வெள்ளி, 12 ஜனவரி, 2024

மாயம் செய்த மாயவன்...

மகாபாரதத்தில் மிக அற்புதமாக தன் வீரத்தைக் காட்டினாலும், வெளியே  தெரியாமல் போன ஒரு பாத்திரமே பர்பரிகன். இவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன்


தர்மராஜா பாரதப்போர் குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார். பீஷ்மரும்துரோணரும் குறிப்பிட்ட நாளில் பாண்டவர்களை அழித்தே தீருவதென சபதம் பூண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டார். கர்ணனை நினைத்தாலும் கலக்கமாக இருக்கிறது. அவன் எந்த நேரமும் தன்னைக் கொன்று விடுவான் என்பதையும் அறிந்து, இதுபற்றிய தன் கவலையை கிருஷ்ணரிடம் வெளியிட்டார். அப்போது, அர்ஜுனன் வந்தான்


"அண்ணா! நீங்கள் இவ்வாறு பயம் கொள்வது முறையில்லை. பரமாத்மா கிருஷ்ணரே நம்முடன் இருக்கும் போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?'' என்றான்.  


இப்படியாக பீமனும் தன் பிரலாபத்தை  வெளியிட, பர்பரிகன் அங்கு வந்தான். அவன் யார் தெரியுமா? பீமனின் பேரன். பீமனின் மகனான கடோத்கஜன், மவுர்வி என்பவளைத் திருமணம் செய்திருந்தான். அவர்களது புதல்வனே இந்த பர்பரிகன். தன் பெரிய தாத்தா அர்ஜுனனனைப் பார்த்து அவன் சிரித்தான்.


"தாத்தா! நீங்கள் போருக்குப் போவது இருக்கட்டும், விஷயத்தை என்னிடம் விடுங்கள். நான் அம்பிகையின் அருள் பெற்றவன். என் முன்னே தோன்றிய சித்தாம்பிகை எனக்கு வில்லும், அம்பும் தந்திருக்கிறாள். அதில் இருந்து புறப்படும் அம்புகளுக்கு கிருபாச்சாரியாரும், அஸ்வத்தாமனும் மட்டுமே தப்புவார்கள். மற்றவர்கள் மாண்டு போவார்கள்,'' என்றான்.


"எங்கே அதை நிரூபித்துக் காட்டு,'' என அர்ஜுனன் சொல்ல, பர்பரிகனும் அம்பை எடுத்து அதில் சிவப்பு நிற சாம்பலை பூசினான். அதை வில்லில் பொருத்தி, மிக வேகமாக இழுத்துவிட்டான். அந்த சாம்பல் இரண்டு பக்க சேனைகளிலும் நின்றவர்களின் உயிர்நிலைகளில் பட்டது


மிஞ்சியவர்கள் கிருஷ்ணர், பஞ்சபாண்டவர்கள், அஸ்வத்தாமன் மற்றும் கிருபாச்சாரியார் மட்டுமே.

உடனே கிருஷ்ணர் எழுந்தார். தன்  சக்கரத்தை ஏவி பர்பரிகனைக் கொன்றுவிட்டார்.

இவ்வளவு பெரிய வீரனை அவர் ஏன் கொல்ல வேண்டும்? அதிலும் தங்கள் பக்கத்துக்கு உதவ இருந்த ஒரு மாபெரும் வீரனைக் கொல்லக்  காரணம் என்ன?' என மற்றவர்கள் நினைத்த வேளையில் சித்தாம்பிகை அங்குவந்தாள்


அவள் அங்கிருந்தவர்களிடம், "பர்பரிகனை பரமாத்மா கிருஷ்ணர் கொன்றதில் தவறில்லைஇவன் ஒரு காலத்தில், ஒரு யட்சனாக இருந்தான். அப்போது அவனது பெயர் சூரியவர்ச்சஸ். அசுரர்களின் அட்டகாசத்தால் பூமாதேவி  சிரமப்பட்ட போது, இவன்  ஒருவனே தனித்துச் சென்று ஒன்பது கோடி அசுரர்களைக் கொன்றான். அந்த வெற்றி மமதையில், இனி, உலகைக் காப்பாற்ற தேவர்களே தேவையில்லை, நான் மட்டும் போதும்,'' என்றான். கோபமுற்ற பிரம்மா, "நீ கிருஷ்ணரால் கொல்லப்படுவாய்,'' என்று சாபமிட்டார்அந்த சாபத்தின் பலனையே இப்போது அனுபவித்தான். எவ்வளவு பெரியவனாக இருந்தாலும், அவனுக்கு மமதை மட்டும் கூடாது என்பதை  நிரூபிக்கவே இப்படி நிகழ்ந்தது,'' என்றாள்.   


பின், கிருஷ்ணர் அவனது தலையை எடுத்து அமிர்தத்தில் நனைத்து உயிர்பெறச் செய்யக் 

கூறினார்


"நீ ராகுவைப் போல தலையுடன் மட்டும் ஒரு மலையில் இருப்பாய். பாரத யுத்தத்தைப்பார்க்கும் பாக்கியம்  பெறுவாய்,'' என்றார்


யுத்தம் முடிந்ததும், தங்கள் வீரத்தைப் பற்றி பாண்டவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்அப்போது பர்பரிகனின் தலை பேசியது


"யுத்தத்தில் நீங்கள் யாரும் போரிடவில்லை. பகவான் கிருஷ்ணரே அனைத்துக்கும் காரணமாக இருந்து வெற்றி பெறச் செய்தார்'' என்றான். அப்போது தேவர்கள் கிருஷ்ணருக்கு வானில் இருந்து மலர் மாரி பொழிந்து தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர்.


நன்றி - தினமலர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக