திங்கள், 2 செப்டம்பர், 2024

கண்ணன் காட்டிய வழியம்மா! அது அன்பால் விளைந்த அவதாரமம்மா - வி.எஸ். ஸ்ரீநிவாஸன்

கண்ணபிரான் செய்த ராஜதந்திரச் செயல்களும் திருவிளையாடல்களும் புதுமையானவை. அவன் இயல்புக்கு மாறாகப் பல புரட்சிகளைச் செய்தான். அவற்றில் சிலவற்றை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

கண்ணன் செய்த புரட்சி அகப்புரட்சி, அன்புப் புரட்சி. புரட்சியென்றால் புரட்டு அல்ல. பரிணாம ஏணியில் படிப்படியாக ஏறுவதைக் குறுக்கு வழியில் சாதித்துக் கொள்வதே உண்மையான புரட்சி.

பிரெஞ்சுப் புரட்சி என்பது ரத்தம் சிந்திய அரசியல் புரட்சி. ஆங்கிலேயர்களின் தொழிற்புரட்சி, முதலாளி வர்க்கத்தினரால் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தப்பட்ட புரட்சி. கண்ணன் செய்தது ஆன்ம நேயப் புரட்சி. இது இந்தியாவை உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாகக் காட்டுகிறது. இதை ஒரு வேய்ங்குழல் புரட்சி என்றும் சொல்லலாம்.

கண்ணன் அழகுத் தெய்வம். சாமானிய அழகு வாடிப் போகும். கண்ணனின் அழகோ என்றும் வாடாத செந்தாமரை. கண்ணன் அழகு ஆனந்தத்தில் தோய்ந்து உருவாயிற்று. தொட்டதையெல்லாம் தன் பேரன்பினால் அழகு செய்தான் கண்ணன்.

கண்ணன் பிறப்பே ஒரு புரட்சி. பிறவியற்றவன் பிறக்கிறான். இறைவனுடைய முழுமையான சொரூபம் கண்ணன்; மானிடப் பிறவியில் தெய்வமாகச் செயற்படுகிறான். இவன் பிறப்பு, சிறைச்சாலைக் கதவுகளைத் திறந்துவிட்டது. கைவிலங்குகளை உடைத்தெறிந்தது. வடமதுரையில் மட்டும் அல்ல; வையகம் முழுவதிலும் ஓர் ஆன்மநேயப் புரட்சியை ஏற்படுத்தி மக்களுக்கு விடுதலை காண வழிகாட்டியது.

வளர்ப்பிலும் புரட்சிதான். பெற்றவள் தேவகி; வளர்த்தவள் யசோதை.

பூதனை என்னும் பூதம், பெற்ற தாய்போல் வந்து, பால் ஊட்டுவதுபோல விஷத்தை ஊட்டிக் கொல்ல முயன்றது. குழந்தைக் கண்ணனோ அந்த விஷத்தை அப்படியே உறிஞ்சி அந்த பூதத்தைக் கொன்றான். ஆஷாடபூதித்தனம் ஆத்திக வேடத்தில் தோன்றினாலும் அது அழிவது திண்ணம் என்ற நீதி இதன் மூலம் கிடைக்கிறது.

வெண்ணெய் உண்ட பிள்ளையின் வாயில் யசோதைத் தாய் வெண்ணெயையும் காணவில்லை; மண்ணையும் காணவில்லை. வையம் ஏழினையும் கண்டாள். அந்த ஆச்சரியத்தைத் தாய்ப்பாசம் மறைத்துவிடுகிறது.

வெண்ணெய் திருடிய கள்வன் வெண்ணெய் போல் உருகும் நெஞ்சங்களையும் ஆட்கொண்டான். அதாவது இரக்கம் காட்டுவோரிடம் கருணை காட்டுகிறது பரம்பொருள் என்ற குறிப்பை நாம் இங்கே காண்கிறோம். அன்புக் கண்ணன் எல்லாப் பிராணிகளுக்கும் தோழனாகத் திகழ்ந்தான். அவனது அன்பும் அழகும் அருளும் மக்களை வசீகரித்ததுபோல் விலங்கினங்களையும் வசீகரித்தன.

எத்தகைய சக்திக்கும் கட்டுப்படாதவன் அன்புக்கும் தாய்ப்பாசத்துக்கும் கட்டுப்படுகிறான். கண்ணன் திருட்டைப் பற்றிப் பேசியவர்களிடம், "உடையவன் உடைமையை எடுத்துக் கொள்வதில் என்ன தவறு?' என்கிறான்.

குழந்தைகளுக்கு துள்ளித்திரியும் காலத்தில் துஷ்டத்தனமே மூலதனம் என்பதை, கண்ணனின் பிருந்தாவன லீலைகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

"காட்டிலே மாடு மேய்த்தான்' என்று சர்வ சக்தியுள்ள பரம்பொருளின் எளிமை கூறப்பட்டுள்ளது. மறைகளுக்கு மறைந்திருந்தவன் மாடுகளுக்குப் பின்னே சென்றான் என்பதன் உட்பொருள் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. இது,

"மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்;

காலிக்குப் பின்னேயும் காணலாம்'

என்பதன் உட்பொருளே.

ஏதோ ஒருகாலத்தில் கோகுலத்தில்- பிருந்தாவனத்தில் நடந்ததுதானா கண்ணன் விளையாட்டு? "கடவுளின் அறக்கருணையும் விளையாட்டே; மறக்கருணையும் விளையாட்டே!' என்ற பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிமையாகவும் வேடிக்கையாகவும் வெளியிடுகிறது கண்ணனின் திருவிளையாட்டு.

ஆண்டுதோறும் ஆயர்கள் மழைக் கடவுளான இந்திரனுக்கு நன்றி செலுத்தும் வகையில் விழா எடுப்பது வழக்கம். அப்படி ஒரு விழா எடுக்கும்போது கண்ணன் அதைத் தடுத்து, "கோவர்த்தனகிரியல்லவா நம் பசுக்களுக்குப் புல்லும் தண்ணீரும் கொடுக்கிறது? கண்ணுக்குத் தெரியாத இந்திரனைக் காட்டிலும் கண்ணுக்கு முன் நின்று உங்கள் மாடுகளை ஊட்டி வளர்க்கும் கோவர்த்தன மலைக்கே (இயற்கைக்கே) நன்றி செலுத்துங்கள்'' என்று பகுத்தறிவு வாதம் செய்தான்.

இதைக் கண்ட இந்திரன் தன் மேகங்களை அனுப்பி ஆயர்களையும் பசுக்களையும் அழித்துவிடுமாறு ஆணையிட்டான். கண்ணனோ கோவர்த்தனகிரியையே குடையாகப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினான்.

இது, பதவியில் இருப்பவர்கள் செருக்குற்று அழிந்து போவதை எவ்வளவு அருமையாய்க் காட்டுகிறது! தேவலோகத் தலைமைப் பதவி உலகத்திற்குத் தொண்டு புரிவதற்கே என்பதை இந்திரனுக்கு உணர்த்தினான் கண்ணன்.

தாய் வடிவானாலும் சரி; மாமனானாலும் சரி- கொடுங்கோலனை ஒழிப்பதே கிருஷ்ணாவதார நோக்கம். பொல்லாத அசுர சக்திகள் எவ்வளவு படாடோபமாக உலகத்தைத் துன்புறுத்தி வந்தபோதிலும், தர்மாவேசம் என்ற தெய்வக் கோபத்துக்கு முன், தருணம் வந்ததும் அவை மரணம் எய்திவிடும் என்பது கம்ச வதத்தின் உட்பொருள்.

துஷ்டப் பிள்ளை, கள்ளக் கிருஷ்ணன் என்ற நிலையில் கள்ளங்கபடற்ற பால லீலைகள் நிகழ்ந்ததை கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் கண்டோம். வட மதுரையிலும் துவாரகையிலும் நாம் காணும் கண்ணனோ ராஜதந்திரியாகக் காட்சியளிக்கிறான்.

கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் வெண்ணெய் திருடிய கள்வன் உள்ளம் திருடிய கள்வனாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறான். இது பாகவத கிருஷ்ணனின் உச்சநிலை. துவாரகைவாசியோ பாரதக் கிருஷ்ணனாகி ராஜதர்மத்தையும்- அறத்தின் பல்வேறு அம்சங்களையும் உருவாக்குகிறான். கீதாசாரியனான- அந்த உச்சநிலைக்கான விதையை கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் காண்பதுபோல், துவாரகையிலும் காண்கிறோம். பாண்டவர்க்குத் தூதனாகிய எளிமை, பாரதப் போரில் சாரதியாகவும் தன்னை வெளியிட்டுக் கொள்கிறது. பாண்டவ சேனையும் கௌரவ சேனையும் முதல் நாள் யுத்தத்துக்காக அணிவகுத்து நிற்கின்றன. அர்ச்சுனன் இருதிறத்துப் படைகளையும் நன்றாகப் பார்க்கக்கூடிய ஓர் இடத்தில், தேரை நிறுத்துகிறான் கண்ணன். அர்ச்சுனனுக்கு உள்ளம் கலங்குகிறது. புத்தி மயங்குகிறது. மறுபடியும் காட்டுக்கே போய்விடலாம் என்று தோன்றுகின்றது.

இந்த நிலையை, "இழிவான இதய துர்ப்பலம்' என்கிறான் பார்த்தசாரதி. இந்தத் துர்ப்பலத்தைப் போக்கி ஞானசக்தியை அர்ச்சுனனுக்கு ஊட்டுவதற்குத்தான் பார்த்தசாரதி கீதாசாரியன் ஆகிறான்.

பகவத்கீதை உலகத்திலுள்ள சிறந்த ஞான நூல்களில் ஒன்று என்பது உலகப் பேரறிஞர்கள் கருத்து. காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போரில் படைத்துணையாக உதவியது பகவத்கீதை என்பதை மறுக்க முடியுமா?

அவதார மூர்த்திகளான ராமனும் கிருஷ்ணனும் மக்களுடன் கலந்து அவர்களைத் திருத்திப் பணிகொண்டதைப் போன்ற சிறப்பை வேறு அவதாரங்களில் காண்பது அரிது. கிருஷ்ணாவதாரத்தின் தனிப்பெருஞ் சிறப்பை ராமாவதாரத்திலும் காண முடியாது என்பது பக்தர்களின் கருத்து. தீபாவளி நரகாசுரன் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் கொடுங் கோன்மையால் மக்களை வாய்விட்டுக் கதறச் செய்ததால் இப்பெயர் பெற்றான். சத்தியபாமையைப் படைத் துணையாகக் கொண்டு கண்ணன் நரகாசுர வதம் செய்தான். நரகன் சாகும்போது மெய்யுணர்வு பெற்றான். "கண்ணன் தன்னுடைய உடலையே வதம் செய்தான்; ஆத்மாவையல்ல' என்ற ஞானம் இறக்கும்போது அவனுக்குப் பிறந்துவிட்டது. எனவே, தன் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கண்ணனிடம் வேண்டினான். அந்த நாளே தீபாவளிப் பண்டிகையாயிற்று. தீபாவளியைக் கொண்டாடுவதிலும் ஒரு புரட்சி செய்திருக்கிறான். பண்டிகைகளெல்லாம் பொதுவாகப் பகலில் கொண்டாடப்படுகின்றன. இந்தப் பண்டிகையோ சூரியோதயத்துக்குமுன் நடைபெறுகிறது.

இப்படிப் பழமையில் புதுமை புகுத்திய கண்ணனைப் புரட்சிக் கண்ணன் என்று கூறுவதில் என்ன வியப்பு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக