ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஆற்றில் இறங்கும் அழகர்!


ஒவ்வோர் ஊருக்கு ஒவ்வொரு பெருமை இருப்பது போல், மதுரைக்கு ஒரு தனிப் பெருமை உண்டு. சித்திரை மாதம் பிறந்து விட்டால் மதுரை முழுவதுமே மங்கலக் கோலம் பூணும். சித்திரா பௌர்ணமி நெருங்க நெருங்க, வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் மதுரையில் குவிவார்கள். ‘அழகர் ஆற்றில் இறங்கும் விழா அன்று ஊரே மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

மீனாட்சி அம்பிகைக்குத் திருமணம். அண்ணனான கள்ளழகர் சகல வித ஏற்பாடுகளுடன் புறப்பட்டார். அவர் வந்து சேர்வதற்குள் மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் முடிந்து விட்டது. வைகைக் கரையை நெருங்கிய கள்ளழகருக்கு விவரம் தெரிந்தது. கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர் அப்படியே வண்டியூர் போய்விட்டார்.
மற்றொரு தகவல்: முனிவரான சுதபஸ் என்பவர் நூபுர கங்கையில் நீராடி பெருமாளை நோக்கி தவம் செய்தார். அவருடைய உள்ள மும் உணர்வும் இறைவன் திருவடிகளிலேயே இருந்தன.

தவத்தில் தன்னிலை மறந்த சுதபஸின் இருப்பிடம் நோக்கி துர்வாச முனிவர், தன் ஏராளமான சீடர்களுடன் வந்தார். சுதபஸை பார்த்த துர்வாசர், ‘‘ஹ§ம்!... நாம் சிஷ்யர்களுடன் வந்திருக்கிறோம். ‘வா என்று ஒரு வார்த்தை சொல்லாமல், கண்களை மூடி உட்கார்ந்திருக்கிறாயா? நீ தவளையாகப் போ!’’ என்று கோபத்தில் சாபம் கொடுத்தார்.

சாபம் பலித்தது. ‘‘துர்வாச முனிவரே! எனக்குச் சாபம் கொடுத்த தாங்களே, சாப விமோசனமும் அருளுங்கள்!’’ என வேண்டினார் சுதபஸ்.

துர்வாசர், ‘‘சுதபஸ்! நீ வைகைக் கரையில் தவம் செய்து வா! சித்ரா பௌர்ணமிக்கு மறு நாள் அங்கு வரும் அழகர் உனக்குச் சாபவிமோசனம் தருவார்!’’ என்று சொல்லிச் சென்றார். அதன்படி வைகைக் கரையில் தவமிருந்தார் சுதபஸ். அப்போது அங்கு வந்த அழகர் அவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

அந்த அழகர் இன்றும் ஆற்றில் இறங்கி நமக்கு அருள் புரிய வருவது கண்கூடு.

சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாட்கள் முன்பாகவே மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்குகிறது. முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருக்கும் அழகர், மூன்றாம் நாள் மாலை மதுரைக்குக் கிளம்புவார். அலங்காநல்லூர் போய்ச் சேர்ந்ததும் அங்கே, அழகரைக் குதிரை வாகனத்தில் வைத்து அலங்காரம் செய்வார்கள். மதுரை எல்லையான மூன்றுமாவடி என்னும் இடத்தில், கள்ளழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் ‘எதிர்சேவை நிகழ்ச்சி களை கட்ட, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்குக் கள்ளழகர் வந்து சேருவார். அங்கே அவருக்கு நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படும்.
அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம் செய்வார்கள். சுவாரஸ்யம் அப்போதே ஆரம்பமாகி விடும்.
ஒரு பெரிய மரப்பெட்டியில், அழகருக்கு அலங்காரம் செய்யும் பொருட்களும் வண்ண வண்ணப் பட்டாடைகளும் இருக்கும். ஸ்வாமிக்கு அலங்காரம் செய்பவர் (கண்ணால் பார்க்காமல்) பெட்டிக்குள் கையை விட்டு ஏதாவது ஓர் ஆடையை எடுத்து ஸ்வாமிக்கு அணிவிப்பார். அந்த ஆடையுடன்தான் அழகர் ஆற்றில் இறங்குவார்.

அழகர் ஆற்றில் இறங்கும்போது எந்த வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளாரோ, அதற்கேற்றாற் போல் அந்த வருடத்தின் பலன்கள் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்வாமி, பச்சைப் பட்டாடையில் வந்தால் நாடு செழிக்கும். சிவப்புப் பட்டாடையில் வந்தால், போதுமான விளைச்சலும் அமைதியும் இருக்காது, பேரழிவு உண்டாகும். வெள்ளை அல்லது ஊதா நிறம் எனில், நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள் பட்டாடையில் வந்தால், மங்கலகரமான நிகழ்ச்சி நடக்கும்.

இப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதும். ‘இந்த வருடம் அழகர் ஆற்றில் இறங்கும்போது, என்ன நிறத்தில் பட்டாடை கட்டி வருவாரோ? என்று எதிர்பார்ப்பு நிறைந்த ஆவலுடன் காத்திருப்பார்கள்.

ஐந்தாவது நாள் சித்ரா பௌர்ணமி. அமர்க்களம்தான். ஆற்றில் இறங்குவதற்காக அழகர் தல்லாகுளத்தை விட்டுக் கிளம்புவார். கொண்டாட்டம் துவங்கி விடும். ஒருவர் மீது ஒருவர் மானாவாரியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக பட்டியலில் இடம்பெற்று விட்டாலும், முன்னோர்கள் காலத்தில் இது இல்லை.
முன்னோர்கள் காலத்தில் அழகரது வருகையையட்டி புதிதாகப் பாதை அமைப்பார்கள். தூசி கிளம்பாமல் இருக்கவும், வெயிலின் கொடுமையைத் தணிக்கவும் சாலையில் தண்ணீர் பீய்ச்சும் பழக்கத்தை வைத்தார்கள். அது, இந்தக் காலத்தில் ஒரு தனி வைபவமாகவே ஆகிவிட்டது!

அழகர் ஆற்றில் இறங்கியதும், மதுரையில் இருக்கும் ஸ்வாமியான ஸ்ரீவீரராகவப் பெருமாள், அழகரை எதிர்கொண்டு அழைப்பார். இருவரும் ஆற்றிலேயே, மாலை மாற்றி மரியாதை செய்து கொள்வார்கள். அது முடிந்ததும் சுதபஸ் (தவளையாக மாறிய) முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக அழகர், வண்டியூரை நோக்கிக் கிளம்புவார்.

வழிநெடுக வரவேற்பு பலமாக இருக்கும் அழகருக்கு. ஐந்தாம் நாள் இரவே வண்டியூரை அடையும் அழகர், மறு நாள் சந்தனக் காப்பு அலங்காரம் கொண்டு வண்டியூரில் உள்ள பெருமாள் கோயிலை வலம் வருவார்.
அது முடிந்ததும் அழகர் சர்ப்ப வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேர்வார். அங்கே அழகர், தங்க கருட வாகனத்துக்கு மாறி, சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் தந்து, அங்கிருந்து மதுரை நோக்கி வருவார்.

ஆறாம் நாள் இரவு, ராயர் மண்டகப்படி மண்டபத்தில் தங்கும் அழகர், அன்று இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தரிசனம் தந்து பக்தர்களைப் பரவசப் படுத்துவார்.

ஏழாம் நாள் காலை. அழகர் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (முழுவதுமாக தந்தத்தால் இழைக்கப்பட்டது இது) தல்லாகுளம் வருவார். அங்கு அலங்காரம் கலைக்கப்பட்டு, அழகருக்குப் பூப்பல்லக்கில் அலங்காரம் நடக்கும்.

எட்டாம் நாள் காலை, ஸ்வாமி பூப்பல்லக்கில் அழகர் மலை திரும்புவார். வழியில் பல இடங்களில் பக்தர்கள் அன்போடு அழகரை வழிபடுவார்கள். ஒன்பதாம் நாள் காலை அழகர்கோவிலை அடைவார் அழகர். பத்தாவது நாள் அவருக்கு அபிஷேகத்துடன் சித்திரைத் திருவிழாவின் கொண்டாட்டங்கள் நிறைவு பெறும்.

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக