புதன், 19 ஜூன், 2024

கிளி காட்டிய ஸ்ரீரங்கன்! - எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்

ஸ்ரீ ரங்கநாதருக்கு மாலையைப்போல ஓடும் நதி காவிரி நதி. ஒரு சமயம், காவிரியில் பெரும் வெள்ளம் வந்தது. வெள்ளத்தில் ஸ்ரீரங்கம் மூழ்கியது. வெள்ளம் வடியப் பல நாட்கள் ஆகின. வெள்ளம் வடிந்தபின் கோவில் உட்பட எந்தப் பகுதியையும் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மண்மேடு தெரிந்தது. அந்தக் காலத்தில் ரங்கநாதர் கோவில் இப்போதுபோல பெரிய கோவில் அல்ல. கர்ப்பக் கிரகமும் ஒரு சிறிய மண்டபமும் மட்டுமே கொண்டிருந்த கோவில். மண்மேட்டின் கீழ்ப்புறம் கோவில் அகப்பட்டுக் கொண்டது. மண்மேடுகளில் மரம், செடி, கொடிகள் வளரத் தொடங்கின.

சோழ நாட்டை ஆண்ட தர்மவர்மன் என்ற மன்னன் ரங்கநாதரைக் கண்டுபிடிக்கும் எண்ணத்துடன் அடிக்கடி அப்பகுதிகளில் நடந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். வெள்ளம் வருவதற்கு முன் ரங்கநாதர் கோவிலில் ஒரு கிளி இருந்தது. அது தினந்தோறும் ரங்கநாதர் கோவில் பூஜைகள் எல்லாவற்றையும் உன்னிப் பாகப் பார்ப்பது வழக்கம். வெள்ளம் வந்தது, கோவிலை மண் மூடியது எல்லாவற்றையும் அந்தக் கிளி கவனித்துக்கொண்டிருந்தது. சொன்னதைத் திரும்பச் சொல்வதுதானே கிளியின் பழக்கம். ஒரு கிளையில் அமர்ந்து தான் அங்கு முன்னால் கேட்ட சுலோகங்களை- அதாவது பூஜைக் காலத்தில் சொன்ன சுலோகங் களைத் திரும்பத் திரும்பச் சொல்வதை வாடிக்கை யாக்கிக் கொண்டது.


ஒரு நாள் மாலை கோவிலைத் தேடி சோழ மன்னன் தர்மவர்மன் நடந்து வந்த நேரம், கிளி சொன்ன சுலோகம் மன்னனின் மனதைத் தொட்டது. 


“வைகுண்டத்துக்கு எப்படி விரஜை என்ற நதியோ அப்படியே ஸ்ரீரங்கத்துக்கு காவிரி. ஸ்ரீரங்கம் பரமபதமான வைகுண்டபதி. தேவர் களே இங்கு பிரணவாகரமான விமானமாக இருக்கிறார்கள். ஸ்ரீரங்கநாதனே பிரணவ தத்துவங்களை வெளிப்படுத்தும் பரம்பொருள்' என்பது கிளி சொன்ன சுலோகத்தின் பொருள்.


"காவிரி விரஜா ஸோயம் வைகுண்ட ரங்க மந்திரம்

ஸ வாசுதேவா ரங்கேச பிரத்யட்சம் பரமம் பதம்

விமானம் பிரணவாகாரம் வேத ச்ருங்க மகாத்புதம்

ஸ்ரீரங்கசாயி பகவான் பிரணவாந்தித பிரகாசகா”


என்பது கிளி சொன்ன சுலோகம்.


பல காலமாகக் கோவிலைத் தேடிய மன்னன் கிளி சொன்ன சுலோகத்தைக் கேட்டவுடன் கோவில் இருந்த இடத்தை அறிந்து கொண்டான். உடனடியாக ஆட்களை வரவழைத்தான். கிளி அமர்ந்து சுலோகம் சொன்ன பகுதியைத் தோண்டினான். ஸ்ரீரங்கநாதர் வெளிப்பட்டார் என்பது புராணம்.


இதனால் அந்தச் சோழனை கிளிச் சோழன் என்று அழைத்தனர்.


நன்றி - ஓம் சரவணபவா 2009


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக