ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 5

ஏழுமலைவாசன் - கீதை ப்ரியன் - 5


லட்சுமி ஒரு இடத்தில் இருக்கும் வரை தான் யாருக்குமே மதிப்பு... நம் வாழ்வையே எடுத்துக் கொள்வோமே! வேலைக்கு போகும் வரை மனைவி கணவனை கொண்டாடுவாள், பிள்ளைகள் ஒன்றாம் தேதியானால் சுற்றி சுற்றி வருவார்கள். வேலையில் இருந்து நின்ற பிறகு, பென்ஷன் வாங்கினால் ஏதோ கொஞ்சம் மதிப்பிருக்கும். 
ஒன்றுமில்லாவிட்டால்... கண்டு கொள்வார் யார்? 

லட்சுமி பிராட்டியார் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தங்கிவிட்டதால், வைகுண்டத்தின் செல்வச்செழிப்பு அகன்றது. ஸ்ரீதேவி சென்று விட்டதால், தரித்திர தேவி உள்ளே புகுந்தாள். தேவர்களெல்லாம் கலங்கினார்கள். அவர்கள் திருமாலிடம், ""பெருமாளே! தாங்கள் லட்சுமி தாயார் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து, அவர்களைச் சமாதானம் செய்து மீண்டும் வைகுண்டம் அழைத்து வர வேண்டும். தேவலோகமே வறுமைக்கு ஆட்பட்டால், நம் பக்தர்களுக்கு எப்படி பொருள் வழங்குவது! உலக உயிர்களுக்கு படியளக்காவிட்டால், நமக்கு எப்படி மதிப்பிருக்கும்?'' என்றனர். திருமாலும், அவர்கள் முன்னால் நாடகமாட ஆரம்பித்து விட்டார். 

""ஆமாம்..ஆமாம்...லட்சுமி இங்கிருந்து செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். பிருகுவைக் கண்டித்திருந்தால், அவள் இங்கிருந்து சென்றிருப்பாளா? பின்விளைவுகளைப் பற்றி சிந்தியாமல் இருந்து விட்டேனே,'' என வருத்தப்படுவது போல நடித்தவர், பூலோக சஞ்சாரத்துக்கு தயாராகி விட்டார். லட்சுமி அங்கேயே இருந்திருந்தால், பூலோகத்தில் முனிவர்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்ற முடியும்? கலியுகத்தில் நடக்கும் பாவங்களை எப்படி தடுக்க முடியும்? இந்தக் காரணத்தால், லட்சுமிக்கு கோபம் வரச் செய்த திருமால், அவளுக்கு பூலோகம் செல்லும் மனநிலையை உண்டாக்கி விட்டு, தானும் அங்கே செல்ல தயாரானார். 

""தேவர்களே! லட்சுமி எங்கிருந்தாலும் நான் அழைத்து வருகிறேன். அதுவரை பொறுமை காக்க வேண்டும்,'' என்றவர் அவள் மறைந்திருக்கும் இடத்தை தேடியலைவது போல் பல இடங்களிலும்
சுற்றினார். சீதையைப் பிரிந்த ஸ்ரீராமன் காட்டில் எப்படியெல்லாம் தேடியலைந்தாரோ! செடி, கொடிகளிடம் எல்லாம் ""என் சீதையைப் பார்த்தீர்களா!'' என்று கேட்டு புலம்பினாரோ, அதுபோல திருமால், ""என் லட்சுமியைப் பார்த்தீர்களா!'' என்று செடி, கொடிகளிடமெல்லாம் கேட்டுக்கொண்டே நடந்தார். எங்கு தேடியும் அவளைக் காணவில்லை. இறுதியாக, ஏழுமலைகளை உள்ளடக்கிய திருமலைக்கு வந்தார். அப்பகுதியில் ஆதிவராஹர் என்பவர் குடியிருந்தார். திருமால் எடுத்த அவதாரங்களில் பன்றி முகம் கொண்ட வராஹ அவதாரமும் ஒன்று. 

வராஹமாக அவதாரமெடுத்து, பூமியைத் தோண்டி வேதங்களைக் கண்டெடுத்து பிரம்மாவிடம் ஒப்படைத்த பிறகு, அதே வடிவில் திருமலையில் அவர் குடியிருந்தார். ஆதியில் தோன்றியவர் என்பதால், அவர் ஆதிவராஹர் எனப்பட்டார். திருமலையில் அவர் தங்கியிருந்த இடம் ஆதிவராஹ க்ஷேத்ரம் எனப்பட்டது. இந்த தலத்தை ஆதிவராஹ நரசிம்ம க்ஷேத்ரம் என்றும் அழைப்பர். நரசிம்மரும் இதே மலையை ஒட்டிய அஹோபிலத்தில், தன் அவதார காலத்தை முடித்து விட்டு தங்கியிருந்தார். திருப்பதி வெங்கடாசலபதியின் செல்வச்செழிப்புக்கு காரணமே இந்த நரசிம்மர் தான் என்ற கருத்தும் உண்டு. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை' அல்லது "துவாரம்'. சிங்கம் தங்கியிருந்த குகை என்று இதற்கு பொருள். ஆம்...நரசிம்மர் சிங்கமுகம் கொண்டவர் அல்லவா! ஆண்டாள் திருப்பாவையில் அருமையாகப் பாடுவாளே! "சீரிய சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து' என்று. அது நரசிம்மனைப் பற்றித்தான்!

இங்கு வந்த திருமால், ஒரு புளியமரத்தில் இருந்த புற்றில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்து விட்டார். திருமால் ஒருபுறம், லட்சுமி ஒருபுறம் இருந்தால் உலக இயக்கம் என்னாகும்? இதை சரிசெய்ய எண்ணினார் நாரதர். அவர், தன் தந்தையான பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! பிருகு முனிவர் செய்த சோதனையால் கோபமடைந்த லட்சுமி தாயார் இப்போது கொல்லாபுரத்தில் இருக்கிறாள். திருமாலோ, ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் லட்சுமியைக் காணாமல் அன்னம் கூட புசிப்பதில்லை. இப்படியே போனால் என்னாவது? முதலில் திருமாலுக்கு அன்னம் புகட்ட வேண்டும். அதற்கு தாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார். பிரம்மா உடனடியாக சிவபெருமானிடம் சென்றார். நடந்த விஷயத்தைச் சொன்னார். மேலும், ""பெருமானே! நாம் இருவரும் பசு, கன்று வேடத்தில் செல்வோம். அவருக்கு பால் புகட்டி வருவோம்,'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

மைத்துனருக்கு ஒரு பிரச்னை என்றால், சிவனுக்கு பொறுக்குமா? இப்போதும் கூட கிராமங்களில் ""மைத்துனன் இருந்தால் மலையேறி பிழைக்கலாம்,'' என்பார்கள். இதன் பொருள் தெரியுமா? மைத்துனரான திருமால் திரு"மலை'யில் இருக்கிறார். அவரது பசி போக்க கைலாயமலையில் இருக்கும் சிவன், திருமலையில் ஏறப்போகிறார். இதனிடையே நாரதர் பூலோகம் சென்று கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்த லட்சுமி தாயாரைச் சந்தித்தார். "நாராயணா' என்ற திருநாமம் முழங்க வந்த அவரை, லட்சுமி வரவேற்றாள். ""தாயே! தாங்கள் சிறு பிரச்னைக்காக கோபித்துக் கொண்டு வந்து விட்டீர்கள். நீங்கள் இல்லாமல் திருமாலால் ஒரு கணமாவது வைகுண்டத்தில் இருக்க முடியுமா? அவர் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பைக் குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களே! தாங்கள், அவரைப் பிரிந்த ஏக்கத்தால் அவர் மனம் பட்ட பாடு தெரியுமா? அவர் உங்களைத் தேடி காடுகள், மலைகள், குகைகளில் எல்லாம் அலைந்தார். எங்கும் கிடைக்காமல், இப்போது திருமலையிலுள்ள ஆதிவராஹ க்ஷேத்ரத்தில் தங்கியுள்ளார். தங்களை எண்ணி புலம்பி அலைந்த அவர், சாப்பாடு, உறக்கம் ஆகியவற்றை மறந்து, தாங்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரு புளியமரப் பொந்தில் தவத்தில் ஆழ்ந்து விட்டார். தாங்கள் அவரைக் காப்பாற்ற உடனடியாக கிளம்ப வேண்டும்,'' என்றார். லட்சுமிக்கு பகீரென்றது. "அவசரப்பட்டு விட்டோமே' என வருந்திய அவள், திருமாலை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்கினாள்.

—தொடரும்

நன்றி - தினமலர்

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை