அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே*
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி,
பேய்முலை உண்டானே! சப்பாணி.
பெரியாழ்வார் அருளிச்செய்த இந்தப் பாசுரம், கண்ணபிரானின் குழந்தைப் பருவத்தை அனுபவிக்கும் அதே வேளையில், எம்பெருமானின் நரசிம்ம அவதார மகிமையையும் அரக்கி பூதனா வதத்தையும் ஒருங்கே சேர்த்து பாடும் அற்புதமான பாசுரம்.
பெரியாழ்வார், கண்ணனைத் தன் குழந்தையாகவே பாவித்து அவனுக்கு பிள்ளைத்தமிழ் பாடி அனுபவிக்கிறார். ஒரு குழந்தை தரையில் அமர்ந்து தன் இரு கைகளையும் தட்டி விளையாடும் அழகை 'சப்பாணி கொட்டுதல்' என்பார்கள். உலகளந்த உத்தமனைச் சப்பாணி கொட்டச் சொல்லி வேண்டுவதே இந்தப் பாசுரத்தின் மையக்கருத்து.
“அளந்திட்ட தூணை அவன் தட்ட” - இரணியன் என்னும் அரக்கன், "உன் கடவுள் எங்கே இருக்கிறான்?" என்று கேட்டபோது, "அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்" என்று மகன் பிரகலாதன் தந்தையைப் பார்த்து பதிலளித்தான். உடனே இரணியன் தான் பார்த்துப் பார்த்துச் செதுக்கி, தானே அளந்து கட்டிய ஒரு தூணைக் காட்டி, "இதற்குள் இருக்கிறானா?" என்று ஆவேசத்துடன் அந்தத் தூணை தட்டினான். அவன் தானே கட்டியது இதில் எப்படி இருப்பான் என்ற மமதை அவனுக்கு.
அவன் அந்த தூணைத் தட்டிய அந்த விநாடியே, பலத்த ஓசையுடன் கர்ஜனையுடன் அந்தத் தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தி வெளிப்பட்டார். இங்கு "அளந்திட்ட" என்பது முக்கியம் - அந்தத் தூண் முன்பே நரசிம்மரை வைத்துக் கட்டிய தூணல்ல, இரணியன் தானே பார்த்து பார்த்து கட்டிய தூண் என்பதை வலியுறுத்துகிறது.
“ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்” - தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர், "வாள் உகிர்ச் சிங்க உருவாய்" - அதாவது வாளைப் போன்ற கூர்மையான நகங்களைக் கொண்ட நரசிங்க உருவமாகத் தோன்றினார். சாதாரணமாகத் தோன்றி மறையாமல், ஆகாயத்தையும் பூமியையும் நிரப்பும் பேருருவம் கொண்டு வளர்ந்து நின்றார். பகலும் அல்ல, இரவும் அல்ல; மனிதனும் அல்ல, மிருகமும் அல்ல என்று இரணியன் வாங்கிய வரத்தின் படி பேருருவம் கொண்டு நரசிங்கமாய் வளர்ந்து நின்றார்.
“உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம் பிளந்திட்ட கைகளால்” - இரணியன் தனது மார்பு மிகவும் வலிமையானது என்று ஆணவம் கொண்டிருந்தான். ஆனால், நரசிம்மரோ அவனது அகன்ற மார்பை மிக எளிதாகத் தன் நகங்களால் பிளந்தார். இங்கே ஆழ்வார் ஒரு நுணுக்கமான கருத்தைச் சொல்கிறார்: 'உளம் தொட்டு'. இரணியனின் மார்பைப் பிளக்கும் முன், அவனது உள்ளத்தில் ஏதேனும் ஒரு துளி பக்தியாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தாராம் அந்தப் பரந்தாமன். பக்தி இல்லாத காரணத்தால் அவனது அகன்ற மார்பை தன் கூரிய நகங்களால் பிளந்து, குடலை உருவி மாலை போல் போட்டார்.
“பிளந்திட்ட கைகளால் சப்பாணி” - அசுரனின் மார்பைப் பிளந்த அதே கரங்களைக் கொண்டு, இப்போது கண்ணனாக வந்து சப்பாணி கொட்டுமாறு ஆழ்வார் வேண்டுகிறார். அதோடு நிறுத்திவிட்டாரா அடுத்த வரியில் “பேய்முலை உண்டானே! சப்பாணி.” என்று பூதனை என்ற அரக்கி பெண் வேடத்தில் வந்து, விஷம் தடவிய முலையை குழந்தை கண்ணனுக்கு கொடுத்தபோது, அதை உண்டு அவளையே உயிரோடு உறிஞ்சி வதம் செய்த வீரச் செயலையும் நினைவுபடுத்துகிறார்.
உலகைக் காக்கும் அந்தப் பரம்பொருள், இரணியனின் மார்பைப் பிளந்த அதே கைகளால், இப்போது சின்னக் குழந்தையாக, கண்ணனாக, கைகளைத் தட்டி விளையாடுகிறான் - இந்த பாசுர வரிகளில் ஆழ்வாரின் பக்தி பரவசம் பொங்குகிறது.
"சப்பாணி" என்ற எளிய சொல்லில், உலகமெல்லாம் அடங்கிவிடுகிறது. குழந்தை கண்ணனின் கைத்தட்டலில், நரசிம்மரின் நகங்களின் வீரத்தையும், பூதனையை அழித்த வல்லமையையும் காண்கிறார் ஆழ்வார்.
இதுதான் ஆழ்வார்களின் இலக்கிய நயம் - ஒரு சிறிய செயலில் பெரும் தத்துவங்களைக் காட்டுதல். குழந்தையின் விளையாட்டில் இறைவனின் லீலையைக் காணும் பார்வை, பக்தியின் உச்சநிலை.
"அளந்திட்ட தூணை" பிளந்த அதே கைகள், இப்போது "சப்பாணி" கொட்டுகின்றன - இந்த மாற்றத்தில்தான் பெருமாளின் முழு மகிமையும் அடங்கியுள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறார் பெரியாழ்வார்.
"பேய்முலை உண்டானே சப்பாணி!" - என்ற இந்த அழைப்பில், ஆழ்வாரின் இதயம் கரைகிறது, நம் இதயங்களும் கரைகின்றன.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக