பொய் வண்ணம் மனத்து அகற்றி, புலன் ஐந்தும் செல வைத்து*
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை*
மை வண்ணம், கருமுகில் போல் திகழ் வண்ணம், மரகதத்தின்*
அவ்வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே.
திருமங்கையாழ்வார் தன் பாசுரங்களின் வழியாக எம்பெருமானை அடையும் வழியையும், அடைந்த பின் கிட்டும் பேரின்பத்தையும் ஒருசேர புரியும்படி விளக்குவதில் வல்லவர். "பொய் வண்ணம் மனத்து அகற்றி" என்று தொடங்கும் பெரிய திருமொழியின் இப்பாசுரம், ஒரு பக்தன் தன் மனதை எப்படிச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதையும், அப்படிச் செம்மைப்பட்ட மனதில் எம்பெருமான் எப்படிக் காட்சி தருகிறான் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
“பொய் வண்ணம் மனத்து அகற்றி” - இங்கு 'பொய்' என்பது இல்லாத ஒன்றைக் குறிப்பதல்ல; மாறாக 'நிலை இல்லாத' பொருள்களைக் குறிக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் உடல், செல்வம், பந்தபாசம் போன்றவை அழிந்து போகக்கூடியவை (நிலையற்ற பொருள்கள்). இவை நிரந்தரம் என்று நினைப்பதே அறியாமை. இந்தத் தவறான எண்ணத்தை (ப்ரக்ருதி பந்தத்தை) மனதிலிருந்து முதலில் நீக்க வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
“புலன் ஐந்தும் செல வைத்து” - மனதிலிருந்து ஆசைகளை அகற்றினாலும், கண்கள் அழகைக் காணத் துடிக்கும், காதுகள் புகழ்ச்சியைக் கேட்கத் துடிக்கும். இப்படி ஐம்புலன்களும் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) நம்மை மீண்டும் உலக விஷயங்களுக்குள் இழுக்கும். எனவே, அந்தப் புலன்கள் வெளிப்பக்கத் திசையில் ஓடாதபடி தடுத்து, அவற்றை பகவத் கைங்கர்யத்தில் (பகவத் விஷயத்தில்) ஈடுபடுத்த வேண்டும். இங்கே “செல வைத்து” என்பது புலன்களை அடக்கி வைத்தல் மட்டுமல்ல அவற்றை சரியான திசையில் மடை மாற்றி விடுவதே.
“மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை” - நிலை இல்லாதவற்றை நீக்கிவிட்டு, நிலையான (சத்தியமான) எம்பெருமானை யார் உண்மையாகத் தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு எம்பெருமான் தன் உண்மையான சொரூபத்தைக் காட்டி அருளுகிறான். தன்னை அண்டியவர்களுக்குத் தன்னை முழுமையாகத் தந்துவிடும் அவனது செயல் 'விந்தையானது' என்பதால் அவரை "வித்தகன்" (ஆச்சரியமானவன்) என்று அழைக்கிறார். மேலும் அவன் அடைய முடியாதவனாக இருந்தும் அடைந்தவருக்கு எளிதாகும் பரமன். எனவே “வித்தகன்”. எளிதிலும் இல்லை, எட்டாக்கணக்கிலும் இல்லை; ஆனாலும் அடைந்தவனுக்கே முழுமையாகக் கிட்டுபவன்.
இங்கே ஆழ்வார் மெய் மற்றும் பொய் என குறிப்பிடுகிறார் அவை உபநிடதங்கள் கூறும் 'நித்யம்' (எம்பெருமான் / ஆத்மா) மற்றும் 'அநித்யம்' (நிலையில்லாதது) ஆகியவற்றின் அர்த்தம் கொடுக்கும் 'மெய்' மற்றும் 'பொய்' என்ற சொற்கள். “பொய்” என்பது “மித்யை” (மாயை) அல்ல; அது “அநித்யம்” — இருப்பது, ஆனால் நிலையற்றது.
பகவானின் சொரூபத்தை உணர்ந்த பின், ஆழ்வாரின் கண்கள் அவனது திருமேனி அழகில் திளைக்கின்றன. அவனது திருமேனி நிறத்தை வர்ணிக்க மூன்று உவமைகளை அடுக்கிக் கூறுகிறார்.
“மை வண்ணம்” - மை தீட்டிய அஞ்சனம் போன்ற அடர் கருமை.
“கரு முகில் போல்” - மழையைச் சுமந்து வரும் கருமேகம் போன்ற குளுமையான நிறம். மேகம் எப்படிக் கைம்மாறு கருதாமல் மழையைத் தருகிறதோ, அதுபோலவே எம்பெருமானும் கருணையைப் பொழிபவன்.
“மரகதத்தின் அவ்வண்ண வண்ணன்” - பளபளக்கும் பச்சை நிற மரகதக் கல்லின் ஒளியைப் போன்ற திவ்யமான திருமேனி. அந்தப் பச்சை நிறம் வெறும் நிறமல்ல; அது நம் உள்ளத்தைக் குளிரவைக்கும் கருணையின் நிறம்.
கருமை, நீலம் மற்றும் பச்சை கலந்த அந்த அற்புதத் திருநிறமே அடியவர்களைக் காந்தம் போல் ஈர்க்கிறது.
இப்படிப்பட்ட ஆச்சரியமான, கருணை மிக்க, பேரழகு வாய்ந்த மேக வண்ண சியாமளனை எங்கு காணலாம்?
“யான் கண்டது தென் அரங்கத்தே” என்கிறார் ஆழ்வார். "நான் தேடி எங்கும் அலையவில்லை; இதோ இந்த அழகிய காவிரி சூழந்த திருவரங்கத்தில், அவன், என் கண்முன்னே பள்ளிகொண்டிருக்கிறான்" என்று பறைசாற்றுகிறார். பரமபதத்தில் காண வேண்டிய என் இறைவனை இங்கேயே காண்கிறேன் என்று கூறுகிறார்.
பொய்யான உலக வாழ்விலிருந்து விலகி, மெய்யான பக்தியில் திளைப்பவர்களுக்கு, திருவரங்கச் செல்வன் மேக வண்ணனாகவும் மரகத வண்ணனாகவும் காட்சியளிக்கிறான். திருமங்கையாழ்வாரின் இந்த அனுபவம் நமக்கும் கிட்ட வேண்டுமெனில், பொய் வண்ணத்தை நீக்கி, மெய் வண்ணத்தை நினைத்து, புலன்களை அவனிடமே செலுத்த வேண்டும் — இதுவே இப்பாசுரம் காட்டும் உறுதியான வழி.
இது வெறும் தத்துவம் அல்ல - திருமங்கையாழ்வார் தன் நேரடி அனுபவத்தை ("யான் கண்டது") பகிர்கிறார். ஆக நாமும் இந்த வழியில் செல்லும்போது அதே அனுபவத்தைப் பெறலாம்.
இப்பாசுரத்தை வைத்தே கம்ப நாட்டாழ்வார் தன் இராம காதையில், விசுவாமித்ர முனிவர் இராமனை அகலிகை மோட்சத்திற்கு பிறகு பாடுவது போன்று இவ்வாறு எழுதியிருப்பார்,
“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே,
உன் கைவண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்!”
ஸ்ரீராமா! மழை வண்ணத்து அண்ணலே! அன்று தாடகை வதத்தின் பொழுது உனது கை வண்ணத்தினைக் (உன் வில்லாற்றலை) கண்டு வியந்தேன், இன்று சிறு கல்லாக இருந்து அகலிகையாக மாறியதன் பின் உன் கால் வண்ணத்தையும் (திருவடிப் பெருமையையும்) கண்ணுற்று மகிழ்ந்தேன். இத்தகு மேன்மையுடைய நீ இப்புவியில் அவதரித்துள்ள நிலையில் இனி எவரொருவரும் எக்காரணத்தினாலும் துன்புறவே மாட்டார் என்று விஸ்வாமித்திரர் போற்றுகின்றார்.
இப்பாடல், திருமங்கையாழ்வாரின் பாசுரத்தை வைத்தே கம்பர் இயற்றியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆழ்வார் “மேக வண்ணா” என்கிறார் இங்கே கம்பரோ “மழை வண்ணத்து அண்ணலே” என்கிறார். ஆழ்வார்களின் ஈரத்தமிழே கம்பனுக்கு வித்தாக அமைந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக