சனி, 7 செப்டம்பர், 2024

காளிங்க நர்த்தனம்! - மன்னார்குடி ஸ்ரீ.உ.வே. ராஜ கோபாலாச்சார்யார்

"பகவான் எதைச் செய்தாலும் அதை டூ இன் ஒன், த்ரீ இன் ஒன்னாகத்தான் செய்வார். தங்களது பால பருவத்திலேயே பலராமரும், கிருஷ்ணரும் நன்றாக வளர்ந்து, குமார பருவத்தில் இருப்பவர்கள் போல இருந்தார்கள். 'கண்ணனுக்கு ஆபத்து வந்து விடும், அதனால் நாம் ப்ருந்தாவனம் சென்று விடுவோம்' என நந்தகோபரும், யசோதையும் முடிவு எடுத்தார்கள். நெருஞ்சி முட்கள் மட்டுமே நிறைந்த அடர்ந்த காடாக அதுநாள் வரை இருந்த ப்ருந்தாவனம், பகவானின் சங்கல்பத்தால், புற்களும் பூக்களும் நிறைய நீரும் நிறைந்த இடமாக மாறியது. க்ருஷ்ணாவதாரம் முழுக்கவே இப்படி தம் கருணையால் பல லீலைகளைச் செய்து காட்டியிருக்கிறார் கண்ணன்' என்றார், 'விஷ்ணு புராணத்தில் க்ருஷ்ணாவதாரம்' பற்றிய தம் சொற்பொழிவில் மன்னார்குடி ஸ்ரீ.உ.வே. ராஜ கோபாலாச்சார்யார்.

கிருஷ்ணர் எப்போ கன்றுகளை மேய்க்கப் போனாலும், கூடவே பலராமரும் போவார். ஒருநாள், கிருஷ்ணர் பலராமரை விட்டுவிட்டு தாம் மட்டும் தனியாக கன்றுகளை மேய்க்கப் புறப்பட்டார். உள்ளுக்குள்ளே நந்தகோபருக்கும், யசோதைக்கும் இப்படித் தனியாகப் போகிறாரே என்ற நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது. தினமும் கன்றுகளை மேய்க்கச் செல்லும் இடத்துக்குப் போகாமல் வேற ஒரு புது இடத்துக்கு அன்னிக்குன்னு போனார் கண்ணன். 


எந்த இடத்துக்குப் போனார் தெரியுமா? எந்த ஒரு நதியின் கரையில் நின்றிருந்தாலே, அதுநாள் வரை அங்கே போவோர்கள் எல்லாம் விஷ காற்றுப் பட்டு மூர்ச்சையாகி விழுந்துகொண்டு இருந்தார்களோ, அந்த இடத்துக்குத்தான் கண்ணன் போனார். ஆம். அது யமுனா நதிக்கரை.


அந்த நதியின் மடுவில்தான் அதி பயங்கரமான, அதி கொடூரமான விஷத்தைக் கக்கிக்கொண்டு காளியன் என்ற நாகம் வசித்து வந்தது. அந்த நாகத்தின் மூச்சுக் காற்றை சுவாசித்தாலே போதும் மரணம் நிச்சயம் என்பதாலேயே, அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த இடையர்கள், தண்ணீர் எடுக்கக்கூட அந்தப் பகுதிக்குச் செல்லாமல் இருந்தார்கள். 'இந்த நாகத்தை எப்படியாவது சமுத்திரத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்' என தீர்மானம் செய்துகொண்டார் பகவான். அதனால், என்ன பண்ணினார் தெரியுமா? பக்கத்தில் இருந்த ஒரு பெரிய கதம்ப மரத்தின் மீது ஏறிக்கொண்டார். யமுனை நதியில் குதித்தார். ஏற்கெனவே விஷத்தின் தாக்கத்தால் கலங்கிப் போயிருந்த அந்த நதி, பகவான் குதித்ததும் மேலும் கலங்கிப் போய் நின்றது. விஷ ஜ்வாலையால் சுற்றியிருந்த மரங்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. பகவான், தான் வந்திருப்பதை உணர்த்துவதற்காகவே கைகளைத் தட்டினார். அந்த சப்தத்தைக் கேட்டு படுகோபத்தோடு காளியநாதன் மேலே வந்தார்.


ஆயிரம் நாக பத்தினிகள் அந்தக் காளியனுக்கு உண்டு. எல்லாருமாகச் சேர்ந்து வெளியில் வந்து கண்ணனைச் சிக்க வைத்து, அவன் மீது விஷ ஜ்வாலைகளைக் கக்கி அவனைக் கடித்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இடையர்கள் நந்தகோபரிடம் பதறிச்சென்று காளியன் செய்து கொண்டிருந்த கொடுமைகளைச் சொல்ல, உடனே யசோதை, நந்தகோபர், பலராமர் மற்றும் ஊர் மக்கள் எல்லாரும் கண்ணனுக்கு என்ன ஆகிவிட்டதோ என்று பயந்து ஓடி வந்தார்கள். அதற்குள்ளே இங்கே சீன் மாறிவிட்டது. கிருஷ்ண பகவான், நாகத்தின் ஆயிரம் தலைகளுக்கும் மத்தியில் இருக்கக்கூடிய தலையை தம் கைகளால் பற்றி அதன் மீது குதித்து ஏறினார். இன்னொரு கையால் அதன் வாலைப் பற்றிக்கொண்டு படு ஜோராக நர்த்தனம் ஆடினார். நாகம் விட்ட பெரு மூச்சே அவரது நடனத்துக்குத் தாளமாக அமைந்தது.


வணங்காதவர்களையும் வணங்க வைப்பவன்தானே இறைவன். அப்படி நாகத்தை வணங்கவைத்து அதன் சக்தி அத்தனையையுமே போக்க வைத்தார். 'இனி காளியன் பிழைக்க மாட்டான்' என்பதை உணர்ந்துகொண்ட நாக பத்தினிகள், 'லோகத்தை ரட்சிக்கத்தான் இப்படி கிருஷ்ணர் பண்ணியிருக்கிறார். இனி நாம் அவரை சரணாகதி செய்வதுதான் ஒரே வழி' எனத் தீர்மானித்து, அவரை சரணாகதி செய்து காளியனை ரட்சிக்கும்படி வேண்டி நின்றனர். உடனே பகவான், 'நான் மன்னிக்கிறேன். ஆனால், இனி காளியன் இங்கே இருக்கக்கூடாது. சமுத்திரத்துக்குப் போய்விட வேண்டும்' எனச் சொல்ல, 'நான் சமுத்திரத்துக்குப் போனால், அங்கே என்னை கருடன் இம்சிப்பாரே' என காளியன் கேட்க. இனி, என் பாதம் பதிந்த உன் சிரசைப் (தலையை) பார்த்துவிட்டு கருடன் உன்னை நிச்சயம் இம்சிக்க மாட்டான்' எனச் சொல்லி கருணையுடன் அவனையும் அவன் பத்தினிகளையும் ரட்சித்தார். காளியனுக்கு நற்புத்தி புகட்டி அவனை விடுதலை செய்தார்.'

நம்முள்ளேயும் காளியனைப் போல விஷ எண்ணங்கள், சிந்தனைகள் திடீர் திடீரென்று வெளிப்படுகின்றன. ஸ்ரீகிருஷ்ணனிடம் சரணாகதி செய்தால், நம் மனமான காளிங்கனின் தலையிலும் அவர் நர்த்தனம் புரிந்து நமக்கு நலம் புரிவார்.


தொகுத்தவர் நளினி சம்பத்குமார்


நன்றி - தீபம் 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக