வியாழன், 8 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 294

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தெட்டாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தந்தவக்த்ர விதூரதர்களை வதித்தலும், தீர்த்த யாத்ரையாகச் சென்ற பலராமன், ஸூதரை வதித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! தந்தவக்த்ரன், தன் நண்பர்களும் பரலோகம் அடைந்தவர்களுமான சிசுபாலன், ஸால்வன், துர்ப்புத்தியான பௌண்ட்ரகன் இவர்களுக்கு  ஸ்னேஹத்தினால் செய்ய வேண்டிய கார்யத்தைச் செய்ய முயன்று, மிகவும் கோபமுற்று, கையில் கதையை ஏந்தி,  தனியனாகவே பதாதியாக (கால்நடையாக) விரைந்து, மிகுந்த பலமுடையவனாகையால், பூமியைப் பாதங்களால் நடுங்கச் செய்து கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனை எதிர்த்து வந்தான். ஸ்ரீக்ருஷ்ணன், அவன் அவ்வாறு வருவதைக் கண்டு, தானும் விரைவுடன் கதையை எடுத்துக் கொண்டு, ரதத்தினின்றும் இறங்கி, ஸமுத்ரத்தை அதன்கரை தடுப்பது போல, அவனை எதிர்த்துத் தடுத்தான். கொடிய மதமுடைய தந்தவக்த்ரன், கதையை மேல் தூக்கிக் கொண்டு, முகுந்தனைப் பார்த்து மொழிந்தான்.

தந்தவக்த்ரன் சொல்லுகிறான்:- எனக்கு மிகவும் ஸந்தோஷம் ஆயிற்று. ஏனென்றால், நீ தெய்வாதீனமாய் இப்பொழுது என் கண்ணில் பட்டாயல்லவா? ஏ, க்ருஷ்ணா! நீ எங்களுக்கு அம்மான் பிள்ளை. ஆயினும், மித்ரர்களுக்கே (நண்பர்களுக்கே) த்ரோஹம் (கெடுதி) செய்பவனாகி, என்னையும் கொல்ல விரும்புகின்றாய். வஜ்ரம் போன்ற இக்கதையினால் உன்னை வதிக்கப் போகிறேன். நண்பர்களிடத்தில் மிகுந்த அன்புடைய, இப்பொழுது தேஹத்தில் தொடர்ந்து வருகின்ற வியாதியைப் போல், ம்ருத்யுவை (மரணத்தை) விளைப்பவனும், பந்து ரூபனான சத்ருவுமாகிய உன்னைக் கொன்று, எனது நண்பர்களின் கடனைத் தீர்த்துக் கொள்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாவெட்டிகளால் (அங்குசத்தால்) யானையை வருத்துவது போல், தந்தவக்த்ரன் பருஷ (கொடிய) வசனங்களால் (சொற்களால்) ஸ்ரீக்ருஷ்ணனை வருத்திக் கொண்டு, கதையினால் அவனைத் தலையில் அடித்து, உடனே ஸிம்ஹம் போல் கர்ஜனை செய்தான். ஸ்ரீக்ருஷ்ணன், யுத்தத்தில் கதையினால் அடிக்கப்பட்டும், சிறிதும் சலிக்கவில்லை. பின்னையோவென்றால், பெரும் பளுவுடைய கௌமோதகி என்னும் தன் கதையால் காடமாக (பலமாக) அவனை மார்பில் அடித்தான். அவ்வாறு அடியுண்ட அந்த தந்தவக்த்ரன், அவ்வடியினால் நன்றாக ஹ்ருதயம் பிளவுண்டு, முகத்தினின்று குருதியைக் (ரத்தத்தைக்) கக்கிக் கொண்டு, தலை மயிர்களையும், புஜங்களையும், பாதங்களையும் பரப்பி, ப்ராணன்களை இழந்து, பூமியில் விழுந்தான். 

மன்னவனே! சிசுபால வதத்தில்போல ஸமஸ்த பூதங்களும் பார்த்துக் கொண்டிருக்கையில், மிகவும் ஸூக்ஷ்மமாயிருப்பதும், அற்புதமுமாகிய ஒரு தேஜஸ்ஸு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் ப்ரவேசித்தது. அந்த தந்தவக்த்ரனுடைய ப்ராதாவான (ஸஹோதரனான) விதூரதன், தன் ப்ராதாவான தந்தவக்த்ரன் மரணமடைந்த சோகத்தினால் மிகவும் வருந்தி, பெருமூச்செறிந்து கொண்டு, கத்தி, கேடயங்களை ஏந்தி, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை வதிக்க விரும்பி, அவனை எதிர்த்து வந்தான். 

ராஜச்ரேஷ்டனே! ஸ்ரீக்ருஷ்ணன், கத்தியின் நுனி போன்ற நுனியுடைய சக்ராயுதத்தினால், அவ்விதூரதனுடைய சிரஸ்ஸையும், கிரீட குண்டலங்களுடன் அறுத்துத் தள்ளினான். ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு ஸௌப விமானத்தையும், ஸால்வனையும், தந்தவக்த்ரனையும், அவன் தம்பியாகிய விதூரதனையும், பொறுக்க முடியாத மற்றுமுள்ள சத்ருக்களையும் வதித்து, தேவதைகள் மனுஷ்யர், முனிவர், ஸித்தர், கந்தர்வர், வித்யாதரர், பெருமை பொருந்திய உரகர், அப்ஸர மடந்தையர், பித்ருக்கள், யக்ஷர், கின்னரர், சாரணர் இவர்கள் தன் விஜயத்தைப் பாடிப் பூமழைகள் பொழியவும், வ்ருஷ்ணி ச்ரேஷ்டர்கள் சூழ்ந்து வரவும் பெற்று, அலங்காரம் செய்யப்பெற்ற பட்டணத்திற்குள் ப்ரவேசித்தான். 

யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஜகத்தையெல்லாம் அடக்கியாள்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு பிறரால் ஒரு கால் ஜயிக்கப்பட்டு, ஒருகால் தானும் அவர்களை ஜயிக்கிறானென்று பசுக்களோடொத்த அறிவுடைய மூடர்கள் நினைக்கிறார்கள். (அவன் ஒருவராலும் ஜயிக்கப்படாதவனாகவே இருந்து, பிறரை ஜயிக்கிறானென்பதை அறிகிறதில்லை). 

இப்படியிருக்க பலராமன், கௌரவர்கள், பாண்டவர்களோடு யுத்தம் செய்ய முயன்றார்களென்று கேள்விப்பட்டு இருதரத்தவர்களும் பந்துக்களாகையால், தான் ஒருவரிடத்திலும் பக்ஷபாதமின்றி (சார்ந்திராமல்) மத்யஸ்தனாகிப் (நடுநிலையாளனாக) புண்ய தீர்த்த ஸ்னானமென்னும் வ்யாஜத்தினால் (சாக்கையிட்டு) ஊரை விட்டுப் புறப்பட்டுப் போனான். அவன், ப்ரபாஸ தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, பித்ருக்கள், தேவதைகள், ரிஷிகள், மனுஷ்யர் இவர்களுக்குத் தர்ப்பணம் செய்து, ப்ராஹ்மணர்களால் சூழப்பட்டு, மேற்கு முகமாகப் பெருகுந்தன்மையுடைய ஸரஸ்வதி நதிக்குப் போனான். 

ப்ருதூதகம், பிந்துஸரஸ்ஸு, த்ரிகூடம், ஸுதர்சனம், விசாலம், ப்ரஹ்ம தீர்த்தம், சக்ர தீர்த்தம், த்ரிவேணி, யமுனை, அதைச் சேர்ந்த புண்ய தீர்த்தங்கள், கங்கை, அதைச் சேர்ந்த புண்ய தீர்த்தங்கள் ஆகிய இப்புண்ய தீர்த்தங்களுக்குச் சென்று, ரிஷிகள் ப்ரஹ்மஸத்ரம் (நீண்ட நாள் செய்யப்படும் யாகம்) நடத்துகிற நைமிசாரண்யத்திற்குச் சென்றான். தீர்க்க ஸத்ரமென்னும் ப்ரஹ்மஸத்ரத்தை நடத்திக்கொண்டிருக்கிற சௌனகாதிகளான அம்முனிவர்கள், அந்த பலராமன் வருவதைக் கண்டு அபிநந்தித்து (வரவேற்று), எழுந்து நமஸ்கரித்து, விதிப்படி பூஜித்தார்கள். 

அப்பலராமன், தன் பரிவாரங்களுடன் பூஜிக்கப்பட்டு, ஆஸனத்தில் உட்கார்ந்து, மஹர்ஷியாகிய பாதராயணருடைய சிஷ்யரான ரோமஹர்ஷணர் எழுந்திராமலே உட்கார்ந்திருக்கக் கண்டான். ஸுதர் எழுந்திராமை மாத்ரமேயன்றி, நமஸ்காரமாவது, அஞ்சலியாவது செய்யாமல், அந்த ப்ராஹ்மணர்களுக்கெல்லாம் மேலாக உயர்ந்த ஆஸனத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, பலராமன் கோபமுற்று, “தாழ்ந்த குலத்தில் பிறந்த இந்த ஸூதன், இந்த ப்ராஹ்மணர்களையும், தர்மத்தைப் பாதுகாப்பவர்களான நம்மையும், அலக்ஷியம் செய்து, எந்தக் காரணத்தினால் உயர்ந்த ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கிறான்? ஒரு காரணத்தையும் காணோம். ஆகையால், துர்ப்புத்தியுடைய இவன், வதிக்கத் தகுந்தவன். 

ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த மஹானுபாவரான பாதராயண மஹர்ஷிக்குச் சிஷ்யனாகி, இதிஹாஸ புராணங்களையும், பல தர்மசாஸ்த்ரங்களையும் முழுவதும் அத்யயனம் செய்து (கற்று), இந்த்ரிய நிக்ரஹமும் (புலனடக்கமும்), வணக்கமுமின்றி வீணாகவே தன்னைத் தானே பண்டிதனாக அபிமானித்துக் கொண்டிருக்கிற இந்த ஸூதனுக்கு அந்த இதிஹாஸ அத்யயனம் முதலியவை அனைத்தும் மன அடக்கமில்லாத நடனுக்குப் (நடிகனுக்குப்) போல் குணத்தை விளைவிக்க வல்லவையாகவில்லை. அறநெறிப்படி நடப்பதாகக் காட்டிக்கொண்டு, உண்மையில் அதன்படி நடவாதவர் பெரும் பாபி. அவர்கள் என்னால் கொல்லத்தக்கவர். இதற்காகவன்றோ நான் இவ்வுலகத்தில் அவதாரம் செய்தது. (ஆகையால், துஷ்டர்களை அழிப்பதற்காக அவதரித்த நான், இத்தகையர்களை வதிப்பது அவச்யமே)” என்று இவ்வளவும் தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டு, மஹானுபாவனாகிய அப்பலராமன், அஸத்துக்களை (கொடியவர்களை) வதிப்பதினின்று விலகி இருக்கவே தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருப்பவனாயினும், “நடக்க வேண்டியது நடந்தே தீரும் என்பதன்றோ விதி” என்று சொல்லிக்கொண்டே, கையிலிருந்த தர்ப்பத்தின் நுனியால் அந்த ரோமஹர்ஷணரை வதித்தான். அப்பொழுது, முனிவர்கள் அனைவரும் ஹாஹாவென்று மொழிந்து கொண்டு, மனவருத்தமுற்று பலராமனைப் பார்த்து மொழிந்தார்கள்.

ரிஷிகள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! நீ அதர்மம் செய்தாய். யாதவ குமாரனே! நாங்கள், இந்த ஸூதருக்கு ப்ரஹ்மாஸனம் (யாகத்தின் தலைமைப் பொறுப்பான ப்ரஹ்மாவின் ஸ்தானத்தைக்) கொடுத்தோம். இந்த ப்ரஹ்ம ஸத்ரம் (நீண்ட நாள் செய்யப்படும் யாகம்) முடிகிறவரையில் தேஹச்ரமமில்லாத (உடல் களைப்பு இல்லாத) ஆயுளையும் கொடுத்தோம். ஆகையால், இந்த ஸூதவதம், ப்ராஹ்மணவதம் போன்றது. இதை நீ தெரியாதவன் போல் செய்து விட்டாய். நீ யோகேச்வரன். உனக்கு எவ்வித பாபமும் கிடையாது. நீ கர்மத்திற்கு உட்படாதவன். ஆகையால், “ப்ராஹ்மணனை வதிக்கலாகாது” என்னும் சாஸ்த்ரமும் உன்னை நியமிக்கவல்லதன்று. 

உலகங்களையெல்லாம் புனிதமாக்கும் தன்மையனே! ஆயினும், இந்த ப்ரஹ்மஹத்யையைப் (ப்ராஹ்மணனைக் கொன்ற பாபத்தைப்) போக்கவல்ல ப்ராயச்சித்தத்தைப் (கழுவாயை) பிறரால் தூண்டப்படாமல் ஸ்வயமாகவே அனுஷ்டிப்பாயாயின், அப்பொழுது லோகஸங்க்ரஹம் (உலக வழக்கோடு ஒட்டிய வழிமுறை) செய்ததாம். (நீ வெறுமனேயிருப்பாயாயின், உலகத்திலுள்ள மற்றவரும் “ராமனே ப்ராயச்சித்தம் அனுஷ்டிக்கவில்லையே, நாம் ஏதுக்காக அனுஷ்டிக்க வேண்டும்?” என்று ப்ராயச்சித்தத்தை அனுஷ்டிக்காமல் அழித்து போய்விடுவார்கள். நீ அனுஷ்டிப்பாயாயின், உன்னை ப்ரமாணமாகக் (முன் உதாரணமாகக்) கொண்டு, மற்றவரும் அனுஷ்டித்து, உஜ்ஜீவிப்பார்கள் (பிழைப்பார்கள்). ஆகையால், நீ லோக ஸங்க்ரஹத்திற்காக (உலகினர் அறநெறியைப் பின்பற்ற) இந்த ப்ரஹ்மஹத்யைக்கு (ப்ராஹ்மணனைக் கொன்ற பாபத்திற்குப்) ப்ராயச்சித்தம் (கழுவாய்) அனுஷ்டிக்க வேண்டும்).

பலராமன் சொல்லுகிறான்:- மஹர்ஷிகளே! உலகத்தவர்களை அனுக்ரஹிப்பதற்காக, இந்த ஸூதவத ரூபமான பாபத்திற்கு ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்கிறேன். முக்ய பக்ஷத்தில் என்ன நியமம் ஏற்பட்டிருக்கிறதோ, அதை எனக்கு உபதேசிப்பீர்களாக! (முக்யமான ப்ராயச்சித்தத்தை உபதேசிப்பீர்களாக). மற்றும், இந்த ரோமஹர்ஷணருக்கு, தீர்க்கமான, இந்த்ரியங்கள் தளராதிருக்கையாகிற பலமும், மற்றும் ஏதேது நீங்கள் விரும்புகிறீர்களோ, அவற்றையும் சொல்வீர்களாயின், நான் என்னுடைய யோகமாயையினால் அவற்றையெல்லாம் ஸாதித்துக் கொடுக்கிறேன்.

ரிஷிகள் சொல்லுகிறார்கள்:- நீ ப்ரயோகித்த தர்ப்பத்தின் நுனியாகிற ஆயுதம், உன் வீர்யம், இந்த ரோமஹர்ஷணருடைய மரணம், எங்கள் வார்த்தை ஆகிய இவை எப்படி உண்மையாகுமோ, அவ்வாறே செய்வாயாக. 

பலராமன் சொல்லுகிறான்:- தகப்பன் தானே பிள்ளையாகப் பிறக்கிறானென்று வேதங்கள் கூறுகின்றன. இந்த ரோமஹர்ஷணருடைய பிள்ளையாகிய உக்ரச்ரவர், உங்களுக்குப் புராணம் சொல்லுவாராக. ஆயுள், இந்திரியம், பலம் இவற்றையும் பெற்றிருப்பாராக. (நேரே ரோமஹர்ஷணர் பிழைக்காமையால், என்னுடைய அஸ்த்ரமும், இவருடைய மரணமும் உண்மையாயின. புத்ரன் மூலமாய், ஆயுள் முதலியன ஸித்திக்கப் பெற்று, புராணம் சொல்லுகிறாராகையால், உங்கள் வசனமும் உண்மையாயிற்று). முனிச்ரேஷ்டர்களே! மற்றும், உங்களுக்கு என்ன விருப்பமோ, அதைச் சொல்லுவீர்களாக. அதை நான் நிறைவேற்றுகிறேன். பண்டிதர்களே! மற்றும், ப்ரஹ்மஹத்யையை (ப்ராஹ்மணனைக் கொன்ற பாபத்திற்குப்) ப்ராயச்சித்தம் (கழுவாய்) இன்னது செய்ய வேண்டுமென்று தெரியாதிருக்கின்ற எனக்கு, தகுந்த ப்ராயச்சித்தத்தை உள்ளபடி ஆலோசித்து, விதிப்பீர்களாக.

ரிஷிகள் சொல்லுகிறார்கள்:- ராமா! இல்வலனுடைய பிள்ளை பல்வலனென்னும் ஒரு அஸுரன் இருக்கிறான். அவன் பர்வந்தோறும் இவ்விடம் வந்து, எங்கள் ஸத்ரயாகத்தைப் பாழ் செய்கிறான். தாசார்ஹனே! சீ, ரக்தம், மலம், மூத்ரம், மத்யம், மாம்ஸம் இவைகளை வர்ஷித்து, எங்கள் யாகத்தைக் கெடுக்கும் பாபிஷ்டனாகிய அவ்வஸுரனை வதிப்பாயாக. அது, எங்களுக்கு மேலான சுச்ரூஷையாம் (பணிவிடையாம்). அனந்தரம் (பிறகு), மிகுந்த மனவூக்கத்துடன் பாரத வர்ஷத்தை ப்ரதக்ஷிணம் செய்து (வலம் வந்து), அப்பால் புண்ய தீர்த்தங்களில் ஸ்னானம் செய்து கொண்டு, பன்னிரண்டு மாதங்கள் ஸஞ்சரித்து, சுத்தனாவாய். 

எழுபத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக