கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன்* என் அப்பனில்*
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்*
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.
மதுரகவி ஆழ்வார் இயற்றிய “கண்ணி நுண் சிறுத்தாம்பு" நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் தனித்துவம் வாய்ந்த படைப்பாகும். நாலாயிரம் பாசுரங்களில் பெரும்பாலானவை பெருமாளைப் போற்றிப் பாடப்பட்டவை. ஆனால் இந்த ஒரே ஒரு பிரபந்தம் மட்டும், அதுவும் வெறும் பதினோரு பாசுரங்கள் மட்டும், மதுரகவியின் ஆசார்யரான நம்மாழ்வாரைப் பற்றி பாடப்பட்டது. "ஆசார்யனே தெய்வம்" என்ற ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் அடிப்படைக் கொள்கையை இது வெளிப்படுத்துகிறது. அவர் அருளிய இப்பிரபந்தத்தின் முதல் பாசுரம், ஆசாரிய பக்தியின் எல்லையை நமக்கு உணர்த்துகிறது.
“கண்ணித் தாம்பு” - பல முடிச்சுகள் கொண்ட கயிறு
“நுண் தாம்பு” - மெல்லிய, நுண்ணிய கயிறு
“சிறுத் தாம்பு” - சிறிய, குறுகிய கயிறு
“கட்டுண்ணப் பண்ணிய” - தானே விரும்பிக் கட்டுப்பட்ட
“பெருமாயன்” - அற்புத செயல்களைச் செய்பவன் (கண்ணன்)
“நண்ணி” - விட்டு, கடந்து
“அண்ணிக்கும்” - இனிக்கும், இனிமையாக இருக்கும்
“அமுது ஊறும்” - அமிர்தம் சுரக்கும்
முதலில் கண்ணனின் ஒரு புகழ்பெற்ற லீலையை மதுரகவியாழ்வார் இப்பாசுரத்தில் நினைவுபடுத்துகிறார். கண்ணன், உலகத்தையே படைத்தவன், யாராலும் கட்டிப்போட முடியாதவன். ஆனால், அவன் தன் தாயான, தன் பக்தையான யசோதைக்காக, பல முடிச்சுகளையும் மெல்லிய இழைகளையும் உடைய சிறிய கயிற்றால், அந்தத் தாய் கண்ணனைக் கட்ட முயன்றபோது, அச்செயலை அந்த சர்வேஸ்வரனே தானாக விரும்பி ஏற்றுக்கொண்டான். தாம்பினால் கட்டப்பட்டவன் என்பதால் தான் “தாமோதரன்” என்ற நாமம் பகவானுக்கு.
அப்படிப்பட்ட அதிசய செயல்களைச் செய்யும் கண்ணனை - என் தந்தையான அந்த பெருமாளை விட்டு, தென் திருக்குருகூரில் வாழும் நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் மட்டுமே, என் நாவுக்கு இனிமையும் அமுதத்தின் சுவையும் பெருகுகின்றன என்று இப்பாசுரத்தில் அருளியுள்ளார் மதுரகவியாழ்வார். இப்பொழுது பாசுரத்தின் இனிமையை சுவைப்போம்.
மதுரகவி ஆழ்வார் தாய் யசோதை கண்ணனைக் கட்டிய கயிற்றை மூன்று விதமாக வர்ணிக்கிறார்,
1. கண்ணித் தாம்பு (பல முடிச்சுகள்)
வீட்டில் பல வேலைகளுக்குப் பயன்பட்டு, நொந்துபோய், இடையிடையே அறுந்து மீண்டும் முடிச்சிட்டு இணைக்கப்பட்ட கயிறு. பசுக்களைக் கட்டவும், பால் கடையவும், பலவகையாகப் பயன்படுத்திய கயிறு அது. அதனால் பல முடிச்சுகள் ஏற்பட்டு, குழந்தை கண்ணனின் மென்மையான உடம்பில் குத்தி உறுத்தும் வகையில் இருந்தது.
2. நுண் தாம்பு (மெல்லிய கயிறு)
மிக நுண்ணிய இழைகளால் ஆன கயிறு. மெலிதாக இருந்ததால் குழந்தை கண்ணனின் உடம்பில் ஆழமாக அழுந்தும். மென்மையான அக்குழந்தை உடலை வலிக்கச் செய்யும்.
3. சிறுத் தாம்பு (சிறிய கயிறு)
மிகச் சிறிய, குறுகிய கயிறு. உரலின் சுற்றளவையும், கண்ணனின் வயிற்றையும் சேர்த்துச் சுற்றும் அளவுக்குக் கூட முழுமையாக இல்லை. அவ்வளவு சிறியதானது. வேறு எந்த வேலைக்கும் உதவாத, பயனற்ற கயிறு.
இப்படி அந்த கயிற்றை விவரித்து எதற்கும் உதவாத ஒரு கயிறினை போட்டு கட்டிய தாய் யசோதையின் கட்டுக்கு கட்டுப்பட்டு நின்றானே அந்தக் கண்ணன் அதனை அடுத்த வார்த்தையில் “கட்டு உண்ணப் பண்ணிய” என்று அருளுகிறார் ஆழ்வார்.
இங்கே மிக முக்கியமான விஷயம் - கண்ணன் "கட்டுண்டான்" அல்ல, "கட்டுண்ணப் பண்ணினான்". அதாவது, சர்வசக்தி படைத்தக் கண்ணன், அந்தச் சிறிய கயிற்றை அவிழ்த்துக் கொள்ள முடியாதவன் போல் நடித்தான். தாய் யசோதையின் அன்பை ஏற்று, தானாக விரும்பிக் கட்டுப்பட்டான்.
ஒரு சாதாரணப் பெண் கட்டிய கட்டை, உலகங்களைப் படைக்கும் எம்பெருமான் அவிழ்க்க முடியாதவன் போல் இருந்தது, இதுவே அவனுடைய "பெருமாயம்" - அற்புதமான சீலகுணம்.
அடுத்த வார்த்தை “பெருமாயன்” - கண்ணனின் மாயச் செயல்கள் எத்தகையவை என்பதை ஆசார்யர்கள் பல்வேறுவிதமாய் விளக்குகிறார்கள்.
ஜகன்நாதனாய் இருந்தவன் - உலகங்களை ஆளும் சர்வேஸ்வரனாக இருந்தான்.
வெண்ணெய்க்காக ஏங்கினான் - சாதாரண வெண்ணெய்க்காக ஆசைப்பட்டான்.
களவு காண முற்பட்டான் - உலகெல்லாம் அவனுடையதாயிருக்க, திருடவும் தயங்கவில்லை.
வாயதுகியதாக அகப்பட்டான் - அப்படி திருடி, வாயிலும் கையிலும் வெண்ணெய் ஒட்டிக்கொண்டிருக்க, பிடிபட்டான்.
கட்டுண்டு அழுதான் - சர்வேஸ்வரனாயிருந்தும் கட்டுண்டு குழந்தை போல் அழுதான்.
உரலோடு இழுத்துச் சென்றான் - கட்டுப்பட்டவனாய், தன்னோடு சேர்த்து கட்டிய உரலை இழுத்துக் கொண்டு சென்றான்.
இவையெல்லாம் “பெருமாயம்” என்றருளுகிறார் ஆழ்வார். அவன் “பெருமாயன்” தானே.
“என்னப்பனில் நண்ணி” - இப்பேற்ப்பட்ட பெரு மாயங்கள் செய்தவனை "என் அப்பன்" என்று அழைக்கிறார் மதுரகவி ஆழ்வார். ஆனால் அவரை விட்டு ("நண்ணி") நம்மாழ்வார் பக்கம் வந்துவிட்டார். இதற்குக் காரணம்,
பகவானைப் பற்றினால் - இறுதியில் ஆசார்யரிடம் செல்ல வேண்டும்.
ஆசார்யரைப் பற்றினால் - அதற்கு மேல் போக வேண்டிய இடமே இல்லை.
ஆசார்யரே சரம அவதி - இறுதி இலக்கு.
நம்மாழ்வார் கண்ணனை அனுபவித்ததுப் போன்றே மதுரகவி ஆழ்வாரும் அனுபவித்தார். ஆனால் கண்ணனிடம் நேரிடையாகச் செல்வதை விட, நம்மாழ்வார் வழியாகச் செல்வதே உயர்ந்தது என்று உணர்ந்தார்.
“தென் குருகூர் நம்பி” - திருக்குருகூருக்கே தலைவர், அங்கே வாழ்ந்த நம்மாழ்வாரையே இது குறிக்கும்.
“என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும்” - “தென் குருகூர் நம்பி” என்ற திருநாமத்தைச் சொன்னவுடனே, அண்ணிக்கும் (இனிக்கும்) - நாவுக்கு இனிமை தருகிறது. எல்லா ருசியான பதார்த்தங்களையும் விட இனிக்கிறது.
“அமுதூறும்” (அமிர்தம் சுரக்கும்) - சாதாரண இனிப்பு அல்ல, அமிர்தம் போன்ற இனிப்பு.
ஒருமுறை சொன்னால் போதாது, அவருடைய திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும் என்ற ஆசை, அந்த இனிமை தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது.
சாதாரண இனிப்புப் பொருட்கள் வாயில் போட்டால், உண்ட உடனேயே இனிப்பு மறைந்துவிடும். ஆனால் "தென் குருகூர் நம்பி" என்ற திருநாமம், ஒரு முறை சொன்னால் நித்யமாக இனிமை தந்துகொண்டே இருக்கிறது.
“என் நாவுக்கே” - "எனக்கு மட்டுமே இந்த அனுபவம்" என்று சொல்லவில்லை. மாறாக,
பகவத் விஷயத்தையும் ரசித்த நாவு - கண்ணனைப் பற்றிப் பாடியதும் இந்த நாவுதான்,
ஆழ்வார் விஷயத்தையும் ரசித்த நாவு - நம்மாழ்வாரைப் பற்றிப் பாடுவதும் இதுவே,
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த நாவு - எது அதிக இனிமை என்று அறிந்த நாவு,
அந்த ஒப்பீட்டில், நம்மாழ்வாரின் திருநாமம் அதிக இனிமை என்பது தெளிவாகிறது என்கிறார் மதுரகவி ஆழ்வார்.
இக்காலத்திற்கு இந்தப் பாசுரம் நமக்குச் சொல்லும் செய்தி
ஆசார்யரை மதித்தல் - நம் குருவை, நம் ஆசார்யரை, மிக உயர்வாக மதிக்க வேண்டும்.
சரணாகதி - கண்ணன் எப்படி தன்னை முழுமையாக தன் தாயிடம் ஒப்படைத்ததுபோல், நாமும் நம்மை ஆசார்யரிடம் ஒப்படைக்க வேண்டும்.
திருநாம சங்கீர்த்தனம் - நம் ஆசார்யரின், பெருமாளின் திருநாமங்களைத் தொடர்ந்து சொல்ல வேண்டும்.
பக்தியின் உயர்வு - பக்தி வளர வளர, அதன் இனிமையும் வளரும்.
இறைவன் உயர்ந்தவன் தான், ஆனால் அந்த இறைவனை நமக்குக் காட்டித் தரும் 'ஆசாரியன்' (குரு) இறைவனை விடவும் மேலானவர் என்பதுதான் இப்பாசுரத்தின் சாரம். கண்ணனைப் பாடுவதை விட, கண்ணனின் அடியவரான நம்மாழ்வாரைப் பாடுவதே தனக்கு இனிமை என மதுரகவியாழ்வார் ஆணித்தரமாகச் சொல்கிறார்.
"தென் குருகூர் நம்பி" என்ற திருநாமம் மட்டுமே போதும் - அது நித்யமாக, அமிர்தம் போல் இனிமை தருகிறது என்ற அனுபவத்தை மதுரகவி ஆழ்வார் பகிர்ந்து கொள்கிறார். இதுவே ஆசார்ய பக்தியின் உச்சம்.
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக