திங்கள், 6 மார்ச், 2023

அருணகிரி ராமாயணம் - 3 - சித்ரா மூர்த்தி

கிஷ்கிந்தா காண்டத்தின் மிக முக்கிய நிகழ்ச்சி வாலி வதம். 'வாலியை வென்று, சுக்ரீவன் தலைமையில் எழுபது வெள்ளம் சேனையைத் திரட்ட வேண்டும்; வரிசைக் கிரமமாக ஓரிடம் விட்டு ஓரிடம் தேடிச் செல்வது உசிதமல்ல. உலகிலுள்ள பல இடங்களுக்கும் ஒரே சமயத்தில் பலர் சென்று சீதாப்பிராட்டியைத் தேட வேண்டும்' - இவ்வாறு ராமனுக்கு யோசனை சொல்வது நமது பக்த அனுமன்தான். 'அனுமனொடே எழுபது வௌங்கவி சேனா சேவித நிருபன்' என்று திருவலஞ்சுழியில் பாடும் அருணகிரி நாதர், இஞ்சுகுடிப் பாடலில்,

'சங்க தசக்ரிவனொடு தூது சொல வள

மிண்டு செயப்போன வாயு சுதனொடு

சம்பவ சுக்ரிவனாதி எழுபது வௌமாகச்

சண்டகவிச் சேனையால் முன் அலைகடல்

குன்றிலடைத்தேறி மோச நிசிசரர்

தங்கிளை கெட்டோட ஏவ சரபதி'

('குங்கும கற்பூர' - திருப்புகழ்)

-என்று பாடுகிறார்.

வாலி-சுக்ரிவன் இடையே போர் துவங்குகிறது. எதிர் எதிரே இரு குன்றுகள் நின்று போரிடுவது போலத் தோன்றுகிறதாம் அக்காட்சி! ராமனால் சுக்ரிவன்-வாலி இருவரையும் பிரித்தறிய இயலவில்லை. 'அம்பு தொடுத்து அது சுக்ரிவன் மீது பாய்ந்து விட்டால் அடைக்கலம் அளித்துவிட்டு, பின் அவனையே வீழ்த்திய பாவத்துக்கு ஆளாவேன்' என்று எண்ணிய ராமன் சுக்ரிவனைக் காட்டுக் கொடியின் மலர் மாலையை அணிந்து செல்லுமாறு கூறுகிறான். கம்பன் இக்காட்சியை,

'உமை வேற்றுமை தெரிந்திலம் கொடிப்பூ மிலைந்து

செல்கென விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும்'

-என்று பாடுகிறான். ஆனால் அருணகிரிநாதரோ இக்காட்சியைப் பாடும்பொழுது அக்கொடிப்பூவின் பெயரையும் நமக்குத் தெரிவிக்கிறார்.

'காந்தள் மலர்த்தொடை யிட்டெதிர் விட்டொரு

வேந்து குரக்கு ரணத்தொடு மட்டிடு

காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன்'

-என்கிறார். (குரக்கு வேந்து = குரங்கரசன் வாலி

காந்தள் மலர் = கார்த்திகைப் பூ)

('கூந்தல் அவிழ்த்து' திருப்புகழ்) 

வாலிவதம் பற்றிப் பல இடங்களில் பாடுகிறார் அருணகிரியார். ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

'சாலை மரத்துப் புறத் தொளித் தடல்

வாலியுரத்திற் சரத்தை விட்டொரு

தாரைதனைச் சுக்ரிவற்களித்தவன்'

('மானைவிடத்தை' திருப்புகழ்)

'நிகரொன்றுமில் வலிய திறல் வாலி

உரமும் மாளவிடு சர அம்புடை தசரதகுமார'

-வாலி அடிபட்டு விழுந்தபோது, ‘சுக்ரிவனுக்குக் கிஷ்கிந்தையின் மகுடத்தைச் சூட்டுவதாக வாக்களித்தேன். அதை நிறைவேற்றுவதற்காகத்தான் உன்மீது அம்பு எய்தேன்’ என்று கூறுகிறான் ராமன். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ராகவன் பெருமையை நமக்குணர்த்துவதற்காகவே 'இதமொடளித்த ராகவன்' என்று அன்பு ததும்ப பாடுகிறார் அருணகிரியார்.

'இரவி குலத்தி ராசத மருவி எதிர்த்து வீழ்

கடு ரணமுக சுத்த வீரிய குணமான

இளையவனுக்கு நீண்முடி அரசது பெற்று வாழ்வுற

இதமொடளித்த ராகவன்'

(கதியை விலக்கு' - திருப்புகழ்)

-என்பது அப்பாடல். சூரிய அம்சமுடைய, ரஜோ குணம் கொண்ட, கொடிய போர்க்களத்தில் சுத்த வீரம் மிகுத்து விளங்கிய இளையவனான சுக்ரிவனுக்கு, உயர்ந்த அரசாட்சியைப் பெற்று வாழும்படி இதமுடன் உதவி புரிந்த ராகவன். வாலி வதம் முடிந்து, சுக்ரிவன் பட்டாபிஷேகம் நடந்தபின், ராமன், சுக்ரிவனிடம் ‘‘அடுத்து வரும் புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் மழைக்காலம் என்பதால் அதற்குப் பின் சீதையைத் தேடுவோம்,’’ என்று கூற அவனை வழியனுப்பி வைக்கிறான் ராமன். 

'கார்காலம் கழிந்தபின் பெரிய சேனையுடன் வந்து உதவுகிறேன்' என்று ராமனுக்கு வாக்களித்துவிட்டுச் செல்லும் சுக்ரிவன், கள் போதையில் தன் வாக்கை மறந்து, கார்காலம் கழிந்த பின்னும் வராமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தான். இதனால் கோபமுற்ற ராமன், ‘நீ போய் அவன் மனநிலையை அறிந்து வா,’ என்று சொல்லி லட்சுமணனை அனுப்பி வைக்கிறான். அதன்படி லட்சுமணன் சுக்ரிவனைத் தேடிச் சென்று அவனுடன் உரையாடும் காட்சியை நாடகத் தமிழ் நடையில் விரிவாகப் பாடுகிறார் அருணகிரியார்.

'மறந்த சுக்ரிப மாநீசன் வாசலிலிருந்து  

'லுத்த!  நீ ஓராதது ஏது சொல்?

மனம் களித்திடலாமோ?  துரோகித முன்பு 

வாலிவதம் செய் விக்ரம சீராமன் நான்! நிலம்

அறிந்தது, இச்சரம் ஓகோ கெடாது. இனி

வரும்படிக்கு உரையாய், பார் பலாகவம்' 

என்று பேசி

அறம் தழைத்த அனுமானொடு மா சுடல்

வரம்படைத்து, அதின் மேலேறி ராவணன்

அரண் குலைத்தெதிர் போராடு நாரணன்'

('நிறைந்த' - திருப்புகழ்)

மறந்த சுக்ரிப மாநீசன் வாசலிலிருந்து - தனது வாக்குறுதியை மறந்த நீசனாகிய சுக்ரிவன் வாசலில் நின்றுலுத்த! ஏ உலோபியே! நீ ஓராதது ஏது சொல்? - நீ, தீமை-நன்மையை ஆராய்ந்து, மனம் தெளிவுறாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று சொல். மனம் களித்திடலாமோ துரோகித (ம்) - கள்ளுண்ட போதையில் நீ மகிழ்ந்திருந்தால், அது நீ எமக்குச் செய்யும் துரோகம் ஆகும். முன்பு வாலி வதம் செய்த விக்ரம சீராமன் நான் - முன்பு வாலியை வென்று வெற்றியடைந்த வீரன் ஸ்ரீராமன் நான்.

நிலம் அறிந்தது - உலகெலாம் இதை அறியும். இச்சரம் ஓகோ கெடாது - ஓகோ இந்த அம்பு இனி கெட்டுப் போக வேண்டாம். இனி வரும்படிக்கு உரையாய்; பார் பலாகவம் என்று பேசி - இனியாவது தாமதிக்காமல் வருமாறு சொல்; பல போர்களின் விளைவைப் பார்ப்பாயாக என்றெல்லாம் லட்சுமணனிடம் சொல்லி அனுப்பி, 'அறம் தழைத்த அனுமனொடு மா கடல் வரம் படைத்து அதன் மேலேறி ராவணன் அரண் குலைத்து நாரணன் எதிரி போராடினான்' என்று பாடலை நிறைவு செய்கிறார் அருணகிரியார். இவை தவிர, ஒரு உருக்கமான பிரார்த்தனையையும் இப்பாடலில் பொருத்தியிருக்கிறார் என்பது சிறப்பான விஷயம்!


'கோமளமாகிய குரங்கை ஒத்துழல்வேனோ

மனோலயம் என்று சேர்வன்'

-எப்போதுமே சேட்டை செய்துகொண்டிருக்கும் குரங்கு மகிழ்ச்சியுறும்போது இன்னும் அதிகமாகச் சேட்டை செய்யும். 'விலை மாதர்களால் ஏற்படும் காமமாகிய கள்ளுண்டு செய்ந்நன்றி மறந்து மயங்கி குரங்குபோல் சேட்டைகள் செய்வேனோ, சொல்லொணா ஆனந்தம் அளிக்கும் மன ஒடுக்கம் எனக்கு என்று சித்திக்கும்?' என்று முருகனிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர். லட்சுமணன் சுக்ரிவனிடம், ராமன் சொல்லி அனுப்பிய செய்தியைக் கூறி, ராமன் இருக்குமிடத்திற்கு அழைத்து வந்து மன்னிப்பு கோரும்படிச் செய்கிறான். ராமனின் ஆணைப்படி சுக்ரிவன், சீதையைத் தேடும் பொருட்டு, மேற்கு திசையில் சுதேட்சணனையும், கிழக்கே வினதனையும், வடக்கே சதவலியையும் அனுப்பி வைக்கிறான். 

அனுமனுடன் ஜாம்பவான், நீலன், அங்கதன் ஆகியோரும் அனுப்பப்படுகின்றனர். தூது செல்பவனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான ஆற்றல் சொல்வளம். மற்ற வானரர்களுள் செய்தியைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் வளம் மிக்கவர் அனுமனைப் போன்று யாரும் இல்லை. கம்பனும் ராமன் வாயிலாகக் கூறுகிறானல்லவா: 'யார்  கொல் இச்சொல்லின் செல்வன், விரிஞ்சனோ விடை வல்லானோ? (சொல்லாற்றல் மிகுந்த இவன் யார், பிரம்மனோ அல்லது விடையில் ஏறும் சிவபிரானோ?)’’

அதிக அறிகுறிகள் சீதை தெற்குத் திசைக்குத்தான் கடத்தப்பட்டிருக்கிறாள் என்றே அமைந்திருந்ததால் மிகுந்த சொல்வளம் உடைய அனுமனை அத்திசைக்கு அனுப்ப முடிவாயிற்று. கிஷ்கிந்தா காண்ட இறுதியில் வரும் இச்சம்பவங்களடங்கிய ஒரு கதிர் காமப் பாடலை சொல்லின் செல்வனுக்கு அர்ப்பணித்து விட்டார், அருணகிரி நாதர்.

'குடக்குச் சிலதூதர் தேடுக

வடக்குச் சிலதூதர் நாடுக

குணக்கச் சிலதூதர் தேடுக எனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி

இனித் தெற்கொரு தூது போவது

குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ

(உடுக்கத் துகில் திருப்புகழ்)

இப்பாடலில், அனுமன் தனக்களிக்கப்படும் குறிப்பைக் கொண்டு, குறிக்கப்பட்ட பொருளைத் தேடுவதில் வல்லவன், என்ற பொருளில், 'குறிப்பிற் குறிகாணு மாருதி' என்று கூறுகிறார். 'மாருதி இனித் தெற்கொரு தூது போவது' என்ற பாடல் வரியில் அனுமன் தனியாகவும் ஒரு ஒப்பற்ற தூதுவனாகவும் இலங்கைக்குப் புறப்படுகிறான் எனும் பொருள்பட, 'ஒரு தூது' என்று பாடியுள்ளார். அனுமனிடம், தானும் சீதையும் மட்டுமே அறிந்திருந்த சில சம்பவங்களைக் கூறிவிட்டு தனது மோதிரத்தை அவனிடம் கொடுத்து அனுப்புகிறான் ராமன். 

'தரப்படும் குறிப்பைக் கொண்டு குறிக்கப்பட்ட பொருளை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொளல் தக்கது' எனும் வள்ளுவர் வாக்கு இங்கு நினைக்கத் தகுந்தது. 'கொடுக்கப்பட்ட விவரத்தின்படி, குறித்த பொருளைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் திரும்ப வரக் கூடாது' என்பது சுக்ரிவன் அனுமனுக்கிட்ட ஆணை. ('குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ') காரணம் என்ன? மற்ற திசைகளில் செல்பவர்கள் ஒருவேளை தோல்வியுற்றுத் திரும்பினாலும், தென் திசைக்குச் சென்றுள்ள அனுமன் நிச்சயம் நல்ல செய்தியுடன் வருவான் என்று அனைவரும் காத்திருப்பர். ஆனால், அனுமனும் சீதையின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாமல் திரும்பி விட்டால், ராமனும், அவனைத் தொடர்ந்து லட்சுமணன் முதலானோரும் உயிர் துறப்பது உறுதி என்பதாலேயே அனுமன் சீதையைக் கண்டுபிடிக்காமல் திரும்பக் கூடாது என்கிறான் சுக்ரிவன். தொடர்ந்து பாடுகிறார் அருணகிரி நாதர்:

'அடிக் குத்திர காரராகிய

அரக்கர்க்கு இளையாத தீரனும்

அலைக்கப்புறம் மேவி மாதுறு வனமே சென்று

அருட் பொற்றிருவாழி மோதிரம்

அளித்துற்றவர் மேல் மனோகரம்

அளித்துக் கதிர்காமம் மேவிய பெருமாளே'

-வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்றுப் போகாமல் கடல் கடந்து அசோகவனம் சென்று சீதையிடம் ராமனது மோதிரத்தைக் கொடுத்தான் அனுமன் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்பாடலில் இதுதவிர, வேறு யாரும் குறிப்பிடாத முற்றிலும் புதிய காட்சி ஒன்றை நமக்குக் காட்டுகிறார் அருணகிரிநாதர். சீதையிடம் மோதிரத்தை அளித்துவிட்டு அனுமன் இலங்கையின் தெற்கிலுள்ள கதிர்காமம் சென்று அங்குள்ள மாணிக்க கங்கையில் நீராடி கதிர்காம வேலனைக் கண்டு மகிழ்ந்தார் என்பதுதான் அது! 'மாதுறு வனமே சென்று, அருட்பொற் திரு ஆழி மோதிரம் அளித்துற்றவர் மேல் மனோகரம் அளித்துக் கதிர்காமம் மேவிய பெருமாளே' -என்கிறார் அருணகிரியார். 

கதிர்காமப் பாடலில் காணப்படும் மற்றொரு தனிச்சிறப்பு, அதில் அருணகிரியார் முருகனிடம் கேட்கும் வரம். 'முருகா! உன் மாமன் (ராமன்), அனுமனை அழைத்து, சீதையிடம் அடையாளம் காட்டுவதற்காகத் தன் மோதிரத்தை அளித்தருளினார். நீயும் கதிர்காமத்தில் அனுமனுக்கு மகிழ்ச்சி அளித்தாய்; அதேபோன்று உனது கருணை உள்ளத்தையும், சிவஞான போதத்தையும் நீ என்னை அழைத்துத் தந்தருள வேண்டும். ஊழ்வினையால் வரும் பிறப்பு எனும் மலைச்சூழலில் சுழன்று துன்புறும் என்னை நீ ஆட்கொள்ளும் நாள் ஒன்று வருமோ?’’ என்ற ஒப்பற்ற அந்த வேண்டுகோளை நமக்காகவே பாடி அருளியிருக்கிறார் என்றால் அது மிகையல்ல! இதோ அப்பாடல் வரிகள்:

'கிருபைச் சித்தமு ஞான போதமும்

அழைத்துத் தரவேணும் ஊழ் பவ

கிரிக்குள் சுழல்வேனை  ஆளுவ தொருநாளே.'

நன்றி - தினகரன் ஆன்மிகம் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக