொண்டான். ஸ்வப்னம் (கனவு) கண்டு விழித்துக் கொண்டவன், ஸ்வப்னத்தில் (கனவில்) கண்ட வஸ்துக்களைக் காணாதது போல, மாயையென்று தெளிந்தறிந்த அவ்வச்சுதன், அப்பொழுதே யுத்த பூமியில் தூதனையாவது, தன் தந்தையின் சரீரத்தையாவது காணவில்லை. பின்னையோவென்றால், ஸௌப விமானத்தில் ஏறிக் கொண்டு ஆகாயத்தில் ஸஞ்சரிக்கின்ற சத்ருவைக் கண்டு, அவனை வதிக்க முயன்றான். 

ராஜர்ஷீ! சில ரிஷிகள் முன்பின் ஸந்தர்ப்பங்களை ஆராயாமல் இவ்வாறு சொல்லுகிறார்கள். (ஸ்ரீக்ருஷ்ணன் ராஜஸூயத்திற்குப் போனபோது பலராமனுடன் போகவில்லை. பலராமனைப் பட்டணத்திலிருக்கும்படி நிறுத்தி விட்டுப் போனதாகவே முன்பு கூறப்பட்டது. ஸ்ரீக்ருஷ்ணன் இந்த்ர ப்ரஸ்தத்திலிருக்கும் பொழுது ஸால்வன் வந்தானென்பதும் சரியன்று. “ஸால்வனோடு யுத்தஞ்செய்து கொண்டிருந்தேனாகையால் உங்கள் த்யூதத்தைப் (சொக்கட்டான் ஆட்டம்) பற்றி எனக்குத் தெரியாமற் போய்விட்டது” என்று காம்யக வனத்திலிருந்த பாண்டவர்களுக்கு நல்வார்த்தை சொல்லும் பொழுது ஸ்ரீக்ருஷ்ணன் மொழிந்தானாகையால் ஸால்வ யுத்தம் அதற்குப் பின்பு நடந்ததாகவே தெரியவருகிறது. ஆகையால் “நான் என் தமையனாகிய பலராமனுடன் இவ்விடம் வந்துவிட்டேனாகையால் சத்ருக்கள் என் பட்டணத்தைப் பாழ்செய்வார்கள். ஆகையால் புறப்பட்டுப் போக வேண்டும்” என்று சொல்லி விடைப்பெற்றுக்கொண்டு போனானென்பது சரியன்று.) 

இது தங்கள் வார்த்தையோடு விரோதிக்கும் என்பதையும் கூட அவர்கள் நினைக்கவில்லை. ஸமஸ்த வஸ்துக்களைப் பற்றின அறிவும், அவற்றின் உண்மையைப்பற்றின, ஐச்வர்யமும் ஆகிய இவை அளவற்றிருப்பவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய ஸர்வேச்வரனுக்கு ஜ்ஞானமில்லாத மூடர்களுக்கு உண்டாகக்கூடிய யோக மோஹங்களாவது (மனக்கலக்கமாவது), ஸ்னேஹம் (அன்பு), பயம் இவைகளாவது எப்படி ஸம்பவிக்கும்? பண்டிதர்கள் எவனுடைய பாதார விந்தங்களின் பரிசர்யையால் (பணிவிடையால்) நிலை நின்ற ஆத்ம ஜ்ஞானத்தைப் பெற்று, அனாதியாக (தொன்று தொட்டு) ஏற்பட்டிருக்கிற தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்மப்ரமம் (நாம் பகவானுக்கு உட்படாது, தாமே தம் விருப்பப்படி செயல்பட வல்லவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய விபரீத ஜ்ஞானமாகிற பிசாசத்தைப் போக்கிக் கொள்கிறார்களோ, தங்களுக்கு ஸ்வபாவ ஸித்தமான (இயற்கையாக ஏற்பட்ட) அபஹதபாப்மத்வம் (பாப ஸம்பந்தம் இல்லாமை) முதலிய குணங்கள் தோன்றப் பெறுகையாகிற ஐச்வர்யத்தையும் பெறுகிறார்களோ, அத்தகையனும், ஸத்புருஷர்களுக்குக் கதியுமாகிய பரம புருஷனுக்கு, மோஹமென்பது எப்படி ஸம்பவிக்கும்? (அவன் பாதங்களில் பரிசர்யை (பணிவிடை) செய்பவர்களுக்கும்கூட மோஹம் உண்டாகாதென்றால், அவனுக்கு மோஹம் உண்டாகாதென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?) 

எங்கும் தடைபடாத பராக்ரமமுடைய ஸ்ரீக்ருஷ்ணன், பலத்தினால் பாண ஸமூஹங்களை ப்ரயோகித்து, யுத்தம் செய்கின்ற ஸால்வனைப் பாணங்களால் அடித்து, அவனுடைய கவசத்தையும், தனுஸ்ஸையும், சிரோமணியையும் அறுத்தான்; ஸௌப விமானத்தையும் கதையினால் முறித்தான். அவ்விமானம், ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஹஸ்தத்தினால் ப்ரயோகிக்கப்பட்ட கதையினால் ஆயிரந் துணுக்கைகளாகச் சூர்ணமாகி, ஸமுத்ர ஜலத்தில் விழுந்தது. அப்பால், ஸால்வன் அந்த ஸௌப விமானத் துறந்து, பூமியில் இறங்கி நின்று, கதையை எடுத்துக் கொண்டு வேகமாக ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். 

அவ்வாறு அவன் எதிர்த்தோடி வருகையில் ஸ்ரீக்ருஷ்ணன், தோள்வளைகளோடு கூடின அவன் கையைப்  பாணத்தினால் (அம்பினால்) அறுத்து, உடனே அவனை வதிக்கும் பொருட்டு, ப்ரளய காலத்து ஸூர்யனோடொத்திருப்பதும், அற்புதமுமாகிய சக்ராயுதத்தை ஏந்திக்கொண்டு, ஸூர்யனோடு கூடிய உதய பர்வதம் போல் ப்ரகாசித்தான். வஜ்ராயுதத்தினால் வ்ருத்ராஸுரனுடைய சிரஸ்ஸை அறுத்தாற்போல, ஸ்ரீக்ருஷ்ணன் பல மாயைகளையுடைய ஸால்வனுடைய சிரஸ்ஸை அந்தச் சக்ராயுதத்தினாலேயே அறுத்தான். அப்பொழுது, ஜனங்கள் ஹாஹாவென்று சப்தம் செய்தார்கள். ஸௌப விமானம் கதையால் முறிந்து, பாபிஷ்டனாகிய அந்த ஸால்வனும் முடிந்து விழுகையில், தேவ கணங்களால் அடிக்கப்பட்ட தேவ துந்துபி வாத்யங்கள் முழங்கின. அப்பொழுது, தந்தவக்த்ரன் தன் ஸ்னேஹிதர்களான ஸால்வாதிகளுக்கு உபகாரஞ் செய்ய விரும்பி, கோபத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். 

எழுபத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை