“கண்டேன், கண்டேன், கண்டேன்” - கோமான் ஸ்ரீ பாலாஜி


கண்டேன் திருமேனி யான் கனவில்* ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி* கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் ஓட்டு வித்து* பின்னும்,
மறு நோய் செறுவான் வலி.
பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதியின் இந்தப் பாசுரத்தில், எம்பெருமானின் திருமேனி அழகையும், அவன் கையில் ஏந்தியிருக்கும் சுதர்சன ஆழ்வாரின் (சக்கரத்தின்) பெருமையையும், எம்பெருமானால் நமக்குக் கிடைக்கும் முக்தியையும் மிக அழகாக அருளியுள்ளார்.
இங்கே ஆழ்வார், “கண்டேன்” என்று மூன்று தடவை கூறுகிறார். முதலில் "கண்டேன்" என்று தொடங்குகிறார். “கண்டேன்” என்றால் ஏதோ மேலோட்டமாகப் பார்த்தது என்ற அர்த்தத்தில் அல்ல; அனுபவித்துச் சொல்லும் வார்த்தை. "கனவில் கண்டேன்" என்கிறார். இங்கே கனவு என்பது நாம் தூக்கத்தில் காணும் சாதாரணக் கனவல்ல. உலக விஷயங்களில் இருந்து விலகி, ஆழ்ந்த தியானத்தில் (மனக்கண்ணில்) எம்பெருமான் அவருக்குத் தந்த நேரடித் தரிசனம். அந்தத் தரிசனத்தில் எம்பெருமானின் அழகிய திருமேனியை (திவ்ய மங்கள விக்ரஹம்) கண்டு இன்புற்றார். நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் கனவுகள் உலகியல் சார்ந்தவை; ஆனால் பகவத் சிந்தனையிலேயே திளைக்கும் ஆழ்வாருக்கு எம்பெருமானே கனவில் வருவது இயல்பான ஒன்று தானே.
அந்த அழகிய திருமேனியைப் பார்த்தபோது, ஆழ்வாரின் கண்கள் எம்பெருமானின் திருக்கைகளில் நிலைத்தன. பெருமானின் திருக்கைகளைக் கண்டார், இது இரண்டாவதாக வரும் “கண்டேன்”. அங்கே கனலும் சுடர் ஆழி - நெருப்பைக் கக்கும் ஒளியையுடைய சக்கரத்தைக் கண்டார். இது மூன்றாவது “கண்டேன்”. இந்தச் சக்கரம் பக்தர்களுக்குப் பாதுகாப்பளிப்பதோடு, தீயவற்றை அழிக்கும் வல்லமை கொண்டது.
எம்பெருமானின் திருமேனி அழகில் மயங்கிய ஆழ்வாருக்கு, அவனது கையில் இருக்கும் சக்கரம் பெரும் தைரியத்தைக் கொடுத்தது. ஆதிமூலமே என்று கதறிய கஜேந்திரன் எனும் யானைக்கு பெருமான் முதலை மீது சக்கரத்தைத் தானே ஏவி கஜேந்திரனை காப்பாற்றினார்.
அதுவும் சக்கரம் எப்படி இருந்ததாம், “கனலும் சுடர் ஆழி” எப்பொழுதும் தயார் நிலையிலேயே. பெருமான் நினைத்த மாத்திரத்தில் செயல்படுத்தக் கூடிய நிலையில் சுடர் விட்டு இருந்ததாம். ஆழ்வார் கனவில் கண்ட, எம்பெருமானின் இந்தச் சக்கரத் தரிசனம் என்ன செய்யும்? நம்மைப் பிடித்துள்ள "வினை இரண்டும்" ஓட்டிவிடும் என்கிறார். வினை இரண்டு என்பது, பாபம் - நாம் செய்த தீவினைகள், புண்ணியம் - நாம் செய்த நல்வினைகள்.
நம்முடைய தீவினைகளை விரட்டுவது சரி, நல்வினைகளை ஏன் ஓட்ட வேண்டும். மோட்சத்தை விரும்புபவர்களுக்கு புண்ணியமும் ஒரு விலங்குதான் (பொன் விலங்கு). பாவம் இரும்பு விலங்கு என்றால், புண்ணியம் பொன் விலங்கு. இவை இரண்டுமே ஆன்மாவை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்யும் "நோய்கள்". எம்பெருமான் தனது அருட்பார்வையால் இந்த இரண்டையும் அடியோடு துரத்தி விடுகிறான். முக்தியை அருள்கிறான்.
ஒரு செடியை வெட்டினாலும் அதன் வேர் இருந்தால் மீண்டும் துளிர்க்கும். அதுபோல, நம்முடைய பாவ புண்ணியங்கள் அழிந்தாலும், அவற்றைச் செய்யத் தூண்டும் பழைய பழக்க வழக்கங்கள் (வாசனைகள்) நம்மிடம் இருக்கும்.
ஆழ்வார் அருள்கிறார் - "எம்பெருமான் வெறும் நோயைத் தீர்ப்பவன் மட்டுமல்ல; அந்த நோய் மீண்டும் வராதபடி அதன் வேரையே (மறு நோய்) அறுப்பவன்". அவனுடைய அந்தப் பேராற்றலை (வலிமையை) தான் கனவில் கண்டதாக ஆழ்வார் நெகிழ்கிறார்.
பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதியில் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பிராட்டியுடன் கூடிய எம்பெருமானைக் கண்டது போல, பூதத்தாழ்வார் இங்கே சக்கரத்தோடு கூடிய எம்பெருமானைத் தன் மனக்கனவில் காண்கிறார். அந்தத் தரிசனம், நம்மைப் பற்றியுள்ள பழைய வினைகளை நீக்குவதுடன், இனி மறு பிறவி வராதபடி நம்முடைய அஞ்ஞானத்தையும், கர்ம வினைகளையும் வேரோடு அழித்துவிடும் வலிமை கொண்டது.
எம்பெருமானின் கையில் இருக்கும் சக்கரம் இருக்கும் வரை, அடியவர்களுக்குப் பிறவித் துயரம் இல்லை என்பதே இந்த பாசுரத்தின் சாராம்சம்.
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்.

16-04-2026

Post a Comment

புதியது பழையவை