தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பதாவது அத்தியாயம்
(குசேலோபாக்யானம்)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! அளவிடமுடியாத ஸ்வரூப, ஸ்வபாவங்களுடையவனும், பக்தர்களுக்கு அனுக்ரஹம் (அருள்) செய்கையாகிற பெருந்தன்மையுடையவனும், போக மோக்ஷங்களைக் கொடுப்பவனுமாகிய, ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமைகளை வெளியிடவல்ல, அவன் செயல்களைக் கேட்க விரும்புகிறோம். நீர் அவற்றையெல்லாம் நன்றாகச் சொல்லவல்லவரல்லவா? ப்ரஹ்மரிஷி! சப்தாதி விஷயங்களைத் தேடித் திரிந்து, அவை கிடையாமையால் கலங்கி, பகவத் விஷயத்தில் ரஸமறிந்திருக்கும் அறிவாளி எவன் தான், உத்தம ச்லோகனான பகவானுடைய கதைகளை அடிக்கடி கேட்டும், அதினின்று மீளுவான். (பகவத் கதையின் ரஸத்தை அறிந்தவனாயின், எவ்வளவு கேட்கினும் அதினின்று மீளமாட்டான்).
அளவற்ற ஸ்வரூப, ஸ்வபாவங்களையுடைய ஸ்ரீக்ருஷ்ணனுடைய குணங்களைச் சொல்லுமாயின், அந்த வாக்கே வாக்கு (பயன் பெற்றதாம்). அந்தப் பகவானுடைய ஆராதன ரூபமான கார்யங்களைச் செய்யும் கைகளே கைகள் (பயன்பெற்றவையாம்). ஸ்தாவரங்களிலும் (அசையாதவை), ஜங்கமங்களிலும் (அசைபவை) அந்தராத்மாவாய் வஸித்திருக்கின்ற பகவானை நினைக்கும் மனமே மனம். அவனுடைய புண்ய கதைகளைக் கேட்கும் கர்ணமே கர்ணம் (காது). சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய பகவானுடைய விபவ அவதார (ராம, க்ருஷ்ண, வாமன, ந்ருஸிம்ஹ முதலிய அவதாரங்கள்) உருவங்களையும், அர்ச்சாவதார உருவங்களையும் வணங்கும் தலையே தலை. அவ்வுருவங்களைக் காணும் கண்ணே கண். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸ்ரீபாத தீர்த்தத்தையாவது, அவனுடைய பக்தர்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தையாவது, பணியும் அங்கங்களே அங்கங்கள். மற்றவை, வீணே.
ஸூதர் சொல்லுகிறார்:- இவ்வாறு பரீக்ஷித்து மன்னவனால் வினவப் பெற்ற மஹானுபாவரான சுகமுனிவர், ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) வாஸுதேவனிடத்தில் ஆழ்ந்த மனமுடையவராகி, மேல்வருமாறு மொழிந்தார்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ப்ரஹ்ம வித்துக்களில் (பரப்ரஹ்மத்தை அறிந்தவர்களில்) சிறந்தவரும், சப்தாதி விஷயங்களில் (உலகியல் இன்பங்களில்) விருப்பமற்றவரும், மன அடக்கமுடையவரும், ஜிதேந்தரியரும் (புலன் அடக்கம் உடையவரும்), தெய்வாதீனமாய்க் கிடைத்த அன்னாதிகளைக் கொண்டு ஜீவிப்பவரும், க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்பவரும், ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நண்பருமாகிய ஒரு அந்தணர் இருந்தார்.
கந்தை ஆடை அணிந்தவராதலால் குசேலரென்னும் பெயருடைய அவ்வந்தணருடைய மனைவி அவரைப் போன்றே குண நலன்கள் உடையவர். தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கணவனுக்குப் பரிமாறி, பசியினால் இளைத்து, அவரைப் போலவே இந்த்ரியங்களை அடக்கியாளும் திறமையுடையவளும், பதிவ்ரதையுமாயிருந்தாள். அவள், தாரித்ரியத்தினால் (ஏழ்மையால்) வருந்தி, நடுக்கமுற்று, அருகே வந்து ஒருகால், வாடியுலர்ந்த முகத்துடன் தன் கணவனான அவ்வந்தணரைக் குறித்து இவ்வாறு மொழிந்தாள்.
