ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

சக்ய பாவம்! - ‘திருப்புகழ் திலகம்' மதிவண்ணன்

‘ஒன்பது விதமான  பக்தியை இறைவன் மீது நாம் செலுத்தலாம். ஸ்ரவணம் (இறைவன் நாமத்தைக் கேட்பது), கீர்த்தனம் (இறைவன் நாமத்தைச் சொல்வது), ஸ்மரணம் (இறைவன் திருநாமத்தையே நினைத்துக் கொண்டிருப்பது) இப்படி ஒன்பது விதமான பக்திகளில் ‘சக்யம்' என்பதும் ஒன்று. சக்யம் என்றால் நட்பு. இறைவனை நம் தோழனாகவே பாவித்து பக்தி செய்வது. அந்த சக்யத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதுதான், ‘சுக்ரீவன் ராமன் இடத்தில் காட்டிய நட்பு’ என்றார் 'சுக்ரீவ சக்யம்’ என்ற தம் உபன்யாசத்தில் ‘திருப்புகழ் திலகம்' மதிவண்ணன்.

"ராமாயணம் என்பதன் பொருள் என்ன? அயணம் என்றால் வழி என்று அர்த்தம். நமக்காக ராமர் காட்டிய வழியைத்தான் ராமாயணமாக நாம் போற்றி வருகிறோம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் - அதுதான் ராமர். ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் காட்டுக்குப் புறப்பட்டனர். மைதிலி ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு, மூவர் இருவர் ஆன சமயத்தில்தான் சுக்ரீவ சந்திப்பு என்பது நிகழ்ந்தது.


வாலி, சுக்ரீவனது அரசையும் மனைவியையும் அபகரித்த பிறகு, எங்கே அவன் தன் உயிரையும் அபகரித்து விடுவானோ என பயந்துகொண்டு, சுக்ரீவன் ரிஷ்யமுக பர்வதத்தில் தங்கி இருந்தான். சுக்ரீவனின் மாண்புமிகு முதலமைச்சராக இருந்தவர், ஹனுமார். ராமரும், லட்சுமணரும் கவலை தோய்ந்த முகத்தோடு ரிஷ்யமுக பர்வதம் நோக்கி வரும் பொழுது, அவர்கள் வாலி அனுப்பிய ஆட்களோ என பயந்து நடுங்கினான் சுக்ரீவன்! 'ஆஞ்சநேயா! ஓடிச்சென்று அவர்கள் யார்? எதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து வா' என்றான். அந்த இடத்தைவிட்டு நகராமலேயே ஆஞ்சநேயர்,

'அவர்கள் அரசர்கள் கிடையாது. ஏனென்றால், அவர்கள் மரவுரி அணிந்திருக்கிறார்கள். அவர்கள் ஞானிகள் கிடையாது. ஏனென்றால், அவர்கள் முகத்தில் கவலை இருக்கிறது' என்று சொல்லிவிட்டு, சின்ன உருவத்தை எடுத்துக் கொண்டு ராமரிடம் சென்றார். ராமர், 'நீ யார்?' என கேட்ட கேள்விக்கு, அவ்வளவு அற்புதமாக, புத்திசாலித்தனமாக பதில் அளிக்கிறார். அவரது பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ராமர், 'இவன் பிரம்மதேவனோ, சிவபெருமானோ?' என லட்சுமணரிடம் ஆச்சரியமாக வியந்து பேச, 'என் தலைவரிடம் வாருங்கள்' என்றபடியே ராமரையும், லட்சுமணரையும் சுக்ரீவனிடத்தில் அழைத்துக்கொண்டு போனார் ஹனுமார்.


நேராக சுக்ரீவனிடம் ஹனுமார் சொன்ன ஒரு வாக்கியம் இருக்கிறதே! அதுதான் அவருக்கு 'சொல்லின் செல்வர்' என்ற பட்டத்தையே வாங்கித் தந்திருக்கிறது. 'வந்திருப்பவர்கள், வாலிக்குக் காலனாக வந்திருக்கிறார்கள்' என்ற வாக்கியத்தைக் கேட்ட உடனேயே, ராமரையும் லட்சுமணரையும் 'உள்ளே வரச் சொல்' என்கிறான் சுக்ரீவன். வந்தவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற நோக்கோடு உள்ளே சென்று, ஏதேதோ அவர்களுக்கு சாப்பிட சுக்ரீவன் எடுத்து வருவதைப் பார்த்து ராமர் அவரிடம் பரிவாக, 'நான்தான் மனைவியை இழந்தேன். நீயும் பிரிந்து விட்டாயோ?' எனக் கேட்க, உடனே ஹனுமார், 'வாலிதான் இதற்குக் காரணம்' எனக் கூற, அங்கேதான் நட்பு மலர்ந்தது. சுக்ரீவனை ஆரத் தழுவிக் கொண்ட ராமர், 'இனி உன் உற்றார், எனக்கும் உற்றார். உனக்கு வேண்டாதவர்கள், எனக்கும் வேண்டாதவர்களே' என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு, வாலியை வீழ்த்தி சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டும் என தீர்மானித்துக் கொண்டார்.


ராமருக்கு வாலியை வெல்லக்கூடிய சக்தி இருக்குமா என சுக்ரீவனுக்கு சந்தேகம். 'ஏழு மராமரங்களை யாருடைய அம்பு துளைக்கிறதோ, அவர்களால்தான் வாலியைத் துளைக்க முடியும்' என்று அவன் சொல்ல. உடனே ஹனுமார் ராமரிடம் சென்று, 'உங்கள் வில்லாற்றலைப் பார்க்க வேண்டும் என அரசர் (சுக்ரீவன்) ஆசைப்படுகிறார். ஏழு மராமரங்களைத் துளைத்து உங்கள் வில்லாற்றலைக் காட்டுங்களேன்' என்று சொல்ல, ராமர் அவ்வண்ணமே துளைத்தார். வாலியிடம் சென்று போருக்கு அழைக்கும்படி சுக்ரீவனிடம் சொல்கிறார்.


ராமரின் சொல்படியே வாலியைப் போருக்கு அழைக்கிறான் சுக்ரீவன். அதுநாள்வரை போர் ஒன்றுமே இல்லாமல் bore அடித்துக்கொண்டிருந்த வாலிக்கு ஒரே குஷி. 'ஆஹா! இப்பொழுதே கிளம்பி விடுவோம், என போருக்குக் கிளம்பும் பொழுது, அவனது பத்னியான தாரை அவனைத் தடுத்து, 'சற்றே நிதானியுங்கள்' என்கிறாள். ஆனால், அவள் சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல், வாலி போருக்குக் கிளம்பினான். அவனுக்கு ராமர் கையால், ராமரின் அம்பால், முக்தி கிடைத்தது. ஆம்! அதை வாலி வதம் என்றே சொல்லக்கூடாது. அது வாலி முக்திதான்.


அதையடுத்து மன்னனான சுக்ரீவன், ராமன் செய்த உதவியை மறக்கவில்லை. சீதையைத் தேட ஆளனுப்பினான். அனுமன் மூலம் தகவல் அறிந்ததும், படைகளுடன் இலங்கை வந்து போரில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றான் என்கிறது ராமாயணம்.


விஷயம் அதல்ல! தனக்குப் பதவி வாய்த்ததும் புத்தி தடுமாறாமல் ராமகாரியத்தில் ஈடுபட்டானே... அதில்தான் தெரிகிறது சுக்ரீவனின் நட்பு. பகவானை அடைய உள்ள பல மார்க்கங்களில், சக்ய பாவத்துக்கான சரியான உதாரணம் சுக்ரீவன்தான்!


தொகுத்தவர் நளினி சம்பத்குமார்


நன்றி - தீபம் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக