புதன், 19 ஜூன், 2024

ஸ்ரீராமானுஜர் - ரா.ஶ்ரீ.தேசிகன்

அறம் சிதைந்த ஒவ்வொரு காலத்திலும் ஓர் அவதார புருஷன் உலகம் உய்யத் தோன்றுகின்றான் என்பது உண்மையே. வைதீக மதத்தில் மாசு நுழைந்தபொழுது அதை அகற்றக் கருணை வடிவாய்த் திகழ்ந்த புத்தர்பிரான் பிறந்தார். அவர் வைதீக மதத்தை அழிக்க வரவில்லை; அதை அன்பு நெறியில் அமைத்து, அதற்கொரு புதிய வாழ்வு தந்தார்.

பௌத்த மதக்கொள்கையிலும் நேர்மையில்லாத ஒரு காலத்தில், சங்கராசாரியார் காலடியில் அவதாரஞ் செய்ய வேண்டியிருந்தது. அவர் ஞானயோகத்தை வற்புறுத்தி, அத்வைத மார்க்கத்தை எங்கும் பரப்பினார்.


நாளாவட்டத்தில் போலி அத்வைத பிரச்சாரம் உலகத்தில் தலையெடுத்தபொழுது ஆண்டவன் தன் அளவற்ற கருணையால் ஸ்ரீராமானுஜரை வையகத்தில் பிறக்கும்படிச் செய்தான். நம்மாழ்வார் தம் திருவிருத்தத்தில் அவதார ரகசியத்தை வெளியிடுகிறார். 


பொய்புதைந்த ஞானத்தால், பொல்லா ஒழுக்கம் பிறக்கின்றது; இப்பொல்லா ஒழுக்கத்தால் அழுக்குடம்பு நமக்கு உண்டாகின்றது. இதை நாம் அடையக் கூடாது என்ற கருணையால் அவன் பல யோனிகளில் பிறக்கின்றான்.


ஆண்டவன் கருணை எங்கும் கடல் போலப் பரந்து கிடக்கிறது. ஆனால் அதைச் சாதாரண மனிதர்கள் அணுகிப் பருக முடியாது. அக்கருணையாம் கடலை மேய்ந்து, மேகங்கள் போல ஆசாரியர்கள் நமக்கு அருளைப் பொழிகின்றார்கள். அப்படி அருளைச் சொரியும் நீருண்ட முகில்களில் ஸ்ரீராமானுஜர் ஒருவர் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. வைணவ ஆசாரியர்களாம் விலையிலா மாணிக்க அலங்கலில் (மாலை) இவர் ஓர் ஈடும் எடுப்பும் அற்ற நடுப்பதக்கம் போலத் திகழ்கின்றார். இந்த அருள்முகில் சென்னைக்கருகிலுள்ள ஸ்ரீபெரும்பூதூரில் 11-ஆம் நூற்றாண்டில் தோன்றி, எங்கும் அருளைப் பொழிந்தது.


ஸ்ரீராமானுஜர் கம்பீரமான தோற்றமுடையவர்; அவருடைய விசாலமான நெற்றி அவருடைய பரந்த அறிவைக் காட்டும்: உயர்ந்த திருமேனியுடையவர் என்று நாம் ஊகிக்க முடிகின்றது. இப்பொழுது திருப்பெரும்புதூரிலுள்ள விக்கிரகம் அவர் தழுவிய விக்கிரகமாகும். இவ்விக்கிரகத்தைச் சேவித்தவர்களுக்கு, ஸ்ரீராமானுஜரின் வடிவை ஒருவாறு சித்தரிக்க முடியும்.


பழுத்த ஞானமும், முதிர்ந்த பக்தியும் அதற்கேற்ற செயலும், இவரிடத்தில் ஒன்றாய். உறைந்தன. இம்மூன்றும் ஒரு வடிவெடுத்ததோ என்று சொல்லும்படி அவரது திருமேனி திகழ்ந்தது. 

நாதமுனிகளின் பேரனான ஆளவந்தார் பரமபதத்திற்குச் சென்ற பிறகு அவர் மேனியை இவர் பார்த்த போது மூன்று விரல்கள் மடங்கியிருந்தன. அங்கே கூடியிருந்த பக்தர்கள் ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களை எடுத்துச் சொன்னார்கள். 


'தக்க வைணவருக்கு வியாசர் ஆகிய பராசரர், பெயர்களை இடுதல், மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை வைணவ நெறியில் உய்யச் செய்தல், வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத நெறியில் உரை செய்தல் மூன்றும் அவர் மனதில் வளர்த்த விருப்பங்களாகும்' என்றனர்.


தாம் அவற்றை நிறைவேற்றுவதாக ஸ்ரீராமானுஜர் திருவாய் மலர்ந்த பொழுதே, மடங்கிய விரல்கள் நீண்டதாக நம்பப்படுகிறது.


இதன் பின் துறவறம் மேற் கொண்ட ஸ்ரீராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியினிடத்தில் மிகவும் ரகசியமான மந்திரத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார். நம்பியும் மிகவும் இவரைச் சோதித்து விட்டார். 


ஒருநாள் இவர் ராமானுஜரைத் தண்டும் பவித்திரமுமாக வரச் சொன்னார்.


ஸ்ரீராமானுஜர் கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு போனார். நம்பி, "உம் ஒருவரை மட்டும்தானே வரச்சொன்னோம். இவர்களை ஏன் அழைத்து வந்தீர்கள்?” என்று கேட்டார். "தண்டோடும் பவித்திரத்தோடும் கூட வந்தேன்” என்று கூறி முதலியாண்டானைக் காட்டி, ‘இவர் த்ரிதண்டம்', கூரத்தாழ்வானைக் காட்டி, 'இவர் பவித்ரம்' என்று அருளினார்.


நம்பி, ராமானுஜருக்கு ரகசியத்தை உபதேசித்து 'இதை ஒருவரிடமும் சொல்லக் கூடாது' என்றார். ஆனால் ஸ்ரீராமானுஜரோ திருக்கோட்டியூர் கோவிலின் கோபுரத்தில் நின்று கொண்டு உலகம் கேட்க உபதேசத்தைச் செய்தார்.


தனக்கென்று வாழாப் பேரறிவாளரான பெரும்புதூர் வள்ளல் கொள்ளக் குறையாத அருள்மழையைச் சாம்புகின்ற பயிராம் மக்களிடத்தே பொழிந்தார்.


ஸ்ரீராமானுஜர் உலக இயலை நன்கறிந்தவர், எதையும் தக்கபடி அமைக்கும் ஆற்றலையுடையவர். திருவரங்கம் கோயில்களில் அவர் அமைத்த நெறியில்தான் இன்றும் கைங்கரியங்கள் நடக்கின்றன. ஆண்டவனை அடைய இராமானுஜரின் திருவடி சம்பந்தம் போதும் என்று அவரது அடியார்கள் கதறியிருக்கின்றனர். “எனக்கு மறுபிறப்பில்லை; ஆனால் பிறப்பு எனக்கு வருமாயின் கிணற்றில் விழுந்த குழந்தையை விரைந்தெடுக்கும் தாய் போல் எதிராஜன் தோன்றுவான்" என்று மணவாள மாமுனிகள் மொழிகின்றார். ஸ்ரீராமானுஜரின் இறுதிக் காட்சி நமது உள்ளத்தை நன்கு கவரும்.


“ஆண்டவனுடைய கைங்கரியத்தில் ஈடுபடுவீர்களாக. இதுதான் நான் உங்கட்குச் செய்யும் கடைசி உபதேசமாகும்" என்று கூறியபடி, எம்பார் திருமடியிலே திருமுடியும், வடுகநம்பி திருமடியிலே திருவடியும் வைத்துக் கண்வளர்ந்து விட்டார் அப்பெரும் வள்ளல். இந்தக் காட்சி காலப் பனித்திரையைக் கிழித்துக் கொண்டு நம்முன் நிற்கத் தடையுண்டோ?


ஸ்ரீராமானுஜர் கண்ட மதம், ஆழ்வார்கள் கண்ட மதம் என்று சொல்லலாம். 'தெரியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று வேதாந்த தேசிகர் நம்மாழ்வாரை மனதில் வைத்துப் பாடுகின்றார். சித், அசித், ஈஸ்வரன் - இம்மூன்றும் நித்தியமான தத்துவங்கள். சித், அசித் இவ்விரண்டும் பகவானுக்குச் சரீரமாய்த் திகழ்கின்றன.


உடன்மிசை உயிரெனக் கரந்துளன் என்ற கருத்தை வைத்துக் கொண்டு பிரம்ம சூத்திரத்திற்கும் கீதைக்கும் ஸ்ரீராமானுஜர் உரை தருகின்றார். அவன் ஆத்மா, பிரபஞ்சம் அவனுடைய சரீரம்; சரீர ஆத்ம பாவம் என்ற தத்துவம் ஸ்ரீராமானுஜர் கண்டது. பிரபத்தி அல்லது சரணாகதி வழி அவர் உபதேசித்தது. மதுரகவி ஆழ்வாரைப் போல ஆசாரியனை அடைந்து நாம் உய்யலாம்.


'பெரிய பெருமாளாகிற பெருங்கடலிலே ஆழ்வாராகிய காளமேகம் படிகின்றது. அது நாதமுனியாகிற மேருவின் மீது பொழிகின்றது. உய்யக் கொண்டார், மணக்கால் நம்பியாகிற அருவிகளிலே இறங்குகின்றது. ஆளவந்தாராகிய ஆற்றில் கூடுகின்றது. பெரிய நம்பி முதலிய வாய்க்கால்களாகப் புறப்படுகிறது. 


'எம்பெருமானாராகிற ஏரியிலே வந்து தேங்குகின்றது. ஆசாரியர்களாகிற மதகுகளாலே புறப்பட்டு இக்குடும்பமான கழனிக்கு ஏறிப் பாய்கின்றது' இவ்வரிகளில் ஆசாரிய பரம்பரை மூலமாக எப்படி ஆத்ம ஞான வெள்ளம் பெருகி ஓடுகின்றது என்பது மிகக் கவின் பெறச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.


நம் நாட்டிற்கு சங்கராச்சாரியாரைப் போல் ஒரு சிறந்த அறிவாளி வேண்டும்; ஸ்ரீராமானுஜரைப் போல ஒரு பரந்த கருணை வள்ளல் வேண்டும். ஓங்கிய அறிவிலும், பரந்த அன்பிலுந்தான் உலக நாகரிகம் நிலைபெற்றிருக்க முடியும். 


வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு, என்றும் மறையவர் தாம் 

தாழ்வற்றது; தவம் தாரணி பெற்றது; தத்துவநூல் 

கூழற்றது; குற்றமெலாம் பதித்த குணத்திறனர்க்கு அந் 

நாழற்றது, நம் ஸ்ரீராமானுஜன் தந்த ஞானத்திலே.


நன்றி - ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் 2017


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக