தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எழுபத்தொன்பதாவது அத்தியாயம்
(பலராமன், பல்வலனை வதித்து, தீர்த்த யாத்ரையை முடித்து, கதா யுத்தம் செய்கிற பீமஸேன-துர்யோதனர்களிடம் வந்து, அவர்களுக்கு புத்தி சொல்லியும் கேளாமையால் புறப்பட்டு நைமிசாரண்யம் சென்று யாகம் செய்தல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! அப்பால், பர்வகாலம் ப்ராப்தமாகையில், தூட்களைப் பெய்வதும், துர்க்கந்தமுடையதும் (கெட்ட நாற்றம் உடையதும்), கொடியதும், பயங்கரமுமாகிய பெருங்காற்று முழுவதும் நிரம்பி வீசிற்று. அப்பால், பல்வலனால் நிர்மிக்கப்பட்ட அமேத்யமயமான (மலம்) மழையாக சாலையில் பெய்தது. உடனே, அப்பல்வலாஸுரனும், சூலாயுதத்தை ஏந்திக் கொண்டு வந்து புலப்பட்டான்.
கருமையான மலை போல் கருத்த பெரும் சரீரமுடையவனும், உருக்கப்பட்ட தாம்ரம் போன்ற தலை மயிர், மீசை, தாடி இவைகளாலும், கோரைப்பல், புருவ நெரிப்பு இவைகளாலும் பயங்கரமான முகமுடையவனுமாகிய அவ்வஸுரனைக் கண்டு, சத்ரு (எதிரி) ஸைன்யங்களைப் (படைகளைப்) பிளக்கவல்ல முஸல (உலக்கை) ஆயுதத்தையும், அஸுரர்களை அழிக்கவல்ல ஹல (கலப்பை) ஆயுதத்தையும் நினைத்தான். அவையும், சீக்ரத்தில் கிட்டி நின்றன. அனந்தரம் (பிறகு), பலராமன் கோபமுற்று, ஆகாச சாரியான (வானில் திரியும்) அவ்வஸுரனைக் கலப்பையின் நுனியால் பிடித்திழுத்து, ப்ராஹ்மண த்ரோஹம் செய்யுந் தன்மையனான அன்னவனைச் சிரஸ்ஸில் முஸலாயுதத்தினால் (உலக்கையால்) அடித்தான்.
அவன், அம்முஸலத்தின் அடியினால் நெற்றி பிளவுண்டு, குருதி பெருகப் பெற்று, துக்கத்தினால் உரக்கக் கூச்சலிட்டுக் கொண்டு, வஜ்ராயுதத்தினால் அடியுண்ட சிவந்த பர்வதம் போல் புவியில் (பூமியில்) விழுந்தான். மிகுந்த மதியும் பாக்யமும் உடையவனே! அப்பால், முனிவர்கள் பலராமனைத் துதித்து, அவனுக்குப் பொய்யாகாத ஆசீர்வாதங்களைச் செய்து, வ்ருத்ராஸுரனை வதித்த தேவேந்த்ரனுக்குத் தேவதைகள் அபிஷேகம் செய்தாற் போல அபிஷேகம் செய்தார்கள். மற்றும், அவர்கள் சோபைக்கு இடமாகி வாடாத தாமரை மலர்கள் கோர்க்கப் பெற்ற வைஜயந்தியென்னும் மாலையையும், திவ்யமான வஸ்த்ரங்களையும், திவ்யமான ஆபரணங்களையும் பலராமனுக்குக் கொடுத்தார்கள். பிறகு, அந்தப் பலராமன், அம்முனிவர்களால் அனுமதி கொடுக்கப் பெற்று, ப்ராஹ்மணர்களுடன் கௌஸிகி நதிக்கு வந்து, அங்கு ஸ்னானம் செய்து, ஸரயூ நதிக்கு உத்பத்தி ஸ்தானமாகிய ஸரோவரமென்னும் புண்ய தீர்த்தத்திற்குச் சென்று, அதினின்று ஸரயூவின் ப்ரவாஹம் (வெள்ளப் பெருக்கு) போகும் வழியைத் தொடர்ந்து, ப்ரயாகத்திற்கு வந்து, அங்கு ஸ்னானம் செய்து, தேவர் முதலியவர்களுக்குத் தர்ப்பணம் செய்து, புலஹாச்ரமத்திற்குச் சென்றான்.
கோமதி, கண்டகி, விபாசை இந்நதிகளிலும், சோணந்தத்திலும் ஸ்னானம் செய்து, கயைக்குச் சென்று, அங்குப் பித்ருக்களை மானஸீகமாக ஆராதித்து, கங்கை ஸமுத்ரத்தில் போய் விழுமிடத்திற்குச் சென்று, ஸ்னானம் செய்து, மஹேந்தர பர்வதத்திற்குச் சென்று, அங்கு பரசுராமனைக் கண்டு, நமஸ்கரித்து, ஸப்த கோதாவரி, வேணி, பம்பை, பீமரதி என்னும் இப்புண்ய நதிகளுக்குச் சென்று, ஸுப்ரஹ்மண்யனைக் கண்டு, ருத்ரனுக்கு வாஸஸ்தானமாகிய ஸ்ரீபர்வதத்திற்குச் சென்றான்.
அப்பால், அந்த ராமன், த்ரவிட தேசங்களில் மிகவும் புண்யமான திருவேங்கடமலை, காமகோடி, காஞ்சீபட்டணம், நதிகளில் சிறந்த காவேரி, மிகவும் புண்யமாயிருப்பதும், ஸ்ரீமந்நாராயணன் நித்ய ஸந்நிதானம் செய்யுமிடமுமாகிய ஸ்ரீரங்க க்ஷேத்ரம், ஸ்ரீவிஷ்ணு க்ஷேத்ரமாகிய திருமாலிருஞ்சோலை மலை, தென்மதுரை இவற்றைக் கண்டு, மஹத்தான பாபங்களையெல்லாம் போக்கவல்ல ஸமுத்ர ஸேதுவுக்குச் சென்றான். பலராமன், அங்கு ப்ராஹ்மணர்களுக்குப் பதினாயிரம் பசுக்களைக் கொடுத்தான்.
அப்பால், அம்மஹானுபாவன், க்ருதமாலை (வைகை), தாம்ரபர்ணி இந்நதிகளில் ஸ்னானம் செய்து, மலயமென்னும் குலபர்வதத்திற்குச் சென்று, அங்கு உட்கார்ந்திருக்கிற அகஸ்த்யருக்கு நமஸ்கரித்து, அபிவாதனம் செய்து, அவரால் ஆசீர்வாதம் செய்து, அனுமதி கொடுக்கப் பெற்று, தெற்கு ஸமுத்ரம் சென்று, கன்யாகுமாரியென்னும் துர்க்காதேவியைக் கண்டு, அவ்விடத்தினின்று அனந்தபுரம் சென்று, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸந்நிதானமுடையதாகையால், சிறப்புடைய பஞ்சாப்ஸரமென்னும் ஸரஸ்ஸுக்குச் சென்று, அங்கு ஸ்னானம் செய்து, பதினாயிரம் பசுக்களைக் கொடுத்தான்.
பிறகு, மஹானுபாவனாகிய அந்த ராமன், கேரளம், சதகர்த்தம் இத்தேசங்களைக் கடந்து, ருத்ரனுடைய ஸாந்நித்யம் மாறாதிருக்கப் பெற்ற சிவக்ஷேத்ரமாகிய கோகர்ண க்ஷேத்ரத்திற்குச் சென்று, அங்கு த்வைபாயனி என்னும் அம்பிகையைக் கண்டு, அதினின்று சூர்ப்பாரக க்ஷேத்ரம் சென்றான். அப்பால், தாபி பயோஷ்ணி, நிர்விந்த்யை இந்நதிகளில் ஸ்னானம் செய்து, தண்டகாரண்யத்தில் நுழைந்து, மாஹிஷ்மதீபுரத்தின் அருகாமையில் பெருகுகிற ரேவா நதிக்குச் சென்று, அவ்விடத்தினின்று மனு தீர்த்தத்தில் ஸ்னானம் செய்து, மீளவும் ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்தான்.
அங்கு, பலராமன், பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் நடந்த யுத்தத்தில், இருவர்க்கும் ஸஹாயமாய் வந்த ராஜர்கள் அனைவரும் முடிந்தார்களென்று ப்ராஹ்மணர்கள் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு, பூமியின் பாரம் நீக்கப்பட்டதென்று நினைத்தான். யாதவ குமாரனாகிய அந்தப் பலராமன், கதைகளால் யுத்தம் செய்கிற பீம, துர்யோதனர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு நாசம் அடைவதைத் தடுக்க வேண்டுமென்று அவ்விடம் சென்றான்.
யுதிஷ்டிரனும், க்ருஷ்ணார்ஜுனர்களும், அந்தப் பலராமனைக் கண்டு, அவனிடம் சென்று, நமஸ்கரித்து, என்ன சொல்ல விரும்பி வந்தாரோவென்று சங்கித்துப் பேசாதிருந்தார்கள். அந்தப் பலராமன், கதைகளைக் கையில் ஏந்திக் கோபாவேசமுற்று, ஒருவரையொருவர் ஜயிக்க விரும்பி விசித்ரமான மண்டல கதிகளைச் செய்கின்ற பீமஸேன, துர்யோதனர்களிருவரையும் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.
பலராமன் சொல்லுகிறான்:- ராஜனே! துர்யோதனா! பீமஸேனா! நீங்களிருவரும் துல்ய (ஸமமான) பலமுடைய வீரர்களே. ஆயினும், ஒருவனாகிய பீமஸேனன், பலத்தில் அதிகனென்றும், மற்றொருவனான துர்யோதனன் சிக்ஷையில் (கதாயுத்தப் பயிற்சியில்) அதிகனென்றும் நான் நினைக்கின்றேன். ஆகையால், ஸமான வீர்யர்களான உங்களிருவரில், ஒருவனுக்கு ஜயமும் (வெற்றியும்), மற்றொருவனுக்குப் பராஜயமும் (தோல்வியும்) நேரிடுமென்று தோற்றவில்லை. ஆகையால், வீணான இந்த யுத்தம் இவ்வளவோடு நிற்குமாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜகுமாரர்களான அந்த பீம, துர்யோதனர்கள், பலராமனால் இவ்வாறு சொல்லப் பெற்றும், ஒருவர் மேல் ஒருவர் நிலை நின்ற வைரம் (பகைமை) உடையவர்களாகையால், ஒருவரையொருவர் சொன்ன துர்ப்பாஷணங்களையும் (தீய சொற்களையும்), ஒருவர்க்கொருவர் செய்த கெட்ட நடத்தைகளையும் நினைத்து, அந்தப் பலராமனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பால், பலராமன் அவர்கள் தன் வசனத்தை ஏற்றுக் கொள்ளாமைக்கு அவர்களின் கர்மமே காரணமென்று நினைத்து, த்வாரகாபுரிக்குச் சென்று, ஸமஸ்த ஸம்பத்துக்களும் ஸம்ருத்தமாயிருக்கப் பெற்ற உக்ரஸேனன் முதலிய பந்துக்களோடு கலந்தான்.
மீளவும், அந்த ராமன் நைமிசாரண்யத்திற்குச் செல்ல, அங்குள்ள ரிஷிகள் அனைவரும் மனக்களிப்புற்று, ஸமஸ்த விரோதங்களும் தீரப்பெற்ற மஹானுபாவனாகிய அப்பலராமனைக் கொண்டு, அங்கங்களோடு (துணைச் செயல்களுடன்) கூடின யாகங்களால் யாகங்களைச் சரீரமாகவுடைய பரமபுருஷனை ஆராதித்தார்கள்.
மஹானுபாவனும், ப்ரபுவுமாகிய பலராமனும், ஸம்சய (ஸந்தேஹம்) விபர்யங்களுக்கு (நேர் எதிர் தட்டான அறிவு) இடமின்றி, ஜகத்தெல்லாம் பரமாத்மாவினிடத்தில் அமைந்திருப்பதையும், அப்பரமாத்மா ஜகத்தில் அமைந்திருப்பதையும், ஸாக்ஷாத்காரஞ் செய்விக்கவல்ல தத்வ ஜ்ஞானத்தை (ஆத்மா, பரமாத்மா பற்றிய அறிவை) அந்த ரிஷிகளுக்கு உபதேசித்தான். அப்பலராமன், ஜ்ஞாதிகளாலும் (பங்காளிகளாலும்), பந்துக்களாலும், நண்பர்களாலும் சூழப்பட்டுப் பத்னியுடன் அவப்ருத ஸ்னானம் (யாகத்தின் முடிவில் நீரில் மூழ்கி நீராட்டம்) செய்து, சிறந்த வஸ்த்ரங்களைத் தரித்து, நன்றாக அலங்கரித்துக் கொண்டு, தன் நிலவுடன் கூடின சந்த்ரன் போல் விளங்கினான்.
பலராமன், அநந்தனுடைய அவதாரம். அவன் கணக்கிட முடியாத கல்யாண குணங்களுடையவன். அவன், தன் ஸங்கல்பத்தினால் மானிட உருவத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறான். அவன் மஹாபலமுடையவன். இத்தகைய பலராமனுடைய சரித்ரங்கள் இவற்றைப் போல் பற்பலவுமுண்டு. அவற்றை எம்மால் சொல்ல முடியாது. ஆச்சர்யமான செயல்களையுடையவனும், அனந்தனுடைய அவதாரமுமாகிய பலராமனுடைய செயல்களை எவன் கேட்கிறானோ, எவன் சொல்லுகிறானோ, எவன் நினைக்கிறானோ, அவர்கள் மூவரும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகவும் அன்பராவார்கள்.
எழுபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.