ப்ராஹ்மணி சொல்லுகிறாள்:- ஒ, ப்ராஹ்மணரே! மஹானுபாவனும், ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், உமக்கு நண்பன். ப்ராஹ்மண விச்வாஸமுடையவன்; அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையன். தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களென்ற நான்கு வகைப் புருஷார்த்தங்களில் எதையேனும் பெற விரும்பிச் சரணம் அடையினும், அவர்களுக்கு அதை நிறைவேற்றிக் கொடுத்துக் காக்கும் தன்மையன்; ஜ்ஞானம் முதலிய ஷட்குணங்கள் (ஜ்ஞான, பல, ஐச்வர்ய, வீர்ய, சக்தி, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள்) அமைந்தவன். (ஆகையால், நீர் போன மாத்ரத்தில், உம்முடைய அபிப்ராயத்தை அறிந்து, நிறைவேற்ற வல்லவன்); தன்னுடைய ஸௌசீல்யத்தினால் (உயர்ந்தவராய் இருந்தும் தாழ்ந்தவர்களோடு இரண்டறக் கலந்து பழகும் குணத்தினால்), ஸாத்வத ச்ரேஷ்டனாய் (யது குலத்தில் சிறந்தவனாய்) அவதரித்திருக்கிறான். ஆகையால், அவன் தன் மேன்மையைக் கொண்டு நம்மை ஆதரிப்பானோ, மாட்டானோவென்று, சங்கிக்க வேண்டியதில்லை. ஸாதுக்களான உம்மைப் போன்ற பெரியோர்களுக்குப் பரமகதியாய் இருப்பவன். ஆகையால், அவனிடம் செல்வீராக.
பெருங் குடும்பியும், ஏழ்மையினால் வருந்துகின்றவருமாகிய உமக்கு, அம்மஹானுபாவன் அளவற்ற பணம் கொடுப்பான். அவன், இப்பொழுது போஜர்கள், வ்ருஷ்ணிகள், அந்தகர்கள் இவர்களைப் பாதுகாத்துக் கொண்டு, த்வாரகாபுரியில் இருக்கின்றான். தன் பாதார விந்தங்களை நினைப்பவர்களுக்குத் தன்னையும் கொடுக்கும் ஜகத்குருவாகிய அப்பரமபுருஷன், இங்கிருந்து வெகுதூரம் சென்று, வேண்டுகிற உமக்கு, நீர் கேட்காமலே, அவ்வளவு மேல் விழுந்து விரும்பத் தகாதவைகளான அர்த்த, காமங்களைக் கொடுப்பான் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ம்ருது ஸ்வபாவமுடைய (மென்மை குணம் உடைய) அவ்வந்தணர், இவ்வாறு பார்யையால் (மனைவியால்) வேண்டப் பெற்று, “உத்தமச்லோகனுடைய (சிறந்த புகழுடைய பகவானின்) தர்சனம் நேருமாயின், இது நமக்குப் பெரிய லாபமல்லவா!” என்று மனத்தில் சிந்தித்து, போக உத்தேசம் (எண்ணம்) கொண்டார். அவர், தன் பார்யையைப் (மனைவியைப்) பார்த்து, “மங்கள ஸ்வபாவமுடையவளே! ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொண்டு போய்க் கொடுக்க நம் க்ருஹத்தில் ஏதேனும் உபஹாரம் (காணிக்கை) இருக்கிறதா” என்று வினவினார். அவளும், அங்குள்ள ப்ராஹ்மணர்களிடம் சென்று, நான்கு பிடி அவல் கொண்டு வந்து, அதைத் துணிக் கந்தலில் முடிந்து, ஸ்ரீக்ருஷ்ணனுக்கு உபஹாரமாகக் (காணிக்கையாகக்) கொண்டு போகும்படி பர்த்தாவினிடம் (கணவனிடம்) கொடுத்தாள்.
அந்தணர்களில் சிறந்த அக்குசேலர், அதை வாங்கிக் கொண்டு, ஸ்ரீக்ருஷ்ணனுடைய காட்சி எனக்கு எப்படி நேருமென்று சிந்தித்துக்கொண்டே, த்வாரகைக்குச் சென்றார். அவ்வந்தணர், மூன்று கோட்டைகளையும், மூன்று கட்டுக்களையும் கடந்து, அணுக முடியாத மஹா வீரர்களான அந்தகர், வ்ருஷ்ணிகள் ஆகிய இவர்களின் க்ருஹங்களினிடையிலுள்ள ஸ்ரீக்ருஷ்ண மஹிஷிகளான பதினாயிரம் பெண்மணிகளின் மாளிகைகளுக்குள் மிகுந்த செல்வக் கிளர்த்தியுடைய (செல்வச் செழிப்புடைய) ஒரு க்ருஹத்தைக் கண்டு, ப்ரஹ்மாநந்தம் பெற்றவன் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மந்திரத்தில் ப்ரவேசிப்பது போல, அந்த க்ருஹத்திற்குள் நுழைந்தார்.
அன்பிற்கிடமான காதலியின் படுக்கையில் வீற்றிருந்த ஸ்ரீக்ருஷ்ணன், தூரத்திலேயே அவ்வந்தணரைக் கண்டு, தன் பக்தர்களைக் கைவிடாது காக்கும் தன்மையனாகையால், படுக்கையினின்று விரைந்தெழுந்து, ஸந்தோஷத்துடன் அவ்வந்தணரை இரண்டு புஜங்களாலும் (கைகளாலும்) அணைத்துக்கொண்டான். தாமரைக்கண்ணனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ப்ரியமுள்ள நண்பரும், ப்ரஹ்மர்ஷியுமாகிய அக்குசேலருடைய அங்கத்தை (உடலை) அணைத்தமையால் மிகவும் ஸந்தோஷம் அடைந்து, ஸந்தோஷத்தின் மிகுதியால் கண்களினின்று நீர்த் துளிகளைப் பெருக்கினான்.
அப்பால், அம்மஹானுபாவன் அவரை மஞ்சத்தில் (கட்டிலில்) உட்கார வைத்து, மிகுந்த நண்பராகிய அவருக்குத் தானே உபசார பொருட்களை (விருந்தோம்பலுக்கான பொருட்களைக்) கொண்டு வந்து ஸமர்ப்பித்து, அவருடைய பாதங்களை அலம்பி, அந்த ஜலத்தை உலகங்களையெல்லாம் பாவனம் செய்யவல்ல அப்பரமன் தன் தலையில் தரித்து, திவ்யமான வாஸனையுடைய சந்தனம், அகுரு, குங்குமம் இவைகளை அவர் மேல் பூசினான். மற்றும், அவ்வச்சுதன் மிகுந்த வாஸனையுடைய தூபங்களாலும், தீபங்களாலும், மற்றுமுள்ள பூஜா த்ரவ்யங்களாலும், நண்பராகிய அவ்வந்தணரைப் பூஜித்து, தாம்பூலத்தையும், பசுவையும் ஸமர்ப்பித்து, நல்வரவாகுக என்று வினவினான்.
அழுக்கடைந்து இளைத்து, உடம்பெல்லாம் நரம்புகள் நிறைந்திருக்கிற அந்தக் குசேலரை ஸ்ரீக்ருஷ்ணனுடைய பத்னியாகிய ருக்மிணி, சாமரம் வீசுவது, விசிறுவது முதலிய உபசாரங்கள் செய்து, பூஜித்தாள். நிர்மலமான (குற்றமற்ற) புகழுடைய அந்த ஸ்ரீ க்ருஷ்ணன், அழுக்கடைந்த அவ்வந்தணரை மிகுந்த ப்ரீதியுடன் பூஜிப்பதைக் கண்டு, அந்தப்புரத்து ஜனங்கள் அனைவரும் வியப்புற்று, “அழுக்கடைந்தவரும் தரித்ரரும் (ஏழையும்), இவ்வுலகில் நிந்திக்கத் (பழிக்கத்) தகுந்தவரும், அதமருமாகிய (தாழ்ந்தவருமாகிய) இந்தப் பிக்ஷகர் (பிச்சை எடுப்பவர்) என்ன புண்யம் செய்தாரோ? ஏனென்றால், மூன்று லோகங்களுக்கும் குருவாகி, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், படுக்கையில் இருக்கிற ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் துறந்து, இவரை வெகுமதித்து, தன் தமையனைப்போல அணைத்துக்கொண்டானல்லவா?” என்று ஒருவர்க்கொருவர் மொழிந்து கொண்டார்கள். ராஜனே! ஸ்ரீக்ருஷ்ணனும், குசேலருமாகிய அவ்விருவரும், ஒருவர்க்கொருவர் கையைப் பிடித்துக்கொண்டு, தாங்கள் முன்பு குருகுலத்தில் வஸிக்கும் பொழுது நடந்த அழகான கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தர்மங்களை உணர்ந்தவரே! நீர் குருதக்ஷிணை கொடுத்து, குருகுலத்தினின்று திரும்பி வந்து, ஸமாவர்த்தனமென்னும் (குருகுலத்தில் கற்றல் முடித்து, ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை முடிக்கும் செயல்) கர்மத்தை முடித்து, தகுதியான பார்யையை (மனைவியை) மணம் புரிந்தீரா, இல்லையா? தத்வங்களை (ஆத்ம பரமாத்மக்களைப் பற்றி) உணர்ந்த அறிஞரே! உம்முடைய மனம், சப்தாதி விஷயங்களைப் (உலகியல் இன்பங்களைப்) பற்றின விருப்பங்களால் தீண்டப்படாதிருக்குமல்லவா? ஆகையால், உமக்கு இல்லற வாழ்க்கையில் மனம் ருசிக்காதென்று நினைக்கிறேன். மற்றும், பணத்தில் உமக்கு அவ்வளவாக ப்ரீதி கிடையாதென்பதும் எனக்குத் தெரியும். சிலர், சப்தாதி விஷயங்களை (உலகியல் இன்பங்களைப்) பற்றின விருப்பங்களால் இழுக்கப்படாத மனமுடையவராயினும், மோக்ஷத்தில் விருப்பமுற்று, தேவனுடைய மாயையைத் துறக்க முயன்று, நான் லோக ஸங்க்ரஹத்திற்காகச் (உலக நன்மைக்காகச்) செய்வது போல, பலன்களை விரும்பாமல், நித்ய, நைமித்திகாதி கர்மங்களை (ஸந்த்யாவந்தனம், மாதா பிதாக்களுக்கு ச்ராத்தம், தர்ப்பணம் முதலிய கர்மங்களை) அனுஷ்டிக்கின்றார்கள். (அதற்காக இல்லற வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவ்வாறே, நீரும் இல்லற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது).
அந்தணரே! அந்தணன் எதனால் அறியத் தகுந்த ஆத்ம பரமாத்ம ஜ்ஞானத்தை (ஜீவாத்மாக்கள், பரமாத்மா இவற்றின் இயற்கைத் தன்மை, குணங்கள் முதலியவற்றை) அறிந்து, அஜ்ஞானத்தினின்று மீண்டு மோக்ஷத்தை அடைவானோ, அப்படிப்பட்ட குருகுல வாஸத்தை நாம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்ததெல்லாம் உமக்கு நினைவிருக்கிறதா? ப்ராஹ்மணர், க்ஷத்ரியர், வைச்யர் என்கிற மூன்று வர்ணத்தவர்களுக்கும் அந்தக் குருகுல வாஸம் ஸத்கர்மங்களை (நற்செயல்களை) அனுஷ்டிப்பதற்குக் காரணமாயிருக்கும். இந்தக் குருகுலவாஸத்தில், ப்ரஹ்மசர்யாச்ரமத்தில் இருப்பவர்களுக்கு, குரு, என்னைப் போல், ஜ்ஞானோபதேசம் செய்கிறாரல்லவா? (அந்த ஜ்ஞானத்தினால் செய்ய வேண்டிய ஸத்கர்மங்களை அறிந்து, நடத்துகிறார்களாகையால், குருகுலவாஸம் ஸத்கர்மங்களுக்கு (நற்செயல்களுக்குக்) காரணமாயிருக்கும்.)
ப்ராஹ்மணச்ரேஷ்டரே! இந்த ஸம்ஸாரத்தில் (உலகியல் வாழ்வில்) தேஹ பந்தத்தை விளைக்கிறவன் (உடலைத் தரும் தகப்பன்), முதன்மையான குரு. ப்ராஹ்மணன் முதலிய மூன்று வர்ணத்தவர்களுக்கும் ஸத்கர்மங்களை (நற்செயல்களை) அனுஷ்டிப்பதற்குக் காரணமான உபநயன ஸம்ஸ்காரத்தை நடத்தி, வேதங்களை ஓதுவிப்பவன், இரண்டாவது குரு. ப்ரஹ்மசர்யம் முதலிய ஆச்ரமங்களில் இருப்பவர்கள் அனைவர்க்கும் ஜ்ஞானோபதேசம் செய்பவன், மூன்றாவது குரு. அவனை நேரே என்னைப் போலவே பாவிக்க வேண்டும். (நானே ஆசார்யன் மூலமாய் அவரவர்களுக்கு ஜ்ஞானோபதேசம் செய்கிறேனாகையால், ஜ்ஞானோபதேசம் செய்யும் குருவை என்னைப்போலவே பாவிக்க வேண்டும்).
ப்ராஹ்மணரே! இந்த ஸம்ஸாரத்தில் ஸமஸ்த வர்ணங்களிலும் ப்ரஹ்மசர்யம் முதலிய ஆச்ரமமுடையவர்களிலும், எவர் குரு ஸ்வரூபனான (குரு வடிவான) என்னால் ஜ்ஞானோபதேசம் செய்யப்பெற்று, ஸுகமாக ஸம்ஸாரமாகிற ஸமுத்ரத்தைத் தாண்டுகிறார்களோ, அவர்களே தங்கள் புருஷார்த்தங்களை நிறைவேற்றிக் கொள்ளும் திறமையுடையவர்கள். ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாகிய நான், குரு சுச்ரூஷையினால் (குருவிற்குப் பணிவிடை செய்வதால்) ஸந்தோஷம் அடைவது போல, பஞ்ச மஹாயஜ்ஞங்களை அனுஷ்டிக்கையாலாவது, நற்குலத்தில் பிறவியாலாவது, உபவாஸம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டிக்கையாலாவது, இந்த்ரியங்களை அடக்கியாள்கையாலாவது ஸந்தோஷம் அடைய மாட்டேன்.
அந்தணரே! நாம் குருகுலவாஸம் செய்யும் பொழுது ஒருகால், குருபத்னியால் கட்டைகள் கொண்டு வரும்படி தூண்டப்பட்ட நமக்கு ஒன்று நடந்ததே, அது உமக்கு நினைவிருக்கிறதா? மழைக்கிடமான வர்ஷருதுவில் (மழைக்காலத்தில்), அகாலத்தில் நாம் காஷ்டம் (சுள்ளிகள்) கொண்டு வருவதற்காகப் பெரிய அரண்யத்தில் ப்ரவேசிக்க, காற்றும், மழையும், கடோரமான இடிகளும் உண்டாயின. அப்பொழுது, ஸூர்யனும் அஸ்தமித்தான். திசைகளெல்லாம் இருள் மூடப்பெற்றன. மேடும், பள்ளமும் ஆகிய எல்லா இடங்களும் ஜலமயமாயின. ஆகையால், மேடென்றும், பள்ளமென்றும் ஒன்றும் தெரியவில்லை. நாம், அந்த ஜல ப்ரவாஹத்தில் (நீர் பெருக்கில்), பெருங்காற்றினாலும், ஜலத்தினாலும், மிகவும் பீடிக்கப்பட்டு, திசைகளை அறியாமல் வருந்தி, ஒருவர்க்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டு, வனமெல்லாம் சுற்றினோம். நம் குருவாகிய ஸாந்தீபினி நாம் இவ்வாறு வருந்துவதை அறிந்து கொண்டு, ஸூர்யன் உதயமாகையில் தேடிக்கொண்டு வந்து, நம்மைக் கண்டு மொழிந்தார்.
ஸாந்தீபினி சொல்லுகிறார்:- ஓ என்னருமைப் புதல்வர்களே! ப்ராணிகளுக்குத் தேஹம் (உடல்) மிகவும் அன்பிற்கிடமாயிருக்குமல்லவா? நீங்கள், அத்தகைய தேஹத்தையும் அனாதரித்து (பொருட்படுத்தாது), எனக்குப் பணிவிடை செய்வதில், என் ப்ரயோஜனத்திற்காக (பயனுக்காக) மிகவும் வருத்தமுற்றீர்கள். மனத்தூய்மையுடன் ஸர்வ ப்ரகாரத்தாலும் (எல்லா வழியிலும்) குருவுக்குச் சரீரத்தை அர்ப்பணம் செய்கையாகிற இவ்வளவே நல்ல சிஷ்யர்கள் தங்கள் குருவுக்குச் செய்ய வேண்டிய ப்ரத்யுபகாரமாம் (நன்றிக்கடன்).
இரு பிறப்பினர்களில் சிறந்தவர்களே! நான், உங்களிடத்தில் மிகவும் ஸந்தோஷம் அடைந்தேன். உங்கள் விருப்பங்களெல்லாம் உண்மையாய்ப் பலிக்குமாக. என்னிடத்தினின்று நீங்கள் ஓதின வேதங்களெல்லாம் இவ்வுலகத்திலும், பரலோகத்திலும் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கவல்ல வீர்யமுடையவைகளாய் இருக்குமாக.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:- (அந்தணரே! நம் குரு இவ்வாறு நம்மை அனுக்ரஹித்தாரல்லவா?) நாம் குருகுலத்தில் வஸிக்கும் பொழுது, இத்தகைய வ்ருத்தாந்தங்கள் (நிகழ்ச்சிகள்) பலவும் நடந்தன. (அவையெல்லாம் உமக்கு நினைவில்லையா?) இவ்வுலகத்தில் புருஷன் குருவினுடைய அனுக்ரஹத்தினால் தான் தன் மனோரதங்களெல்லாம் நிறைவேறப் பெற்று, மிகுந்த சாந்தியையும் பெறுவான்.
ப்ராஹ்மணர் சொல்லுகிறார்:- தேவர்க்கும் தேவனே! உலகங்களுக்கெல்லாம் குருவே! ஸத்ய ஸங்கல்பனாகிய (நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமை உடையவனான) உன்னுடன் குருகுலவாஸம் நேரப்பெற்ற எனக்கு எதுதான் கை கூடாது? (ஸத்ய ஸங்கல்பனாகிய நீ, குருகுல வாஸமிருந்தது எங்கள் மனோரதத்தை நிறைவேற்றும் பொருட்டேயன்றி மற்றொரு ப்ரயோஜனத்திற்காக அன்று. ஸர்வஜ்ஞனும் (எல்லாம் அறிந்தவனும்), ஸத்ய ஸங்கல்பனுமாகிய (நினைத்ததை நடத்தி முடிக்கும் திறமை உடையவனுமான) உனக்குக் குருகுல வாஸத்தினால் ஆக வேண்டியது என்ன இருக்கிறது?) அளவற்ற மஹிமையுடைய வேதங்களெல்லாம் எவனுடைய தேஹமோ, எவனுடைய தேஹம் ஸமஸ்த புருஷார்த்தங்களுக்கும் விளை நிலமாயிருக்கின்றதோ, அத்தகைய நீ குருகுலத்தில் வாஸம் செய்தது உலக நீதியை அனுஸரிப்பதற்காகச் செய்த கார்யமேயன்றி, வேறன்று.
எண்பதாவது அத்தியாயம் முற்றிற்று.